
5. உருட்டல் மிரட்டல்களை நிறுத்துங்கள்.
ஒரு நிகழ்வை குழப்புவது – அடாவடியாக நடப்பது – அதிகாரத்தை காட்ட முயல்வது போற்ற செயல்கள் தவறு. அத்தகைய நடைமுறைகளை தமிழ் சொலிடாரிட்டி ஊக்குவிப்பதில்லை. டி சி சி யில் இருக்கும் சிலருக்குத்தான் அது கைவந்த கலை. இவர்கள் கூட்டங்களில் செய்யும் அடாவடித் தனங்கள் அனைவரும் அறிந்ததே. இந்த வருடம் நடந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வில் குழப்பும் நோக்கத்தோடு தோழர்கள் கலந்து கொள்ளவும் இல்லை – அந்த நோக்கத்தில் இயங்கவும் இல்லை. அப்படி நோக்கில் சென்றிருப்போமாயின் கொடிகளை இழுத்து விழுத்தி கை கலப்பில் ஈடு பட்டிருக்க வேண்டி வந்திருக்கும். அந்த திட்டம் எதுவும் இருக்கவில்லை. அத்தகைய தவறான காரியத்தை நாம் செய்யப் போவதில்லை. பிரித்தானிய கொடியை ஏற்றுவது பற்றி உரத்து எமது எதிர்ப்பை தெரிவித்தோம். உடனடியாக எம்மை எதிர்க்க வந்தவர்கல்தான் வன்முறை கதைகள் பேசினார்.
ஒருவர் கொலை மிரட்டல் விட்டார். மற்றவர் உரத்துப் பேசி முறைத்து முடக்க முயற்சித்தார். இவ்வாறு பல்வேறு மிரட்டல் கதைகளுக்கு மத்தியில் தமிழ் சொலிடாரிட்டி தோழர்கள் தொடர்ந்து தமது அரசியல் நிலைப்பாட்டையும் – ஏன் நாம் பிரித்தானியக் கொடியை எதிர்க்கிர்றோம் என விளக்கிக் கொண்டிருந்தனர். அச்சத்தில் யாரும் பதுங்கி நிற்கவில்லை. ஆனால் அரசியலை மறைக்காது விளக்க முயற்சித்தோம். உங்களைப்போல் நாம் வன்முறை பேசவில்லை. எமக்கு அரசியற் பயிற்சி உண்டு. தமிழ் சொலிடாரிட்டி பிரித்தானிய தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு தொழிலாளர் அமைப்புக்களோடு நெருங்கிய உறவு உள்ள ஒரு பலமான அமைப்பு. எம் மேல் பேச்சலவிலோ –செயலிலோ வன்முறை காட்டி விட்டு வீட்டில் போய் நிம்மதியாய் குந்தி இருக்கலாம் என கனவு காணாதீர்கள். இது பற்றி பல அனுபவங்கள் உள்ள ‘தலைமைகள்’ தம் ‘தொண்டர்களுக்கு’ பயிற்சி கொடுக்க வேண்டும்.
பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள். தமிழ் சொலிடாரிட்டி எதையும் ஒழித்து மறைத்துப் பேசுவதில்லை. மக்களுக்கு உண்மை சொல்லி அரசியல் செய்வோர் நாம். அதை விட்டு விட்டு தொலைபேசி அடித்து பொய் பரப்புதல் – மிரட்டுதல் போன்ற விளையாட்டுகளைக் காட்டாதீர்கள். தமிழ்நாட்டுத் திராவிடத் தலைமைகள் செய்யும் சாக்கடை அரசியலை இங்கு அறிமுகம் செய்ய முயலாதீர்கள். மனதில் உறுதியும் நேர்மையும் அரசியல் தெளிவும் இருப்போருக்கு இத்தகைய சில்லறை உத்திகள் தேவை இல்லை. முடிந்தால் அரசியல் விவாதத்தை செய்து உங்களைச் சரி என நிருபித்துக் காட்டுங்கள். அனைத்து அரசியல் பிற்போக்குத் தனங்களையும் – அரசியற் சமரசங்களையும் மக்கள் முன்னாள் பேசிக் கொண்டுத்தான் இருக்கப் போகிறோம். இது போல் இன்னும் பல கேள்விகள் வரத்தான் போகிறது. எதை ஏற்றுக் கொள்வது என்பதை சனநாயக ரீதியாக மக்கள் முடிவெடுக்கட்டும். அமைப்புக்களைச் சுற்றி நிற்கும் ஒரு சிலர் அந்த முடிவை எடுக்க முடியாது.
உண்மையில் இன்று எல்லாப் புலம் பெயர் அமைப்புக்களும் மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள். தமது சொந்த அரசியற் கூட்டத்துக்கு ஒரு நூறு பேரைக் கூட இலகுவாக திரட்ட முடியாத நிலைதான் இன்று இருக்கிறது. முக்கிய நாட்களில் சிறுபான்மை மக்கள் தமாகத்தான் திரள்கிறார்கள். இந்த நிகழ்வை கைப்பற்றுவதன் மூலம் மக்கள் மத்தியில் தமக்கு ஆதரவு இருப்பதாக காட்ட முயல்வது தவறு. இந்த நிகழ்வுகள் எல்லா மக்களுக்குமானது. எந்த அமைப்பு அதை ஒழுங்கு செய்தாலும் எல்லா அமைப்புக்களுக்கும் தமது அரசியல் நிலைப்பாட்டை முன் வைக்க உரிமை உண்டு. உங்களின் அரசியலுக்கு ஆதரவைத் திரட்ட மக்கள் மத்தியில் வேலை செய்யுங்கள் – பிரச்சாரம் செய்யுங்கள் – திரட்டுங்கள். அதிகாரத்தின் மூலம் – அல்லது குறுக்கு வழியில் ஆதரவைத் திரட்டுவது சாத்தியமில்லை.
5
எல்லாப் பிரச்சினைகளுக்கும் தாய், தந்தை – அரசியல் போதாமைதான்.
தமிழ் சொலிடாரிட்டி தோழர்கள் மேல் வைக்கப் பட்ட அவதூறுகளுக்கு மத்தியில் அவர்கள் முன் வைத்த அரசியற் கேள்விகளுக்கு பதிலாக வந்த பொன் மொழிகள் சிலதைப் பார்ப்போம்.
‘ நீங்கள் சிட்டிசன்ஷிப் எடுக்கேக்க்க கை கட்டிக் கொண்டு நின்றுதானே எடுத்தனிங்கள்’
‘முதலில் உங்கடை புத்தகத்தை (பாஸ்போர்ட்) கிழிச்சுப்போட்டு ஊருக்குப் போய் சேருங்கோ. அங்க போய் கட்டுங்க உங்கட போராட்டத்த’
‘வழமையா நாங்க ஏத்திர கொடியத்தான் ஏத்திறம்’
‘இது எங்கள் நாடு. எங்களுக்கு பி.ஆர் தந்திருக்கிற நாட்டின் கொடி இது. நீ வேணுமெண்டா முதலில் உன்ர பி.ஆரக் கிழி’
‘இந்த நாட்டில உங்கள இருக்க விட்டவங்கள் தானே – இந்த நாட்டு சட்டத்த பாலோ பண்ணோணும்’
‘நீங்கள் எப்ப போராட்டத்துக்கு வெளிக்கிட்டனியள். நாங்க அந்த டைமில இருந்து போராடுறம்’
‘நாங்க தலைவரின் கைஏடுப்படி இயங்கிறம்’
இது தவிர நிகழ்வுக்குப் பிறகும் பலர் சமூக வலைத்தளங்களில் இது போன்ற அரசியல் அடிப்படை தெளிவற்ற பல்வேறு பொன்மொழிகளைப் பரப்பி வந்ததை பார்க்கக் கூடியதாக இருந்தது.
தேசிய அரசுக்கு விசுவாசமாயிருத்தல் என்ற அடிப்படையில் எந்த ஒரு நாட்டிலும் போராட்ட சக்திகள் இயங்க முடியாது. தேசிய அரசு –அதன் இலட்சினைகள் –மற்றும் தேசிய அரசு சார் நிறுவணங்கள் – அனைத்தும் இணைந்ததுதான் அரசதிகாரம். ஒரு தேசிய அரசின் அதிகாரம் சமூகத்தில் முதன்மை பலத்தை வைத்திருப்பவர்கள் நலன் சார்ந்தே இயங்குகிறது. பெரும் மூலதனப் பலத்தை முரண் நிலையில் வைத்து இயங்கும் அரசு எங்காவது உண்டா? அவ்வாறு ஓரளவாவது மக்கள் நலன் சார் கொள்கைகள் உள்ள ஒரு சக்திக்கு அரசதிகாரம் மாறும்போது அவர்கள் எத்தகைய எதிர்ப்பை நாட்டுக்குள்ளும் –வெளியிலும் எதிர்கொள்ள வேண்டி வருகிறது என்பதை வரலாறு முழுவதும் பார்க்கிறோம். ஒட்டுமொத்த உழைக்கும் மக்கள் நலன் என்பது தேசிய அரசின் முதன்மை நலனுக்கு எதிர் திசையிலேயே இயங்குகிறது. பெரும்பான்மை மக்களின் நலனில் இயங்கும் பண்பு தேசிய அரசுகளுக்கு கிடையாது. குறைந்தளவு உரிமைகளை வழங்குவது – தேர்தலை நடத்துவது என்ற நடைமுறைகளோடு ‘சனநாயகம்’ முடங்கிக் கிடக்கிறது. மக்களின் ஒட்டு மொத்த தேர்வை தேர்தல்கள் பிரதிபலிப்பதில்லை. (அரசு, அதிகாரம், மக்கள் ஆகியவற்றுக்கிடையிலான உறவு பற்றி மார்க்சிய சான்றோர் நிறைய எழுதி உள்ளனர் – நோம் சாம்ஸ்கியின் இந்த செவ்வியும் சிறிது உதவும் – https://chomsky.info/20050518/)
இதனால்தான் மக்கள் ஆயிரக்கணக்கில் தெருவில் திரண்டு போராட வேண்டி இருக்கிறது. 2003ல் யுத்தத்துக்கு எதிராக ஏறத்தாள 3 மில்லியன் மக்கள் லண்டன் தெருக்களில் திரண்டு எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதபோல் தேசிய மருத்துவ சேவையை காப்பதற்காக எனவும் ஏனைய சேவைகளை வெட்டுவதை தடுக்கவும் லட்சக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடியிருக்கிறார்கள் – போராடி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன (https://www.ons.gov.uk/employmentandlabourmarket/peopleinwork/employmentandemployeetypes/timeseries/bbfw/lms). ஓய்வெடுக்க நேரமின்றி வேலை செய்யும் உழைக்கும் மக்கள் நேரம் ஒதுக்கி போராட வருவது என்பது கனதியான நடவடிக்கை. ஆட்சி மாற வேண்டும் என மக்கள் வாக்களிப்பதன் பின்னணியில் அரசு மேலான வெறுப்பு இருப்பதையும் கவனிக்க வேண்டும். மக்களுக்கு வழங்கப்படும் குறுகிய தேர்வில் கூட மக்கள் தமது எதிர்ப்பை எவ்வாறாவது பதிந்துவிட முயலும் பண்பை நாம் பார்க்கலாம்.
தேசிய அரசு மக்களுக்கானது என்றால் மக்கள் ஏன் ஒவ்வொரு உரிமையையும் போராடித்தான் பெற வேண்டி இருக்கிறது? தானாக அரசால் வழங்கப்பட்ட உரிமை –அல்லது வழங்கப்பட்ட சேவை என ஏதாவது இருக்கிறதா? அரசு சார் வரலாற்று ஆசிரியர்கள் திரித்துத்தான் எழுதுவர். இலங்கையில் வரலாறு படித்த எல்லா தமிழ் பேசும் மக்களுக்கும் இது கேள்விக்கு அப்பாற்பட்ட உண்மை என்பது தெரியும். மருத்துவ சேவையில் இருக்கும் ஊழியர் போராட்டம் இன்றியா டோரி கட்சி மேலதிக முதலீடு செய்வது பற்றி பேசுகிறது? எந்த வலதுசாரிய அரசும் மக்களுக்கான சேவைகளை தாமாக முன் வைத்ததில்லை. மக்களின் போராட்ட அழுத்தம் அல்லது மேலதிக லாபாம் சுரண்டும் நோக்கம் என்ற காரணங்கள் தான் சில கொள்கை அறிமுகத்தின் பின்னணி. அவர்கள் ‘மக்கள் நலனை முதன்மைப்படுத்தல்’ என்ற அடிப்படையில் இயங்குவதில்லை.
இதனால்தான் போராட்ட அமைப்புக்கள் அதிகாரம் சார் இலச்சினைகளை புறக்கணிக்கிறார்கள். தற்போது மக்களுக்கு எதிரான கொள்கைகளை முன்னெடுக்கும் அரசு என்ற காரணத்துக்காக மட்டும் இன்றி வரலாற்று ரீதியான கொடுமைகளுடன் அடையாலப்படுவதாலும் பிரித்தானிய கொடி என்பது போராட்டச் சக்திகளால் – முற்போக்குச் சக்திகாளால் – ஒடுக்கப்படுவோரால் புறக்கணிக்கப் படுகிறது. பிரித்தானிய ஏகாதிபத்தியம் மில்லியன் கணக்கான மக்களை கொன்று குவித்த ஓன்று (https://www.independent.co.uk/voices/commentators/johann-hari/johann-hari-the-truth-our-empire-killed-millions-404631.html). இந்த வரலாற்றை மறுக்க- அதோடு உடன்பாடில்லை என்பதைக் காட்ட- பிரித்தானிய ஏகாதிபத்திய இலச்சினைகளை முற்போக்காளர் மறுத்து வருகின்றனர். இதனால் இங்கு நடக்கும் உரிமை போராட்டங்களில் பிரித்தானிய கொடி பறப்பதில்லை.
இதே சமயம் கால்பந்தாட்டம், அல்லது ஒலிம்பிக் ஆகிய தேசம் சார்ந்த பிரதிநிதித்துவத்தின் போது பிரித்தானிய இலட்சினைகள் பாவிக்கப் படுவதையும் அதை மக்கள் பொதுவாக ஏற்றுக் கொள்வதையும் பார்க்கலாம். இது ஒரு ‘பழக்கம்’ தவிர சட்ட முறைப்படி நிகழ்வதில்லை. ஒரு குழுவின் பிரதிநிதித்துவத்தை காட்ட இலட்சினை தேவைப்படுகிறது. தவிர ஒட்டுமொத்த மக்களின் நலன் சார்ந்த வெளிப்பாட்டு நடவடிகை அல்ல இது. பிரித்தானிய கொடி இன்றியும் ஒலிபிக்கில் கலந்து கொள்ள முடியும்.
ஆனால் தீவிர தேசிய வாதிகள் – மற்றும் தீவிர வலதுசாரிகள் – துவேசிகள் – பாசிஸ்டுகள் ஆகிய மக்கள் விரோத சக்திகள் கொடியை முதன்மைப்படுத்தி அரசியல் செய்வதை நீங்கள் பார்க்கலாம். இன்று பிரித்தானியக் கோடியை அதிகம் பிடிப்பதும் அதன் புனிதம் பற்றி அதிகம் பேசுவதும் பெரும்பாலும் துவேசிகளே. பிரித்தானியக் கொடியை பிடித்தபடி – குறிப்பாக சென் ஜார்ஜ் கொடி பிடித்தபடி- தெருவில் யாராவது போராட என்று நின்றால் அங்கு ஏதோ துவேசிகள் போராட்டம் நடக்கிறது என்ற என்னத்துக்கு நீங்கள் வரலாம். இது ஒரு பொது அறிவாக இன்று இருக்கிறது. இதனாலும்தான் இந்தக் கொடியை பிடிக்காதீர்கள் எனச் சொல்லுகிறோம். அதுவும் போராட்டச் சக்திகள் எனச் சொல்லிக் கொள்வோர் இதைச் செய்வது வெட்கக் கேடான விசயம்.
இதைவிட உங்களுக்குத் தெரிய வேண்டிய நிறைய விசயங்கள் உண்டு. பிரித்தானியக் கொடி சட்டப்படி உருவாக்கப் பட்டதோ அல்லது அக்கொடியை அசிங்கப்படுத்துவது சட்டப்படி குற்றமோ கிடையாது. இது தவிர இக்கொடி வேல்ஸ் பகுதியை உள்வாங்கவில்லை என்ற பெரும் விவாதமும் நடந்து கொண்டிருகிறது. அதே சமயம் வட அயர்லாந்து கத்தோலிக்க மக்கள் இக்கொடியை தமக்கு எதிரான இலட்சினையாக பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக இக்கொடி ஒடுக்கும் அடையாளமாக பாவிக்கப் பட்டு வருகிறது. அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தில் கடுமையாக வெறுக்கப்பட்ட கொடி பிரித்தானியக் கொடி. இன்றுவரை இந்த உணர்வு முழு அயர்லாந்திலும் தொடர்ந்து வருகிறது.
6
‘அரசு அகதி அந்தஸ்து தந்தது – எங்களை இங்கு வாழ விட்டிருகிறார்கள்’ என்ற சென்டிமென்டல் வாதத்துடன் இங்கிலாந்து அதிகார சக்திகளுக்கு அடிமையாக இருக்கக் கோருவதும் மிகுந்த அரசியல் பலவீனத்தை வெளிபடுத்திக் காட்டுகிறது. அகதிகளுக்கான உரிமைகள் உட்பட பல்வேறு மணித உரிமைகள் அரசால் வழங்கப் படுவதில்லை. மாறாக இந்த உரிமைகள் மக்கள் போராட்டங்களால் வென்றெடுக்கப் பட்டவை. சமீபத்தில் விட்ன்ரஷ் பிரச்சினையின் போது வெளியான விசயங்களை நீங்கள் படித்தறிந்து கொள்ளவேண்டும் (பார்க்க https://www.youtube.com/watch?time_continue=1144&v=_rfErL6m0pk). உரிமைகள் வழங்கப் படுவதில்லை – வெல்லப்படுபவை. நீங்கள் ‘நன்றியாக’ இருப்பதாயின் உங்கள் நன்றி போராடிய மக்களை நோக்கியதாக இருக்கவேண்டுமே தவிர உரிமைகள் வருவதை எதிர்த்த அரசு – வலது சாரி கட்சிகள் நோக்கியதாக இருக்க முடியாது. எமது உரிமைக்காக போராடிய சக்திகளை புறந்தள்ளி விட்டு –அந்த உரிமைகள் வழங்கப்படுவதை எதிர்த்த சக்திகளுக்கு விசுவாசத்தை கோரும் அரசியல் அறிதலை என்ன சொல்வது? போரட்டங்களை முன்னெடுத்த தொளிற்சங்கம் நோக்கி உங்கள் நட்பு விரிந்ததுண்டா? இது மிகப் பலவீனமான பார்வை. போராட்ட சக்திகளாக தங்களை பார்க்காத மன நிலையில் இருந்து இது எழுகிறது. அதுதான் உண்மை. நீங்கள் போராட்ட சக்தியாக அடையாள பட விரும்பவில்லை –அதிகாரத்தின் மேல் இருக்கும் மோகமே உங்களுக்கு முதன்மை உணர்வாக இருக்கிறது. ஏதோ ஒரு விதத்தில் அதிகாரத்தின் நட்பை தேடும் உங்கள் உட்கிடக்கைதான் இப்படி பேச வைக்கிறது.
இங்கிலாந்தில் பல தலைமுறை வாழும் ஒரு பிரசைக்குரிய அனைத்து உரிமையும் புதிய பிரசைகளுக்கு உண்டு. இந்த உரிமையை பாதுகாக்கும் சட்டங்களும் வென்றெடுக்கப் பட்டிருக்கின்றன. இந்த நாட்டு அதிகாரம் மக்களை ஒடுக்குவதை எதிர்த்துக் கேட்கும் உரிமை இந்த நாட்டு அனைத்து பிரசைகளுக்கும் உண்டு. நீங்கள் அந்த உரிமையை பாவிக்காது அதிகாரத்தில் சூடு காயலாம் – அல்லது தொடர்ந்து அடிமை உணர்வில் பதுங்கி வாழலாம். ஆனால் புதிய தலைமுறை தமிழ் பிரித்தானியர் தமது உரிமைகளை கோருவதையும் – அதற்காக போராட்ட உணர்வோடு இயங்குவதையும் உங்களால் தடுக்க முடியாது. இங்குள்ள போராட்டச் சக்திககளோடு இணைந்து – உழைக்கும் மக்களின் குரலோடு இணைந்து இயங்க தமிழ் பிரித்தானிய பிரசைக்கு அனைத்து உரிமைகளும் உண்டு.
பிரித்தானிய அதிகாரத்தை ஆத்திரப்படுத்திவிடக் கூடாது என்பதுதான் உங்கள் முதன்மை நோக்கம். ‘எப்படியாவது கெஞ்சி மண்டாடி அவர்களை எங்கள் பக்கம் திருப்ப வேண்டும். அவர்களுக்கு நாம் ஆதரவு என காட்டுவதால் அவர்கள் எங்களின் உரிமைகளை மதிப்பர் – வென்றெடுத்து தருவர்’ – என்ற ஏக்கமும் உங்கள் போக்குகளில் இருப்பது தெரியும். ஆனால் இது மிகப் பெரும் அரசியல் தவறை நோக்கி நகர்த்தும் நடவடிக்கை – சிந்தனை. போராட்ட சக்திகளை ஒட்டு மொத்தமாக முறியடிக்கும் நோக்குள்ள அதிகாரத்தோடு இணைந்தோ அல்லது – ஒட்டி உறவாடியோ இயங்குவதன் மூலம் அந்தப் போராட்ட சக்தி மேலதிகமாக பலவீனம் அடையுமே தவிர ஒருபோதும் தனது இலக்கை நோக்கி நெருங்கப் போவதில்லை. இந்த அடிப்படை அறிதல் இன்றி அரசியற் போராட்டத்தை கட்ட முடியாது.
இங்குள்ள போராட்டக் காரர்களை ‘ஊருக்கு போங்கள்’ எனப் பேசுவது –இலங்கை அதிகாரத்துக்கு அதரவான பேச்சு எனபாத்து கூடவா உங்களுக்குப் புரியவில்லை? சும்மா பகிடிக்கு கதைச்சம் என பகிடிகள் விட வேண்டாம். உங்களின் ஒட்டுமொத்த அரசியன் பலவீனத்தின் வெளிப்பாடுகள் இந்தக் கதைகள். பாஸ்போர்ட்டுக்கு விசுவாசமாக இருந்து கொண்டா அங்கு போராட்டம் கட்டப் பட்டது. எந்த நாட்டில் இருந்தாலும் போராட்டச் சக்திகளின் பண்பு என்பது ஒன்றுதான். தேசிய எல்லைகளை போட்டு உலக மக்களை பிரித்து ஆழும் மூலதனத்தின் அதிகாரம் உடையும் பொழுது மீண்டும் எல்லைகள் மாறும் – இல்லாமல் போகும். மனிதர்களுக்கான உரிமைகள் என்பது வெவ்வேறு எல்லைகளுக்குள் வெவ்வேறு முறையில் முடக்கப்படுவதல்ல. மாறாக மனித உரிமை உலகளாவியது.
இன்னுமொரு முக்கியமான நடவடிக்கையை –பேச்சை ‘பழைய’வர்கள் கைவிட்டு ஆக வேண்டும். ‘உனக்கென்ன போராட்டம் தெரியும்?’ – ‘நாங்கள் அந்தக் காலத்தில் இருந்து போராடுறம்’ – போன்ற மிரட்டல்களை புதிய தலைமுறையினர் நோக்கித் திருப்புவதை கைவிட்டு ஆகவேண்டும். புதிய தலைமுறையினர் அரசியரற் போராட்டத்தை தூக்க வேண்டும் என வாய் கிழியப் பேசுபவர்களும் இதை செய்கிறார்கள். உங்களுக்கு என்ன தெரியும் என மட்டம் தட்டுகிறார்கள். பிந்திப் பிறந்தது ஏதோ அவர்கள் பிழை மாதிரியும் – அடிபணிந்து நடப்பதே அவர்கள் நடவடிக்கையாக இருக்கவேண்டும் என்ற அதிகாரத் தோரணையில் இது நிகழ்கிறது. அவர்கள் சொந்த மூளையை பாவிக்கத் தேவை இல்லை – மாறாக சொல்வதை செய்தால் சரி என்ற எடிப்படையில் நடவடிக்கைகள் குறுக்கப் படுகிறது. தயவு செய்து இதை கைவிடுங்கள். புதிய தலைமுறை பிள்ளைகள் பேசும் அரசியலை புரிந்து கொள்ளும் ஆளுமையோ – அல்லது அவர்களை வழிநடத்தும் அரசியல் தெளிவோ இல்லை என்றால் ஒதுங்கி நில்லுங்கள். பிரித்தானியாவில் நிகழும் அரசியல் மாற்றங்களில் இருந்து பிரித்து அந்த புதிய தலைமுறையினரை அணுக முடியாது என்ற அடிப்படை புரிதல் கூட இன்னும் இல்லாதவர்களின் தொல்லைகள் நிறுத்தப்படவேண்டும். உங்களின் அறிதல் எல்லைக்குள் அரசியல் நடவடிக்கைகளை முடக்கி வ்சைத்திருப்பதன் மூலம் நீங்கள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முயல்கிறீர்கள். சிறிய அளவில் இந்த கட்டுப்பாட்டை காத்துக் கொள்ள முடியும். ஆனால் இம்முறையில் புதிய தலைமுறையை ஒருபோதும் வென்றெடுக்க முடியாது.
விடுதலைப் புலிகள் இயக்க வரலாறை திரித்து புனிதப்படுத்தல் மூலம் மேலதிகத்தை எடுக்க முனைதல் – மற்றும் விடுதலிப் புலிகள் மற்றும் அதன் தலைமைக்கு அப்பால் அரிசியல் அறிதல் இல்லை என்ற கடும் பார்வையில் இயங்குவதன் மூலம் மக்கள் மேல் அதிகாரத்தை காத்துக் கொள்ள முடியும் என்ற கனவு காணுதல் – இதுவும் எம்மவர்கள் சிலர் மத்தியில் இருக்கும் இன்னுமொரு வியாதி.
எந்த ஒரு போராட்ட இயக்கமும் அரசியல் அறிதலின் முழுமையை அடைந்து விட்டதாக கருத முடியாது. மிகப் பலவீனமான அரசியல் பற்றிய அடிப்படை புரிதலற்ற அமைப்பினர்தான் தங்களை அறிதலின் முழுமையாக காட்டிக் கொள்வர். உலக நடவடிக்கைகள் தொடர் மாற்றத்துக்கு உள்ளாகிக் கொண்டிருப்பவை. சமூகம் சார்ந்த அடிப்படை உறவு முறைகள் மற்றும் சில அடிப்படை இயற்கை நடவடிக்கைகள் பற்றிய பல தத்துவங்கள் எமது அறிதலுக்கான அடிப்படையை எட்படுத்தித் தர வல்லன. ஆனால் அவையும் முழு அறிவல்ல. இது தவிர அரசியல் நடவடிக்கை மற்றும் –அரசியல் முன்னோக்கு முதலான விசயங்களில் எந்த ஒரு தமிழ் அமைப்பும் பலமாக இருந்ததில்லை. விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து அமைப்புக்களிளும் பல்வேறு அரசியற் போதாமை இருந்ததை நாம் பார்க்க முடியும். இதை நாம் கற்றுக் கொள்வதும் –அத்தகைய பலவீனங்களைத் தாண்டிய போராட்ட சக்தியை கட்டி எழுப்ப வேலை செய்வதும் அவசியம். புலிகள் இயக்கத்தின் ‘அரசியற் புனிதத்தை’ காத்துக்கொண்டு இதை ஒருபோதும் செய்து விட முடியாது.
‘தலைவர் சொன்னவர்’ – ‘தலைவரின் கையேட்டில் இருக்கு’ போன்ற வாதங்கள் எல்லாம் ஒரு அரசியல் பார்வை அல்ல. கையேட்டில் அவ்வாறு பிழையாக இருப்பின் அதை மாற்றுங்கள். புத்தர் சொனார் – இயேசு சொன்னார் என மத வாதிகள் இயங்க முடியும். ஆனால் அரசியற் போராட்டக்காரர் அவ்வாறு இயங்க முடியாது. அரசியல் நிலைப்பாடு என்பது புறநிலை மாற்றங்களை உள்வாங்கி தெளிவான முன்னோக்கு சார்ந்து செல்ல வேண்டும். எந்த ஒரு தனி மனிதாலும் அனைத்து விசயங்களிலும் சரியான நிலைப்பாட்டை எடுத்து விட முடியாது. அரசியல் தெளிவு என்பது தெளிவான கொள்கை – தூர நோக்குப் பார்வை உள்ளவரின் குளுவான பார்வையாக இருக்கும் பொழுது அதன் வீரியம் – சரித்தன்மை அதிகரிக்கிறது. குறுகிய வாதங்களுக்குள் அரசியலை – அரசியல் நடவடிக்கைகளை முடக்க நினைக்காதீர்கள்.
மக்கள் மத்தியில் இயங்கும் போராட்ட சக்திகள் மத்தியில் தெளிவு பிறக்க வேண்டும் என்பதே இந்த விமர்சனங்களை – கருத்துக்களை நாம் முன் வைக்க காரணம். தம்மை போராட்ட சக்திகளாக பார்க்காதோர் நோக்கி நாம் பேசவில்லை. அதே சமயம் தம்மை போராட்ட சக்திகள் என அடையாள படுத்துவார்கள் நோக்கி நாம் கார சாரமான விவாதத்தை நடத்தவும் –அதன்மூலம் சரியான போரட்ட அரசியல் நிலைப்பாடு நோக்கி போராட்ட சக்திகளை நகர்த்தவும் நாம் முயல்கிறோம். அந்த நோக்கம் தான் முதன்மை. இங்கு எந்த தனிப்பட்ட தாக்குதல்களும் நாம் செய்யவில்லை. அரசியல் விவாதத்துக்குத்தான் அழைக்கிறோம். தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் விவாதத்தை எதிர்கொள்ள இரு முக்கிய வழமைகள் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. பூனை பால் குடிப்பதுபோல் சொலிரவன் சொல்லட்டும் என கண்ணை மூடிக்கொண்டு தொடர்ந்தும் குருட்டுப் பாதையில் பயணிப்பது ஒரு வழி. தனி நபர் தாகுதல்களில் இறங்கி விவாதத்தின் திசையைத் திருப்புவது இன்னொரு வழி. இதற்கு அப்பால் இயங்க முன்வருபவர்கள் – ஒரு அரசியற் போராட்டத்தை கட்ட வேண்டும் என சிந்திப்போரை நாம் எம்முடன் உரையாடலுக்கு அழைக்கிறோம். வாருங்கள்.