புலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு

 

இலங்கை அரசுக்கு எதிராக இயங்கும் புலம்பெயர் அமைப்புகளைக் கண்காணிக்கவும், அவற்றினுள் பிளவுகளை ஏற்படுத்தவும் அதன் செயற்பாடுகளை முடக்கவும் இலங்கை அரசு முயற்சித்து வருகின்றது. புலம் பெயர் தேசங்களில் நடைபெறும் போராட்டங்களை மெளனிக்கச் செய்வதற்கும், அவர்களுக்கு எதிராக இயங்குவதற்கும் நிதிகளை ஒதுக்கி அதற்கென ஆட்களையும் திரட்டி வருகின்றது இலங்கை அரசு. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் திட்டமிடலிலும் பல அமைச்சர்கள் பின்னணியில் இருப்பதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கடந்த காலங்களின் புலம் பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இயங்கி வந்தவர்கள் இலங்கை அரசின் இவ் இரகசிய நடைவடிக்கைகளுக்கு தமது ஆதரவை வழங்குகின்றனர்.  

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் சில சட்டவிரோத நடைவடிக்கைகளை இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டனர் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் கடந்த வருடம் வெளியான ITJP அறிக்கையும் இலங்கை ராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்தது. இதற்குப் பின்னரும் கூட 2009 இல் யுத்தக் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் மேற்கொண்ட ராணுவத்தினருக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யுத்தக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் வேலைகளையே இலங்கை அரசு செய்து வருகிறது. இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டி அவர்களுக்கு ஆதரவாக புலம் பெயர் தேசத்தில் நிகழும் போராட்டங்களை முடக்க முயற்சிக்கின்றது இலங்கை அரசு. புலம்பெயர் தேசத்தில் நிகழும் போராட்டங்களைக் குழப்பி அதனை நீர்த்துப் போகச் செய்வதன் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப் பெறாமல் செய்வதே இலங்கை அரசின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.   

‘’கடந்த காலத் தவறுகளை மன்னிப்போம், மறப்போம்’’ என பிரதமர்  ரணில் விக்ரமசிங்கா அண்மையில் தெரிவித்திருந்தார். அதேபோல் ‘’இலங்கை இராணுவம் எதுவித யுத்தக் குற்றங்களிலும் ஈடுபடவில்லை, யுத்தக் குற்றங்களைப் பற்றிப் பேசுவோர் தீவிரவாதிகள் எனவும் அவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையோர்’’ எனவும் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார். ஆகவே இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்து இராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களை மறைப்பதிலும், யுத்தக் குற்றவாளிகளை காப்பாற்றுவதிலுமே குறியாக உள்ளனர் என வெளிப்படையாகத்  தெரிகின்றது. அதன் ஒரு அங்கமாகவே புலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணித்து அவர்களின் நடவடிக்கைகளை முடக்க முயற்சிக்கின்றனர்.

மேலும், யுத்தக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்குப் பதிலாக அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அவர்களை கெளரவிக்கின்றது இவ்வரசு. ஐ.நா வின் பாதுகாப்புச்சபைக்கு ஆலோசனை வழங்க மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கை அரசினால் அனுப்பப்பட்டிருந்தார் எனினும் புலம் பெயர் மக்களின் போராட்டங்களினால் ஐ.நாவில் அவர் பங்கு பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு இராணுவத்தின் இரண்டாம் நிலைக் கட்டளைத் தளபதியாக பதவி உயர்வு கொடுத்து அவரை கெளரவபடுத்தியிருந்தது இலங்கை அரசு. இது மனித உரிமைகளை குழி தோண்டிப் புதைக்கும் ஒரு செயலாகும். சவெந்திர சில்வாவை படைகளின் பிரதானியாக நியமித்திருப்பது கண்டிக்கத்தக்க விடயம் என ஐ.நா வின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் தற்பொழுது நடைபெற்றுகொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் நாப்பதாவது கூட்டத் தொடரில் தெரிவித்திருந்தார்.

கடந்த வருடம் இலங்கையின் எழுபதாவது சுதந்திர தினத்தன்று லண்டனிலுள்ள  இலங்கை தூதுவராலயத்திற்கு முன்னால் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பானது ஒழுங்கமைத்த போராட்டத்தில் கழுத்தை அறுப்பேன் என விரல் மூலம் சைகை செய்து கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவின் வழக்கு தற்பொழுது லண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் குற்றவியல்  நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருகின்றது. இவ்வழக்கில் இலங்கைத் தூதரகத்தால் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், இலங்கை அரசுக்கு எதிராக இடம்பெறும் போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற செயற்பாடுகளை கண்காணித்தலும், அது தொடர்பான அறிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சு, இலங்கை புலனாய்வுப்பிரிவு போன்றனவற்றுக்கு தெரியப்படுத்துதலும் பிரியங்க பெர்னாண்டோவின் பணி என தெரிவிக்கப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் பிரித்தானியாவிலுள்ள உளவுத்துறை நிறுவனங்களுடன் சுமுகமான உறவைப் பேணி அதன் மூலம் இலங்கைக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதலும் பிரியங்காவின் கடமை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் புலம் பெயர் தேசத்தில், அதிலும் குறிப்பாக பிரித்தானியாவில் போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் மக்களைக் கண்காணிக்கும் இலங்கை அரசின் இரகசியத் திட்டம் வெளிவந்துள்ளது. சட்டவிரோதமான இச் செயலை மேற்கொள்ள இலங்கை அதிகாரிகளை அனுமதித்திருக்கும்  பிரித்தானிய அரசின் இந்நடவடிக்கையானது கண்டிக்கத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் புலம் பெயர் தமிழர்களை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யும் இலங்கை அரச பிரதிநிதிகளின் செயற்பாடானது போராடும் புலம் பெயர் தமிழர்களின் வாழ்க்கையை மேலும் அபாயத்தினுள் தள்ளுகின்றது. ஆனால் இலங்கை அரசின் இவ்இரகசியத் திட்டம் வெளிவந்த பின்னரும் கூட தமிழ் மக்களின் பிரதிநிதி எனக் கூறித் திரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- நல்லிணக்கம் என்ற பெயரில் அரசுடன் சரணாகதி அடைந்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு-  புலம்பெயர் தமிழர்களைக் கண்காணிக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக எதுவித கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசானது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, இராணுவத்தின் யுத்தக் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் மறைத்து, புலம் பெயர் போராடங்களை முடக்கி அதனை நீர்த்துப் போகச் செய்ய முயல்கின்றது. இலங்கை அரசின் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை, புலம் பெயர் அமைப்புகள் ஒன்றிணைந்து தமது போராட்டதை முன்னெடுக்க வேண்டும்

சு.கஜமுகன் (லண்டன்)

gajan2050@yahoo.com