விசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 2

-சு. கஐமுகன் gajan2050@yahoo.com

2016 இலிருந்து  இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகமானது இலங்கையின் காவல்  துறையின் சீர்திருத்தத்திற்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் விசேட அதிரடிப் படையினரின் பயிற்சித் திட்டம் தொடர்பான கூட்டங்களிலும் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. யுத்தம் நிறைவடைந்த பின்னரும் கூட 3500 ற்கும் மேற்பட்ட  காவல்துறையினருக்கு விசேட அதரடிப் படையினர்க்கான பயிற்சியை வழங்கியுள்ளது பிரித்தானியாவின்  ஸ்காட்லாந்துயார்ட் போலீஸ்.  விசேட  அதிரடிப் படையினரின் வளர்ச்சியின் பின்னணியில் இலங்கை அரசு மட்டுமல்ல, பிரித்தானிய அரசும் இருக்கிறது என்பதுதான் மறைமுக உண்மை

அண்மையில் லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நோக்கி கழுத்தை வெட்டுவேன் என விரல் மூலம் சைகை செய்த இராணுவத் தளபதி பிரியங்கர பெர்னாண்டோவை இலங்கை அரசோ அல்லது பிரித்தானிய அரசோ கைது செய்யவில்லை. மக்களை கொலை செய்வேன் என வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்த – கொலை மிரட்டல் விடுத்த ஒருவரைக்  கைது செய்யாமல் தப்பிக்கவிட்ட பிரித்தானிய அரசானது,  இலங்கை அரசின் நட்பு நாடாகவே செயற்படுகின்றது என்பதனையே மேற்படி சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. பிரித்தானிய அரசானது மக்கள் நலனை விட தமது அரசியல் பொருளாதார நலனையே  முன்னிலைப்படுத்துகிறது. அரசுகளும், அதிகாரங்களும் எப்போதும் மக்கள் நலன் சார்ந்து இயங்குபவை அல்ல மாறாக தமது சுய அரசியல் இலாபத்தை முன்வைத்தே இயங்குகின்றன.  மறுபுறத்தில் , இத்தகைய பிரித்தானிய அரசானது சிரிய மக்கள் மீது இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்படுகின்றது, குழந்தைகள் கொல்லப்படுகின்றனர் என்று நீலிக்கண்ணீர் வடித்து பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் நடாத்துவதுதான்  வேடிக்கையாகத் தோன்றுகின்றது.

2015 முதல் விசேட அதிரடிப் படைப் பிரிவுக்கு அதிக நிதி முதலீடு செய்து அதனைப் பலப்படுத்தியதாகவும் அதனால் தமக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கா தெரிவித்திருந்தார். ஆக 2015  ஆட்சிக்கு வந்த மைத்திரி – ரணில் நல்லிணக்க அரசானது அதிரடிப்படையினரை பலப்படுத்தும் நோக்கிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றதே தவிர அதன் கடந்த கால மனித உரிமை மீறல்களை, யுத்தக் குற்றங்களை கேள்விக்குள்ளாக்குவதிலேயோ அல்லது வரம்பு மீறிச் செல்லும் அதன் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதிலேயோ ஈடுபடவில்லை என்பது புலனாகிறது. இத்தகைய நல்லாட்சி அரசுடன் இணைந்துதான் இணக்க அரசியல் செய்து கொண்டிருகின்றது தமிழ் தலைமைகள் என்பது வெக்ககேடான விடயமாகும். ITJP அறிக்கை வெளிவந்த பின்னரும் கூட, விசேட அதிரடிப் படையினர் தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த குற்றம் தொடர்பாக எதுவித கேள்வியும் எழுப்பாமல் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வாய் மூடி மெளனியாக இருக்கிறார் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன்.

விசேட அதிரடிப்படையினருக்குத் தேவையான காலாட்படைக்கான போர் வாகனம் (IFV – Infantry Fighting Vehicle), Logistcs Vehicle போன்றவற்றுக்காக பாரிய முதலீடுகளை மேற்கொள்ளும் இலங்கை அரசானது  மறுபுறத்தில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்ளாமல் கல்வி மற்றும் வைத்தியத் துறையினை தனியார் மயமாக்கல், நிலங்களை சீன அரசுக்கு விற்றல், இனவாதத்தை தூண்டிவிடுதல், IMF இன் ஆதரவுடனான பெரும் முதலாளிகளுக்கான பட்ஜெட்டை நடைமுறைப்படுத்தல் என மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.

2009  இல் மிக மோசமான போற்குற்றங்களை புரிந்த இராணுவ அதிகாரி ஜகத் ஜெயசூர்யா ற்கு எதிராக ITJP அமைப்பானது பேரு, சிலி, பிரேசில், கொலம்பியா போன்ற நாடுகளில் வழக்குப் பதிவு செய்தது. அதனால் அந் நாடுகளின் வெளி நாட்டுத் தூதுவராக இருந்த அவர் 2017  இல் மீண்டும் இலங்கைக்கு வந்துவிட்டார். பொதுவாக குற்றவாளிகள் குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக தமது சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்குச் செல்வார். ஆனால் இலங்கையில்தான் குற்றவாளிகள் தம்மைக் காத்துக் கொள்ள இலங்கைக்கே மீண்டும் வருகின்றனர். ஆக யுத்தக் குற்றவாளிகளை காப்பாற்றும் ஒரு நாடாகவே இலங்கை இருக்கிறது என்பது இதிலிருந்து வெளிப்படையாக தெரிகின்றது.

2009 இலிருந்து ஐ. நா அறிக்கைகள், ITJP அறிக்கைகள் எனப் பல வெளிவந்த போதும் ஐ. நாவோ அல்லது இலங்கையோ, ஆங்காங்கே சில கண்துடைப்பு நடவடிக்கைகளை செய்து விட்டு அமைதியாக மெளனம் காத்துக்கொண்டுதான்  இருக்கின்றன. யுத்தக் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதை தவிர்த்து அவர்களை எவ்வாறாயினும் காப்பாற்றுவதே  இம் மெளனத்தின் பின்னாலுள்ள அரசியல்  ஆகும்.

2007 – 2008 வரையான காலப்பகுதியில் வெள்ளை வான் கடத்தல், வலிந்து காணாமல் ஆக்கல் போன்றன அதிர்ச்சிக்குள்ளாகும் வரையில் அதிகமாகக் காணப்பட்டது. அதிலும் குறிப்பாக ஜனவரி 2007 முதல் ஆகஸ்ட் 2007 வரையான காலப்பகுதியில் மட்டும் 540 முறைப்பாடுகள் இலங்கை முழுவதும் பதியப்பட்டுள்ளன. ஆனால்ஒரு தசாப்தத்திற்கு பின்னரும் கூட அம்முறைப்பாடுகளிற்கு எதுவித பொறுப்புணர்வான பதிலும் கூறாமல் இழுத்தடித்துக் கொண்டிக்கின்றது இலங்கை அரசு.  மறுபுறத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி மக்களின் போராட்டம் இன்று வரை  நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

2004 – 2007 வரையான காலப்பகுதியில்  ஹைட்டியில் உள்ள  ஐ. நாவின் அமைதிப் படையில் பணி புரிந்த 134 இலங்கை இராணுவத்தினர் ,  சிறுவர் மீதான பாலியல் துஸ்பிரயோக  குற்றச்சாட்டில் மீண்டும்  திருப்பி இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். எனினும் அவர்களில் ஒருவர் கூட  இதுவரை தண்டனை பெறவில்லை.  தனது ராணுவம் மற்றும் பொலிஸ் மேற்கொள்ளும் குற்றங்களுக்கு பொறுப்பு கூறும் ஒரு ஜனநாயகத் தன்மை அற்ற ஒரு அரசாகவே இலங்கை தொடர்ந்தும் காணப்படுகிறது. இது இலங்கை மட்டுமல்லாது ஐ.நா வின் ஜனநாயகத் தன்மையையும் சேர்த்தே கேள்விக்குள்ளாக்குகின்றது.

ஐ . நாவின் அமைதிப்படையில் பணிபுரிந்தோருக்கு எதிராக 2004 முதல்  2016 வரையான காலப்பகுதியில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் முறைபாடுகள் பதிவு செய்யப்படுள்ளன என்று அமெரிக்காவிலுள்ள, AP என அழைக்கப்படும்  அசோசியேட்டட் பிரஸ்(Associated Press) என்ற பத்திரிகை நிறுவனம் நடாத்திய ஆய்வு தெரிவிக்கின்றது. மேலும் குற்றவாளிகள்  நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்படும் போதும் இவர்களுக்கு கடும் தண்டனைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை  என்று அவ் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. தனது நற்பெயரை காப்பாற்றிக் கொள்வதற்காக அமைதிப்படை யினர் மேற்கொள்ளும்  பாலியல் குற்றங்கள், சிறுவர் துஸ்பிரயோகங்கள் போன்றனவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தாமல், தந்திரமாக அதனை மூடிமறைக்கின்றது என அமெரிக்காவில் இயங்கும் சமூக செயற்பாட்டாளர் கத்ரின் போல்கோவா ஒருமுறை குறிப்பிட்டது இங்கு கவனத்திற் கொள்ளவேண்டிய விடயமாகும். கொங்கோ, மொசாம்பிக், எரித்திரியா, போஸ்னியா , லிபேரியா போன்ற பல்வேறு நாடுகளில் ஐ. நாவின் அமைதிப்படையானது கடந்த காலங்களில் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  இதனால்தான் ஐ.நாவின் ஜன நாயகத்தன்மை குறித்து சந்தேகிக்க வேண்டியுள்ளது.

லெபனான் நாட்டுக்கு ஐ . நாவின் அமைதிபடையில் பணிபுரிய  அனுப்பபடவிருந்த இலங்கை அதிகாரி ஒருவர், மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட  குற்றவாளி  என இனம் காணப்பட்ட பின்னர் அவரின் பயணம் ரத்து செய்யப்பட்டது. எனினும் அதன் பின்னர் அவரின் குற்றத்துக்கு எதிராக விசாரணை எதுவும் மேற்கொள்ளப்பட்டது பற்றியோ  அல்லது  தண்டனை வழங்கப்பட்டது பற்றியோ  குறித்த  தகவல் எதுவுமில்லை. ஆகவே மகிந்தவுக்கு மாற்று நாம்தான் எனக் கூறி ஆட்சியைப் பிடித்த மைத்திரி அரசு கூட யுத்தக் குற்றவாளிகளை எதோ ஒரு வகையில் காப்பாற்றத்தான் முயற்சி செய்கின்றது. இனப்படுகொலை செய்த மகிந்த அரசை இன்றும் காப்பாற்றிக் கொண்டிருப்பது அமெரிக்க,  இந்திய ஆசியுடன் ஆட்சியைக் பிடித்த  இன்றைய மைத்திரி அரசுதான்.

ஐ. நா தனது அமைதிப்படைக்கு இராணுவத்தினரை சேர்க்கும் நடைமுறையில் குறைபாடு  இருக்கின்றது என்பதையே மேற்படி நிகழ்வுகள் காட்டுகின்றன. சுதந்திரமான பக்கச்சார்பற்ற பொறிமுறையின் மூலம் தனது படைக்கு ராணுவத்தினரை திரட்ட வேண்டும். மனித உரிமை மீறல்கள் தொடர்பான அவர்களின் கடந்த காலங்கள் பரிசோதனை செய்யப்படவேண்டும். இது எதனையும் கருத்திற்கொள்ளாது போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் மேற்கொண்டவர்களை ஐ. நா தனது படையணிக்கு சேர்ப்பதானது அவர்களின் மோசமான நடைமுறையினையே காட்டுகின்றது. குறிப்பாக ஐ.நாவின் அமைதிப்படைக்கு இலங்கையிலிருந்து செல்வோர் மீது கடும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அதாவது பாலியல் துஸ்பிரயோகங்கள், யுத்தக் குற்றங்கள் ,  மனித உரிமை மீறல்கள் போன்றனவற்றில்  ஈடுபடாதவராக இருக்க வேண்டும்.

ஐ. நாவின் அமைதிபடையில் பணிபுரிவதற்கான ராணுவத் தேர்வில் இறுக்கமான மீளாய்வு மற்றும் சோதனை நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் எனவும் அவை மக்களுக்கு தெரியக்கூடியவகையில் சுதந்திரமானதாகவும் வெளிப்படைத்தன்மை  வாய்ந்ததாகவும்  இருக்க வேண்டும் என ITJP தனது அறிக்கையில் பரிந்துரைக்கின்றது. ஆனால் இப்பரிந்துரைகள் மட்டும் போதாது, தற்பொழுது அமைதிப்படையில் பணிபுரிந்து வரும் குற்றவாளிகளை அந்தந்த நாடுகளிலேயே கைது செய்து சர்வதேச சட்டங்களுக்கமைய விசாரணை செய்து தண்டனை வழங்கப்பட வேண்டும். பெரும்பாலான ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் யுத்தக் குற்றவாளிகளான இலங்கையின் முன்னாள் இராணுவ உறுப்பினர்கள் வெளியுறவுத் தூதுவர்களாக பணி புரிகின்றனர். இவர்களுக்கு எதிரான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.  சாட்சிகளிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட விசேட அதிரடிப் படையினரின் பெயர்களைப் பொது மக்களிற்கு பகிரங்கப்படுத்த வேண்டும். யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இலங்கை  மக்கள் மீது தொடரும் விசேட அதிரடிப் படையினரின் நேரடி, மறைமுக அடாவடித்தனங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கை அரசோ இவ்வறிக்கையினை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை அல்லது ஐ. நா வின் முன்னால் அதிகாரியான  ஜாஸ்மின் சூக்காவின் இவ்வறிக்கையினைக் கருத்திற் கொண்டு  ஐக்கிய நாடுகள் சபை கூட இலங்கைக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை ஏனெனில் தற்போது இருக்கும் அரசானது இந்தியா, அமெரிக்கா உட்பட்ட மேற்கத்தைய வல்லரசுகள் விரும்பும் ஒரு ஆட்சியாகும். ஆகவே அவ் ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்க வல்லரசு நாடுகளோ அல்லது அதன் பிரதிநிதியான ஐ. நா வோ விரும்பமாட்டாது. போர்குற்றம் விசாரணை செய்யப்படவேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற மக்கள் நலன் சார்ந்த நடைவடிக்கைகளை விட அரச அதிகாரங்களின் நலனே இங்கு முன்னிலைப்படுத்தப்படுகின்றது. இது தற்போதைய இலங்கையின் அரசின் வங்குரோத்து  நிலையையே காட்டுகின்றது.

வெறுமனே எங்களுக்கு நீதி வேண்டும் என்று ஐ. நாவின் முன்றலில் நின்று கத்துவதாலோ அல்லது ஐ. நாவின் கூட்டத் தொடரிற்கு வருடாந்தம் சென்று வருவதினாலோ மக்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை. ITJP இன் அறிக்கையைக் மையமாகக் கொண்டு மக்களைத் திரட்டி ஒரு போராட்டத்தை தமிழ் தலைமைகளும், புலம்பெயர் அமைப்புகளும், மக்களும் இணைந்து  மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை, குற்றச் செயல்களில் ஈடுபட்ட விசேட அதிரடிப் படையினருக்கு தண்டனை கிடைக்கும் வரை, பதவியைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட  இராணுவத் தளபதிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை அப்போராட்டமானது தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும். ஏனெனில் 56 விசேட அதிரடிப் படையினரின் தகவல்களை  வெளியிட்ட பின்னரும் கூட அவர்களின் பதவிகளைப் பறிக்கவோ அல்லது தண்டனை வழங்கவோ இலங்கை அரசானது முன்வரவில்லை ஆகவே இதற்கான நீதி கிடைக்கும் வரை மக்கள் தான்  இறங்கிப் போராடவேண்டும்.

 

சு. கஜமுகன் (லண்டன்)

gajan2050@yahoo.com