கடந்த அக்டோபர் 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, ரணில் விக்கிரமசிங்காவை பிரதமர் பதவியில் இருந்து தடாலடியாக நீக்கியதன் பின்னர் பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்தேறின. நெட்பிளிக்சில் (Netflix) வெளியான அரசியல் வலைத்தொடர் (Webseries) நாடகங்களில் ஒன்றான ஹவுஸ் ஒப் கார்ட்ஸ் (House Of Cards) இனை விட இலங்கை அரசியல் களம், சுவாரசியமாகவும் பரபரப்பாகவும் இருந்தது என ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது. கட்சித் தாவல்கள், பேரம் பேசல்கள், அமைச்சுப்பதவி, நம்பிக்கையில்லாப் பிரேரணை, சட்டப் போராட்டம், தூள் எறிதல், கதிரைகளால் வீசுதல் எனப் பல்வேறு விறுவிறுப்பான சம்பவங்களின் பின்னர் மீண்டும் பிரதமர் பதவி ரணில் விக்கிரமசிங்காவின் கைகளிற்கு வந்துள்ளது. அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவருக்கான போட்டி இன்னொரு பக்கம் சென்று கொண்டிருக்கின்றது.
இலங்கை அரசியல் யாப்பே இத்தனை களோபரங்களுக்கும் அடிப்படைக் காரணமாக இருந்தது. யாப்பில் கூறப்பட்டுள்ள ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியே ஜனாதிபதி ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கினார். உண்மையில் இந்த யாப்பு என்றால் என்ன? அது யாருக்குச் சேவகம் செய்கின்றது? மக்களுக்கா? இல்லை அரசியல்வாதிகளுக்கா?. அதிகாரம் என்பது உண்மையில் எங்குள்ளது? அது யாப்பில் உள்ளதா அல்லது மைத்திரியின் கையில் உள்ளதா அல்லது இதில் வெறும் பார்வையாளர்களாக ஆக்கப்பட்டிருக்கும் மக்களின் கையில் உள்ளதா?
‘’இராணுவம் மற்றும் பீரங்கிகளைக் கொண்ட அரசனே அரசியலமைப்புச் சட்டத்தின் அங்கமாகின்றான்’’ என்று கூறியிருந்தார் பெர்டினன்ட் லசால் (Ferdinand Lassalle). ஜேர்மனிய தொழிலாளர் இயக்கத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவராவரான பெர்டினன்ட் லசால் 1862 ஆம் ஆண்டு நவீன அரசியலமைப்பு பற்றி எழுதிய தனது கட்டுரை ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். 1860 இல் நவீன அரசியலமைப்பு உருவான காலகட்டத்தில் அதன் மீது தாக்கம் செலுத்திய முன்னோடிகளில் ஒருவர் பெர்டினன்ட் லசால் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகளவான உழைக்கும் மக்களின் விருப்பத்தை நிவர்த்தி செய்யும் யாப்பு உலகில் எங்கும் நடைமுறையிலில்லை என்ற அவரது வாதம் மிகச் சரியே.
மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம், சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றனவற்றை அரசு பொறுப்பெடுத்து அதனை எவ்வாறு நிர்வகிப்பது, அதனை எவ்வாறு அம்மக்களுக்கு நிறைவேற்றிக் கொடுப்பது என்பதே யாப்பின் அடிப்படை நோக்கமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் மக்களின் தேவை பற்றிக் கரிசனை கொள்ளாமல் பாராளுமன்றத்தில் தமது அதிகாரத்தினை நிலை நிறுத்திக் கொள்வதே யாப்பை உருவாக்கும் அதிகார சக்திகளின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. மகிந்தவிற்கு மைத்திரியும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு கூட்டமைப்பும் தமது ஆதரவை வழங்குவது இந்த அதிகாரத்தை நிலைநாட்டும் நோக்கத்தில் மட்டுமே அன்றி மக்களின் நலன் சார்ந்து அல்ல.
தற்போதைய நவீன முதலாளித்துவ சமூகத்தில் பாராளுமன்றமானது, அரசியலமைப்புச் சட்டம் அல்லது யாப்பினை உருவாக்கும். நீதிமன்றம், இராணுவம், போலீஸ் போன்ற அரச இயந்திரங்கள் அதனை அமுல்படுத்தும். அரசியலமைப்புச் சட்டத்தினை உருவாக்கும் செயற்பாட்டில், மக்களின் பங்களிப்பு என்பது வெகு குறைவாகவே காணப்படுகின்றது. தற்பொழுது உலகெங்கும் நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச் சட்டத்தினைக் கருத்திற் கொண்டால் பூரணமான, குறைபாடற்ற அரசில் யாப்பு என்று எதுவும் இல்லை. அனைத்து யாப்புகளும் அந்நாட்டு மக்களை முழுமையாக பாதுகாக்க தவறியுள்ளது எனலாம். உதாரணமாக இந்திய அரசியலமைப்பு சட்டம் தலித் மக்களை பாதுகாக்கவில்லை, மியன்மார் அரசியலமைப்பு சட்டம் ரோஹின்கிய முஸ்லிம் மக்களைப் பாதுகாக்கவில்லை. அதே போல், இலங்கை அரசியலமைப்பு சட்டமும் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலையினை தடுக்கத் தவறியுள்ளது. மேலும், யாப்பானது இன மத மொழியின் பெயரால் மக்களின் மீதான ஒடுக்குமுறையை அதிகரிக்க உதவியுள்ளது என்பதே நிதர்சனம்.
அதிகாரம் என்பது பாராளுமன்றத்துக்குள் சுருங்கிய ஒரு விடயமல்ல. கடந்த சில வாரங்களாக இலங்கைப் பாராளுமன்றத்தில் இடபெற்றது வெறும் கணிதப்போட்டியாகும். அதாவது யாரிடம் அதிக எம்.பிக்கள் உள்ளனர் என நடக்கும் ஒரு கணிதப்போட்டி. உன்னிடம் 102 அமைச்சர்களா, தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் சேர்த்து என்னிடம் 117 அமைச்சர்கள் இருக்கிறார்கள் என ரணில் கணக்குக் காட்டும் கணிதப் போட்டி நடந்தேறியதைப் பார்த்தோம். இக்கணிதப் போட்டிக்கு எவ்வித நிபந்தனையும் இல்லாமல் சம்பந்தன் ஐயாவும் தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
ஆகவே இனியும் ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது மைத்திரி அரசாங்கமோ கொண்டு வரும் புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தமானது மக்களின் நலன்களை முன்வைத்து மேற்கொள்ளப்டும் என நம்புவது முட்டள்தனமானது. தமது அரசியல் நலன்களை முன்வைத்தே இந்த யாப்பு சீர்திருத்தமானது மேற்கொள்ளப்படும் என்பது தெளிவாகப் புரிகின்றது. அண்மையில் இடம்பெற்ற தடாலடியான அரசியல் குழப்பங்களும் நமக்கு உணர்த்துவது அதைத்தான்.
நாட்டின் இறையாண்மை மதிக்கப்படுகின்றது எனின் பழைய யாப்பு தூக்கி எறியப்பட்டு, புதிய யாப்பு உருவாக்கத்தில் மக்கள் பங்கு பற்ற வேண்டும். அதாவது ஒவ்வொரு பிரதேசத்தில் இருந்தும் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு அப்பிரதிநிதிகளைக் கொண்ட சட்டவாக்க சபை உருவாக்கப்பட வேண்டும். அச் சட்டவாக்க சபையின் மூலம் மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு, விவாதிக்கப்பட்டு மக்களின் பங்களிப்புடன் புதிய யாப்பினை உருவாக்க வேண்டும். அதுதான் ஜனநாயகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.
பாராளுமற்றத்தில் இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அடிப்படையில் பாராளுமன்றம் சட்டவாக்க சபையாக இயங்க முடியும் என தாமாக அறிவித்த ரணில், தமது கட்சி நலனின் எல்லைக்கு உட்பட்ட திருத்தங்களை மட்டுமே முன் வைக்கிறார். இது ரணில் அரசின் வங்குரோத்து அரசியலை எடுத்துக் காட்டுவதோடு மட்டுமல்லாமல் புதிய யாப்பு உருவாக்கத்தில் மக்கள் ஈடுபடுவதை தடுக்கின்றது. பாராளுமன்றம் சட்டவாக்க சபையாக இயங்க வேண்டும் என மக்கள் வாக்களிக்கவில்லை.
புதிய யாப்பு உருவாகத்திற்காக மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது என்பது உண்மைதான். ஆனால் அது போதாது. மக்களின் கருத்துக்களை குப்பையில் தூக்கி எறிந்து விட்டு தமக்கு தேவையான மாற்றத்தினையே இவ்வரசு மேற்கொள்ளும். ஆகவே மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது என்பது மக்களின் பங்களிப்பாகாது. சட்டவாக்க சபையின் மூலம் உருவாக்கப்படும் யாப்பே மக்களின் பங்களிப்புடன் உருவாகும் யாப்பாக அமையும். மாறாக, ஐக்கிய தேசியக் கட்சி அல்லது மைத்திரிபால சிறிசேனாவின் சுதந்திரக் கட்சியின் அனுசரணையுடன் உருவாகும் யாப்பானது, அவர்களின் நலன்களையே முன்னிலைப்படுத்தும் அல்லது இந்திய மற்றும் மேற்கத்தைய நாடுகளின் அழுத்தத்தினால் உருவாகும் யாப்பானது அந் நாடுகளின் நலன்களை முன்னிலைப்படுத்தும் என்பதுதான் நிதர்சனம்.
அதிகார சக்திகளின் பலவீனத்தை பாராளுமன்றத்தினுள் நடைபெறும் அடிதடிகள் எடுத்துக் காட்டுகின்றது. அவர்களின் நோக்கம் தமது கதிரையினைக் காப்பற்றிக் கொள்வதேயன்றி வேறொன்றுமில்லை. மக்களின் நலனை அவர்கள் கருத்திற் கொள்ளாததால், மக்கள் ஒருவித பாதுகாப்பற்ற தன்மையையே உணர்கின்றனர். இதனால் குறிபிட்ட சில தொகுதி மக்கள் இனவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் நோக்கி நகருவதற்கு வாய்ப்புண்டு. ஆனால் மக்கள் அவ்வாறு செல்லாமல் முற்போக்கான அரசியல் நோக்கி நகர வேண்டும். தற்போது அவ்வாறு நகர்ந்து கொண்டிருக்கும் சக்திகள் ஓன்று பட வேண்டும்.
இலங்கை ஜனநாயகத் தன்மை வாய்ந்த, இறையாண்மை மதிகப்படும் நாடு எனின் அதிகாரம் மக்களின் கைகளில் செல்ல வேண்டும், அரசியல்வாதிகளின் கைகளிலல்ல. இது தானாக நடக்காது. போராட்ட சக்திகளின் வளர்ச்சி மூலம் மக்கள் அதிகாரத்தைப் பிடிக்கும் நிலை நோக்கி நகரும் போது மட்டுமே இது சாத்தியப்படும். அந்த தெளிவுடன் போராட்ட சக்திகள் செயற்படவும் ஒன்றிணையவும் முன்வர வேண்டும்.
சு.கஜமுகன் (லண்டன்)
gajan2050@yahoo.com