போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 1

1,104 . Views .

1

மே மாதம் 18ம் திகதி 2009 ஆண்டு முள்ளிவாய்க்காளில் என்ன நடந்தது?

சிங்கள இனவெறியர்களுக்கு இது யுத்தம் வென்ற வெற்றிக் களிப்பு நாள்.

சமரச வாதிகளுக்கு ‘ஒருபடியாக யுத்தம் முடிவுக்கு வந்த’ நாள்.

வலதுசாரிகளுக்கு புதிய புதிய லாபங்கள் கண்ணுக்குத் தெரிந்த நாள்.

மேற்கு அரசுகளுக்கு தொலைந்து கொண்டிருந்த தெற்காசிய நலன் ஓன்று மீளத் தொடங்கிய நாள்.

சீனாவுக்கு தன் நலனுக்கு ரோட்டுப் போட்ட நாள்.

கூட்டமைப்புக்கு ‘கூட்டுக்கு’ ஒரு புது அர்த்தம் பிறந்த நாள்.

புலி எதிர்ப்பாளர்களுக்கு புலிகளை முடித்து வைத்த புனித நாள்.

புலிகளுக்கு ஆயுதம் மொளனித்த நாள்.

ஆயிரம் ஆயிரம் மக்களுக்கு தங்கள் சொந்தங்கள் சொத்துக்களை இழந்த நாள். மேலும் ஆயிரம் ஆயிரம் மக்களுக்கு தமது வாழ்வாதாரம் மற்றும் உடல் உறுப்புகளை இழந்த நாள். தெற்காசிய அதிகாரங்களின் மோதல் ஒரு படுகொலையை நிகழ்த்தி மறைத்த நாள்.

 

இடதுசாரிகளுக்கு இது ‘முடிந்த நாள்’ இல்லை. போராட்டம் தொடரும் அவசியம் பலப்பட்ட நாளும். வீழ்ந்தவர்களை எண்ணி –நடந்த இனப் படுகொலை எண்ணி எல்லார் மனமும் வருந்தும். பாதிக்கப் பட்ட மக்கள் கண்ணீர் விட்டுக் கதறி நினைத்துக் கொள்வர். மக்களுக்கான விடுதலை பற்றிப் பேசுவோர் அந்த நினைவோடு நின்று விட முடியாது. மக்கள் போராட்டம் நோக்கித் திரும்ப வேண்டும் – அவர்களின் எழுச்சி நிகழ வேண்டும். இந்த நோக்கில் இந்த நாளை வெறும் வீழ்ச்சியும் –அழுகையுமாக நிகழ்த்துவதை நாம் எதிர்க்கிறோம். கொல்லப்பட்டோரை நினைப்பது என்பது அழுவதற்கு மட்டும் அல்ல. கொலைக்கு காரனமானவர்களை பழிவாங்குவோம் எனச் சூளுரைக்கும்/ பழிவாங்கும் நோக்கு அல்ல. மாறாக கொலைக்கு காரணமான அரசியலைத் துடைத்து எறிந்து –கொலைக்கு காரணமானவர்களை அரசியல் ரீதியாக தோற்கடித்து –மக்களை விடுதலை நோக்கி நகர்த்தும் நோக்கு இந்த நினைவில் இருக்கிறது. இதனால்தான் வெறும் நினைவாக மட்டும் இந்த நிகழ்வு சுருங்குவதை மறுக்கிறோம்.

2

முள்ளிவாய்க்கால் நிகழ்வும் –கொடி விவகாரமும்

இந்த நிகழ்வை நடத்துவதை ஆரம்பத்தில் இருந்தே பல சக்திகள் எதிர்த்து வருகின்றன. வீழ்வோம் என்று நினத்தாயோ என்ற கோசத்துடன் –விழுந்த இடத்தில் இருந்து எழுவோம் என்ற வீறாப்புடன் போராட்டம் நோக்கி நகரும் நிகழ்வு தமிழ் நாட்டில் மட்டுமே பலப் பட்டுக் கொண்டிருந்தது. ஈழத்தில் இந்த நிகழ்வை நடத்த அரச தடை – பாதுகாப்பு நெருக்கடிகள் இருந்தன. இளையோருக்கும் மக்களுக்கும் இந்தபிரச்சினை இருப்பினும் –தமிழ் பாராளுமன்ற தலைமைகளுக்கு அந்தளவுக்கு பிரச்சினை இருக்கவில்லை. ஆனால் அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கத் தயாராக இருக்கவில்லை. அவர்களைப் பொறுத்த வரை இந்த நினைவு மீன்டும் போராட்ட உணர்வை தூண்டும் என்ற உள்மனப் பயம் அவர்களுக்கு உண்டு. இது தவிர அவர்களுக்கு தமது மேற்குலக நட்பை பகைக்காது இயங்க வேண்டும் என்ற மனக்கவலை முள்ளிவாய்க்கால் அழிவு பற்றிய கவலையை விட அதிகம். சிவாஜிலிங்கம் போன்ற துணிந்த கட்டைகள் மட்டும் தன்னந் தனியாக நின்று கத்த விடப்பட்டார்கள். இதற்குள் சிவாஜிக்கு விசர் என்ற பொய் பிரச்சாரங்கள் வேறு.

இதையும் மீறி பல இளையோர் படுகொலை மறக்க முடியாது எனப் பதியும் நடவடிக்கைகளில் இயங்கி வந்தனர். அதன் தொடர்ச்சிதான் மாணவர்களும் இளையோரும் இந்த நிகழ்வை தாமே நடத்த வேண்டும் என முன் வரக் காரணமாயிற்று. இந்த ஆண்டு மேலதிக ஒழுங்கமைவுகள் நிகழ்ந்ததற்கு பின்னால் இருந்த முக்கிய அமைப்புக்களில் ஓன்று- ஒடுக்கப்படும் மக்களுக்கான தளம் என்ற அமைப்பு. இந்த அமைப்பு அரசியல் எழுச்சியாக இந்நிகழ்வு இருக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இயங்கி வருவதும் – நிகழ்வுக்கு முன் அந்தக் கோரிக்கையுடன் ஆயிரக் கணக்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததும் குறிப்பிடத் தக்கது. மக்கள் எழுச்சியாக நடத்த திட்டமிட்டதை மட்டுப்படுத்த வடமாகான சபை தலையிட்டதும் நிகழ்ந்தது. அது ஒரு பின்னடைவே. இந்த அர்த்தத்தில் கருணாநிதி 2009ல் செய்ததை விக்னேஸ்வரன் 2018ல் செய்திருக்கிறார். மாணவர்கள் வட மாகான சபைக்கு விட்டுக் கொடுத்தது தவறு. அவர்கள் அதை மறுத்திருக்க வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக ஒரு நிகழ்வாக நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் அவர்கள் விட்டுக் கொடுத்து விட்டார்கள். இது தவறு. அரசியற் பலவீனம். இத்தகைய ‘வானவில்’ ஒற்றுமைகள் நீண்ட காலத்துக்கு நீடிக்க முடியாதவை. நிறம் பிரிந்து உடைந்தே ஆகும். அடுத்த முறை வட மாகாண சபை இந்த நிகழ்வை அரசின் அதிகார பூர்வ நிகழ்வாக்கி மக்களை தூரத்தில் வைக்கும் என்ற பயம் மாணவர்களுக் உண்டு. வட மாகான சபையின் கோரிக்கையை ஏற்ற அவர்கள் வெளியிட்ட அறிக்கை அதை தெளிவாக காட்டுகிறது. அது நியாயமான பயமே. தமது கையில் இருந்து அவர்கள் நழுவ விடுவார்களானால் அதுதான் நடக்கும். அதன்பின் பிரிந்து பிரிந்து நிகழ்வு நடத்த வேண்டித்தான் வரும். இப்போதே தமது பலத்தை தளர விடாது மாணவர்கள் தனித்துவமான பலம் நோக்கி நகர முற்பட்டிருக்க வேண்டும்.

‘அவர்கள்’ நடத்தினால் எப்படி இருக்கும்? இன்று பிரித்தானியப் பேரவை எவ்வாறு இந்நிகழ்வை நடத்துகிறதோ அப்படித்தான் இருக்கும். பி.டி.எப் தான் இந்நிகழ்வை இங்கிலாந்தில் முதன் நடத்த தொடங்கியது. டி.சி.சி மற்றும் நாடு கடந்த அரசுக்கு இதை நடத்தும் பலம் அப்போது இருக்கவில்லை. ஆயிரக் கணக்கில் மக்கள் கலந்து கொண்டனர். 2010ல் 50 000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொடிருப்பார்கள் என நினைக்கிறேன். மக்கள் திரண்டு வந்தது வெறும் நினைவுக்காக மட்டும் அல்ல. அடுத்து என்ன என அறியவுமே.

ஆனால் நாம் என்ன செய்தோம்?

மக்களை பத்து அடி தள்ளி நிற்கச் சொன்னோம். மேடைகள் கட்டினோம். மேடைகளில் மோசமான வலதுசாரிய அரசியல் வாதிகளை ஏத்தினோம். தமிழர் பாவம் என அவர்களும் போலிக் கண்ணீர் வடித்து விட்டு சென்றனர். அவர்களுக்கு தமது வாக்கு வங்கியை தக்க வைக்கும் ஒரு செயல் தான் இது. சிரியாவில் குண்டு போட வாக்குப் போட்டு விட்டு – அங்கு குழந்தைகள் கொத்து கொத்தாக கொல்லப் படுவதை பார்த்தும் பார்க்காமல் – கொலைச் சூடு ஆற முதலே மனித உரிமை பற்றி போலிக் கண்ணீர் வடிக்கின்றனர். இதே வறட்டு வலதுசாரிகல்தான் மனித உரிமை சட்டம் இங்கிலாந்தில் ரத்துச் செய்யப் பட வேண்டும் எனக் கடுமையாக வாதிடுபவர்கள்.

நிகழ்வுக்கு வந்தோம் – பூவைப் போட்டம் –பிறகு லூசுக் கதைகளைக் கேட்டம் -வீட்ட போனம் என்ற போக்கில் மக்கள் தொடர்ந்து வர முடியுமா? இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அர்த்தங்கள் சுருங்கி தற்போது கலந்து கொள்வோர் எண்ணிக்கை சில நூறுகள் என வந்து நிற்கிறது. இதற்கு மக்கள் பொறுப்பில்லை. புலிகளின் கொடியை ஏற்றுவதால்தான் மக்கள் கலந்து கொள்கிறார்கள் இல்லை என்ற பேச்சும் ஒரு சமயம் பரப்பப் பட்டது. பி.டி.எப் ன் தலைமைகள் இந்த பேச்சை நேரடியாக் பேசாவிட்டாலும் அவர்கள் புலிக்கொடி நிகழ்வில் பிடிப்பதை தடை செய்தனர். மேற்கு அரசுகள் மற்றும் இந்திய அரசு ஆகியவற்றுடன் பேச வேண்டும் என்ற சமரசம் இந்த தடையின் பின் இருந்ததை பலர் ஏற்றுப் பேசி இருக்கின்றனர்.

இதை தமிழ் சொலிடாரிட்டி கடுமையாக எதிர்த்தது. தற்போது இலங்கை அரசுடனும் பேசத் தயாராகிக் கொண்டிருக்கும் அவர்கள் புலிகளின் கொடிக்கான முழு மறுப்புடன் இயங்கி வருகின்றனர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு இதை எதிர்த்து முன்பு ஒரு கலவரத்தை நிகழ்த்தியது. தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்பது அவர்கள் வாதமாக இருந்தது. புலிகள் இயக்க அடையாளமுள்ள கொடி தேசியக் கொடி இல்லை என்பது வேறு விசயம். ஆனால் டி.சி.சி சொல்வதற்கு மாறாக புலிகளின் கொடியையும் எதிர்ப்பு அடையாளமாக இங்கு பாவிக்க முடியும் என்று நாம் பேசி இருந்தோம். ஐ,பி.சி தொலைக் காட்சியில் இது பற்றிய விவாதத்தின் போது தமிழ் சொலிடாரிட்டி தமது நிலைப்பாட்டை தெளிவாக வைத்திருந்தது. மேற்கு அரச சக்திகள், இந்திய அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் உறவுக்காக போராட்ட சக்திகளை – போராட்ட உணர்வை முடக்குவது கடுமையாக எதிர்க்கப் பட வேண்டும். புலிகளின் கொடி அவர்களுக்கு உவப்பானதல்ல என்ற காரணத்தால அதற்கு ஒரு புது எதிர்ப்பு அடையாளத்தை –புதிய தலைமுறை உணர்கிறது. அதை நாம் ஆதரிக்கிறோம் – அந்த உரிமைக்காக எம் குரல் எழும் என தெளிவாக சொல்லி இருந்தோம்.

எவாறு மக்களின் கொலைக்கு காரணமான சக்திகளோடு சமரசத்தோடு இந்நிகழ்வு நிகழ்கிறதோ அதே போல்தான் இலங்கையிலும் மாறி நடக்க வாய்ப்புண்டு – அந்த நிலை வர விடக்கூடாது மாணவர்கள். சமரசமற்ற அரசியல் யுத்த குணம் இதற்கு வேண்டும். வெறும் ஒற்றுமைப் புனித கதைகளுக்கு எடுபட்டு ஏமாந்து விடக் கூடாது.

டி.சி.சி இந்த நிகழ்வை பி.டி.எப் இடம் இருந்து பறித்து விடும் நோக்கத்துடன் இயங்கியதே தவிர இதை மக்கள் எழுச்சி நிகழ்வாக நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இயங்கவில்லை. கொடி பிடிப்பது பற்றி நாம் என்ன சொல்கிறோம் என இன்றுவரை இவர்களுக்கு விளங்கியதாகத் தெரியவில்லை. புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் இயக்க அடையாளங்களை பாவிப்பதற்கு ஐரோப்பாவில் தடை உண்டு. இதை தமிழ் சொலிடாரிட்டி சரி என ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. இத்தகைய அனைத்து அரசியற் தடைகளையும் நாம் எதிர்க்கிறோம். தடையையும் மீறி நாம் இயங்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.

ஆனால் ஒரு இயக்கம் தனது அடையாளங்களை ‘மக்களின் அடையாளமாக’ திணிப்பதையும் நாம் எதிர்க்கிறோம். மக்கள் போராட்டத்தைக் கட்ட முன் வரும் எந்த அமைப்பும் ‘நாம்தான் மக்கள்’ என்ற பாவனை செய்வது மிகப் பெரும் தவறு. அந்த அடிப்படையில் மக்களை அரசியல் ரீதியாகத் திரட்ட முடியாது. முள்ளிவாய்க்கால் நிகழ்வு விடுதலைப் புலிகள் மட்டும் சார்ந்த விசயம் இல்லை. ஆனால் முள்ளிவாய்க்காளில் அழிக்கப்பட்ட புலிகளை மறந்து அல்லது ஒதுக்கி இந்த நிகழ்வு பற்றி பேசவோ – நடத்தவோ முடியாது. ஆயிரக்கணக்கான இளையோர் – மக்கள் விடுதலைக்காக என்ற நோக்கில் புதைக்கப்பட்டதை மறைத்து இயங்க முயல்வது மிகப் பெரிய தவறு. எப்படியாவது புலிகளின் வரலாற்றை முடிப்பதன் மூலம் போராட்ட கதையாடலையே முடித்து விட வேண்டும் என நினைக்கும் வலது சாரி சக்திகள் –மற்றும் தம்மை தாமே புத்தி சீவிகள் எனக் காட்டிக் கொள்ளும் போலி போதாமைகள் புலிகளை எப்படியாவது வரலாற்றில் புதைத்து விட துடிக்கிறார்கள். அவர்களுக்கும் எதிர்ப்பு என்ற எமது போராட்ட நிலைப்பாடுதான் எமது. அந்த அர்த்ததில்  புலிகள் அமைப்பினர் புலிக்கொடி பிடிக்கும் உரிமைக்காக கடுமையாக பேசவும் இயங்கவும் செய்வோம். இதனால் கடந்த போராட்ட கால கட்டத்தில் நிகழந்த தவறுகள் மற்றும் அரசியல் முன்னோக்குப் பிழைகள் எல்லாவறையும் நாம் தத்தெடுக்கிறோம் என சுருக்கிப் பார்ப்பது தவறு. இதை விளக்கத்தான் நாம் போராட்டத்தின் தொடர்ச்சி எனப் பேசுகிறோம். போராட்ட வரலாறு அதன் தவறுகளால் முழுமையாக புதைக்கப்பட்டு பின்பு ஒரு புனிதமான போராட்டம் எழும் என்ற அரசியல் விளக்கமற்ற கதைகளை நாம் பேசுவதில்லை. போராட்டத்தின் தொடர்ச்சிதான் நாம். ஆனால் அனைத்து பிழைகளையும் தத்தெடுத்தவர்கள் அல்ல. மாறாக தொலைதூர பார்வை உள்ள அரசியல் முன்னோக்கு நோக்கி நகர்பவர்கள்.

 

இந்தப் புள்ளியை நீங்கள் மிக அவதானமாக கவனிக்க வேண்டும். அதிகாரங்களுக்கு எதிர் என்ற நிலைப்பாடுதான் சில இலச்சினைகளை – கொடிகளை –வரலாற்றில் புதிப்பிக்கிறது. பழைய ‘நினைவு’ என்ற ஒற்றை காரணத்துக்காக புதிய தலைமுறை எதிர்ப்பு அரசியல் நோக்கி நகர்வதில்லை. மாறாக இது ஒரு அரசியல் அடிப்படையில் நிகழ்கிறது. நாம் எதிர்ப்பு கட்டும் போராளிகள் என ஒரு பக்கம் காட்டிக் கொண்டு –மறு பக்கம் அனைத்து அதிகார சக்திகளினதும் கால்களை நக்கும் செயலைச் செய்வது என்ன நியாயம்?

போராட்ட அரசியல் பற்றிய தெளிவு எமக்கு வேண்டும்.

மாவீரர் நாளை நடத்துவதுபோல் முள்ளிவாய்க்கால் நிகழ்வையும் நடத்த முடியாது. மாவீரர் நாளில் கூட புலிகள் அமைப்பு தமது அரசியல் நிலைப்பாடு – அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி உரை வழங்கும் வழிமுறை இருந்தது. குறைந்த பட்சம் இதை முள்ளிவாய்க்காள் நிகழ்விலாவது நாம் பேசியாக வேண்டும். டி சி சி என்ற ஒரு அமைப்பின் நிகழ்வு அல்ல இது. பி டி எப் இந்த நிகழவை நடத்தும் முறை பற்றி கடுமையான எதிர்ப்பை தமிழ் சொலிடாரிட்டி முன் வைத்த போதும் அவர்கள் இந்த நிகழ்வை நடத்த இருக்கும் உரிமை பற்றி கேள்வி கேட்டதில்லை. மக்கள் அத்தகைய சமரச நிகழ்வுகளுக்கு செல்லவேண்டாம் போராட்ட அரசியல் நோக்கித் திரளுங்கள் என்ற கோரிக்கைதான் நாம் மக்கள் முன் வைக்கும் பிரச்சாரம். இது நோக்கித் திரளும் மக்கள் கூட்டம் ஒரு சிறுபான்மைதான் என்ற தெளிவோடும்தான் நாம் இயங்குகிறோம். அதை மாற்றி அமைக்க வேண்டியதும் புதிய தலைமுறை இளையோரைத் போராட்டத்துக்கு திரட்டுவதும் எமது கடமை.

ஒரு 500 பேர் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்வாக முள்ளிவாய்க்கால் நிகழ்வு சுருங்கி நிற்பதை நாம் மறுத்து –அதை மாற்றி போராட்ட திரட்சி நிகழ்வாக இந்நிகழ்வு அமைய வேண்டும் என்பது எமது அவா.