ஜோர்டான்: மக்கள் எழுச்சி

முன் எப்பொழுதும் காணாத  ஆர்ப்பாட்டங்கள், பொது வேலைநிறுத்தம் என ஜோர்டானிய ராஜ்யமே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அல்பானியா நகரத்திற்கு சென்றிருந்த மன்னர் அப்துல்லா, உடனடியாக நாடு திரும்பி பிரதம மந்திரி ஹனி அல் முல்கீயை பதவி நீக்கம் செய்ததன் மூலம் இவ்வெழுச்சியை கட்டுப்படுத்த முயன்றுள்ளார்.

வாழ்க்கைச் செலவீனம் அதீதமாக உயர்ந்ததும், அரசு இயந்திரம்  ஊழல் மயம் ஆனதுக்கும் எதிராக எழுந்த கொந்தளிப்பு – அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை ரத்து செய்துவது மட்டுமின்றி ஒருபடி மேலே சென்று பிரதமரை நீக்கும் அளவுக்கு சென்றுள்ளது. இப்போராட்டம் ஜோர்டான் மக்களுக்கு ஒரு புது நம்பிக்கையை அளித்துள்ளது.

தொழிலாளர்களின் கோபத்திற்கு மடை திறந்தாற் போல் புதன்கிழமை, 30 மே மாதம், நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை 33 தொழிற்சங்கங்கள் அறிவித்தன. ரமதான் விரதம்  இருந்த போதிலும், பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அம்மான் வீதிகளைச் சூழ்ந்து கொண்டனர்.

ஜூன் 2 ம் திகதி, பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்  உச்சக்கட்டத்தை எட்டின. கிட்டத்தட்ட 200,000 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அம்மான் வீதிகளில் கூடியிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமையன்று இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களினால், அம்மான் மற்றும் பிற நகரங்களில் உள்ள பெரும் வீதிகள் மற்றும் சந்திப்புகள் முடக்கப்பட்டன. அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பெருநிறுவனங்களில் முன்பும் ஆர்ப்பாட்டங்கள் நடந்ததாக தெரியவருகிறது. பொலிஸ் துப்பாக்கிச் இவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் செய்திகள் வந்துள்ளன.

மத்திய கிழக்கில் உள்ள நாடுகளில் ஜோர்டான் மிகவும் ஸ்திரத்தன்மை வாய்ந்த நாடாக கருதப்பட்டு வந்தது. தற்போதய போராட்டங்கள் மக்களின் நிலையை வெளிக்காட்டி உள்ளது. 2௦11-12 காலகட்டத்தில், அந்தப் பகுதியையே புரட்டிப்போட்ட, பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற உச்சக்கட்ட ‘அரேபிய ஸ்ப்ரிங்’ புரட்சி கூட ஜோர்டானில் இவ்வளவு பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இவ்வளவு ஏன் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசிற்கு எதிராக எழுந்த மிக வெற்றிகரமானதாக கருதப்பட்ட 1989 ஆம் ஆண்டு போராட்டத்துடன் ஒப்பிடுகையில்கூட இப்போராட்டத்தின் அளவு மற்றும் தீவிரம் முன்னெப்பொழுதும் இல்லாத அளவு நிகழ்திருக்கிறது.

சர்வதேச கண்காணிப்பு நிதி (IMF) அரசுக்கு கடன் வழங்கியதோடு, புதிய தாராளமய நடவடிக்கைகளை கடைபிடிக்கும் வகையில் தொடர்ச்சியான சில உத்தரவுகளையும் பிறப்பித்திருந்தது. உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 96% வரை பிடித்துவிட்ட அரசுக்கடனையும்,  நிதிநிலை அறிக்கையில் நிலவிய  பற்றாக்குறையையும் குறைப்பதற்கு எனச் சொல்லி இந்நடவடிக்கையை அமுல்படுத்தினர். ஜனவரி மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட நிதி நிலை அறிக்கையில் பொதுநலத்துக்கான  பண ஒதுக்கம் குறைக்கப்பட்டது.  உழைக்கும் வர்க்கத்தின் மீது அதீத வரி விதிக்கப்பட்டிருந்தது. புதிதாக விதிக்கப்பட்ட கொள்முதல் வரி, அத்தியாவசியப் பொருட்களான எரிபொருள் மற்றும் தண்ணீரின் விலைகளைக் கூட கடுமையாக உயர்த்தியது. இதனால் சர்வதேச கண்காணிப்பு நிதி (IMF) முன்வைத்த கோரிக்கைகள் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

 

எரிபொருள் புறக்கணிப்பு

 

கடந்த ஆண்டே அதீத வாழ்க்கை செலவினங்கள் அதிகரித்தமைக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கி விட்டது. மிகப் பிரபலனமான ஒரு போராட்டம்  முட்டை வாங்குவதை புறக்கணிக்கும் போராட்டம். இதில்   நூறாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கு பெற்றனர். இம்முறை மக்கள் எரிவாயு நிலையங்களில்,  “சகோதரர்களே, நான் உங்கள் வாகனங்களில் எரி வாயு நிரப்புவதை தடுக்கவில்லை. ஆனால் மூன்று நாட்களுக்கு எரி வாயு நிலையங்களை புறக்கணிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்” எனக் கூறும் பதாகைகள் வைக்கப்பட்டன.

போராடும் மக்களுக்கு ஆதரவாக சமூக வலை தளங்களும் கொந்தளித்துக் கொண்டிருந்தன. எங்கு பார்த்தாலும் ‘திருடர்களின் அரசாங்கம்’ என்ற  கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பொது வேலைநிறுத்தத்திற்கும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கும் தூண்டுதலாக இருந்த சர்வதேச கண்காணிப்பு நிதியத்தின் பிரதிநிதியாக பிரதமர்  அல் முல்கீயின் கொண்டு வந்த புதிய சட்டம் ஆகும். இச்சட்டம்  பெருநிறுவனங்களோடு நிறுத்திக்கொள்ளாமல் ஊழியர்களிடமிருந்தும் பெரும் வரி வசூலித்து  தொழிலாள வர்க்கத்தின் வறிய பகுதியினர் மேலும் சுமை திணிக்கப்பட்டுள்ளது. வருமான வரி விலக்கு வருடத்திற்கு $ 17,000 இல் இருந்து $ 11,000 ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதன்மூலம் மிக குறைந்த வருமானம் உள்ளவர்களிடமும் வரி பறிக்கப்பட்டு வறுமை கூடும் நிலையே உள்ளது.

 

ஜோர்டானிய அரசாங்கம் ஆர்பாட்டக்குரலை அடக்கும் பொருட்டு மூர்க்கத்தனமாக எரி பொருள் விலை மற்றும் மின்சார கட்டணங்களை இவ்வருடத்திலையே ஐந்தாவது முறையாக உயர்த்தியது. இது பொது மக்களின் கோபத்தை மிகவும் தூண்டியது. வெள்ளிக்கிழமை, 1, ஜூன் மற்றும் சனிக்கிழமைக்குள்  மக்கள் பெரும் அணிகளாக ஆர்ப்பாட்டகளில் இறங்கினர்.

இதை கட்டுப்படுத்த முடியாமல் மன்னர் அப்துல்லா தலையிட்டு மின்சாரம் மற்றும் எரி பொருள் விலை உயர்வை ரத்து செய்தார். முந்நாளில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைப் போல் இம்முறையும் ஆட்சி மாற்றம் கொண்டு வந்தால் சூழ்நிலைகள் அமைதி பெறும் என நம்பினார். ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக வைக்கப்படுவது, புதிய வருமான வரி மசோதாவை ரத்து செய்வதாகும். சட்டமன்ற நடவடிக்கைகளை மாற்றுவதற்கு ஒரு குழுவை அமைக்க வேண்டி  ஜூன் 2 ம் தேதி, அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்களிடையே ஒரு தெளிவற்ற உடன்படிக்கை கையெழுத்தானது. எனினும் பன்னிரெண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே இதற்க்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் ஆர்ப்பாட்டங்களில், குறிப்பாக அம்மான் தலைநகருக்கு வெளியே, அரசாங்கமும் நாடாளுமன்றமும் விலக  வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்ட வண்ணம் உள்ளன. மன்னரை அகற்றுவதற்கான அழைப்புகள் கூட அறிவிக்கப்பட்டன.

மக்கள் புதிதாக நியமனம் செய்து இருந்த பிரதமர் ஒமர் அல்-ரஸ்ஜாஸ் மீதும் தங்கள் அதிருப்தியை காட்டினர். நாட்டின் சக்தி வாய்ந்த இராணுவ படை வீரர் சங்கம் மற்றும் ஓய்வு பெற்ற பல மூத்த இராணுவ தலைவர்களும் இந்த நியமனம் ‘அதிர்ச்சி’ மற்றும் ‘ ஆத்திரம்’ ஊட்டுவதாக இருக்கிறது என அறிக்கை வெளியிட்டுள்ளனர். ‘பழைய தோல்வியுற்ற அரசாங்கத்தின் அங்கமாகவே இவர் இருக்கின்றார்’ என்பதை மக்கள் பேசுகிறார்கள்.

 

மற்றொரு பொது வேலை நிறுத்தம்

 

பொது மற்றும் தனியார் ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை ஜூன் 6 ம் தேதி ஒழுங்குபடுத்தியது.

காவலர்களை வரவேற்று அதேசமயம் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொல்வதை தவிர்க்குமாறு அவர்களை கேட்டுக் கொள்ள ‘களத்தில் இறங்கியுள்ளார்’ இளவரசர் ஹுசைன்.  இந்த நிலையில், ஜோர்டானிய ஆட்சி பொலிஸ் படையுடன் போராட்டத்தை நசுக்க முயன்றால் ஒரு பெரிய வெடிப்பு ஏற்படும் என்பதை அவர்களும் உணரத் தொடங்கி இருப்பதை இது காட்டுகிறது.

ஏற்கனவே இப்போராட்டங்கள் பொருளாதார அழுத்தத்தின் கீழுள்ள நடுத்தர வர்க்கத்தையும் பழங்குடி தலைவர்களையும் ஆர்ப்பாட்டங்களில் இணைத்துள்ளது.

பிரதமர் போன்று அரசரும் IMF டன் இணங்கி பொருளாதார ஆணைகளை செயற்படுத்த முற்பட்டால் அதீத வாழ்க்கை செலவீனங்களுக்கான போராட்டம் ஒரு புரட்சிகரமான போராட்டமாக மாறி   அரச ஆட்சியையே அகற்றிவிடும். இது பொது மக்களிடையே தன்னம்பிக்கையைத் தூண்டி இப்போரட்டத்தை இன்னும் உறுதியாக கட்டியெழுப்ப வழிவகுக்கும்.

இப்பகுதியில் வாழும் ஆளும் வர்க்கங்கள் ஜோர்டானிய வர்க்கப்போராட்டத்தை பார்த்து அஞ்சுகின்றன. இது மற்ற நாடுகளில் வாழும் வெகுஜனங்களின் தன்னம்பிக்கையையும் போராட்ட குணத்தையும் மீண்டும் நிலைநாட்ட உதவியதுடன், ஆளும் வர்க்கங்கள், பிற்போக்குத்தன சக்திகள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளை ஊக்குவித்த “அரபு குளிர்காலத்தின்” முடிவாகவும் அமையும்.

வெகுஜனங்களை அமைதிப்படுத்த மேற்கொண்ட  சிக்கன நடவடிக்கைகளை ஆட்சியாளர் ஒழித்துவிட்டால், முதலாளித்துவ பொருளாதாரத்தில் உள்ள  நெருக்கடியை தடுக்கும் ஒரு மாற்று பொருளாதாரத் திட்டம் தேவைப்படும்.

சர்வதேச கண்காணிப்பு நிதியம் (IMF), அபிவிருத்திகளை செய்யவேண்டிய அழுத்தத்தின் அடிப்படையில், கடும் வலதுசாரிகளுக்குப் பதிலாக மிதவாதிகளை ஊக்குவிக்க முயற்சிக்கலாம். முதலாளித்துவ சக்திகளிடமிருந்து பொருளாதார ‘உதவிகளுக்கான’ திட்டங்கள் கூட தற்காலிகமாக முன்னெடுக்கப் படலாம். ஆனால் கடன் பிரச்சினைகள், வாழ்க்கை செலவு, அதிக வேலையின்மை – அகதிகள்  நெருக்கடி, மற்றும் சமத்துவமின்மையினால் பெருகி வரும் கோபம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இது போதுமானதாக இருக்காது. ஜோர்டானில் உள்ள பெண்கள் பெரிய பாலின வேறுபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். மத்திய கிழக்கில் அதிகம்பேர் கல்வி கற்றவர்களாக இருந்த போதிலும், அவர்களில் ஒரு சிறிய எண்ணிக்கையினருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது.

முதலாளித்துவ ஆட்சி சில முடிவுகளைத்  தள்ளிப்போட ஒருவேளை முயற்சி செய்யலாம். ஆனால் ஜோர்டானிய மற்றும் வெளிநாட்டு மூலதனம் – ஜோர்டானிய தொழிலாளர்களை சுரண்டுவதை எளிதாக்கும் புதிய தாராளவாத கொள்கை மூலமே பொருளாதார  பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கும்.

ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவு கரம் நீட்டுவதொடு வலது சாரி முதலாளித்துவ கொள்கைகளை முன்னெடுக்கும் ‘முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு’, இம்முறை  போராட்டங்களில்  முக்கிய பங்கு கொண்டிருக்கவில்லை. தொழிலாளர்கள் அமைப்புகள் மற்றும் இளைஞர்களே ஆர்ப்பாட்டங்களை வழிநடத்துகின்றனர். இது பொதுநல செலவு குறைப்புக்கு எதிரான நடவடிக்கைகள்,- மற்றும்  வறுமை, ஊழல் நிறைந்த அரசியல், அடக்குமுறைகள் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக இன்னும் திறமையான போராட்டத்தை கட்டியெழுப்புவதற்கான சாத்தியத்தை வலுப்படுத்தும். அதே நேரத்தில் தொழிலாளர்கள், ஏழை மக்கள் மற்றும் இளைஞர்களின் நலன்களை பிரதிபலிக்கும் ஒரு மாற்று திட்டத்தையும் ஊக்குவிக்கும்.

நடுத்தர வர்க்க வட்டாரங்களில் ஒரு ‘தேசிய இரட்சிப்பு அரசாங்கம்’ ஒன்றை அமைப்பதற்கான தெளிவற்ற அழைப்பு இருப்பதற்கு மாறாக இது இருக்கும். எவ்வாறாயினும், முதலாளித்துவ அடிப்படையில் நெருக்கடியை தீர்க்க முயற்சி செய்யும் எந்த “மாற்று” அரசாங்கமும், -வெகுஜன ஆத்திரத்தை தணிப்பதற்கு சலுகைகளை முன்னுரிமை செய்தாலும்கூட – , அதற்கு பின்னர் முதலாளித்துவ சார்பு மற்றும் தொழிலாள வர்க்க விரோத நடவடிக்கைகளையும்  ஆளும் வர்க்க கோரிக்கைகளையும்  கடைபிடிக்க வேண்டியிருக்கும்.

ஒரு உண்மையான “இரட்சிப்பு” அரசாங்கம் நேரடியாக தொழிலாளர்களின் அமைப்புக்கள், இளைஞர் இயக்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அவற்றின் உண்மையான பிரதிநிதிகளை கொண்டிருக்க வேண்டும். வறுமை, வேலையின்மை ஆகியவற்றை அகற்ற வேண்டும். சோசலிசத்திற்கான மாற்றத்தை கொள்கையின் அடிப்படையாக கொண்டதாக, ஒரு உண்மையான ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதற்காக, பணக்கார அரச குடும்பத்தினருக்கும் செல்வந்த முதலாளிகளுக்கும் ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான பணியை மேற்கொள்ள வேண்டும்.

ஜோர்டானில் எழுந்துள்ள இப்போராட்டங்கள் ஒரு நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது. ஊழல்வாத உயரடுக்கிற்கு எதிராகவும், அடக்குமுறை அரசாங்கங்கள் மற்றும் திவால்நிலைக்கு எதிராகவும் இம்மாதிரியான போராட்டங்கள் மிக அவசியம். இவை ஒடுக்கப்படும் மக்களின் ஒன்றிணைந்த பலத்தை உலகிற்கு பறைசாற்றுகின்றன.

-சத்யா ராஜன்     

சகார் பென்கொரின் கட்டுரையை தழுவி எழுதப்பட்டது

சாகர் பென்கொரின், இஸ்ரேல்-பாலஸ்தீனிய சோஷலிச போராட்ட இயக்கத்தின் உறுப்பினராக போராட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருபவர்.