இனத்துவேசத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்

1,969 . Views .

 

பிரித்தானியாவில் இன்று (16/03/18) இனத்துவேசத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. பிரித்தானியாவிலுள்ள சோசலிசக் கட்சி, தமிழ் சொலிடாரிட்டி, அகதிகளுக்கான உரிமைகள் அமைப்பு  போன்ற அமைப்புகளும், யுனிசன், யுனைட் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டன. மத்திய லண்டன், கிளாஸ்கோ, மற்றும் கார்டிப் போன்ற இடங்களில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இனத்துவேசம், நிறத்துவேசம் போன்றன களையப்பட வேண்டும், அகதிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும், அனைவருக்கும் இலவச கல்வி, இலவச மருத்துவம் வழங்கப்பட வேண்டும், அடிப்படைச்  சம்பளம் பத்து பவுணாக உயர்த்தப்பட வேண்டும், அகதிகள் வேலை செய்வதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும், அகதிகள் நாட்டுக்கு திருப்பி அனுப்புதல் நிறுத்தப்பட வேண்டும், அகதிகளுக்கான தடுப்பு முகாம்கள் மூடப்படவேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டமானது இடம்பெற்றது.

அது மட்டுமல்லாமல் கடந்த வருடம் இலங்கை தூதரகத்தின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டோரை நோக்கி கழுத்தை அறுக்கும் வகையில் விரல் மூலம் சைகை காட்டி கொலை அச்சுறுத்தல் விடுவித்த பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டது.

பிரித்தானிய மக்களின் பிரச்சனைகளுக்கு தமது ஆதரவை வழங்குவதுடன், தமது பிரச்சனைகளுக்கு பிரித்தானிய மக்களின் ஆதரவை திரட்டும் நோக்குடன் செயற்படும் தமிழ் சொலிடாரிட்டியின் இது போன்ற செயற்பாடுகள் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

சு.கஜமுகன்

gajan2050@yahoo.com