கனம் சம்பந்தன் ஐயா

1,538 . Views .

சம்பந்தன் ஐயாவுக்கு 2015இல் எழுதிய மடல் காலத்தின் தேவை கருதி மீள் பிரசுரிக்கிறோம்.

சம்பந்தன் ஐயா அவர்களுக்கு…

நீங்கள் செய்து கொண்டு இருக்கும் உங்கள் “இணக்க அரசியலால்”; ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது என்று தெரிந்திருக்கக்கூடிய கெட்டிக்காரர்தான் நீங்கள். ஆனால் தமிழ் மக்களைத்தான் முட்டாள் ஆக்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.
உங்கள் இணக்க அரசியல் குழம்பிவிடக்கூடாது என்பதுக் காகவே புலம்பெயர் தமிழர்களை மைத்திரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என்று சொல்லி இருந்தீர்கள். மைத்திரியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு என்ன உங்களால் பெற்றுக் கொடுக்க முடியும் ? எந்தவித முற்போக்கான திட்டமும் இல்லாமல் மைத்திரி அரசுடன் நீங்கள் மதிய போசனம் உண்பதற்கும் -எதிர்காலத்தில் அமைச்சுப் பதவிகளை எடுப்பதற்கும் தயாராகிறீர்கள். அதற்காக நாங்கள் ஏன் போராட்டத்தைக் கைவிட வேண்டும்? ஈழத்தமிழ் மக்களை நீங்கள் முட்டாள் ஆக்கியது போன்று புலம்பெயர் தமிழர்களையும் முட்டாள் ஆக்கும் நடவடிக்கை தானே இது.
ஈ பி டி பி போன்ற கட்சிகள் அரசுடன் சேர்ந்து இயங்குவதற்கும், நீங்கள் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் அரசுடன் சேர்ந்து இயங்குவதற்கும் பெரிய வித்தியாசமில்லை. இதுவரை காலமும் அரசுடன் இயங்கிய கட்சிகள் ஏதாவது நிரந்தர தீர்வுத் திட்டம் எதனையாவது முன்வைத்து இருக்கின்றதா? இல்லையே. அவ்வாறெனில் அவர்களுடன் சேர்ந்து, அவர்களுக்குச் சாதகமாக, எங்களை ஆர்ப்பாட்டம் செய்யவேண்டாம் என நீங்கள் சொல்வதன் பின்னணி – ராஜதந்திரம் தான் என்ன? தமிழர்களை அண்டிப் பிழைத்த நீங்கள் ஏய்த்துப் பிழைக்கும் நிலைக்கு சென்றதன் காரணம்தான் என்ன?
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா வடக்குக்கு  வரும்போது மக்கள் ஆர்ப்பாட்டம் செய்யவில்ல, ஆகவே மக்கள் அவரை ஏற்றுக் கொண்டுள்ளனர் என சுமந்திரன் சொல்வது எவ்வளவு அபத்தம். ஆர்பாட்டம் செய்யவில்லை என்பதால் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று ஆகிவிடுமா? மஹிந்த அரசின் இனப் படுகொலையின்போது இறுதி வரை கூடவே இருந்தவர் இந்த சிறிசேனா. அவ்வாறு கொலை புரிந்த கொடியவனை மக்கள் ஏற்றுக்  கொண்டுள்ளனர் என்றால், மகிந்தவை ஏற்றுக்கொண்டு அவரையே மீண்டும் ஜனாதிபதி ஆக்கி இருக்கலாமே, அவரை புறக்கணித்து சிறிசேனவை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லையே, சிறிசேனவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவது, கேட்டால் நான் சட்டத்தரணி அவருக்கு சட்ட ஆலோசனை வழங்குகிறேன் என்று சுமந்திரன் கூறுவது, இதுதான் உங்கள் பம்மாத்து அரசியல் என்பது. ஏன் ஐயா சுமத்திரனே இலங்கை ஜனாதிபதிக்கு உங்ககளைத் தவிர வேறு ஒரு சட்டத் தரணியும் கிடைக்க வில்லையா? ஒரு தமிழ் சட்டத்தரணி உங்களை நம்பியா அவர் உள்ளார் ? நகைப்புக்கு இடமாக உள்ளது உங்கள் பதில்.
மகிந்தவை ஆட்சியிலிருந்து அகற்ற  வேண்டும் என்பதற்காகவே  மைத்திரியை தெரிவு செய்தனர் தமிழ் மக்கள். ஆனால் தமிழ் மக்களும் முழுமனதாக ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி நான் என்ற மாயையை சர்வதேச அரங்கில் உருவாக்கி தனது காய் நகர்த்தலை மேற்கொண்டு  வருகிறார் மைத்திரி. அதன் ஒரு அங்கமே இந்த மாதம் நடைபெற இருந்த ஐ.நா விசாரணை அறிக்கையை தள்ளிப் போட்டது. ஆட்சி மாறினாலும் ஆட்சியாளர்கள் மாறவில்லை என்பதன் எடுத்துக்காட்டுதான் இது. இத்தகைய அரசியல்வாதியை நம்பித்தான் எங்களை போராட்ட்டத்தில் ஈடுபடவேண்டாம் அமைதியாக இருக்கும்படி சொன்னீர்களா சம்பந்தர் ஐயா?
இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்துக்கு நீங்கள் சென்றது உங்கள் ராஜதந்திர அரசியல் என்கிறார்கள். நீங்கள் எது செய்தாலும் சம்பந்தர் பழுத்த அரசியல்வாதி, அவர் செய்தால் சரியாகத்தான் இருக்கும் என்று சொல்ல ஒரு கூட்டம் உண்டு. இத்தனை கால உங்கள் ராஜதந்திர அரசியலால் என்னத்தை பெற்றுக் கொடுத்தீர்கள் தமிழ் மக்களுக்கு?  சுதந்திர தினத்தன்று நல்லெண்ண அடிப்படையில் தமிழ் அரசியற் கைதிகளை விடுதலை செய்தார்களா? இல்லையே. அவ்வாறெனின் அந்தச் சுதந்திர தினத்தில் நீங்கள் கலந்து கொண்டதான் பயன்தான் என்ன? இல்லை அதன் பின்னணி நோக்கம்தான் என்ன? ராஜதந்திரம், ராஜதந்திரம் என்று சொல்லி மக்களை முட்டாள் ஆக்கும் உங்கள் தந்திரம் நரியின் தந்திரத்தை விட மோசமானது. உடனே கடந்த  செவ்வாய்கிழமை ( 10/03/2015) பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரி பாலேந்திரன் விடுதலைக்கும் நாங்கள் நடவடிக்கை எடுத்து இருந்தோம் என்று சப்பைக்கட்டு கட்டாதீர்கள். அவரின் விடுதலைக்கு முக்கிய அழுத்தம் கொடுத்தவர்கள் பெண்கள் அமைப்புகளும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுமே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பதிலாக உடனடித் தேவை இன்னொரு மாற்றுக் கட்சியே என்பதைத்தான் உங்கள் செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன! ஈழத் தமிழரும் அதை உணரும் நாட்களும் வெகு விரைவில் வரும் என்பதில் ஐயமில்லை
உங்களினதும் சுமந்திரனினதும் உருவப் பொம்மை எரிக்கப்படத்தைத் தொடர்ந்து அரசியல் போட்டி இருக்க வேண்டும் பொறாமை இருக்கக்கூடாது  என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கட்சிக்குள் பூசல்கள் வரும்போது  கட்சிக் கட்டமைப்புக்களை ஏற்றமுறையில் கட்டினீர்களா, இல்லையே ? மற்றக் கட்சி உறுப்பினர்களைப் புறம் தள்ளி விட்டு நீங்களும் சுமந்திரனும் ரகசியமாக காய் நகர்த்தும் வேலையில் அல்லவா ஈடுபட்டு இருக்கின்றீர்கள். தற்போதைய கால கட்டங்களில் இப்படித்தான் உங்கள் அரசியல் பயணம் சென்று கொண்டு இருக்கின்றதே தவிர, மக்கள் மத்தியில் ஏதாவது வேலைத்திட்டத்தினை வைத்திருக்கின்றீர்களா ? இல்லையே? இனியும் எதன் அடிப்படையில் தமிழர்கள் உங்கள் பின்னால் நிற்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்  ஐயா?
உங்களை நம்பி மறுபடியும் மறுபடியும் ஏமாந்த மக்களைக் காக்க நீங்கள் அல்லவா தெருவில் இறங்கிப் போராட வேண்டும், ஆனால் நீங்களோ இங்கு போராடுபவர்களையும் போராட வேண்டாம் என இழுத்துப் பிடிக்கின்றீர்கள். நீங்கள் எங்களுக்கு எதிராக மாறி மைத்திரி கட்சிக்கு வால்பிடிக்கும் அரசியலின் பின்னணி என்ன ? நூறு நாள் வேலைத்திட்டத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் , இன்னும் அவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி அவர்களுக்கு பின்னால் ஏன் செல்கின்றீர்கள் ? தனது ஐந்து வருட அரசியல் காலம் முடியும் வரைக்கும், எந்த வித தீர்வும் முன்வைக்காமல் இப்பிடியேதான் இழுத்துக்கொண்டு இருப்பார்கள் என்று இன்னுமா பழுத்த அரசியல்வாதி உங்களுக்குப் புரியவில்லை. இல்லை புரிந்தும் புரியாதது போல நடிக்கின்றீர்களா?
அரசாங்கம் தமது கடமையை செய்யத் தவறும்போது அழுத்தம் கொடுக்க வேண்டியது எங்கள் கடமை என்று கூறியுள்ளார் சுமந்திரன் , ஆனால்  இனி நீங்கள் எவ்வாறு அழுத்தம் கொடுக்கப் போகின்றீர்கள்?
நீங்கள்தான் ஏற்கனவே இணக்க அரசியல் என்னும் பெயரில் மண்டியிட்டு குனிந்து  இருக்கின்றீர்களே. இனி எப்படி உங்களுக்கு அந்தத் தைரியம் வரும். அறவே வரமாட்ட்டாது என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினர் தமது சப்பாத்துக்களைத் துடைப்பதற்கும், வேறு வேலைகளுக்கும் அவர்களைப் பயன்படுத்துவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தெரிந்திருந்தபோதும் அவர்களை விடுவிப்பதற்கு ஆக்கபூர்வமான முயற்சிகள் ஏதாவது எடுத்திருக்கின்றீர்களா? இல்லை அரசுக்கு எதாவது அழுத்தாம்தான் கொடுத்திருக்கிறீர்களா? இல்லையே. மேலும் மேலும் அவர்களின் உறவினர்களே ஆர்பாடத்திலும் அலைச்சலிலும் திரிகின்றனரே தவிர நீங்கள் உங்கள் நாற்காலி கனவையல்லவா நோக்கி ஓடிக்கொண்டு இருக்கின்றீர்கள்.
இறுதியாக, நீங்கள் நம்பிக்கொண்டு இருக்கும் இவர்கள் எல்லாம் யார் என்று தெரியுமா?  இவர்களின் பின்னணி வரலாறு தெரியுமா உங்களுக்கு? தெரிந்திரிக்காமல் இருக்க நியாயமில்லை .மைத்திரிபால சிறீசேன முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்த  கடைசி நாட்கள் மகிந்தவின் குறுங்காலப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள வெறிப்படைத் தளபதி பொன்சேகா, சிங்களப் படைவெறியர்கள் கிரிசாந்தியைப் படுகொலை செய்த காலத்தில்  ஜனாதிபதியாக இருந்தவர் சந்திரிகா. பிரித்தாளும் தந்திரங்களை மேற்கொண்டு தமிழர் போராட்டங்களை வீழ்ச்சியுறச் செய்தவர் ரணில் விக்கிரமசிங்கே. அது மட்டுமல்லாமல்  சிங்களச் சிறைக் காவலர்களைக்கொண்டு குட்டிமணியின் கண்களைப் பிடுங்கி எடுத்த ஜெயவர்த்தனாவின் வழி வந்தவர். இத்தகையோரைக்கொண்டுள்ள மத்திய அரசு உங்களுக்கு ஒரு நிரந்தர , நிலையான தீர்வுத் திட்டத்தை தரும் என்று நீங்கள் நம்பிக்கை வைத்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இவர்களுக்கான உங்கள் ஆதரவு, மக்கள் நலனை விட சொந்த நலன் முன்னுக்கு நிற்பது போலவே தெரிவிக்கின்றது. மக்கள் நலன் சார்ந்து, மக்களுக்காகவே இயங்குகின்ற உண்மையான கட்சி ஒன்றே இப்பொழுதான அவரச அடிப்படைத் தேவையாக இருக்கின்றதே தவிர, உங்கள் பாழடைந்த கட்சியால் எந்த விதப் பிரயோசனமும் இல்லை என்பதே நிதர்சனம். வெகு விரைவில் அவ்வாறொரு கட்சி உருவாகி உங்களை பின் தள்ளும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

சு.கஐமுகன் ([email protected])