படுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்

1,397 . Views .

சத்யா ராஜன்

தூத்துக்குடியில்  ஸ்டேர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் நடத்திய போராட்டம் தமிழ் நாட்டு அரசால் கடும் வன்முறை மூலம் முடக்கப் பட்டு வருகிறது. இதுவரை இறந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இது திட்டமிட்ட அரச பயங்கரவாதம். எதிர்ப்பை அடக்க மக்களை பதட்ட நிலையில் வைத்திருக்கிறது தமிழ் நாடு அரசும் காவல்துறையும். தூத்துக்குடி,  திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கண்டித்து தமிழ் நாட்டிலும் சர்வவதேசமெங்கும் வாழும் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை பதிந்து வருகின்றனர்.

லண்டனில் செவ்வாய்க் கிழமை அணில் அகர்வால் ( Vedanta நிறுவனத்தின் உரிமையாளர் ) வீட்டுக்கு முன்பு  ஒரு  போராட்டம் நிகழ்ந்தாது. தமிழ் சொளிடாரிட்டி உறுப்பினர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டு தமது கடுமையான எத்ரிப்பைத் தெரிவித்தனர்.

 

தமிழ் நாட்டு மக்கள் மீது அரசு வன்முறை தொடர்ந்து நிகழ்கிறது. ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு, காவேரி, நீட், ஸ்டேர்லைட் என போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த போராட்டங்களை முடக்குவதில் மோடி அரசுடன் இணைந்து இயங்கி வரும் தமிழ் நாடு அரசு கடுமையாக எதிர்க்கப் பட வேண்டும். முதலாளித்துவ நலனை மீறி இந்த அரச சக்திகள் மற்றும் முன்னணி திராவிட கட்சிகள் இயங்கப் போவதில்லை. காப்பிரேட் நலனுக்காக மக்களைக் கொலை செய்யவும் தாம் தயார் என்ற தமது நிலைப்பாட்டைத் தெளிவாகக் காட்டி உள்ளனர்.

மத்திய அரசும் மாநில அரசும் மக்களின் எதிரிகளே. எட்டப்பாடி பதவி விலக வேண்டும் என போலி போராட்டம் செய்யும் எதிர்கட்சி முதலாளித்துவ சக்திகளும் தாம் அதிகாரத்தில் இருந்தால் என்ன செய்திருப்பார்கள்? வேதாந்தா நிறுவனத்தை முடக்க தயாரா இவர்கள்? இயற்கை வளங்களை முதலாளித்துவம் சூறையாடுவதற்கு எதிரானவர்களா இவர்கள்? தாம் அதிகாரத்தைப் பிடிக்க மட்டுமே வலதுசாரிக் கட்சிகள் போலி எதிர்ப்புக் காட்டுகின்றன. மக்கள் இந்தக் கட்சிகளை தொடர்ந்து நம்பி ஏமாற முடியாது. ஒட்டு மொத்த அதிகார சக்திகளும் அதிகாரத்தில் இருந்து நீக்கப் பட வேண்டும். தற்போதைய தமிழ் நாடு அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க எந்த தகுதியும் அற்றது என்பதையும் –அது மக்கள் விரோத சக்தி என்பதையும் தொடர்ந்து நிரூபித்து வருகிறது. அவர்கள் விலக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதை சொல்வதால் எதிர் கட்சிகள் பதவியை பிடிக்க வேண்டும் அதனால் நிலவரம் மாறும் என பேசுவதும் எதிர்பார்ப்பதும் மிகப் பெரும் தவறு.

நாம் எமக்கான சுயாதீன அமைப்பை கட்டுவது நோக்கி நகரவேண்டும். சனநாயக முறையில் இயங்கும் –வறிய மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் – தொழிலாளர்களின் நலனை முதன்மைப்படுத்தும் மக்கள் அமைப்பை உருவாக்க நாம் அனைவரும் முன் வரவேண்டும். அத்தகைய அமைப்புத்தான் முதலாளித்துவ நலன்களை நேரடியாக எதிர்கொண்டு எமது நலன்களை நிறுவும் அதிகாரத்தை கைப்பற்றுவது நோக்கி நகரும்.

அனைத்து வலது சாரி கட்சிகளிலும் எமக்கு நம்பிக்கை இல்லை – அவர்களுக்கு எமது ஆதரவு இல்லை என்பத அறிவிப்போம். எமக்கான உரிமைகளை வெல்ல எமக்கான அமைப்பைக் கட்ட முன்வருவோம்.

அனைத்து அரசுகளும் முதலாளித்துவத்துக்கு வேலை விசுவாசமாக இருப்பவையே. வேதாந்தா போன்ற பெரும் நாசகார கார்பரேட்டுகளுக்கு சேவகம் செய்வதுதான் அவர்களின் முதன்மை நோக்கம். இலங்கை, தென் ஆபிரிக்கா, சாம்பியா முதற் கொண்டு பல நாடுகளின் இயற்கை வளங்களை உறிஞ்சி அதனால் இயற்கை அழிவையும் உடல் நலக் கேட்டையும் உருவாகும் கொடிய பல் நாட்டு நிறுவனமாக இயங்கி வருகிறது வேதாந்தா. இந்த நாடுகின் அரசுகள் வேதாந்தாவின் முதலீட்டை காப்பாற்ற மக்களைக் கொலை செய்யவும் உரிமைகள் மறுக்கவும் தயங்க வில்லை. அதனால் இந்தப் படுகொலை நிறுவனத்துக்கு எதிராக உலகெங்கும் பல்வேறு மக்கள் போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டங்கள் ஒன்றிணைய வேண்டும். தூத்தக்குடி மக்கள் போராட்டம் தனிமைப் படுத்தப் பட்ட போராட்டமாக இருக்காமல் உலகெங்கும் போராடும் மக்களோடு இணைய வேண்டும்.

 

 

தமிழ் நாட்டு மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு சேர்க்கும் வகையில் தமிழ் சொலிடரிட்டி வரும் சனிக்கிழமை போராட்டம் ஒன்றை ஒருங்கிணைத்துள்ளது. இதில் பின் வரும் கோரிக்கைகளை நாம் முன்வைக்கிறோம்.

  1. ஸ்டேர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு. ஆலையை மூடி விட்டதாக தற்காலிக அறிக்கைமூலம் ஏமாற்று வித்தை காட்டாது நிரந்தரமாக மூடு. ஆலைத் தொழிலாளர்களுக்கு தகுந்த உதவி மற்றும் மாற்று வேலையை வழங்கு.
  2. கைது செய்யப் பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்.
  3. போராடியவர்கள் மேல் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெறு.
  4. வீடுகளில் சட்டவிரோதமாக காவல் வைத்திருப்பதை உடனடியாக நிறுத்து.
  5. போராட்டத்தின் போது கொல்லப்பாட்ட மற்றும் பாதிக்கப்படவர்கள் பற்றிய முழு விசாரணை -மக்கள் முன் மக்கள் பிரதிநிதிகளுடன் நடத்தப் பட வேண்டும். தகுந்த நஷ்ட ஈடு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப் படவேண்டும்.
  6. மக்களின் போராடும் உரிமைகளை முடக்குவதை நிறுத்து.
  7. சமூக வலைத்தளங்கள் மேலான தடையை நீக்கு.
  8. வேதாந்தா நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்.
  9. வேதாந்தா நிறுவனம் உலகெங்கும் பல கொலைகளுக்குக் காரணமாக இருந்து வருகிறது. குறைந்தது ஆறு நாடுகளிலாவது கொலைகளுக்கு காரணமாக இருக்கும் இந்த நிறுவனத்தை முடக்கி உடனடியாக குற்ற விசாரணையை ஆரம்பி.
  10. இயற்கை வளம் மாறும் அவற்றைப் பராமரிக்கும் கட்டுப்பாட்டை சனநாயக முறைப்படி தேர்ந்த்தெடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவா. அதன் மூலம் இயற்கை மாசு படுத்தல் – மற்றும் மனிதர் உடல் நலம் பாதிக்கப் படுத்தல் ஆகியவற்றை தடுக்க முடியும்.

 

லண்டனில் வசிக்கும் தமிழ் மக்கள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழ் நாட்டு மக்களுக்கு தங்கள் ஆதரவையும் எடப்பாடி மற்றும் மோடி அரசுக்கு உங்கள் எதிர்ப்பையும் தெரிவிக்க வேண்டுகிறோம்.

 

இடம்:  India House,

Aldwych,

London

WC2B 4NA

 

நேரம்: 3.00-5.00 PM