
தூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி தமிழக அரசால் திட்டமிட்டு வன்முறையாக மாற்றப்பட்டு 13 உயிர்கள் பலியானதைக் கண்டித்து தமிழ் சொலிடரிட்டி அமைப்பு நேற்று (சனிக்கிழமை) மூன்று மணி அளவில் இந்திய தூதரகம் முன்பு ஒரு போராட்டத்தை முன்னெடுத்தது. ஈழம் மற்றும் தமிழ் நாட்டுத் தமிழர், குழந்தைகள் என மூண்ணூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதில் போராட்டத்தின் தொடக்கத்தில் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான அப்பாவி பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டது. இதன் பின் தமிழ் சொலிடரிட்டி அமைப்பினர் இப்போரட்டத்தின் மூலம் தாங்கள் முன்னிறுத்தும் கோரிக்கைகளை பதாகைகளாகவும் துண்டு பிரசுரங்களாகவும் மக்களுக்கு வழங்கினர்.
எடப்பாடி அரசு, மோடி அரசு, வேதாந்த குழுமத்தின் உரிமையாளர் அணில் அகர்வால் ஆகியோரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இவர்களை போல் முகமூடி அணிந்து வந்து மக்களின் எதிர்ப்பை பலமாக பதிவு செய்தனர். பறை இசையும் இடம் பெற்று இருந்தது.
தமிழ் சொலிடரிட்டி தங்கள் அமைப்பின் கோரிக்கைகளை மக்கள் மத்தியில் பதிவிட்டது. தமிழ் சொலிடரிட்டி முன் வைத்த கோரிக்கைகள் :
- ஸ்டேர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு. ஆலையை மூடி விட்டதாக தற்காலிக அறிக்கை மூலம் ஏமாற்று வித்தை காட்டாது நிரந்தரமாக மூடு. ஆலைத் தொழிலாளர்களுக்கு தகுந்த உதவி மற்றும் மாற்று வேலையை வழங்கு.
- கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்.
- போராடியவர்கள் மேல் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெறு.
- வீடுகளில் சட்ட விரோதமாக காவல் வைத்திருப்பதை உடனடியாக நிறுத்து.
- போராட்டத்தின் போது கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்படவர்கள் பற்றிய முழு விசாரணை – மக்கள் முன் மக்கள் பிரதிநிதிகளுடன் நடத்தப் பட வேண்டும். தகுந்த நஷ்ட ஈடு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப் படவேண்டும்.
- மக்களின் போராடும் உரிமைகளை முடக்குவதை நிறுத்து.
- சமூக வலைத்தளங்கள் மேலான தடையை நீக்கு.
- வேதாந்தா நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்.
- வேதாந்தா நிறுவனம் உலகெங்கும் பல கொலைகளுக்குக் காரணமாக இருந்து வருகிறது. குறைந்தது ஆறு நாடுகளிலாவது கொலைகளுக்கு காரணமாக இருக்கும் இந்த நிறுவனத்தை முடக்கி உடனடியாக குற்ற விசாரணையை ஆரம்பி.
- இயற்கை வளம் மாறும் அவற்றைப் பராமரிக்கும் கட்டுப்பாட்டை சனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வா . அதன் மூலம் இயற்கை மாசு படுத்தல் – மற்றும் மனிதர் உடல் நலம் பாதிக்கப் படுத்தல் ஆகியவற்றை தடுக்க முடியும் .
இதன் தொடர்ச்சியாக அனைத்து அமைப்பினரும் தங்கள் கருத்துகளை தங்கள் அமைப்பு சார்ந்து பதிவிட்டனர்.
இறுதியாக போரட்டத்தின் முடிவில் மக்கள் தங்கள் கோஷங்களையும் எதிர்ப்பையும் பாடலாக பதிந்தனர்.
தமிழ் சொலிடரிட்டி ஜல்லிக்கட்டு, நீட், காவேரி, ஸ்டேர்லைட் என தமிழக மக்களின் அனைத்து போராட்டங்களிலும் தங்கள் ஆதரவைத் தெரிவிப்பதோடு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை சார்ந்து இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
[robo-gallery id=”3333″]