பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

1,226 . Views .

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் ஒன்பதாவது வருடம் பிரித்தானியாவில் வாழும்  தமிழர்களால் நினைவு கூறப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் ஒன்பதாவது வருடத்தில் “இறந்தவர்களை நினைப்போம், இருப்பவர்களுக்காய் போராடுவோம்” என்ற தொனிப்பொருளில்  தமிழ் சொலிடாரிட்டியானது  தனது நிகழ்வுகளை முன்னெடுத்தது. அதனடிப்படையில் தமது எதிர்கால  செயற்திட்டம் தொடர்பாகவும், பல்லின மக்கள் மற்றும் பல்லின அமைப்புக்களுடன் இணைந்து தாம் பணியாற்றி வருவதன் நோக்கத்தையும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினர் நேரலையில் தெளிவுபடுத்தியிருந்தனர். அத்துடன் இலங்கையிலிருந்து செயற்படும் ஒடுக்கப்படும் மக்களுக்கான தளத்தின் உறுப்பினர்கள் தமது செயல்திட்டம் மற்றும் உந்துருளிப் பேரணி தொடர்பாகவும் தமது கருத்துக்களை நேரலையில் பதிவு செய்தனர். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களுக்கான தளத்தின் இளைஞர்கள், முள்ளிவாய்க்கால் முற்றத்தினை நோக்கிச் சென்ற இவ் உந்துருளிப் பேரணியில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலை பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் முன்னால் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்விலும் கலந்து கொண்ட தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர்கள் அங்கு பிரித்தானியக் கொடி ஏற்றப்பட்டமைக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பிரித்தானியக் கொடி என்பது அடக்குமுறையின் ஒரு குறியீடு எனவும், இலங்கைத்  தமிழ் மக்களின் மீதான இனப்படுகொலைக்கு பிரித்தானியாவும் ஒரு காரணம் எனக் கூறி, அத்தகைய கொடியை முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் எவ்வாறு ஏற்றமுடியும் என்ற கேள்வியை முன்வைத்தே தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர்கள், தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இது போரில் இறந்த மக்களையும் போராளிகளையும் அவமானப்படுத்துவதாக உள்ளது எனவும் சிலர் தெரிவித்திருந்தனர். இதனால் நிகழ்வை ஒருங்கமைத்தவர்களுக்கும், தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர்களுக்குமிடையில்  சிறு வாக்குவாதம் ஏற்பட்டது. பிரித்தானியக் கொடிப் பிரச்சனை பற்றி விவாதம் செய்வதற்குரிய இடம் இதுவல்ல  எனவும், நிகழ்வை குழப்புவதற்கு தமிழ் சொலிடாரிட்டி முயற்சிக்கின்றது எனவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. எனினும் முள்ளிவாய்க்கால்  நினைவு தினம் என்பது ஒரு பொது நிகழ்வு, பொதுமக்களுக்கான நிகழ்வு, ஆகவே அங்கு கருத்து தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் தமது அடையாள அரசியலை முன்னெடுக்கும் தமிழ் அமைப்புக்கள் தமது அரசியல் இலாபத்திற்காகவும், பிரித்தானிய அமைச்சர்களை வால் பிடிப்பதற்காகவுமே இது போன்ற  நிகழ்சிகளை பயன்படுத்துகின்றார் எனவும், இவ்வாறாக  அரசியல் புரிதல் அற்றவர்களாலும் , அரசியல் போதாமை கொண்டவர்களாலும் பெரும்பாலான புலம்பெயர் அமைப்புகள் வழிநடத்தப்படுகின்றன என   தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினர் தெரிவித்து இருந்தனர்.

பின்னர் அங்கு வருகை தந்திருந்த மக்களுக்கும், ஊடகங்களுக்கும்  பிரித்தானியக் கொடியை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தினர் தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர்கள்.