இலங்கை அரசியலில் சர்வதேச சக்திகள்

பாராளுமன்ற நெருக்கடி, யாப்பு நெருக்கடி எனப் பல்வேறு நெருக்கடிகள் இலங்கையின் அரசியல் களத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந் நெருக்கடிகளின் பின்னால் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளும் தமது அழுத்தத்தை பிரயோகிப்பது மட்டுமல்லாமல், இதனைப் பயன்படுத்தி இலங்கை மண்ணில் தமது காலை வலுவாக ஊன்ற முயற்சிக்கின்றன. இவ்வாறு சர்வதேச சக்திகள் இலங்கையில் தமது ஆதிக்கத்தை செலுத்த முனைவதன் பின்னணி அரசியலை ஆராய்கின்றது இக்கட்டுரை.
சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளும் இலங்கையின் கடனை அதிகரித்தும், தனியார்மயமாக்களை அதிகரித்துமே தமது ஆட்சியை மேற்கொள்கின்றன. அரசியல் பொருளாதார ரீதியாக எந்தக் கொள்கையின் அடிப்படையில் நாட்டை ஆட்சி செய்வது என்பதில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சுதந்திரக்கட்சிக்கும் ஒரே நிலைப்பாடுதான் உண்டு. அதாவது கடன், மற்றும் தனியார் மயப்படுத்தலை அதிகரித்தலே அவற்றின் பிரதான கொள்கைகளாகும். அதிலும் குறிப்பாக வெளிநாடுகளிலிலிருந்து கடனைப் பெற்று நாட்டை ஆட்சி செய்தலே இரு கட்சிகளினதும் அடிப்படைப் பொருளாதாரக் கொள்கையாக உள்ளது. யாரிடம் கடனைப் பெற்றுக்கொள்வது, வாங்கிய கடனை எவ்வாறு நிர்வகிப்பது என்பதிலேயே இரு கட்சிகளும் மாற்றுக்கருத்தைக் கொண்டிருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனது தார்மீக ஆதரவை வழங்குவதன் ஊடாக தமது நிலைப்பாடும் அதுதான் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வெளிப்படுத்துகின்றது. ஆகவே கடன் மற்றும் தனியார் மயப்படுத்தலை அதிகரிக்க வேண்டும் என்பதில் அனைத்துக் கட்சிகளுக்கும் மாற்றுக்கருத்தில்லை என்பது தெளிவாகின்றது.
ஐ.எம்.எப் மற்றும் மேற்றுகுலக நாடுகளின் ஆதிக்கத்திற்குற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியானது அவர்களிடம் கடனைப் பெறுவதிலும், அவர்களின் நலன்களை முன்னிலைப்படுத்துவதையுமே விரும்புகின்றது. கடந்த காலங்களில் ஒவ்வொரு வருட பட்ஜெட்டையும், மேற்குலக நாடுகளின் நலன்கருதி இயங்கும் ஐ.எம்.எப் இன் ஆதரவுடனேயே ஐக்கிய தேசியக் கட்சியானது தாக்கல் செய்தது. அதில் ஐ.எம்.எப் இன் கோரிக்கைகளான தனியார் மயபடுத்தல், மக்களுக்கான இலவச சேவைகளைக் குறைத்தல் போன்ற அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அதனடிப்படையிலேயே சைட்டத்தினையும் (SAITM) கடந்த வருடம் தனியார் மயப்படுத்த முனைந்தது ஐக்கிய தேசியக் கட்சி எனினும் மக்களின் எதிர்ப்பால் பின்னர் அது கைவிடப்பட்டது யாவரும் அறிந்ததே.

மறுபுறத்தில், மகிந்த ராஜபக்சே சீனாவிடமிருந்து கடன் வாங்குவதையே விரும்புகிறார். இலங்கையில் யுத்தம் இடம்பெற்றபொழுது சீன அரசானது அதிகளவான நிதியை மகிந்த அரசுக்கு அளித்தமை யாவரும் அறிந்ததே. அதன் பிரதிபலனாகவே அம்பாந்தோட்டை துறைமுகம், காலி பிரதேசங்கள் ஏற்கனவே சீனாவிற்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டுவிட்டது. 2௦௦5 இல் இலங்கையின் அந்நிய நேரடி முதலீடுகளில், சீனாவின் முதலீடானது வெறும் ஒரு மில்லியன் டொலர்களுக்கும் குறைவானது ஆகும். ஆனால் 2௦14 இல் சீனாவின் முதலீடு 400 மில்லியன் டொலர்கள் ஆகும். மகிந்த ஆட்சிக் காலத்திலேயே இலங்கையில் பாரியளவிலான பணத்தை முதலீடு செய்து இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைக்கத் தொடங்கியிருந்தது சீனா. தனது புதிய பட்டுப் பாதைக்கு வலு சேர்க்கும் வகையில் இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த விரும்பும் சீனா, அதனை தமது நலன் விரும்பியான மகிந்தவின் ஊடாக சாத்தியப்படுத்த முனைகிறது.
அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைபின் ஆதரவுடன் இந்தியாவானது தனது ஆதிக்கத்தையும் இலங்கை அரசியலில் செலுத்துகிறது. ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக மேற்குலக நாடுகளும், மகிந்தவின் ஊடாக சீனாவும், தமிழ் தேசியக் கூட்டமைபின் ஊடாக இந்தியாவும் தமக்கிடையிலான ஒரு அதிகாரப் போட்டியினை இலங்கை மண்ணில் நிகழ்த்துகிறது. அதிலும் குறிப்பாக கடன் வழங்குகிறோம் என்னும் போர்வையில் இலங்கையில் புகுந்த சீனாவும், மேற்குலக நாடுகளும் தமது பலப்பரீட்சையை நிகழ்த்தும் முக்கிய கேந்திர நிலையமாக இலங்கையினைப் பாவித்து வருகின்றது. இலங்கையின் பூகோள அரசியலின் முக்கியத்துவத்தை உணர்ந்த இந்நாடுகள் தமது பலத்தை இலங்கையில் நிறுவவே முனைகின்றன.
ஒரு புறம், மகிந்த பிரதமரானதும் சீனத் தூதுவர் மகிந்தவின் கொழும்பு வாசல்தலத்திற்கு நேரடியாகவே சென்று தமது வாழ்த்துக்கள் தெரிவித்தார். மறுபுறம் அமெரிக்க ராஜாங்க செயலாளர்கள் மீண்டும் ரணிலை பிரதமராக்க வேண்டுமெனக் கோரி, மைத்திரி அரசின் மீது தமது அழுத்தத்தை பிரயோகித்தனர். தமது சார்புடையவர்களை அதிகாரத்தில் நிறுத்தவே சீனாவும் அமெரிக்காவும் விரும்புகின்றது என்பது இதிலிருந்து தெளிவாகப் புரிகின்றது.
இவை அனைத்தும் அரசியல் களத்தின் மேல் தளத்தில் இடம்பெறும் பிரச்சனைகள், மறுபுறத்தில் மக்களின் எதிர்பார்ப்பானது வேறு வடிவத்தில் உள்ளது. பாராளுமன்றத்தில் யார் அதிக ஆசனங்களை வைத்திருந்தாலும் அல்லது யார் பிரதமராக வந்தாலும் மக்களுக்கு அது பற்றிக் கவலையில்லை. பொருளாதார வளர்ச்சி, ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படவேண்டும், தமது உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும், தமது வாழ்வாதரப் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
ஆனால், மக்களின் இத்தகைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதவிடத்து மக்கள் புதிய திசையை நோக்கி நகருகின்றனர். இதன் விளைவாகவே, ஆட்சியில் பங்கெடுக்காத போதிலும், கடந்த காலத் தேர்தல்களில் கஜேந்திரகுமாருக்கும், மகிந்தவுக்கும் அதிகளவான வாக்குகள் விழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறாத பொழுது ஒரு சில மக்கள் தொகுதியினர் இன ரீதியாக,பிரதேச ரீதியாக பிளவுபட்டு மதவாத இனவாத பிற்போக்கு அரசியலை நோக்கி தள்ளப்படுவதும் நிகழ்வதுண்டு. இதனால் மக்கள் மத்தியில் பிளவுகள் ஏற்படுகின்றது. இப்பிளவினையே அரசியல் கட்சிகள் தமது வாக்கு வேட்டைக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன.
சர்வதேச சக்திகளின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும், வெளிநாட்டு முதலீடு அதிகரிக்கும் இதன் மூலம் இலங்கையின் பொருளாதாரமானது அபார வளர்ச்சி அடையும் என்றே கருதப்பட்டது. எதிர்பார்த்தது போல் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஓரளவுக்கு அதிகரித்த போதிலும், வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கவில்லை. ஆகவே வீழ்ந்து கொண்டிருக்கும் இலங்கைப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சுற்றுலாத் துறையிலிருந்து கிடைக்கும் வருமானம் மட்டும் போதுமானாதாக இருக்கவில்லை. இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எந்தக் கட்சியும் சரியான பொருளாதாரக் கொள்கையினைக் கொண்டிருக்கவில்லை. இதனால் கொந்தளிக்கும் மக்களை வேறு பக்கம் நோக்கி திருப்புதலை அதாவது இனவாதம், மதவாதம், அடிப்படைவாதத்தை நோக்கி திருப்பும் செயலையே இரு பெரும் கட்சிகளும் செய்து கொண்டிருக்கின்றன.
எந்தக் கட்சியும் மக்கள் நலனை முன்வைத்துத் தமது அரசியலை முன்னெடுப்பதில்லை. மாறாக ஒவ்வொரு அரசியல் தலைமைகளும் வாக்குகளைப் பெறுவதற்காக தத்தமக்கெனே ஒவ்வொரு உத்திகளைக் கையாளுகின்றன. சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி அதன் மூலம் தனது வாக்கு வங்கியை நிரப்பிக் கொள்ளுதலே மகிந்தவின் அரசியலாகக் காணப்படுகின்றது. ‘’மகிந்தவின் எழுச்சியை தடுக்க வேண்டும் அதற்கு நாங்கள் பலமாக இருக்கவேண்டும் ஆகவே எங்களுக்கு வாக்கு போடுங்கள்’’ என மகிந்த மீதான பயத்தைக் காட்டி தமிழ் மக்கள் மத்தியில் தமது வாக்குகளைப் பெற்றுக் கொள்கின்றது தமிழ் தேசியக்கூட்டமைப்பு. தமிழ் சிங்கள முஸ்லிம் என அனைத்து இன மக்களிடமும் தனது வாலை ஆட்டி அதன் மூலம் அனைத்து இன மக்களிடமும் சிறிது சிறிது வாக்குகளைப் பெற்று, ஆட்சியமைக்கத் தேவையான ஆசனங்களைக் கைப்பற்றுதலே ரணிலின் அரசியல் ராஜதந்திரமாகக் காணப்படுகின்றது.
எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே அனைத்துக் கட்சிகளினதும் பொதுக் கொள்கையாகக் காணப்படுகின்றதே தவிர மக்கள் நலன் என்பது இரண்டாம் பட்சமாகவே கருதப்படுகின்றது. அண்மையில் பாராளுமன்ற நெருக்கடி ஏற்பட்ட பொழுது ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் மாறி மாறி தமது ஆதரவாளர்களை வீதிக்கு இறக்கி போராட்டங்களை மேற்கொண்டதைப் பார்த்தோம். தமது பிரச்சனைகளுக்காக மக்களை வீதிக்கு அழைக்கும் இக்கட்சிகள், மக்கள் பிரச்சனைகளுக்காக மக்களை வீதிக்கு அழைப்பதில்லை.
மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து, மக்களை ஒன்றினைத்து மக்கள் போராட்டங்களை, மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க ஒரு கட்சியும் தயாராகவில்லை. மாறாக மக்களைப் பிளவுபடுத்தி, அதனால் விளையும் இனவாத மதவாத அரசியலயே முன்னெடுக்க விரும்புகின்றனர். இது அரசியல் கட்சிகளின் போதாமையினைக் காட்டுகின்றது. இதனைத் தாண்டி செல்ல அவர்கள் முயற்சிப்பதில்லை.
ஆகவே, இந்திய சீன அல்லது அமெரிக்கா போன்ற சர்வதேச சக்திகளின் நலனுக்கு ஏற்ப இயங்கும் கட்சிகளின் பின்னால் செல்லாமல் மக்கள் முற்போக்கான அரசியலை நோக்கி நகர வேண்டும். மக்கள் திரட்சியானது சரியான அதிகாரத்தை நோக்கி, மக்கள் சார்பான கொள்கை கொண்ட அமைப்பை நோக்கி நகர வேண்டும். அதிகாரம் என்பது பாராளுமன்றத்திலோ அல்லது யாப்பிலோ இல்லை. மாறாக அதிகாரம் என்பது மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. இதனை மக்கள் உணரும்போதுதான் அனைத்து இன மக்களுக்கும் தேவையான விடுதலை எட்டப்படும்

சு.கஜமுகன் (லண்டன்)
gajan2050@yahoo.com