விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 1

-சு. கஐமுகன் gajan2050@yahoo.com

விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை

சர்வதேச உண்மைமற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP – International Truth and Justice Project) என்னும் அமைப்பானது இடைநிலை நீதி நிபுணர் ஜஸ்மின் சூக்காவின் வழிகாட்டலின் கீழ் தென் ஆபிரிக்காவிலுள்ள மனித உரிமைகளுக்கான அமைப்பினால் (Foundation for Human Rights)  நடாத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட ITJP இன் அறிக்கையானது ஒரு சில குறைபாடுகளைக் கொண்டிருந்த போதும் தற்போதைய சூழலில் மிக முக்கியமானதாகக் கவனத்திற் கொள்ள வேண்டிய ஒரு அறிக்கை ஆகும். ஏனெனில் இதுவரை வெளிவந்த போர்க்குற்றம் தொடர்பான அறிக்கைகளில் சாட்சியங்களாக பாதிக்கப்பட்ட மக்களே இருந்து வந்துள்ளனர் ஆனால் தற்பொழுதுதான் முதன் முறையாக  போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட விசேட அதிரடிப் படையினர், அவர்களுடன் தொடர்புடைய நபர்கள், அவர்களுடன் சேர்ந்து இயங்கிய படையினர் எனப்பலர் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆகவேதான்  இவ்வறிக்கையானது கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமானதொன் றாகக் கருத வேண்டியுள்ளது.

போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட 56 இலங்கை விசேட அதிரடிப் படையினரின் இரகசியப்பட்டியல் ஒன்றைத் தயாரித்து வைத்திருக்கும் ITJP யானது, அவர்களை ஐ.நாவின் அமைதி காக்கும் பணிக்கு தெரிவு செய்யக் கூடாது என தெரிவித்துள்ளது. இவ் 56 பேர்களில் 32 பேர் முன்னணி படைத் தளபதிகளாக இருந்தனர் என்பது குறிப்பிட்டத்தக்கது. சாட்சியங்களைப் பாதுகாக்கும் பொருட்டு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட விசேட அதிரடிப் படையினரின் பெயர்களை பகிரங்கமாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தமுடியாது எனவும், எனினும் அவர்களின் தகவல்களை ஐ.நா வுடன் பகிர்ந்து கொள்ளப் போவதாகவும் யாஸ்மின் சூக்கா தெரிவித்து உள்ளார்.

கடந்த காலத்தில் விசேட அதிரடிப்படையினர், ராணுவம் மற்றும்  கருணா குழுவுடன் சேர்ந்து பல்வேறு தமிழ் தலைவர்களையும் (குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு) படுகொலை செய்தமைக்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாக ITJP தெரிவித்துள்ளது. மேலும் விசேட அதிரடிப் படையினர் வெள்ளை வான் கடத்தல் (போலி வாகனத் தகட்டு இலக்கத்தில் சென்று ஆட்களைக் கடத்தல்),போலி என்கவுண்டர்கள், மாறிக் கடத்தப்பட்ட ஆட்களை கூடக் கொள்ளுதல் என பல முறைகேடுகளை அரச ஆதரவுடன் மேற்கொண்டனர் எனவும் சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுமிடத்து அதனை வெளியிடத்தயார் என ITJP அதிகாரி யாஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

2017 ம் ஆண்டு முதல் இலங்கையிலிருந்து 140 – 200 விசேட அதிரடிப் படையினரை ஐ.நா வின் அமைதிப்படையில் சேர்ப்பதற்கான செயன்முறைகளை ஐ. நா தொடங்கிவிட்டது. அவ்வாறு இணைத்த அல்லது இணைத்துக் கொண்டிருக்கின்றவர்களில் பெரும்பாலனோர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களாவார். யுத்தக் குற்றவாளிகள் என இனம் காணப்பட்ட ராணுவத் தளபதிகளான வருண ஜெயசுந்தர (waruna Jayasundera), மற்றும் அத்துல தவுலகல ( Athula Daulagala) போன்றோர் தென் சூடானிற்கு சமாதானத் தூதுவர்களாக சென்றுள்ளனர். அதில் குறிப்பாக வருண ஜெயசுந்தர 2006 – 2007 வரையான காலப்பகுதியில் இலங்கையில் கிழக்கு பகுதியில் உளவுத்துறையில் பணிபுரிந்து பல மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் கடந்த வருடம் இலங்கைக்கு ஜி எஸ் பி ப்ளஸ் இணைப் பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய யூனியனுக்கும் வந்து சென்றமை குறிப்பிடத்தக்கது. அது தவிர பல்வேறு முறைகேடுகளை , குற்றச் செயல்களை மேற்கொண்ட காவல்துறை மேலாளர் விமலரத்ன மற்றும் சிந்தக போன்றோர் பயிற்சித்திட்டம் ஒன்றிற்காக ஜோர்டான் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். மேலும் தற்பொழுது ஆப்ரிக்கா நாட்டில் ஐ நாவின் அமைதிப்படையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் முன்னால் விசேட அதிரடிப்படையின் தளபதி ஒருவர் 2006-2007 காலப்பகுதியில் பல தமிழர்களை தனது மேற்பார்வையின் கீழ் படுகொலை செய்ததற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாக ITJP தெரிவித்துள்ளது. இவர்களைப் போன்றே பல யுத்தக் குற்றவாளிகள் ஐ. நா வின் அமைதிப்படையில் பணிபுரிவதற்காக இலங்கையிலிருந்து ஆசிய, ஆபிரிக்க நாடுகளிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தாம் சார்ந்த நாடுகளில் மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான முறைகேடுகள் போன்றவற்றை மேற்கொண்டோரே, ஐ. நாவின் அமைதிப்படையில் அங்கத்துவம் வகிக்கின்றனர். அதுமட்டுமல்லாது தாம் பணிக்கு சென்ற நாடுகளில் கூட பாலியல் துஸ்பிரயோகம், மனித உரிமை மீறல்கள் போன்றனவற்றிலும் ஈடுபடுகின்றனர். அதனால்தான் 2005 முதல் 2007 வரை கிழக்குப் பகுதியிலும், 2007 முதல் 2009 வரை வடக்குப் பகுதியிலும் பணி புரிந்த விசேட அதிரடிப்படையினர் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் எனவும் அவர்களை எக்காரணமும் கொண்டு ஐ.நா வின் அமைதிப்படைக்கு சேர்க்ககூடாது என்று ITJP எச்சரிக்கை விடுக்கின்றது.

ஐ. நா வின் மனித உரிமைக்கு பொறுப்பான மனித உரிமைகள் ஆணைக்குழுவானது (OHOCR ) தனது OISL- 2015 அறிக்கையில் இலங்கையின் பாதுகாப்பு படைகளான CID, TID, STF, SLA, SLN உட்பட அனைத்தும் வெள்ளை வான் கடத்தலில் ஈடுபட்டது எனவும். அதிலும் குறிப்பாக விசேட அதிரடிப்படையானது இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களில் முக்கிய பங்கு வகிக்கின்றது எனவும் தெரிவித்திருந்தது. அதனையும் கருத்திற் கொள்ளாமல் ஐ. நா வானது தனது அமைதிப்படைக்கு இலங்கையின் விசேட அதிரடிப் படையினரைத் தெரிவு செய்கிறது. அதனால்தான் ஐ.நா என்னும் அமைப்பானது தோல்வியுற்ற ஒரு அமைப்பு எனவும், அது மக்கள் நலனை விட  அரசுகளினதும், அதிகாரங்களின் நலனையே முன்னிலைப்படுத்துகிறது எனவும் கருதப்படுகிறது.

முக்கிய பிரமுகர்களைப் பாதுகாத்தல், கலவரங்களை அடக்குதல், புலனாய்வுதுறை பிரிவிற்கு உதவுதல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக விசேட அதிரடிப்படை என்னும் பிரிவானது காவல்துறையின் ஒரு பிரிவாக 1983 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இலங்கை காவல்துறையின் இராணுவத் துணைக்குழுவாக உருவாக்கப்பட்ட விசேட அதிரடிப் படையானது 1984 முதல் 2018 வரை, மூன்றரை தசாப்தங்களுக்கு மேலாக பல்வேறு வகையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது என ஐ.நா, இலங்கையிலுள்ள மனித உரிமை அமைப்புகள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் பல சர்வதேச அரசுகள் குற்றம் சுமத்தியிருக்கின்றன.

கடந்த மார்ச் மாதம் கண்டி முஸ்லிம் இன மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கலவரத்தின்  பின்னணியில் இருந்து இயங்கியதும் இவ் விசேட அதிரடிப் படையினர்தான். புத்தபிக்குகளும், காடையர்களும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தாக்குதல் நடாத்தும்பொழுது வெறுமனே வேடிக்கை பார்த்துகொண்டு நின்றதும், அதனைத் தூண்டியதும் இதே அதிரடிப் படையினர்தான்.  கலவரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாகப்பட்ட விசேட அதிரடிப்படையானது கலவரத்தை தூண்டும் வேலை செய்து வருகிறது.

இதே போன்றுதான் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பெரும்பாலான கடத்தல்களை விசேட அதிரடிப் படையினரே மேற்கொண்டனர்.‘’கடத்தப்பட்ட நபர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) அல்லது ராணுவத்தளம் அல்லது கடற்படைத்தளம், இதில் ஏதோ ஒன்றிடம் கொண்டு சென்று ஒப்படைக்கவேண்டும்’’ என ஐம்பதிற்கும் மேற்பட்ட வெள்ளை வான் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். மேலும் தமக்கான உத்தரவுகள் பாதுகாப்பு அமைச்சிடமிருந்தே வந்ததாகவும் சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார். தமது இராணுவ வாகனங்களைக் கழுவுவதற்கும், துடைப்பதற்கும் இவ்வாறு கடத்தப்பட நபர்களையே பயன்படுத்தினர். இதனால் அக்கைதிகளுக்கு அதிகமான உணவும், நெருக்கமான சிறையிலிருந்து வெளியே சிறிது நேரம் உலவி வர அனுமதியும் கிடைத்தது.

விசேட அதிரடிப் படையினர் தம்மைத்தாமே விசேட அதிரடிப்படையினர் என்று கூறி அறிமுகப்படுத்துவதில்லை மாறாக போலீஸ் என்றே கூறி அறிமுகப்படுத்துகின்றனர். தேவைப்படும் பட்சத்தில் அவர்களிற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு கூறுகளும் இலங்கை ராணுவம் மற்றும் காவல்துறையினால் வழங்கப்பட்டுக்கொண்டே இருந்தன என்று சாட்சியொருவர் தெரிவித்துள்ளார். விசேட அதிரடிபடையினருக்கு, ராணுவத்தினர் பயன்படுத்தும் கனரக ஆயுதங்கள், மற்றும் GPMG (General Purpose Machine Gun), MPMG (Multi Purpose Machine Gun) போன்ற துப்பாக்கிகளும், யுத்தகாலத்தில் பீரங்கிப்படை, விமானப் படையின் உதவியைப் பயன்படுத்துவதற்கான முழு அனுமதியும் வழங்கபட்டிருந்தது. இலங்கை காவல்துறையின் துணைப்பிரிவாக உருவாக்கப்பட்ட விசேட அதிரடிப் படையினரின் மனித உரிமை மீறல்களுக்கு தேவையான  அத்தனை உதவிகளையும் தங்குதடையின்றி  இலங்கை ராணுவம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

கைதிகளை சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்து உயிர் மீது ஆசை இருந்தால் ஓடு எனக் கூறிவிட்டு பின்னாலிருந்து சுட்டுக் கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளதாக சாட்சியம் ஒருவர் ITJP ற்கு தெரிவித்துள்ளார். இதனை ‘’வாழ்க்கைக்காக ஓடுதல்’’ (Run For Life) எனவும் அவர்கள் அழைத்தனர் என்றும் அவ்வறிக்கை மேலும் கூறுகிறது. இது தவிர நிலக் கண்ணிவெடி உள்ள பிரதேசங்களில் கைதிகளை அனுப்பி அவர்களின் உடல்கள் வெடித்துச் சிதறுவதை கண்டு ரசிக்கும் குரூர மனநிலை கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர் விசேட அதிரடிப் படையினர். போரின்போது பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துதல் என்பது ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகின்றது. இவ் ஆயுதத்தை கடந்த காலத்தில் விசேட அதிரடிப் படையினரும் ராணுவமும் இணைந்து பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறானவர்களே ஐ .நா வின் அமைதிப்படைக்கு தெரிவு செய்யப்படுகின்றனர் என்பதுதான் கேவலமாக உள்ளது.

தற்பொழுது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சிலரின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தினை தன்னால் இனம் காட்ட முடியும் என சாட்சியாளர் ஒருவர் ITJP ற்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.  இதன் மூலம் காணமல் ஆக்கப்பட்டோர் பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர்களைப் பற்றிய தகவல்கள் தெரிந்திருந்தும் இவ் அரசு அது பற்றிய தகவல்களை  மூடி மறைத்து யுத்தக் குற்றவாளிகளை காப்பாற்றிக் கொண்டு வருகின்றது என்றும் தெளிவாகப் புரிகின்றது.

கொழும்பின் தெற்கே அமைந்துள்ள பாணந்துறையில் நிலத்தடியில் இரகசிய சிறையுடன் கூடிய தடுப்பு முகாம் காணப்பட்டதாகவும் அங்கே தமிழ் சிங்கள கைதிகள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அது தவிர பல இரகசிய முகாம்கள் கொழும்பில் காணப்பட்டதாகவும் எனினும் பின்னர் டி.என்,ஏ, இரத்தக்கறை போன்றவற்றைப் பயன்படுத்தி ராணுவத்திற்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவை பின்னர் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடத்திக் கொலை செய்யபட்ட நபர்கள் தொடர்பாக எந்தவொரு தடயத்தையும் விட்டு வைக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் விசேட அதிரடிப் படையினர். அதற்காகவே இரகசிய தடுப்பு முகாம்களை அடிக்கடி துப்புரவு செய்வதும், பின்னர் அதனை முற்றாக அழிப்பதுமாக இருந்தனர் என்று கூறப்படுகிறது. நீண்டகாலமாக கைதிகளை சித்திரவதைப்படுத்தும் முகாமாக இலங்கையின் தெற்கே காலியில் அமைந்துள்ள பூசா முகாம் காணப்படுகிறது என்று அவ் அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

கடத்தப்பட்டவர்களில் அல்லது கைது செய்யப்பட்டவர்களில் அல்லது  படுகொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் தமிழர்களாக இருந்தபோதும், தமிழர்கள் மட்டுமல்லாது அரசுக்கு எதிராக இயங்கிய சிங்கள, முஸ்லிம் மக்களையும் விசேட அதிரடிப்படையானது  கைது செய்து, கடத்திக் கொலையும் செய்துள்ளது. தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் சிங்கள பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள்போன்றோரும் இதில் அடங்குவார்.

யுத்தத்தின் போது இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாலியல் வல்லுறவுகள், ஆட்கடத்தல்கள்,படுகொலைகள் போன்ற மனித உரிமை மீறல்களையும், போர்க்குற்றங்களையும் செய்த விசேட அதிரடி படையினர் இன்றும் நிலை கொண்டுள்ளனர் எனின் அதன் பின்னணிக் காரணம் என்ன? கடந்த வருடம் சட்டம் மற்றும் ஒழுங்குத் துறை அமைச்சர் விசேட அதிரடிப் படையினரின் பங்கினைப் பலப்படுத்தப் போவதாகத் தெரிவித்து இருந்தார். மனித உரிமை மீறல்களை மட்டும் மேற்கொள்ளும் அதிரடிப் படையினரை பலப்படுத்துவதன் பின்னணி  நோக்கம்தான்  என்ன? மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்துவதற்கும் வன்முறையினைத் தூண்டுவதற்குமே நேரடியாக அல்லது மறைமுகமாக விசேட அதிரடிப் படையானது பயன்படுத்தப்படுவதே அதன் நோக்கமாகும்.

 

சு. கஜமுகன் (லண்டன்)

gajan2050@yahoo.com