பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்யக்கோரி போராட்டம்

 

பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்து அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, வெஸ்மினிஸ்டர் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் தமிழ் சொலிடரிட்டி அமைப்பினர் இன்று(01/03/2019) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைய தினம், லண்டன் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றத்தில் பிரியங்கா பெர்னாண்டோ தொடர்பான வழக்கு விசாரணை  நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுதே, நீதிமன்றத்திற்கு வெளியே இவ் ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது

பிரியங்கா பெர்னாண்டோவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், போராடும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், இலங்கையில் போர்குற்றமிழைத்த சகல போர்ற்குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டமானது இடம்பெற்றது.

பிரியங்கா பெர்னாண்டோ, கடந்த வருடம் இலங்கையின் சுதந்திர தினத்தன்று, லண்டனிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நோக்கி கழுத்தை அறுப்பேன் என்ற பொருள் பட விரல் மூலம் சைகை செய்து கொலை அச்சுறுத்தல் விடுவித்தார். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் உயிர் அச்சுறுத்தலுக்கும் மனவுளைச்சலுக்கும் உள்ளானார்கள். இதனால் ICPPG (International Centre for Prevention and Prosecution of genocide)  ஆனது பிரியங்காவுக்கு எதிராக தொடுத்திருந்தது.

அவ் வழக்கில் அவர் குற்றவாளி என இனம் காணப்பட்டு அவரைக் கைது செய்யக் கோரி வெஸ்மினிஸ்டர் குற்றவியல் நீதிமன்றமானது அவருக்கு பிடியாணை பிறப்பித்திருந்தது. எனினும் இலங்கை அரசானது பிரித்தானியாவின் வெளிநாட்டு மற்றும் பொது விவகாரங்களுக்கான அமைச்சில் (Foreign and Common Wealth Office) பிரயோகித்த அழுத்தம் காரணமாக, நீதிமன்றமானது இப் பிடியாணையை இரத்து செய்துள்ளது. இதனை எதிர்த்து ICPPG இனால் தொடரப்பட்ட வழக்கே நேற்று இடம்பெற்றிருந்தது. பிரித்தானிய , இலங்கை அரசுகள் ஒன்றுக்கொன்று தமது அரசியல் பொருளாதார நலம் சார்ந்து இயங்குவதால் மக்களின் உரிமைகளைப் பற்றி அவை கருத்திற் கொள்வதில்லை ஆகவே  இது போன்ற மக்கள் போராட்டங்களாலேயே எமது அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க முடியும், வீதியில் இறங்கிப் போராடுவது எமது அடிப்படை உரிமை என ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்திருந்தார்கள்.

சு. கஜமுகன்

gajan2050@yahoo.com