சத்யா ராஜன்
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள மக்கள் போர் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகுகின்றது. உலகம் முழுவதும், தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம், யுத்தத்தை நிறுத்த எதிர்ப்புக்கள் எழுந்தன. லண்டன் தெருக்களில் லட்சக்கணக்கான மக்கள் ‘தமிழ் மக்களின் படுகொலை நிறுத்து’ என்ற கோஷங்களுடன் கூடினர்.
அதன்பின் என்ன நடந்தது?
புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் தங்களை தமிழீழத்தின் பிரதிநிதிகளாகக் கூறுகின்றன, அவர்கள் இதுவரை என்ன செய்துள்ளனர்?
ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளதா?
அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதா?
தமிழ் அரசு கட்சி ஆளும் கட்சியுடன் கூட்டு சேர்ந்து மற்றும் ஐ.நா. ஊடாக தமிழ் மக்களின் உரிமைகளை வென்று எடுக்கலாம் எனக் கூறி மக்களை ஏமாற்றுகின்றது. இச்செயல்பாடுகள் மக்களை அரசியலில் இருந்து இவ்வளவு காலம் அந்நியப்படுத்தப்படுத்தி இருக்கிறது.
தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் அமைப்புக்களால் முள்ளிவாய்க்கால் நாள் ‘ஒரு நினைவு தினமாக’ மட்டுமே கருதப்படுகிறது.
நாங்கள்- தமிழ் சொலிடரிட்டி அமைப்பு – இந்த நிலைப்பாட்டை முற்றிலும் நிராகரிக்கிறோம். இறந்தவர்களை நினைவுகூறுவதோடு மட்டும் நின்றுவிட முடியாது. வாழ்வதாரம் இழந்து தவிக்கும் மக்களின் உரிமைகளுக்காக போராட வேண்டும். இந்த நாள் துக்க தினமாக மட்டும் அல்லாமல், மக்கள் ஒன்று கூடும் நாளாக இருக்க வேண்டும். மக்கள் அரசியல் மயமாக்கப்பட வேண்டும். ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் உலகளாவிய அரசியல், வரலாற்றில் இருந்து படிக்க வேண்டிய பாடங்கள், எடுக்க வேண்டிய அரசியல் நிலைப்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதனுடன் சேர்ந்து, இந்த நிகழ்வில் பயன்படுத்தப்படும் அடக்குமுறை குறியீடுகளை நாம் எதிர்க்க வேண்டும். பிரிட்டிஷ் கொடி அடக்குமுறையின் சின்னம். யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதங்களை விநியோகிப்பதில் பிரிட்டிஷ் வலதுசாரி அரசாங்கம் ஒரு முக்கிய பங்கை வகித்தது. மக்கள் நலனுக்காக வேலை செய்யும் முற்போக்கு அமைப்புக்கள், அடக்குமுறை சக்திகளுடன் ஒத்துப்போவதில்லை. அவ்வாறு ஒன்று சேர்ந்து வேலை செய்தால் அது மிகப்பெரிய முரணாகவே இருக்கும். ஒடுக்கும் சக்திகளும் ஒடுக்கப்படும் சக்திகளும் எப்போதும் இரு துருவங்களே.
தமிழ் மக்கள், வரலாற்றில் பல உரிமைப் போராட்டங்களை முன்னெடுத்து வெற்றியும் பெற்று இருக்கின்றனர். அவர்களுக்கு என போராட்ட வரலாறுகள் இருக்கின்றது. வல்லரசுகளைச் சார்ந்து இயங்குவோரை நம்பாமல், மக்கள் ஒன்றுசேர்ந்து, தங்கள் நலன் சார்ந்து இயங்கும் போராட்ட சக்திகளுடன் சேர்ந்து போராட வேண்டும் – போராட்ட சக்திகள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இனத்துவேச ஆட்சிக்கு எதிராக ஒரு அரசியல் போராட்டத்தை கட்டியெழுப்ப மக்கள் அணிதிரள வேண்டும். தமிழ் சொலிடரிட்டி , மக்களை அணிதிரட்டுவதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறது. எமது போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். நமது உரிமைகளை நாமே மீட்போம்.