சிரியா மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிரியாவின் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து, பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்திற்கு முன்னால் நேற்று (20.03.2018) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அகதிகள் உரிமைக்கான அமைப்பு ஒழுங்கு செய்திருந்த இவ்வார்ப்பாட்டத்திற்கு சோஷலிசக் கட்சி மற்றும் தமிழ் சொலிடரிட்டி உறுப்பினர்களும் கலந்து கொண்டு  தமது ஆதரவை வழங்கி இருந்தனர். சிரியாவின் மீது குண்டு போடுவதை நிறுத்த வேண்டும், யுத்தவெறியர்களை சிரியாவில் இருந்து விரட்ட வேண்டும், கல்விக்கும் மருத்துவத்திற்கும் செலவு செய், யுத்தத்திற்கு செலவு செய்யாதே போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாலை ஐந்து மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டமானது இரவு எழு மணி வரை நடைபெற்றது.

மேலும் ஏற்கனவே அவ்விடத்தில் கடந்த ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குர்திஸ் இன மக்களும் அகதிகள் உரிமைகள் அமைப்பின் இப்போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கினர். அதே போன்று அகதிகள் உரிமைகள் அமைப்பும் அவர்களின் போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அப்ரின்( Afrin) மீதான தாக்குதல் நிறுத்தப்படவேண்டும், குர்திஷ் இன மக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படவேண்டும், குர்திஷ் இன மக்கள் மீதான துருக்கி அரசின் ஒடுக்குமுறைகள் நிறுத்தப்பட்டவேண்டும், துருக்கி அரசிற்கு பிரித்தானிய ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அம்மக்கள் தமது போராட்டத்தை நடாத்தினர்.

பிரித்தானிய, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் தமது சுய லாபத்திற்காக ஆயுதங்களை விற்பனை செய்வதனால்தான் உலெகெங்கும் யுத்தங்களும் அதன் தொடர்ச்சியாக அகதிகளும் உருவாகின்றனர். இன்று உலகம் முழுவதும் 65 மில்லியனுக்கும் மேற்பட்ட அகதிகள் உணவு, மருத்துவம் மற்றும் பாதுகாப்பான வாழ்விடமில்லாமலும் வாழ்கின்றனர் எனின் அதன் பின்னணிக் காரணமாக இருப்பது இது போன்ற வல்லரசு நாடுகளாகும். ஆகவே இதனை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டியது மக்கள் அனைவரினதும் கடமையாகும்.

தமிழ் சொலிடரிட்டி மற்றும் அகதிகள் உரிமைக்கான அமைப்பானது, பிரித்தானியாவில் உள்ள பல்லின மக்களுடனும், பல்லின அமைப்புகளுடனும்  ஒன்றிணைந்து வேலை செய்து, அவர்களின் போரட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து, அதன் மூலம் அவர்களின் ஆதரவை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்டு இயங்குகின்றது. இதன் மூலம் எமது பிரச்சனை பல்வேறு மக்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் குர்திஷ் இன மக்களுடன் இணைந்து இன்றைய போராட்டம் நடைபெற்றது மிக முக்கியமான ஒரு விடயமாகவே கருதப்படுகின்றது. ஏனெனில் ஒடுக்கப்படும் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பலமாவது மக்கள் சக்தியை பலப்படுத்தும். ஆகவே இது போன்ற மக்கள் போராட்டங்களிற்கு மக்கள் பங்கெடுத்து தமது ஆதரவை வழங்குவது அவசியமானதாகும்