இலக்கை நோக்கி நகரும் இரணைதீவு மக்களின் நில மீட்புப் போராட்ம்

ஜெனா

மக்களின் நிலமீட்புப் போராட்டங்கள் பல திசைகளிலும் நீண்டுவரும் நிலையில் தம் சொந்த நிலத்தில் மீள் குடியமர வேண்டும் என்ற பேரவா கொண்டு மண்மீட்புப் போராட்டத்தில் இணைந்த மக்களை சந்திக்கும் வாய்ப்பு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான எமது தளத்தின் அங்கத்தவராக இருந்ததால் எனக்கும் கிடைத்து. காலை 11.00 மணியளவில் நாச்சிக்குடா கடற்கரையை அடைந்தோம். படகெதுவும் இல்லாமையால் அவ்விடத்தில் நீண்ட நேரம் காத்திருப்பின் பின்னரான படகின் வருகையைப் பார்க்க பரவசமூட்டியது. என்னுடன் சேர்த்து வருகை தந்த பத்துப் பேரும் ஓடிச் சென்று ஏறினோம். படகு கடலலையைக் கிழித்துக்கொண்டு செல்லத்தொடங்கியது நீலக் கடலலைகள் ஏறி நுரை சீறி “ஓ” என்று கதறி ஓலமிட்டு விழுந்தன…பாவம் அந்தக் கடலலைகள.; அவையும் இரணைதீவு மக்களின் துன்பத்தை தாங்க மாட்டாமல் “ஓ” என அழுகிறன போலும். அதைப் பார்த்தபடியே நின்ற நான் படகோட்டியிடம் கதை கொடுக்க ஆரம்பித்தேன்.

அவரின் பேச்சில் வலி கலந்திருந்தாலும் அவர்களின் கதையினை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்காக வலியையும் தாண்டி துருவித் துருவி கேள்வி கேட்க வேண்டியிருந்தது. கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் நாச்சிக்குடா கடற்கரையில் இருந்து பன்னிரண்டு கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளதே எமது இரணைதீவுக் கிராமம் என சொல்லும் போதே அவர் முகம் மலர்ந்தது. இரண்டு சிறு தீவுகளைக் கொண்டுள்ளமையால் இதற்கு இரணைதீவு என்ற பெயர் சூட்டப்பட்டது என்று கூறியவர் தனக்கு தெரிந்து மூன்று தலைமுறைகளுக்கு மேலாக பூர்வீகமாக இங்கு எம்மவர் வாழ்ந்து  வந்ததாகவும் குறிப்பிட்டார்.  இத்தீவை சிறுதீவு பெருந்தீவு என்றும் மக்கள் சொல்வதாகக் கூறினார். இவ்வாறு கதையும் கலகலப்புமாக முப்பது நிமிடங்களுக்கு மேல் கடல் வழிப்பயணத்தின் பின் சிறு தறப்பாள் கொட்டில்களும் கடற்கரையில் கட்டப்பட்டிருந்த சிறு படகுகளும் எம் கண்களில் தென்படவே ஊருக்கு வந்து விட்டோம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டோம். அக் கரையை அடைந்ததும் அங்கு நிறைந்துள்ள பவளப் பாறைகள் இத் தீவின் வற்றாத கடல் வளத்தினை எடுத்தியம்பும் வண்ணமிருந்தது நாம் கிராமத்துக்குள் செல்லும் போதே பல பெண்கள் குழந்தைகளுடன் கடலை நோக்கி நகர்ந்த வண்ணம் இருந்தார்கள் அப்பொழுது ஒரு அம்மாவை நிறுத்திக் கேட்டோம் எங்கம்மா போகிறீர்கள்? என்று மூன்று தினங்கள் பாடசாலை விடுமுறை என்பதால் பிள்ளைகளுடன் இங்குவந்தோம் கணவர் இங்கு தான் இருக்கிறார். நாளை பாடசாலை என்பதால் நாம் மீண்டும் இரணமாதா நகருக்கு செல்கிறோம் என்று கூறினார்.

 

எவ்வளவு கஸ்டமான வாழ்க்கை நிலையினை அனுபவிக்கிறார்கள் என்று எண்ணியபடி மக்கள் குடியிருக்கும் பகுதியான செபமாலை மாத கோவிலடியை அடைந்தோம். எந்த வசதியும் இன்றி வாழ்ந்தாலும் விருந்தோம்பல் பண்பில் தமிழரை மிஞ்ச யாரும் இல்லை என்பதை நிருபித்தார்கள்.

இருபத்தாறு வருடங்களின் பின்னர் தமது சொந்த நிலத்தில் அடியெடுத்து வைத்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அவர்கள் முகத்திலும் பேச்சிலும் தெரிந்தது. இருந்தும் அவர்களை அங்கு குடியிருத்துவதற்கான அனுமதியோ முயற்சியோ ஆமை வேகத்திலேனும் நகர்கிறதா என்றால் கேள்விக்குறியாகவே இருந்தது. 1992ஆம் ஆண்டு யுத்த காரணமாக இவ்விடத்தை விட்டு இவர்கள் முழுமையாக இடம் பெயர்ந்ததாக கூறினர். அதற்கு முந்திய காலத்தில் அவர்களது வாழ்க்கை முறை சிறப்பாக அமைந்துள்ளதென்பதை அங்குள்ள கட்டிட இடிபாடுகளையும் கட்டங்களையும் பார்க்கும் பொழுது அவர்கள் கூற முன்பே எம்மால் ஊகிக்க முடிந்தாலும் அவர்கள் கூறிய பின் அதனை உறுதிப்படுத்திக் கொண்டோம். சுமார் எட்டு கிலோமீற்றர் நீளமும் மூன்று கிலோமீற்றர் அகலமும் கொண்ட இத் தீவில் அனைத்து தேவைகளையும் அங்குள்ள மக்கள் அங்கேயே பூர்த்தி செய்யக்கூடிய வகையில் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பாடசாலை, வைத்தியசாலை, அஞ்சல்அலுவலகம்… அது மட்டுமா நாமே வியந்தோம். பிரதேச சபையின் உப அலுவலகமும் அங்கு செயற்பாட்டில் இருந்துள்ளது. இங்கு குடிநீர் வளம் உள்ள போதும் மக்களுக்கும் வளங்களுக்குமான இடைவெளி அதிகமாகவே இருந்துள்ளது. அதனால் குடிநீர்ப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக மழை நீர் சேமித்து வைப்பதற்காக இச் செபமாலை மாதாஆலயத்தின் வெளி விறாந்தைப் பகுதியில் நிலத்தடித் தொட்டிகள் சீராக அமைக்கப்பட்டுள்ளன.

 

இவ்வாலயம் ஒரு ஒரு நூற்றாண்டுக்கு மேல் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என இத் தேவாலய கட்டுமானத்தை வைத்து ஊகிக்க முடிந்தது. இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறைமை அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தமை அவர்களின் கதைகளில் இருந்து தெரியவந்தது.

இங்கு தாம் வாழ்ந்த காலத்தில் தமக்கு உணவுக்கு பங்சமே வந்தது கிடையாது என்று கூறிய இவர்கள். தொடர்ந்து கூறுகையில் இங்கு ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் கரை வேலைகளில் ஈடுபடுவது வழக்கமாக இருந்தது எனவும் கூறினர்  அட்டை பிடித்தல் மட்டி யெடுத்தல் போன்ற வருமானமீட்டும் தொழில்களில் பெண்களும் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் தமக்கு தேவையான உணவுப் பொருட்களை அங்கேயே உற்பத்தி செய்து வந்துள்ளனர். வயல் விலங்கு வேளாண்மை என அனைத்தையும் இங்கேயே பெற்று வாழ்ந்துள்ளனர். கால்நடைகள் நீர் பருகுவதற்காக அங்காங்கே சிறு மோட்டைகளும் அமைக்கப்பட்;டிருந்தன.

இவ்வாறு இருந்த காலத்தில் 1992 ஆம் ஆண்டு யுத்தத்தில் இவர்கள் தமது உடமைகள் அனைத்தையும் விட்டு இடம் பெயர்ந்து சென்று பூனகரி முழங்காவில் இரணைமாதா நகரில் குடியேறியதாகவும் அங்கிருந்து பல இன்னல்கள் மத்தியில் சிறுகச் சிறுக தமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி வாழும் காலத்தில் மீண்டும் 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொடூர இனவழிப்பு யுத்ததிதினால் அங்கிருந்தும் இடம் பெயர ஆரம்பித்ததாகவும்  காலம் செல்லச் செல்ல நாளும் பொழுதும் ஊருராக இடம் பெயர்ந்து இறுதியாக முள்ளிவாய்க்கால் வரை சென்று உறவுகளை இழந்து, உடமைகளை இழந்து, அங்கங்களை இழந்து காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் சொந்தங்களையும் கொடுத்து விட்டு எதுவுமற்ற நிலையில் மீண்டும் 2009 ஆம் ஆண்டு. இராணுவத்தினரினால் செட்டிகுளத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்ததாகவும் பின் அங்குள்ள மக்களை சிறிது சிறிதாக மீள் குடியேற்றத் தொடங்கியவர்கள் எம்மையும் எமது சொந்த நிலத்தில் குடியேற்றுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கையில் அரசாங்கமோ அரச அதிகாரிகளோ அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்றும்  தொடர்ந்து தம்மை இரணைமாத நகரிலே நிரந்தரமாக தம்மைத் தஙகவைப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. என்றும் கூறினார்கள்.

பாடசாலை போன்றன அங்கேயே கட்டிக் கொடுக்கப்பட்டது என்று கூறியவர்கள், பல இழப்புக்களை சந்தித்து விரக்தி நிலையில் இருந்த எமக்கு அப்போது  எதற்காக இவ்வசதிகள் செய்யப்படுகறது என்பது தொடர்பில் சிந்திக்க முடியவில்லை எனவும் எம்மைப் பொருளாதார ரீதி;யாகவும் மனநிலை ரீதியாகவும் நசுக்குவது தான் அரசின் நோக்கமென்பது அன்று நாம் சிந்திக்க வில்லை என்று கூறியவர்கள் தற்பொழுது நாம் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த நிலையில் இருப்பதுடன் கடன் சுமை எம்மை வாட்டி வதைக்கிறது என்றும் இக் கடனை எப்படி அடைப்பது என்பதைத் தாண்டி எம்மால் எதையும் சிந்திக்க முடியவில்லை. இந்நிலையிலே நாம் என்ன செய்யலாம் என யோசித்தோம். வாய் மூடி மௌனிகளாக இருந்தால் எம் வாழ்க்கைத்தரம் மிக மோசமான நிலைக்கு சென்றுவிடும் என்ற நிலையில் எமது சொந்த நிலம் எமக்கு வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்படத் தொடங்கினோம். ஒரு வருட காலமாக இரணைமாதா நகரில் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோம். நல்லாட்சி அரசினால் தீர்வு வரும் என்று நம்பினோம். இந்த ஒருவருடமும் எமது கோரிக்கையினைக் கூறி குந்தியிருந்தது ஒன்றுதான் மிச்சம்.

அச்சந்தர்ப்பத்தில் தமது பகுதிக்கான நிர்வாகச் செயற்பாடுகளுக்கு பொறுப்பான பூனகரி பிரதேச செயலரிடமும் கிளிநொச்சி அரசாங்க அதிபரிடமும் எமது சொந்த நிலம் எமக்கு வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அனுப்பியிருந்தோம். அதுமட்டுமன்றி சனாதிபதி, மற்றும் அரசியல் பிரமுகர்களென அனைவருக்கும் எமது கோரிக்கையை அனுப்பியும் யாரிடமிருந்தும் திருப்திகரமான பதிலெதுவும் கிடைக்காத நிலையே எம்மை ஆத்திரமடைய செய்தது. இந் நிலையிலே நாமே எமது ஊருக்கு செல்வோம் என்ற முடிவுக்கு வந்தோம். 23.04.2017 அன்று நாமாகவே எமது மீன்பிடிப்படகுகளிலேறி எமது ஊருக்கு வந்து விட்டோம் என வீராப்பாகக் கூறினார அந்தப் பெண்மணி. அவர் அதனைக் கூறும் போது அப்படி ஒரு ஆனந்தம். “அன்று நீங்கள் பாத்திருக்க வேண்டுமே ஐம்பது படகுகள் அவ்வளவு சனக்கூட்டம் எமது கடலே திருவிழாக் கோலத்திலிருந்தது” என்று கூறினார்.

இங்கு வரும் பொழுது கடற்படையினர் என்ன செய்வார்களோ என்ற பயத்திலே வந்தோம் ஆனால் எதிர்ப்பு நடவடிக்கை எதுவுமே அவர்கள் செய்ய வில்லை. அங்கு செபமாலை மாதா ஆலயம் மட்டும் தான் நாம் தங்கியிருக்கக் கூடிய போல இருந்தது ஆனாலும் பாளடைந்த நிலையிலேயே காணப்பட்டது. நாம் அதனைத் துப்பரவு செய்து வழிபாட்டில் ஈடுபட்டோம். நாம் வருவதை அறிந்தோ என்னமோ இவ் ஆலயத்தின் ஐந்து வரி ஓட்டினை கழட்டி விட்டார்கள் எம்மிடம் வந்துள்ளது

 

 

ஆலயத்தை திருத்தியதன் பின் இருங்கள் எனக் கூறினார். நாம் மறுத்து விட்டோம் இத்தனை காலத்திற்கு பிறகு வந்த நாங்கள் போக மாட்டோம். நாங்களே திருத்துகிறோம் என்று கூறினோம். அத்துடன் கடற்படையினர் எம்முடன் வந்து கலந்துரையாடும் போது கூறிய விடயம் உங்களை இங்கு குடியமர்த்தினால் இந்தியாவினால் கஞ்ச கொண்டுவந்து வியாபாம் செய்யப்படும் என்று கூறினார்கள். என்ன கூறினாலும் நாம் எம் ஊரைவிட்டு செல்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தோம். ஆனால் எமக்கு அரசாங்கத்தினாலேயோ அரச அதிகாரிகளாலேயோ எந்த அனுமதியும் வழங்கவில்லை.

எமது ஊர் செம்மறி ஆட்டு வளர்ப்பிலும் பிரபல்யமாக இருந்தது. இரணைதீவு செம்மறி என்றால் அதற்கான கேள்வி அதிகம். இன்று ஒரு செம்மறி ஆடுகூட இல்லை. நாம் விட்டுச் சென்ற மாடுகள் கட்டாக்காலிகளாக திரிகினறன அதனை நாம் கடற்படையினருக்கு பயந்து பிடிப்பதில்லை. இங்கு கடற்படையினரால் சுமார் நாற்பது ஐம்பது நாய்கள் வளர்க்கிறார்கள். இங்குள்ள பசுக்கள் கன்று போட்டு சில மணி நேரத்தில் இந் நாய்கள் அக் கன்றினைப் பிடித்து தின்று விடும். இன்று வரை சிலரின் காணிகளுக்கு செல்வதற்கு படையினர் அனுமதிக்க வில்லை. யாரோ அதிகாரி வரவேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் எமது நிலங்களை முற்றாக மீட்கும் வரை நாம் இவ்விடத்தை விட்டு அகலமாட்டோம் என ஒரு முதியவர்

கூறினார்.

தொடர்ந்து அவர்கள் கூறுகையில் முன்பு நாம் தொழிலுக்கு வருவதாயின் 15 லீட்டர் மண்ணெண்ணை செலவளித்து வர வேண்டும். ஆனால் தற்போது 2 லீட்டர் மண்ணெண்ணையுடன் தொழிலுக்கு சென்று வருகிறோம் அத்துடன் இங்கு தங்கியிருக்கும் பெண்கள் கரைத் தொழிலான மட்டி மற்றும் கடல் அட்டை பொறுக்குவதற்கு சென்று வருகிறனர். வீடு இல்லா விட்டாலும் ஒரு மன நிறைவு உண்டு. என கூறும் பொழுது எதையோ சாதித்து விட்ட போல ஒரு பெருமிதமிருந்தாலும், அவர்கள் முகங்களில் கவலை றேகை மறைய வில்லை. இங்கு அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையினை எடுக்கும் படி பூநகரி பிரதேச செயலர் மற்றும் கிளி அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் மனு அனுப்பியுள்ளோம். அத்துடன் இங்கு பார்வையிட வருகை தந்த அரசியல் வாதிகளுக்கும் எமது பிரச்சனைகளைக் கூறியுள்ளோம். மீதி கேள்விக் குறியாகவே உள்ளது. என்று அவர்களின் கதையை கூறிமுடித்தனர்.

இந் நிலையில் ஆயுதப் போராட்டம் மாத்திரமே முடிவுக்கு வந்திருந்தாலும் தமிழ் மக்கள் இன்னும் போராட்டத்துடனே வாழ்ந்து வருகின்றனர். ஏனென்றால் மக்கள் ஒருவருடமாக போராடியும் எந்தத் தீர்வும் இல்லை என்ற நிலையில். தாமாக தமது பூர்வீக நிலத்தில் வாழ வந்துள்ள மக்களுக்கு அவர்களது நிலத்தை மீட்டுக் கொடுப்பதற்கான தரிசனம் யாரிடமும் இருப்பதாக தெரியவில்லை.  காரணம் இத்தனை காலமாக அங்கு வாழும் கடற்படையினருக்கு அத் தேவாயத்தை திருத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல் மக்களின் வருகையின் பின் தாம் அவ் ஆலயத்தை திருத்த வேண்டும் என்பதும், கஞ்சா போன்ற போதைப் பொருள் வியாபாரம் நடைபெறும் என்ற நொண்டிச் சாட்டு சொல்வதும் அம்மக்களை அவர்கள் நிலங்களில் குடியமரச் செய்யாமல் விடுவதற்கான முயற்சியாகவே நாம் பார்க்கிறோம்.

அத்துடன் இவர்கள் 26 வருடங்களின் பின் குடியமர வந்துள்ளார்கள் என்றால் இவர்களது காணிகளில் இலந்தைப் பற்றையும் இப்பிலிப்பில் பற்றையும் அதிக அழவிலே காணப்படுகிறது இந்நிலையில் அவற்றை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபடும் போது இது காடளிப்பு என்றும் இவற்றை வெட்டுவதாயின் பிரதேச செயலகத்தில் அனுமதி பெற்று வரும்படி கூறி அவர்கள் அவர்களின் துப்பரவுப் பணியைத்தடுத்து விட்டனர். இதை வைத்துப் பார்க்கும் போது அங்குள்ள கடற் படையினர் இம் மக்களின் காணிகளை தாம் கைவிடக் கூடாது எனும் நோக்கில் செயற்படுவது போன்று உணர முடிகிறது.

அடுத்து அக்கிராமத்தில் போய் குடியேறியுள்ள மக்களுக்கு குடி நீர் வசதி, மலசல கூட வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய கடமை  பிரதே சபைக்கே உண்டு. ஆனால் கடமை மறந்து அவர்கள் அம்மக்களின் நிலையைக் கருத்தில் கொள்ளாதிருப்பதன் காரணம் தான் என்னவோ? அந் நிலங்களைத் துப்பரவு செய்வதற்கும் காணிகளை உறுதிப்படுத்துவதற்குமான பிரதேச செயலகம் எங்கே? தொடர்ந்து தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என தம்மைத் தாமே அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் இங்கு வந்து தமது வாக்கு வங்கியைத் தக்கவைப்பதற்காக வருகை தந்து அம் மக்களைப் பார்வையிட்டு அவர்களுடன் ஒளிப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் மக்களுக்காக செயற்படுவதாக போலி வேடத்துடன் வாழ்ந்து வருபவர்கள் இந்த ஒரு வருடத்தில்  இம் மக்களுக்கான நீதி தேடும் பயணத்தில் அடைந்த அடைவு மட்டம் தான் என்ன? இவ்வாறான செயற்பாட்டினை நோக்கும் போது திட்டமிட்ட பொருளாதார முடக்கலுடன் வளச்சுரண்டலுமே இங்கே இடம் பெறுகிறது. இங்கு இவர்களின் அடிப்படை உரிமை மீறப்படுகிறது. இந் நிலையில் நல்லாட்சி அரசாங்மமென தம்மை இனம் காட்டுபவர்கள் என்ன செய்யப் போகிறார்கள். எமது ஆதங்கமும் இதுவே மக்களுக்காக செயற்படுகிறோம் என்று போலிப்பிரச்சாரம் செய்பவர்கள் அவர்களுக்காக கொஞ்சமேனும் குரல் கொடுங்கள் கண்ணீருடன் வாழும் மக்களுக்காக அவர்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து அம்மக்களை இன்னொரு முள்ளிவாய்கால் நிலையிலிருந்து மீட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  நல்லிணக்க செயற்பாடு நடை பெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறிக்கொள்ளும் இத் தருணத்தில் பல்வேறு திசைகளிலும் கண்ணீருடன் உரிமைக்காக மக்கள் போராடிக்கொண்டிருக்க எவ்வாறு நல்லிணக்கம் சாத்தியம்?  இது யுத்த காலமா சமாதான காலமா? என்ற பல கேள்விகளுடன் நாமும் எமது பயணத்திற்காக கடற்கரை நோக்கி விரைந்தோம். கடலை அடைந்தோம் மீண்டும் மீண்டும் பிறக்கும் கடலலையும் “ஓ” என்று ஓலமிடும் கடலலையின் ஓசை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தது…..

 

[robo-gallery id=”3285″]