துவேசத்தை எதிர்கும் அகதிகளுக்ககான உரிமைகள்.

மதன்
பிரித்தானியா என்றாலே மேற்கத்தேய வல்லரசு மற்றும் மனித உரிமைகள் காக்கப்படுகின்று என்று நம்புவர் சிலர்.  அகதிகள் உரிமைகளை மதிப்பதாக பல நாடுகளுக்கு தற்பொழுதுள்ள ஆளும் கட்சி காட்டிக்கொண்டிருக்கின்றது. ஆனால் அகதிகள் மட்டுமின்றி பிரித்தானியாவில் வாழும் மக்களும் தங்களது சில அடிப்படை உரிமைகளை பெறுவதற்கு கடுமையாக போராட வேண்டிய நிலையே உள்ளது.

இதற்கான அடிப்படைக் காரணம் இந் நாட்டின் வலதுசாரி அரசியல்வாதிகள்.அவர்களுக்கு நாட்டைப் பற்றியோ, நாட்டு மக்கள் பற்றியோ, நாட்டின் எதிர்கால நலன் பற்றியோ சிந்தனையோ , தூர நோக்கோ இன்மையாகும்.பிரித்தானிய நாடு பல்லின, பல மொழி, பல மத, பல கலாசாரங்களைக் கொண்ட நாடு என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.
ஆனால் அரசு தமது அதிகாரத்தை தக்கவைத்து கொள்ளும் வகையில் துவேசத்தை தூண்ட முயல்கிறது.
ஆனால் இதை நன்கு புரிந்து கொண்ட சாதாரண உழைக்கும் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்த போராட்டத்தை கட்டி எதிர்ப்பை தெரிவிப்பதன் மூலமாக ஒரு தீர்வை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

1930 களில் இருந்து பாசிசம்,, இனவாதம், இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் ஆன்டிஸிமிட்டிசம் ஆகியவற்றிற்கான ஆதரவை வலதுசாரிகள்தான் வளர்த்து வருகின்றனர் என்பது அறிவோம். தற்போது பிரிட்டனில் பாசிச கருத்துடையோர் மற்றும் இனவெறிவாதிகள் முன்பை விட அதிகமாக வளர்ச்சி அடைந்து வருவதை பார்க்க கூடியதாக இருக்கிறது. இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும்.

இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் கடந்த 17-11-18 சனிக்கிழமை முப்பதாயிரத்திற்கு பேற்பட்டவர்கள் ஒரு போரணியாக கலந்து கொண்டார். அகதிகளுக்கான உரிமைகள் மற்று இளைய சோசலிஸ்டும் ஒன்றாக இணைந்து இந்த போராட்டத்திற்கு அழைப்பை விடுத்திருந்தனர். இந்தப் போராட்டத்தில் இந்த நாட்டின் பல தொழிற்சங்கவாதிகளும் கலந்து கொண்டனர்.

அகதிகள்உரிமைகளுக்கான அமைப்பு – அகதிகளின் கோரிக்கைகளும் உரிமைகைளும் உடனடியாக பெறவேண்டும் -மற்றும் அரசியல்  சமூக மாற்றத்திற்கான கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அகதிகள் அமைப்பு சார்பாக உரையாடியவர் கூறுகையில்- இந்நாட்டில் மறைமுகமாகவும் சில சமயம் நேரடியாகவும் துவேச நடவடிக்கைகள் வளர்ந்து வருவதை காணக் கூடியதாக இருக்கிறது. பலதரப்பட்ட அகதிகளுக்கான அமைப்புகள் இருந்தாலும் ஆளும் கட்சியைப் பாதுகாக்கும் வகையிலேயே அவர்தம் நடவடிக்கைகள் இருக்கின்றன. அகதிகளை வரவேற்கிறோம். அவர்களை காப்பாற்றுங்கள் என்று குறிப்பிடுவோரும் அகதிகள் நலனை முன்னேற்றும் கோரிக்கைகள் நோக்கி நகரவில்லை. நிரந்தர தீர்வை பற்றி அல்லது ஆளும் கட்சியை வெளியேற்ற வேண்டும் என்பதை பேசுவதற்கு சிலர் மறுக்கின்றனர். பலரது வாழ்க்கை எவ்வாறு உள்துறை அமைச்சால் பாதிப்புக்கு உள்ளானது என்பதை அண்மையில் நடந்த விண்டறஸ் பிரச்சனையில் காணக்கூடியதாக இருந்தது விண்டறஸ் எனும் கப்பலில் வேலைக்காக பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஆபிரிக்க  நாட்டிலிருந்து  பிரித்தானியாவுக்கு பல தொழிலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இங்கு வாழ்வதற்கு உரிமையுண்டு. ஆனால் இதனை மறைத்து அவர்களை திருப்பியனுப்பும் கொள்கையை ஆளும்  வலதுசாரி கட்சி முன்னேடுத்து வந்தது. இது தவிர வீடற்றவர்களின் எண்ணிக்கைகள் அதிகரிப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது. அகதிகள் தடுப்புமுகாமில் அடைத்து வைக்கப்படுவது அதிகரிப்பதும் காணக்கூடியதாக உள்ளது.

இதைக் கண்டும் காணமலும் சுயநல அரசியலில் ஈடுபடும் அமைப்பினர் பலரது அரசியல் பாதை எதை நோக்கி பயனிக்கிறது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகிறது. இந்த வருடம் அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப்பின் பிரித்தானிய வருகையை கண்டித்து லண்டனில் பல இலட்ச கணக்கான மக்கள்
பெரும் எழுச்சி கொண்டனர். இதற்கான முக்கிய காரணம் ட்ரம்பின் கொள்கைகள் துவேச நடவடிக்கைகளும் அகதிகள் மற்றும் குடியேறிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதே.
2016 ல் ட்ரம்ப்பின் பிரச்சாரம் வெளிப்படையான இனவெறி, துவேசம், பாலியல் தூண்டல்கள்  ஆகியவற்றிற்கு ஆதரவான இருந்தது. இது தவிர வலதுசாரிகளின் மிகவும் இழிந்த கூறுகளை தெளிவாக வெளிப்படுத்தியது அவரது பேச்சும் நடவடிக்கையும். இவற்றை எதிர்த்து ட்ரம்ப்புக்கு எதிரான போராட்டத்தில் அகதிகள் உரிமை அமைப்பு பங்கு பற்றியது. தமிழ் சொலிடாரிற்றியும் இதில் பங்கு கொண்டது. மற்றைய தமிழ் அமைப்புக்கள் எதுவும் ஏன் இந்தப் போராட்டத்தில் பங்கு கொள்ளவில்லை என்ற கேள்வி எமக்கு உண்டு.
இனவாதம், பாலியல், மற்றும் இனவெறி என்பதையும் முதலாளித்துவ சுரண்டல் உள்ளடக்குகின்றது என்பதை லண்டனில் நடை பெற்ற  போராட்டத்தை ஒழுங்கு செய்தவர்களில் ஒருவர் அழுத்தாமாக கூறினார். வலது சாரியத்துக்கும் துவேசத்துக்குமான தொடர்பை நாம் அவதானிக்க வேண்டும்.

அடிப்படை உரிமைகளை பெறுவதற்கு மிகவும் முக்கியமாக போராட்டப் பாதையை நாம் சரி செய்யவேண்டிய தேவை இருக்கின்றது. மீண்டும் துவேச கட்சிகள் எமது இனப்பிரச்சனைக்கு தீர்வை பெற்றுத்தரும் என்று எண்ணுவது நாம் மீண்டும் அடிமைச்சங்கிலியில் மாட்டிக்கொள்வது போன்றதாகும் ஆழமடைந்துவரும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் சமுதாயம் தொடர்ந்து துருவப்படுத்தப்படுவதால், மேலதிக நெருக்கடிகளை நாம் எதிர்கொள்ள வேண்டி வரும். தொழிலாளர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வெகுஜன இயக்கங்களை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டும். நாங்கள் தெருக்களில், வளாகங்களில், மட்டுமின்றி இனவெறி, பாலியல் வன்முறை , மற்றும் பழமைவாதத்திற்கு எதிராக எங்கள் பணியிடங்களிலும் ஐக்கியப்பட வேண்டும்.

ஒன்றிணைந்த போராட்டம் என்பது கொள்கைகள் அடிப்படையில் கட்டப்பட வேண்டும். எமது பாதை துவேசமற்ற முற்போக்கான பாதையில் பயணிக்கவேண்டும் என்ற நோக்குடன் நாம் ஒன்றுபட வேண்டும். அகதிகளுக்கான உரிமைகள் அமைப்பும் அவ்வாறே பயணிக்கும்.