இலங்கையின்ஆயுத இறக்குமதியும் இராணுவமயமாக்கலும் அதில் பிரித்தானியாவின் பங்கும்.

993 . Views .

நுஜிதன் இராசேந்திரம்

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு பத்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்போது இலங்கைக்கு வெளிநாட்டு போர் அச்சுறுத்தலோ, பாதுகாப்பு அச்சுறுத்தலோ இல்லாத நிலையிலும் இலங்கை ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை.

1983 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போர் எனவும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று உலகநாடுகளை நம்பவைத்து தொடர்ந்து, காணாமல் போதல் , யுத்தக் குற்றங்கள், தன்னிச்சையான தடுத்துவைத்தல், சித்திரவதைகள், அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோத வெகுஜன தடுப்பு ஆகியவற்றில் இலங்கை அரசு மீதும், படையினர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதன் விளைவாக 2009 காலப்பகுதியின் இறுதியில் சுமார் 150,000 மக்களின் உயிர் இழப்புகள் மற்றும் பலர் பலவந்தமாக காணாமல் போகவைக்கப்படத்துடன் , போர் விதிமீறல்கள், மனித உரிமை மீறல்கள் என ஒட்டு மொத்த சர்வதேச சமூகமும் வெட்கி தலைகுனியும் அளவிற்கு பல்வேறு சம்பவங்கள் நடந்தேறியததுடன் கடந்த மூன்று தசாப்தகால யுத்தம் இந்த நூற்றாண்டின் பேரழிவுகளுடன் முள்ளிவாய்க்காலில் 2009 மே 18 உடன் மௌனிக்கப்பட்டது.
எனினும் யுத்தம் முடிவுற்ற நாளில் இருந்து இலங்கை அரசு இராணுவ ஆயுத இறக்குமதியை பன்மடங்காக அதிகரித்ததுடன் அத்தோடு தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு கிழக்கு பகுதிகள் மிகவிரைவாக இராணுவமயமாக்கபடுத்திக் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் மக்களின் மீதான அடக்குமுறை, நிலஅபகரிப்பு, சிங்களகுடியேற்றங்கள், வன்முறைகள், தமிழர்கள் மீதான வளசுரண்டல்கள் , நாடளாவியரீதியிலான பௌத்தமயமாக்கல் என்பவற்றை இலங்கை அரசாங்கம்
வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவ ஆதரவுடன் விரைவாக நிறைவேற்றி வருகின்றது.
போர் பெருமளவில் நடைபெற்ற வடகிழக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் பிரசன்னம் என்பது தமிழ் மக்களின் நாளாந்த வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் அரச படையினரின் தலையீடு இருந்து கொண்டே இருக்கிறது.
பணியாற்றும் இராணுவத்தினர் குறித்து சரியான புள்ளிவிபரங்கள் எதுவும் எங்கும் வெளிப்படையாக் கிடைக்கக் கூடியதாக இல்லை. மிகவும் இடையூறை ஏற்படுத்தும் எங்கும் வியாபித்துள்ள இராணுவத்தனர் தொடர்பான அப்புள்ளிவிபரங்கள் எதுவும் எங்கும் கிடைப்பதாக இல்லை. அவை ஆய்வுப் பரப்புக்கு அப்பாலானவையாகத் தான் இருக்கின்றன
அத்துடன் நிறுத்தப்படாமல், வடக்கு கிழக்கில் பரந்தும், காலம் காலமாகவும் நிலைத்தும் வாழும் ஈழத் தமிழ் மக்களின் இருப்பை இல்லாமல் செய்ய, சிங்களக் குடியேற்றங்களுக்கு ஈடாக, இராணுவ ஆக்கிரமிப்புக்களும் , பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் பரவலாக கட்டி எழுப்பட்டு வருகின்றன.
இது மட்டுமல்லாது தெற்கில் இராணுவபலத்தின் மூலம் மாணவர்கள் மற்றும் மக்களின் பல்வேறு போராட்டங்கள் நசுக்கப்பட்டு கொண்டு இருக்கின்றது.
மனித உரிமை நிலைமைகள் குறித்து குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில் இலங்கைக்கு பாரியளவில் ஆயுதங்களை பிரித்தானியா விற்பனை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கழும் சுட்டிக்காட்டியுள்ளன.
ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற முன்னின்று செயற்பட்ட பிரித்தானிய அரசு இந்த ஆயுத ஏற்றுமதியை தொடர்ச்சியாக தொடர்வதென்பது பிரித்தானிய அரசின் இரட்டை நிலையை உணர்த்துகிறது.

யுத்தம் முடிவுற்ற 2009 ஆண்டிற்கு பின்னர் சுமார் எண்பது மில்லியன் (80 millions) ஸ்ரெலிங் பவுண்ட்க்கும் அதிக பெறுமதியான ஆயுதங்களை பிரித்தானியா அரசு மட்டும் இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது. பிரித்தானிய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை புள்ளி விபரத்தரவுகள் மற்றும் ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான அமைப்பு (CAAT) ஆகியவற்றின் தரவுகள் மூலம் இந்தத் தகவல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன.

எனினும் இலங்கையின் மனிதஉரிமை மீறல்களிற்கும் இலங்கைக்கான ஆயுத விற்பனைக்கும் இடையே எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று பிரித்தானிய வெளியுறவுத்துறை கூறிவருகின்றது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனிப்பட்ட ரீதியில் அனுமதிப்பத்திர உரிமையாளர்களின் ஆயுத விற்பனை தொடர்பில் கருத்து வெளியிட முடியாது எனவும் எனினும், ஆயுத விற்பனையின் போது மனித உரிமை நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கவனத்திற் கொண்டே பிரித்தானிய அரசாங்கம் ஆயுதங்களை விற்பனை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தப் போகின்றார்கள் என்பதன் அடிப்படையிலேயே ஆயுதங்கள் விற்பனை செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மனித உரிமை மீறுகிறது அதற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்ற அர்த்தத்தில் பல்வேறு அறிக்கைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் வழங்கப் பட்டிருக்கிறது. இதில் பலத்தில் பிரித்தானியாவும் கையெழுத்து இட்டிருக்கிறது. அப்படி இருந்தும் இலங்கைக்கு எந்த அடிப்படையில் ஆயுத உதவிகள் வழங்குகிறது பிரித்தானியா என்பதை வெளியுறவுத்துறை தெளிவுபடுத்த வேண்டும். வெறும் லாபத்துக்காக ஆயுதம் விற்றுக் கொண்டு மனித உரிமையை கவனத்தில் எடுபதாக மக்களுக்குப் பாசாங்கு சாட்டுவது தவறு. சவூதி அரேபியாவின் மனித உரிமை மீறல்கள் பற்றி – ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பதற்கு அவர்கள் காரணமாக இருப்பது பற்றி ஆயிரக்கணக்கான அறிக்கைகளை ஆதாரங்கள் உலகெங்கும் பரவிக் கிடக்கிறது. இருப்பினும் சவூதி மன்னர் குடுப்பத்தோடு நல்லுறவை காத்துக் கொண்டு அவர்களுக்கு ஆயுதம் விற்று வருகிறது பிரித்தானிய அரசு. இந்த வகையில் மக்களை ஏமாற்றும் பிரித்தானிய அரசின் கொள்கைக்கு எதிராக மக்கள் திரண்டு கேள்வி கேட்க வேண்டும்.

பல்வேறு வகையான உரிமங்கள் ஏற்று மதி செய்யப்படுகின்ற போதும் “ML1” என்ற உரிமத்தின் கீழ் அதிகளவான சிறிய ரக ஆயுதங்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் இலங்கை மக்களின் பாதுகாப்பை பிரித்தானிய அரசு கேள்வி குறியாக்கியுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட ஆயுத தளபாடங்களில் விமான உதிரிப்பாகங்கள் மற்றும் விமான பயிற்சிக்கான தொழில்நுட்பங்கள் மற்றும் விமானப் பயிற்சிக்கான மென்பொருட்கள், கண்காணிப்பு கமராக்கள், துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், பாதுகாப்பு கவசங்கள், உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுதங்கள் பாரிய அளவில் இலங்கையால் பிரித்தானிய அரசிடமிருந்து யுத்தம் முடிவுற்ற 2009 ஆண்டு மே 18 திகதிக்கு பின்னர் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
உலகில் அதிவேகமாக இராணுவ மயப்படுத்தப்படும் நாடுகளில் இலங்கை பிரதான இடத்திலுள்ளது. சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுயநிர்ணைய உரிமையை மறுத்து அப்பாவி மக்கள் மீது வெறித்தனமான தாக்குதல்களை நடத்திவருகின்றது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளிற்கு முன்னரும் பிரித்தானியா ஆயுதங்களை விற்பனை செய்தது. இது குறித்து பில் மில்லர் வெளியிட்ட ஆவணத்திலும் இது பற்றி தெரிவித்துள்ளார்.
இராணுவ வீரர்களின் குறைப்பதானது எவ்வாறான நன்மையைத் தரும் என்பதைக் கூட இலங்கை அரசாங்கம் தனது கவனத்தில் எடுக்க வில்லை.
தெற்காசிய பூகோள அரசியலின் முக்கியத்துவம் மற்றும் அதில் இலங்கையின் முக்கிய பங்கு ஆகிய நிலவரங்களும் இலங்கையை துரித கதியில் ஆயுத மயப்படுத்தி வருகிறது. சீனா தனது செல்வாக்கை இலங்கையில் அதிகரிக்கும் வேலைகளைச் செய்து வருகிறது. சீனத்து அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல் கம்பான்தோட்டை துறைமுகத்தில் வந்து போன செய்தியை ஊடகங்கள் முன்பு வெளியிட்டிருந்தன.

சீனத்து நடவடிக்கைகளுக்கு எதிரான செயல்களை மேற்குலகு முன்னெடுத்து வருகிறது. அமெரிக்காவுடன் இலங்கை இராணுவ உறவைப் பலப் படுத்திக் கொள்ள வேண்டும் என பென்ரகன் வலியுறுத்தி வருகிறது. தேவையற்ற விதத்தில் இலங்கையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள இராணுவ மயமாக்கல் ஆனது மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்து வருகிறது. இலங்கையிலும் வெளிநாடுகளிலும் செயற்படும் மனிதவுரிமைக் குழுக்கள் இது தொடர்பாக போதியளவு எதிர்ப்பை வெளிப்படுத் தவில்லை.இலங்கை அரசாங்கம் பெரும்பாலான ஊடகங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளமை இலங்கையில் மனித உரிமைச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான அனுமதி குறைவாக வழங்கப்படுதல் – ஆகிய காரணங்களாலும் உண்மைகளை வெளிக்கொண்டு வர பல அமைப்புக்கள் சிரமப்படுகின்றன என்பதும் உண்மையே.
மனிதவுரிமையைப் பாதுகாப்பவர்கள் துணிச்சல் உள்ளவர்கள் இருந்தால் இலங்கையில் உள்ள இராணுவமயப்படுத்தல் செயற்பாடானது ஆபத்து மிக்கதாகும் என்பதை வெளிப்படையாக கூற வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக தனது விமர்சனங்களை அறிவித்துள்ள போதிலும் இதன் உறுப்பு நாடுகளில் பல 2009 இல் யுத்தம் மௌனிக்கப்பட்டத்திலிருந்து தொடர்ந்தும் ஆயுதங்களை விநியோகித்து வருவதை கேள்விக்குள்ளாக்கவில்லை.
ஏற்கனவே குறிப்பிட்டது போன்று பிரித்தானிய பாதுகாப்புத் திணைக்களம் தொடர்ந்தும் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்தவில்லை. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் பிரித்தானியா இலங்கைக்கு தனது ஆயுதங்களை வழங்கியிருந்தது. இனிவரும் காலங்களிலும் பிரித்தானியா இலங்கை யிலும் ஆயுதப் பேரம் பேசுவதில் ஈடுபடவுள்ளதும் குறிப்பிடத்தக்கதே. மேற்கூறிய காரணங்களை சீர்தூக் கிப்பார்க்கும் போது இலங்கை இராணுவத்தில் ஆட்குறைப்பு செய்தல் அல்லது இராணுவ ஒதுக்கீ ட்டை குறைத்தல் என்பதை எதிர்காலத்தில் சாத்தியமாகாது தொடர்ந்தும் நடை முறையில் இருக்கும் என்றே எதிர்கூறப் படுகின்றது. இந்த நிலைக்கேதிராக மக்கள் திரள வேண்டும். மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய தமிழர்களின் அரசியல் இன்று சுயநலவாதத்துடன் வெறும் கட்சி அரசியலாகவே முன்னெடுக்கப்படுகின்றது.ஆகவே ஒன்றிணைந்து ஒருமித்து எமது தேவைகளை, உரிமைகளைக் கோர வேண்டியதே தற்போது எமக்கிருக்கும் தார்மீகக் கடமை.