போராட்டத்துக்கான திரட்டலை மழுங்கடிக்கும் நடைமுறையை எதிர்ப்போம் – பாகம் 2

1,246 . Views .

3

போராட்ட திரட்சியாக ஒழுங்கமைப்பது என்றால் என்ன?

அதிகார சக்திகள் மேடை ஏற்றப்பட்டு எமக்கு வியாக்கியானம் கொடுப்பதும் – அழுது காட்டுவதும் வேண்டாம். எமது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமானால் அவர்களை அழையுங்கள். மக்களின் முதுகில் நின்று மக்களின் நலனுக்கு எதிராக இயங்கும் யாவரும் போராட்ட சக்திகளின் எதிரிகளே. பேச்சளவில் இன்றி அரசியல் ரீதியாக எமது நலனுக்கு உடன்படும் சக்திகளின் நட்பை திரட்டும் முயற்சியை நாம் செய்யலாம் – அத்தகையவர்களை அழைத்து மேடை ஏற்றுங்கள்.

அதிகார சக்திகளின் சின்னங்களை புறந்தள்ளுங்கள். புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு மரியாதையை செலுத்தும் நிகழ்வையும் இணையுங்கள் – அதுதான் முதன்மை என அது மட்டுமே நிகழ்வாக நடத்தாதீர்கள்.

மக்கள் விடுதலைக்கான உங்கள் நிலைப்பாடு என்ன என மக்களுக்கு தெரிவுக்கும் படி மக்கள் மத்தியில் இயங்கும் அனைத்து தமிழ் அமைப்புக்களையும் அழையுங்கள். அடுத்த கட்ட அரசியல் நடைமுறைகள் என்ன என்பது மக்களுக்கு தெரிய வரட்டும்.

மக்கள் இந்த நிகழ்வுக்கு வர ஒரு காரணம் வேண்டும். இங்கு வருவதன் மூலம் கொலை நிகழ்த்த வரலாறை – அதற்கு காரணமான அரசியலை – அரசியல் சக்திகளை மக்கள் நினைவு கொள்ளட்டும். அதே சமயம் மக்கள் விடுதலை பேசும் அமைப்புக்கள் என்ன செய்கின்றன –அடுத்து என்ன செய்யப் போகின்றன என்ற விபரங்களையும் அவர்கள் தெரிந்து செல்லட்டும். தாம் செய்யும் அரசியலில் குறைந்த பட்ச தன்னம்பிக்கை உள்ள எந்த அமைப்பும் இதை செய்ய பின் நிற்கப் போவதில்லை. எதுக்கு இயங்குகிறோம் என்ன செய்கிறோம் என்ற எந்த அரசியல் தெளிவும் அற்ற அமைப்புக்கள்தான் பதுங்கி பின் நிற்கும். வாருங்கள் மக்கள் முன் பேசுவோம்.

4

அதிகார சக்திகளின் அடையாளங்களுடன் என்ன பிரச்சினை?

இப்படி ஒரு கேள்வியை கேட்க வேண்டிய நிலையும் இருப்பது நினைத்து நாம் வெட்கப்பட்டுத் தலை குணியவேண்டி உள்ளது. ஒரு போராட்ட சக்திக்கு இருக்க வேண்டிய அடிப்படை அறிவு இது. தனிமைப்பட்டு போய் விடுவோமோ என்ற உணர்வு மக்களுக்கு ஏற்படலாம். ‘அவற்றை காலைப் பிடித்து –இவற்றை கையைப் பிடித்து ஏதாவது வாங்கிறத வாங்குவம்’ என பல மக்கள் சிந்திக்கலாம். ஒரு போராட்ட அமைப்பும் அப்படி சிந்திக்க முடியாது. போராட அமைப்புக்கு அரசியல் வேண்டும் – தாம் எந்த அரசியல் நிலைப்பாட்டில் நிற்கிறோம் என்ற தெளிவு வேண்டும். சரியான முன்னோக்கும் அரசியல் திட்டமிடலும் வேண்டும். அதற்காக மக்களைத் திரட்ட வேண்டும்.

அடக்குமுறை அதிகார சக்திகளும் போராட்ட சக்திகளும் எதிர் எதிர் திசையில் நிற்பவை. ஒன்றின் அழிவில்தான் மற்றதன் வெற்றி சாத்தியம். மக்களின் அழிவு இன்றி புரட்சிகர அரசியல் மூலம் அதிகாரம் கைமாற வழியுண்டு. ஆனால் அழிவின் மூலமும் தனது அதிகாரத்தை தக்க வைக்க அதிகார சக்திகள் தயங்க மாட்டார் என்ற அறிதல் எமக்கு வேண்டும். ஈழத்தில் மக்களின் தேசிய விடுதலை என்பது அதிகார சக்திகள் இறக்கப்பட்டு தருவதால் அடையக் கூடியதல்ல. இராஜ தந்திரத்தால் அடையலாம் எனப் பேசுபவர்கள் அது என்ன தந்திரம் மந்திரம் என இன்றுவரை சொன்னது இல்லை. அதிகார அரசுகளுக்கு கால் பிடிப்பது ஓன்றும் ‘புத்தம் புதிய’ உத்தி இல்லை. தமது சொந்த லாப நோக்கில் இயங்குபவர்கள் காலம் காலமாக செய்துவரும் செயல்தான் அது. அதற்கு அதிகூடிய ‘அரசியல் ஞானம்’ தேவை இல்லை. சுய நலன் காக்கும் அக்கறை மட்டும் போதும். சமூகப் போராளி தனது சுயம் சார்ந்த எதையுமே துறக்க தயாராக இருப்பவர். இவர்கள் சமூக போராளிகள் இல்லை. பலமான மக்கள் போராட்டத்தைக் கட்டாமல் தமிழ் ஈழ விடுதலை சாத்தியமில்லை என அடித்துப் பேசுகிறோம். இல்லை என்றால் மாற்று வழிகளை விளங்கப் படுத்துங்கள். மக்களுக்கு எதிரான சக்திகளில் மாயையை உருவாக்கிக் கொண்டு எவ்வாறு மக்கள் போராட்டத் திரட்சியை ஏற்படுத்துவது? இந்த மர்மத்தை தயவு செய்து விளங்கப் படுத்துங்கள்.

புலிகள் அமைப்பின் கொடியை புதிய தலைமுறை புரிந்து கொள்ளும் விதம் ‘எதிர்ப்பின் அடையாளம்’ என்ற அர்த்தத்தில் இருக்கிறது. அது அவ்வாறு இல்லை –மாறாக பிரித்தானிய அதிகாரத்தின் நட்புச் சக்தியாக –அதற்கு நிகராக பார்த்தே இளையோர் வருகின்றனர் என வாதிடுகிறதா டி சி சி ? நீங்கள் அரசியலில் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள் என்ற முடிவுக்கு முதல் வாருங்கள். காலைப் போராட்டத்தில் வைத்துக் கொண்டு தலையை அதிகாரத்திடம் அடகுவைத்த முறையில் இயங்க முடியாது. அவ்வாறு இருப்பதுதான் இத்தகைய சிக்கல்களை உருவாக்குகிறது. போராட்ட அரசியல் பக்கம் நிற்பதாக பி டி எப் சொல்லவில்லை. அவர்களுடனான முரண் தெளிவானது. பதாகை பிடித்து மக்கள் திரள்வதால் எந்தப் பிரயோசனமும் இல்லை என்பதில் பாதர் இம்மானுவல், சுரேன் சுரேந்திரன் போன்றவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். கூட்டமைப்பின் தலைமையும் இதில் தெளிவாக இருக்கிறது. போராட்டம் எனப் பேசும் சக்திகள் முடக்கப் படவேன்டும் என்பதில் சுமந்திரன் நல்ல கவனத்தோடு வேலை செய்வார் என்பது தெரியும். நீங்கள் எந்தப் பக்கம்?

ஐரோப்பிய பாரளுமற்றத்தில் வலதுசாரி குழுவை நோக்கி பிரச்சாரிக்க காசைக் கொட்டி கரி ஆக்காதீர்கள் என பல தளங்களில் பேசினோம். கேட்டீர்களா ? என்ன சாதித்தீர்கள்? ஐக்கிய நாடுகள் சபைக்குள் மினக்கெடும் நேரத்தை மக்களை அரசியல் மையப் படுத்துவதில் செலவு செய்யலாம் எனச் சொன்னோம். வந்தீர்களா? வலதுசாரிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பின் திரிவதால் என்ன சாதித்த்தோம்? இந்தக் கேள்விகளுக்கு விடை போராட்ட அரசியல் நோக்கி நகரும் திட்டமிடல் இன்றிச் சாத்தியமில்லை.

முள்ளிவாய்க்கால் நிகழ்வை தமிழ் சொலிடாரிட்டி செய்ய வேண்டும் என்ற குறுகிய மனப்பாங்கில் இந்தக் கேள்விகளை நாம் முன் வைக்கவில்லை. அப்படி சிறுமைத் தனமான அரசியல் எமக்கு இல்லை. அனைத்து அமைப்புக்களும் தமது அரசியல் முரணுடன் – அரசியல் சமரசம் இன்றி இந்த நிகழ்வை ஒழுங்கமைக்க முன்வந்தால் மிகவும் சந்தோசப் படுவோம். அமைப்புக்களிடம் இருக்கும் அரசியல் போதாமைதான் அதன் சாத்தியமின்மையை உருவாக்கி இருக்கிறது. பி டி எப் தனது அமைப்பின் நிகழ்வாக இதைக் குறுக்குவது போல்தான் டி சி சி யும் இதை அமைப்பின் நிகழ்வாக குறுக்குகிறது. இதை மக்களின் நிகழ்வாக – அனைத்து அமைப்புக்களும் கலந்து கொள்ளும் அரசியல் நிகழ்வாக ஒழுங்கமைக்க வேண்டும்.

ஆனால் டி சி சி யாருடனும் சேர்ந்து வேலை செய்ய முன்வருவதில்லை. அவர்களுக்குத் தங்களின் பலவீனம் தெரிவதில்லை. டி சி சி யின் நிகழ்வாக மட்டும் இருப்பின் வழமைபோல் ஒரு 300ல் இருந்து ஒரு  500 பேர் வரை பங்கு பற்றலாம். இதுவே மிகவும் கடின உழைப்போடுதான் ஒழுங்கமைக்க வேண்டி இருக்கிறது. அப்படி இருக்க இதைத்தாண்டி மக்களை நோக்கி நகர்வது எப்படி? போராட்ட அரசியலை மக்களுக்கு கொண்டு செல்வது எவ்வாறு ? இதுதான் தமிழ் சொலிடாரிட்டியின் முக்கிய கவலை. போராட்ட அரசியலை முதன்மைப்படுத்தி, சனநாயக ரீதியில் மற்றைய அமைப்புக்களையும் இனைத்து செயற்பட முன் வந்தால் தமிழ் சொலிடாரிட்டியின் முழு ஆதரவும் உண்டு. இந்த விசயத்தில் பி டி எப் செய்வது சரி. மற்ற அமைப்புக்கள் வர வேண்டாம் என அவர்கள் ஒருபோதும் தடை செய்யவில்லை. டி சி சி உட்பட இணைந்து இயங்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு உடன்பாடு உண்டு. ஆனால் தமது வலதுசாரிய அரசியலை விட்டு வர அவர்கள் தயாராக இல்லை. டி சி சி அதே வலது சாரிய அரசியலை தமது கட்டுப் பாட்டில் வைத்திருக்க முயட்சிக்கிறதே அன்றி அதை மறுத்த அரசியலை முன் வைக்கத் தயாராக இல்லை. இங்குதான் தமிழ் சொலிடாரிட்டி தனித்துப் போய் நிற்கிறது. போராட்ட அரசியலைச் சமரசம் செய்ய தயாரற்ற சக்திகள் இந்தப் பக்கம் தான் திரள வேண்டும்.

போராட்ட அரசியல் பக்கம் நிற்கிறோம் என்ற வித்தை காட்ட வேண்டாம் என்று டி சி சி தலைமையைக் கேட்டுக் கொள்கிறோம். இதே கதையை அங்கிருக்கும் சில இளையோரை நோக்கிக் கதைக்க முடியாது என எமக்குத் தெரியும். அவர்கள் ‘பழைய தலைமுறையை’ மாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையில் இயங்குகிறார்கள். அது நடக்கிற காரியமாகத் தெரியவில்லை. போராட்டம் என்ற பேச்சு மட்டும் போதாது நடைமுறை வேண்டும். செயற்பாடு செயற் திட்டத்தில் இருந்து பிறக்க வேண்டும். ‘தலைவர் சொனார்’ – ‘இப்படித்தான் முன்பு செய்தோம்’ என்ற கதைகளைச் சொல்லி அரசியல் கடமையில் இருந்து நழுவி விட முடியாது. மாவீரர் தின உரைகளை மட்டும் வைத்து – புலிகள் அமைப்பின் சில வழிகாட்டிகளை மட்டும் வைத்து புதிய போராட்டத்தை கட்டி விட முடியாது என்ற அடிப்படை அறிதல் கூடவா இல்லை? அரசியல் மாற்றங்கள் தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பது. தற்போதைய தெற்காசிய நிலவரங்கள் முற்றிலும் புதிய நடைமுறை. இதை உள்வாங்காமல் –அதற்கேற்ற படி அரசியல் நடவடிக்கைகளை முன் எடுக்காமல் நாம் சரியான திசையில் நகர முடியாது.