-சு. கஐமுகன் gajan2050@yahoo.com
ஈழத்தில் இயங்கும் ஒடுக்கப்படும் மக்கள் தளம், மற்றும் தமிழ் சொலிடாரிட்டி ஆகிய அமைப்புக்கள் சார்ப்பாக – கஜன்.
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பது வெறுமனே மே 18 ஆம் திகதி மக்கள் அனைவரும் கூடித் திரண்டு அழுது புலம்பி கண்ணீர் விட்டு பின்னர் கலைந்து செல்லும் நிகழ்வு அல்ல. வருடத்துக்கு ஒரு முறை வெறுமனே சடங்குகளுடனும், சம்பிரதாயங்களுடனும் நடாத்தப்படும் ஒரு நாள் நிகழ்வு அல்ல. அது ஒரு அரசியல் நிகழ்வு. மக்களை ஒன்று திரட்டி, அரசியல் மயப்படுத்தப்படுத்தி போராட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தச் செய்ய வேண்டிய ஒரு நிகழ்வு. இறந்தவர்களை நினைவு கூறுவதோடு மட்டுமல்லாமால், இருப்பவர்களின் உரிமைகளுக்காக எமது போராட்டத்தைத் தொடர்ச்சியாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் நிகழ்வாகும்.
மாவீரர் தின நினைவு நாள், முள்ளிவாய்க்கால் நினைவு நாள் போன்றன வெறுமனே கண்ணீர் சிந்தி விட்டு கலைந்து செல்வதல்ல மாறாக மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டிய, மக்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டிய ஒரு நிகழ்வாகும். ஆனால் இன்று தமது சுய அரசியல் இலாபங்களுக்காக, குறுகிய நோக்கத்திற்காக தமிழ் கட்சிகளும், புலம்பெயர் அமைப்புகளும் அந்நிகழ்வுகளை பயன்படுத்துகின்றன.
நினைவேந்தலுக்கு வருகை தரும் மக்களைப் பயன்படுத்தி எவ்வாறு வாக்குகளாகப் பயன்படுத்தலாம் என்றே அரசியல் கட்சிகள் நினைகின்றதே தவிர, அதனை பயன்படுத்தி அங்கு வருகை தரும் மக்களை ஒரு அணியாகத் திரட்டி அடுத்த கட்ட போராட்ட அரசியலை முன்னகர்த்துவது பற்றி எதுவித சிந்தனையோ, நோக்கமோ அற்றவர்களாக காணப்படுகின்றனர்.
100,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும், காணாமல்போயும் ஒன்பது வருடங்கள் ஆன பின்பும் கூட இன்னும் அம்மக்களுக்கான நீதி இதுவரை கிடைத்ததா? காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதா ? அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனரா ? கைப்பற்றப்பட்ட மக்களின் நிலங்கள் விடுவிக்கப்பட்டனவா ?, போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டதா?. இல்லை, ஆங்காங்கே கண்துடைப்புக்காக சிற்சில நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டாலும், முழுமையாக எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே யதார்த்த நிலைமை. ஒன்பது வருடங்கள் முடிந்த பின்னரும் ஏன் இந்த நிலைமை இன்னும் தொடர்கின்றது ? தமிழ் தலைமைகள் இலங்கை அரசுடன் இணைந்து இணக்க அரசியல் செய்துகொண்டிருக்கும் போது கூட ஏன் ஒன்றும் சாத்தியமில்லாமல் இருக்கின்றது. தமிழ் மக்களுக்குத் தேவையான ஒரு அரசியல் போராட்டத்தை ஏன் இத் தலைமைகள் முன்னெடுக்கவில்லை. ஏனெனில் மக்களைத் திரட்டி ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க தமிழ் தலைமைகள் எதுவும் தயாராகவில்லை. சிங்கள மக்களுக்கு எமது போராட்டத்தின் நியாயமான காரணத்தை எடுத்துச் சொல்லி அம்மக்களின் ஆதரவை பெற தமிழ் தலைமைகள் எதுவும் தயாராகவில்லை. மாறாக இணக்க அரசியல் என்னும் பெயரில், இலங்கை அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி மண்டியிட்டுக் கிடக்கின்றன.
ஒரு போராட்ட சமூகத்தின் போராட்ட திறனை மழுங்கடித்து, ஐ. நா தான் இறுதித் தீர்வை தரும் என மக்களை நம்ப வைத்து மக்களை முட்டாளாக்கி அவர்களை அரசியல் நீக்கம் செய்த பெருமை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் தலைமைகளே சாரும். குறிப்பாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் ஐயா, மைத்திரி அரசுடனான இணக்க அரசியல் மூலம் மக்களின் பிரச்சனையைப் பற்றி பேசுகிறாரோ இல்லையோ தமது எதிர் கட்சித் தலைவர் என்ற பதவியை மட்டும் கவனமாக காப்பாற்றிக் கொள்கிறார் என்று மட்டும் நன்றாகத் தெரிகின்றது. அதற்கு எதுவித பங்கமும் வராமல் தனது காய்களை நகர்த்துகின்றார் என்று தெளிவாகப் புரிகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவினால், இலங்கை அரசு கூட இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை தமது அலுவலகாங்களில் அனுஸ்டிப்பதற்கு தயாராக உள்ளது. இதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வது மற்றும் தமது வாக்கு வங்கியைப் பலப்படுத்திக் கொள்வதுதான் மறைமுக நோக்கமாக இருகின்றதே தவிர மக்கள் எதிர்பார்க்கும் நீதி என்பது இரண்டாம் பட்சமே.
குறைந்த பட்சம் ஐ.நாவோ அல்லது மைத்திரி அரசோ போர்குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்ததா? இல்லை. மாறாக யுத்தக் குற்றவாளிகளை காப்பாற்றுவதிலேயே முனைப்பாக நிற்கின்றது. யுத்தக் குற்றவாளிகளை காப்பாற்றிக்கொண்டிருக்கும் அரசுடன் இணைந்து செயப்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுத் தரும்?.
தென்னாபிரிக்காவிலுள்ள மனித உரிமைகளுக்கான அமைப்பினால் நடாத்தப்பட்டுவரும், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் இடைநிலை நீதி நிபுணர் ஜாஸ்மின் சூக்காவினால் கடந்த மாதம் வெளியிடப்பட்ட ITJP அறிக்கையானது யுத்த காலத்தில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள்மற்றும் மனித உரிமை மீறல்களைப் பற்றிய தகவல்களை வெளிபடுத்துகிறது. எனினும் அது பற்றி இலங்கை அரசோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்போ வாய் திறக்கவில்லை. ஆனால் எதுவித மனசாட்சியும் இல்லாமல் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நடாத்துவதற்கு மட்டும் முண்டியடித்துக் கொண்டு வருகின்றனர் இவர்கள்.
இலங்கையில் மட்டுமல்லாது, புலம்பெயர் நாடுகளில் முள்ளிவாய்க்கால் நிகழ்வு என்பது யார் நடாத்துவது என்ற அதிகாரப் போட்டியாகவே தற்பொழுது எஞ்சி நிற்கின்றதே தவிர , இதனை கொண்டு எவ்வாறு எமக்கான விடுதலையைப் பெறுவது? என்பது பற்றி யாருக்கும் கவலை இல்லை. உள்ளூரில் தமது வாக்கு வங்கிக்காக கட்சிகள் முண்டியடித்துக் கொண்டு அதனை நடத்த போட்டி போடும் அதேவேளை வெளிநாடுகளில் தமது அதிகாரப் போட்டிக்காக அமைப்புகள் அதனை நடத்த முண்டியடிக்கின்றன.
புலம்பெயர் நாடுகளில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை வர வரக் குறைவடைந்து செல்கின்றது. 2009 யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடினர், ஆனால் இன்று போராட்டங்களுக்கு அதிகளவு எண்ணிக்கையான மக்கள் வருகை தருவதில்லை. போராட்டங்களின் மூலம் தீர்வு கிடைக்கும் என்ற மக்களின் நம்பிக்கையை சிதைத்து, மக்களை அரசியல் நீக்கம் செய்த பெருமை ஐ. நா, கன்சர்வேடிவ் மற்றும் லிப் டேம் போன்ற வலதுசாரிய கட்சிகளுடன் இணைந்து வேலை செய்யும் புலம்பெயர் அமைப்புகளையே சாரும். தம்மை ஒரு அரசியல் போராட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கான நியாயமான அடிப்படைக் காரணங்கள் இல்லாமையால் மக்கள் சமாகால அரசியல் போராட்டங்களில் நம்பிக்கையற்று விலகியே நிற்கின்றனர்.
இலங்கை அரசுடன் இணைந்து இணக்க அரசியல் செய்யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தற்பொழுது சிரியாவில் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கும் கன்சர்வேடிவ் கட்சியுடன் இணைந்து வேலை செய்யும் புலம்பெயர் அமைப்புகள், தொழிலாளர் கட்சியின் வலதுசாரிய பிரிவு மற்றும் நிறவாதக் கட்சிகளுடன் இணைந்து வேலை செய்யும் அமைப்புகளே, முள்ளிவாய்க்காளில் முடிவடைந்த ஆயுதப் போராட்டத்தின் இறுதி தீர்வு ஐ. நா விலிருந்தே கிடைக்கும் என மக்களை நம்ப வைத்தது. வல்லாதிக்க நாடுகளின் நலனுக்காக மட்டுமே இயங்கும் ஐ. நா நோக்கி மக்களை திருப்பியது இவ்வாறான அமைப்புகள் ஆகும். மக்களைக் கொண்டு ஒரு மக்கள் அமைப்பை உருவாக்கி, அரசியல் போராட்டத்தைக் முன்னெடுக்காமல், மக்களை ஐ. நாவிற்குள் முடக்கியது இவ்வாறான அமைப்புகளாகும்.
மைத்திரி பால சிறிசேன பிரித்தானிய வரும்போது மைத்திரியை புறக்கணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பை புறக்கணி, போன்ற கோஷங்களுடன் அவர்களை எதிர்த்து தமிழ் சொலிடாரிட்டி போன்ற அமைப்புகள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தவேளை -பிரித்தானிய நாட்டில் அவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தவேளை- அரசியல் தெளிவற்ற பல புலம் பெயர் அமைப்புகள் வெறுமனே மெளனமாக இருந்தன அல்லது மைத்திரி அரசுக்கு ஆதரவு தெரிவித்தன. மைத்திரிக்கும் , கூட்டமைப்புக்கும் சலாம் போட்டுக் கொண்டிருந்தன. ஆனால் இன்று மைத்திரி அரசும் அதனுடன் இணைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடும்போதுதான் அவர்களின் நிஜ முகத்தை அவர்கள் இன்று உணருகின்றனர். இவ்வாறு ஆழமான அரசியல் புரிதல் அற்றவர்கள், அரசியல் தெளிவற்றவர்கலாலேயே பல அமைப்புகள் நடத்தப்படுவதனால் மக்கள் கொஞ்சம் கொஞ்சம்மாக அரசியல் நீக்கம் செய்யப்படுகின்றனர்.
இது மக்கள் நடத்த வேண்டிய ஒரு நினைவேந்தல் தினம், இதனை அமைப்புகளின் நினைவேந்தலாக சுருக்கக்கூடாது. புலம்பெயர் தேசத்தில் தமிழ் இளையோர் அமைப்போ அல்லது பிரித்தானிய தமிழர் பேரவையோ இது தமது நிகழ்வாக கட்டமைப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அது போன்று இலங்கையின் வடமாகாண சபையோ முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை மேற்கொள்வதற்கு தமக்குத்தான் உரிமை உடையது என்று ஏகபோக தனியுரிமை கொண்டாடுவதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இது மக்களின் நிகழ்வு, மக்களால் நடாத்தப்படவேண்டிய வேண்டிய நிகழ்வு. அமைப்புகள் இதனைக் கையிலெடுத்து அந்நினைவு தினத்தை புனிதத்தன்மை வாய்ந்த நாளாக மாற்றுகின்றனவே தவிர போராட்ட அரசியல் நிகழ்வாக இதனை மேற்கொள்வதில்லை.
இறுதி யுத்தத்தின் போது கொல்லபட்ட அல்லது காணாமல் போன மக்கள் தொடர்பாக எதுவித புள்ளிவிபரங்கள் அல்லது தகவல்களை தன்னகத்தே கொண்டிராத வடமாகாண சபையோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்போ, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை யார் மேற்கொள்வது என்ற அதிகாரத்தை கைப்பற்ற மட்டும் முயற்சிகின்றனர். முள்ளிவாய்கால் படுகொலை நிகழ்ந்தபோது அதனைத் தடுக்க எதுவித நடவடிக்கையும் எடுக்காதோர் அல்லது அப்போது வெறுமனே வேடிக்கை பார்த்துத்கொண்டு நின்றோர் அல்லது யுத்தம் முடிவடைந்த பின்னரும் முட்கம்பிகளுக்குள் மக்கள் அடைத்து வைக்கப்ட்டபோது அவர்களின் விடுதலைக்கு ஒரு துரும்பையேனும் நகர்த்தி வைக்காதோர் அல்லது அம்மக்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீரையும் சிந்தாத உள்ளூர் மற்றும் புலம்பெயர் தலைமைகள் இன்று முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தலை நடாத்துவதற்கு தமக்கே உரிமை உள்ளது என்று சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை.
தமிழர் விடுதலைக்கான வரலாறு என்பது 2௦௦9 உடன் முடிந்து விடுவதில்லை. அது மேற்கொண்டு சென்றுகொண்டே இருக்கும். விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியாக நாம் இருக்கப் போகின்றோமா? அல்லது விடுதலைப்புலிகள் முன்வைத்த போராட்டத்தின் தொடர்ச்சியாக நாம் இருக்கப் போகின்றோமா என்பதுதான் நம் முன் விரிந்து நிற்கும் கேள்வி?. பெரும்பாலான புலம்பெயர் அமைப்புகள் அல்லது தமிழ்க்கட்சிகள், விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியாக யார் இருக்க வேண்டும் என்ற அதிகாரப் போட்டியிலேயே தமது கவனத்தை செலுத்துகின்றனரே தவிர, மக்களை அணி திரட்டி ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு தயாராக இல்லை. போராட்டத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பிழைகளை விமர்சன ரீதியாக ஏற்றுக்கொண்டு, அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும்
அடுத்த வருடம் முள்ளிவாய்க்காள் நினைவு தினத்தின் பத்தாவது வருடமாகும். இதுவரை மக்கள் விரும்பிய தீர்வு கிடைக்கவில்லை. இனிமேலும் மக்கள் இது போன்ற அமைப்புகளை நம்பி மோசம் போகாமல், முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் தமது அரசியல் திட்டங்களை வெளிப்படையாக அறிவிக்ககக் கூடிய, அதனடிப்படையில் இயங்கக்கூடிய, போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தக்கூடிய, அரசுகளின் நலனுக்கு அல்லாமல், மக்களின் நலன் சார்ந்து இயங்கக்கூடிய அரசியல் சக்திகளுக்கு தமது ஆதரவை வழங்க வேண்டும். இல்லையெனின் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ஒவ்வொரு வருடமும் வந்து போகும். மக்களின் பிரச்சனைக்கான தீர்வு இறுதிவரையிலும் எட்டப்படமாட்டாது. முதன் முதலாக ஈழத்தில் மாணவர்களும் இளையோரும் முக்கிய அரசியற் கோரிக்கைகளை முன் வைத்து முள்ளிவாய்க்கால் நிகழ்வை தாமே ஒழுங்கு செய்து கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நடவடிக்கையை ஈழத்தில் இயங்கும் ‘ஒடுக்கப்படும் மக்கள் தளம்’ என்ற அமைப்பு முன் நின்று நடத்தி வருகிறது. அவர்கள் முன் வைக்கும் பின்வரும் கோரிக்கைகளை தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு முற்று முழுதாக ஏற்றுக் கொள்கிறது.
- ஒற்றுமை என்பது புனிதமல்ல. எந்த அடிப்படையில் ஒற்றுமை என்பதே முக்கியம். முள்ளிவாய்க்கால் நிகழ்வை பல அமைப்புக்கள் நிகழ்த்தட்டும். ஒற்றுமை என்ற பெயரில் மக்களுக்கு எதிரான நலனுடன் உறவு கொள்ளும் நிகழ்வுக்கு நாம் துணை போக முடியாது. மக்கள் போராட்த்தை முதன்மைப் படுத்திய நிகழ்வை நோக்கி திரள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
- முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நடாத்தும் அமைப்புகள் மக்களின் விடுதலை தொடர்பாக தமது நிலைப்பாட்டை தெளிவு படுத்தவேண்டும். ஒவ்வொரு வருடமும் என்ன செய்யப் போகிறோம் என்ற தமது எதிர்கால செயற்திட்டத்தை இந்நாளில் வெளியிட வேண்டும். பின்னர் ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்கால் தினத்தில் தாம் இதுவரை செய்தது என்ன? இனிச் செய்யப் போவது என்ன என்பது தொடர்பாகவும் ஒரு அறிக்கையை மக்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடே முள்ளிவாய்க்கால் தினத்தை ஆக்கபூர்வமான அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்லும்.
- முள்ளிவாய்க்கால் நாளை நோக்கி மக்கள் திரள்வதற்கான காரணம் வேண்டும். மக்களுக்காக என்ற பெயரில் இயங்கும் அனைத்து அரசியல் அமைப்புக்களும் இந்த நாளில் தமது நிலைப்பாட்டை முன் வைக்க வேண்டும். குறைந்த பட்சம் அதை அறியவாவது மக்கள் திரளட்டும். அதையும் தாண்டி இலங்கை, மற்றும் தெற்காசிய சம கால அரசியல் நிலவரங்களினை உரையாடும் –மக்களுக்கு தெரிவிக்கும் சந்தர்ப்பமாகவும் இருக்கவேண்டும் இந்த நாள்.
- பத்தாவது ஆண்டில் இருந்தாவது தமிழ் மக்களின் அரசியல் சரியான திசையில் பயணிக்க வேண்டும். அரசியற் போராட்டத்தை நோக்கும் நகர்வை பத்தாவது நினைவு நாளிலாவது தொடங்கி வைப்போம்.