இனத்துவேசதுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்

853 . Views .

நேற்றைய தினம் சனிக்கிழமை (17.03.2018) இனத்துவேசதுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவிலுள்ள சோசலிசக் கட்சி, தமிழ் சொலிடரிட்டி, அகதிகள் உரிமைக்கான அமைப்பு, உள்ளிட்ட பல்வேறு இடதுசாரிய அமைப்புகளும், யுனைட்(Unite), யுனிசன்( Unison) உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களும் இதில் கலந்து கொண்டன. லண்டனில் உள்ள போர்ட்லாந்து வீதியில் (Portland Street) ஆரம்பமான இப்பேரணி இறுதியில் டவுனிங் வீதியில் (Downing Street) நிறைவடைந்தது. நேற்றைய காலநிலை கடுங்குளிரும் ,பனிப்பொழிவுமாக இருந்த போதிலும், அதனையும் பொருட்படுத்தாது பல்லாயிரக்கணக்கான மக்கள் இபோரட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகதிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும், அகதிகளுக்கு வேலை செய்வதற்கான உரிமை வழங்கப்படவேண்டும், அகதிகள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுதல் நிறுத்தப்படவேண்டும், அகதிகளுக்கான தடுப்பு முகாம்கள் மூடப்படவேண்டும், பிரித்தானிய மக்கள் அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் உட்பட அனைத்து சேவைகளும் வழங்க வேண்டும், அனைவருக்குமான இலவச வைத்தியம் வழங்கப்படவேண்டும், அடிப்படைச் சம்பளம் பத்து பவுண்டுகளாக உயர்த்தப்படவேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அகதிகள் உரிமைக்கான அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. மேலும் சிரிய மக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும், துருக்கி நாட்டுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வது நிறுத்தப்படவேண்டும், இனத்துவேச பாகுபாடு நிறுத்தப்படவேண்டும், மக்கள் சேவைகளின் மீதான வெட்டுக்கள் (Cuts on Service) நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரணியின் போது, பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தை சென்றடைந்த மக்கள் அவர்களுக்கு போடப்பட்டிருந்த தடைகளையும் உடைத்துக் கொண்டு பிரதம அலுவலகத்தின் வாசலை சூழ்ந்து கொண்டனர். இதனால் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், மேலதிக பொலிசாரும் குவிக்கப்பட்டனர். நிலைமை பதற்றமானதுடன் மக்களை பிரதம அலுவலக வாசலை விட்டுக் கலைப்பதற்கு சிறு அளவிலான கண்ணீர் புகையையும் பிரயோகிக்கப்பட்டது.

மக்கள் விரோத நடவடிக்களை மேற்கொள்ளும் அரசு, அதிகாரத்தை தம் வசம் வைத்துக்கொண்டு மக்களை அடக்கி ஒடுக்கி ஆள முனைகின்றன. ஆகவே இது போன்ற போராட்டங்களில் மக்கள் தம்மை இணைத்துக்கொண்டு அதிகாரத்துக்கு எதிரான தமது குரலை பதிவு செய்யவேண்டியது அவசியமாகும். இத்தகைய போராட்ட சக்திகளின் மூலமே மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்.

மேலும், எதிர்வரும் செவ்வாய்கிழமை 20ம் திகதி, வல்லாதிக்க நாடுகள் இராக் நாட்டின் மீது படையெடுப்பை மேற்கொண்டு அழிவுகளை ஏற்படுத்தி பதினைந்து ஆண்டுகள் நிறைவடைகின்றது. அதனைக் கண்டித்தும், சிரிய மக்களின் மீதான தாக்குதலைக் கண்டித்தும் பிரித்தானிய பிரதம அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறும் என்று அகதிகள் உரிமைக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. ஆகவே மக்கள் இப்போரட்டத்திலும் இணைந்து கொண்டு தமது எதிர்ப்பு குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும்.

[robo-gallery id=”2830″]