சுதந்திரம் என்பது யாருக்கானது – சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம்

2,669 . Views .

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி நான்காம் திகதி பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தால் கொண்டாடப்பட்டது. அதே நேரத்தில் சுதந்திரம் யாருக்கானது? இது உண்மையில் மக்களுக்கான சுதந்திர தினமா என்ற கேள்வியுடன் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பானது தூதரகத்துக்கு முன் போராட்டம் ஒன்றை நடத்தியது .  பல்வேறு அமைப்புகளும், நூற்றுக்கணக்கான  மக்களும் இப்போரட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகின்றது. ஆனால் இன்னும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. ஒடுக்கப்படும் சிங்கள மக்களுக்கு கூட எந்தப் பயனுமில்லை. மலையக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள்  மற்றும் சம்பளப் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. இலங்கை உழைக்கும் மக்களின் வாழ்வாதார நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கின்றது. போராடும் மக்கள் ஒடுக்கப்படுவதோடு மக்களின் அடிப்படை உரிமைகளும் மறுக்கப் படுகின்றது. ஆகவே சுதந்திரம் என்பது யாருக்கானது?, இது மக்களுக்கான சுதந்திர தினமா அல்லது மக்களை அடக்கி ஒடுக்கும் அரச இயந்திரங்களின் சுதந்திர தினமா என்ற கேள்வியை முன்வைத்து லண்டனிலுள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி வழங்கப்பட வேண்டும், மக்களின் நிலங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்,  மலையக மக்களின் அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், இரகசிய முகாம்கள் மூடப்பட வேண்டும், மன்னார் புதைகுழி தொடர்பானா நீதியான விசாரணை நடைபெற வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும், போர்க் குற்றவாளிகளுக்கு எதிராக சுயாதீனமான நீதியான சர்வதேச விசாரணை  நடத்தப்பட வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. 

கடந்த வருடம் சுதந்திர தினத்தன்று லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நோக்கி விரல் மூலம் சைகை செய்து கொலை செய்வதாக அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட முன்னால் இலங்கை தூதாரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோக்கு எதிராக எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்பபடவில்லை. இலங்கை அரசின் அழுத்தம் காரணமாக   பிரியாங்காவுக்கு எதிராக வழங்கிய பிடியாணையை ரத்துச் செய்யும் முயற்சியும் அதற்கேதிறான வழக்கும் போராட்டமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக நீதியான விசாரணை நடத்தப்படவேண்டும் , அவருக்கு ராஜதந்திர விலக்குரிமை அளிக்கக்கூடாது என்ற கோரிக்கையையும் போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.   

ஒரு புறம், பேரினவாதத்தின் துணையுடன் இடம்பெறும்  திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தமிழர் பிரதேசங்களில் திடீர் திடீரென்று முளைக்கும் பெளத்த விகாரைகள், என அனைத்தும் சிங்கள மயமாக்கப்பட்டுக் கொண்டிருகின்றது. மறுபுறத்தில் தமது காணியை முழுமையாக விடுவிக்கக் கோரி பல மாதங்களாக் போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாப்பிலவு மக்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவம் உயரமான பகுதியில் இருந்து அவர்களை வீடியோ புகைப்படம் எடுத்து வருகின்றது. அத்துடன் போராட்டத்திற்கு ஆதரவு தருவோரின் தகவல்களையும் திரட்டி வருவதுடன் அவர்களுக்கு அச்சுறுத்தலும் விடுவிக்கின்றது. இத்ககைய அரசுக்குத்தான் சம்பந்தர் ஐயா தனது தார்மீக ஆதரவை வழங்கிக் கொண்டிருகின்றார். இந்நிலையில் அம்மக்கள் எவ்வாறு சுதந்திர தினத்தை கொண்டாடுவது என்பது நியாயமான கேள்வியாகவே படுகின்றது. இது அவர்களுக்கு ஒரு கறுப்பு நாளாகவே காணப்படுகின்றது. 

ஒரு புறம் மைந்தவுடன் இணைந்து மைத்திரியின் நல்லாட்சி அரசானது மக்களை ஏமாற்றிக் கொண்டு துரோகம் செய்கின்றது , மறுபுறம் தமிழ் தலைமைகளும் நல்லாட்சியின் அங்கமான ரணிலுடன்  இணைந்து தீபாவளிக்குள் தீர்வு வந்து விடும், பொங்கலுக்குள் தீர்வு வந்து விடும் எனக் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றி  வருகின்றனர். தமிழ் தலைமைகள், அதிலும் குறிப்பாக தமிழ் தேசியக் கூ ட்டமைப்பு, தமிழ் மக்களுக்கு தேவையான உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கோ அல்லது தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கோ பலமிழந்து காணப்படுகிறது. பதிலாக நல்லாட்சி அரசுக்கு சகல வழிகளிலும் முண்டு கொடுக்கும் வேலையையே செய்து வருகின்றனர்.  தமிழ் தேசியக் கூட்டமைப்பானது  ரணிலுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை, அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற நெருக்கடி என அனைத்து பிரச்னைகளிலும் ரணிலுக்கே தனது ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் மக்கள் நலன் சார்ந்த  பொருளாதார கொள்கையினைப் பின்பற்றாமல் நாட்டின் வளங்களை சீனா, இந்தியா உட்பட  வெளிநாடுகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் கொள்கைகளுக்கு ஆதரவளித்து வருகிறது. இதனால் அனைத்து மக்களினதும் வாழ்வாதாரம் சீர்வடைவது மட்டுமின்றி மக்களின் கடன் சுமை அதிகரித்து வருகிறது.

இலங்கை அரசு எவ்வாறு எல்லா மக்களுக்கும் எதிரி என்பதற்குக் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த அடக்குமுறை அரசுக்கு எல்லாப் பக்கங்களில் இருந்தும் எதிர்ப்பு வளர்ந்து வருவது ஆச்சரியமான ஒன்றல்ல. இந்த நாள் கருப்பு நாள் என கொழும்பிலும் பல்வேறு மக்கள் இணைந்த போராட்டம் இதே நாளில் நடந்ததும் அதில் பல்வேறு தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத் தக்கது. இந்த முறையில் எல்லா எதிர்ப்பும் இலங்கை அரசு நோக்கிக் குவிய வேண்டும் எனத் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு தெரிவித்தது. அதற்கான வேலைகளுக்காக இளையோர் திரள வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

சு. கஜமுகன்

gajan2050@yahoo.com