பிற்போடப்பட்ட பிரியங்கா பெர்னாண்டோவின் வழக்கு

1,297 . Views .

 

கடந்த வருடம் இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்களை நோக்கி கழுத்தை அறுப்பேன் என விரல் மூலம் சைகை செய்து  கொலை அச்சுறுத்தல் விடுவித்த பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவின் வழக்கு வெஸ்மினிஸ்டர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று (15/03/2018) விசாரணைக்கு எடுக்கப்பப்பட்டது. அதன் பிரகாரம் சட்டப்பிரிவு 142 இன் கீழ் பிடியாணை அனுப்பும் போது முறையான சட்ட ஒழுங்கு பின்பற்றப்படவில்லை என்பதனை சுட்டிகாட்டிய நீதிபதி வழக்கை எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி மீள் விசாரணைக்கு பிற்போட்டுள்ளார். அதற்குள் பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிரான முறையான பிடியாணை அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் பிரியங்காவை கைது செய்யக் கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் தமிழ் சொலிடரிட்டி அமைப்பானது இன்றும் நீதிமன்றத்திற்கு முன்னால் போராட்டத்தை மேற்கொண்டது. பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய், போராடும் மக்களை அச்சுறுத்தாதே, போராடுவது மக்களின் உரிமை என்ற முழங்கக்களை முன்வைத்து தமிழ் சொலிடரிட்டி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

வெஸ்மினிஸ்டர் நீதிமன்றத்திற்கு முன்னால் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இலங்கை அரசுக்கு ஆதரவானோர் போராட்டக்காரர்களை வீடியோ பதிவு செய்துள்ளனர். கடந்த மாதம் சுதந்திர தினத்தன்று இலங்கைத் தூதுவராலயத்தின் முன் போராட்டத்தில் ஈடுபடும் போதும், தூதுவராலயத்திலிருந்து வெளிவந்த பெண்மணி ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களை இவ்வாறு வீடியோ ஒளிப்பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது. ஆகவே இலங்கை அரசு இலங்கையில் மட்டுமல்லாமல் பிரித்தானியாவிலும் போராடும் தமிழர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றது.

அது மட்டுமல்லாமல் பிரித்தானிய பொலிசாரிடம் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பற்றி முறைப்பாடு செய்தமையால் பிரித்தானிய போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை விசாரணையும் செய்தனர். இதன் பின்னால் இலங்கை அரசும் இருக்கலாம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். புலம் பெயர் தேசத்தில் நடைபெறும் போராட்டங்களை நசுக்குவதற்கு தற்பொழுது இலங்கை அரசு முழுமூச்சுடன் செயற்பட்டு வருகின்றது. அதன் படி இலங்கை அரசுக்கு எதிராக இயங்குபவர்கள் குறித்த தகவல்களை திரட்டி வருவதுடன் அவர்களைக் கண்காணித்தும் வருகின்றது. பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவின் பணியும் அத்தகையது என கடந்த முறை வழக்கு இடம்பெற்றபோது நீதிபதி எம்மா ஆபத்நோட் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://instagram.com/p/BvCO8n6ANJh/

எத்தகைய அச்சுறுத்தல் வந்தாலும் தாம் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனவும், பிரியங்காவை கைது செய்யும் வரை தமது போராட்டம் தொடரும் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்திருந்தனர்.

சு.கஜமுகன்

[email protected]