சூடானில் சூடுபிடிக்கும் மக்கள் எழுச்சி.

1,507 . Views .

சூடான் நாட்டு மக்களின் பேரெழுச்சியைத் தொடர்ந்து அதிபர் பஷீர்  பதவியிலிருந்து பாதுகாப்பு படைத்தரப்புக்களால் நீக்கப்பட்டு சிறை செய்யப்பட்டுள்ளார்.

“இடைக்கால இராணுவ கவுன்சிலை” நிறுவிய இராணுவம் மேலும் மூன்று மாதங்களுக்கு அவசரகால சட்டம் அமுலில் இருக்கும் எனவும் இரண்டு வருடங்களுக்கு இந்த இடைகால இராணுவக் கவுன்சில் ஆட்சியில் இருக்கும் எனவும் அறிவித்தது. இதை ஏற்றுக் கொள்ளாது மக்கள் தொடர்ந்து போராடியதால் ஒருநாளிலேயே இராணுவத் தலைமையும் பதவி துறக்க வைக்கப் பட்டுள்ளது. தற்போது மக்கள் “ஏற்றுக்கொள்ளக்கூடிய” இராணுவ தலைவர் ஒருவரை அதிபராக்கி இருப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது. இவரும் யுத்தக் குற்றங்களுக்காக தேடப்பட்டு வரும்- கடும் கொடுமைகளுக்கு துணை நின்ற இராணுவ அதிகாரியே. அதனால் இதை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. இராணுவக் கட்டுப்பாடு முற்றாக விலக வேண்டும் என அவர்கள் போராடி வருகிறார்கள்.
ஒமர் அல் பஷீரின் ‘ராஜ்ஜியத்தை’ முடிவுக்கு கொண்டுவந்து அவரைக் கைது செய்த  இராணுவம் தற்போது அவர் “பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளது. அவரை இராணுவம் தொடர்ந்து பாதுகாத்து வருவதும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தி உள்ளது.டாபூர் படுகொலைகள் மற்றும் பெரும் யுத்தக் குற்றங்களை செய்த பஷீர் கைது செய்யப்பப்டுவதர்கான பிடியாணையை சர்வதேச குற்ற நீதிமன்றம் ஏற்கனவே வழங்கி உள்ளது. ஜெனோசைட் செய்தமைக்காக தேடப்பட்டு வரும் பஷீரைப் பாதுகாக்க வேண்டிய தேவை இராணுவ அதிகாரிகளுக்கு உண்டு. ஏனெனில் அந்த படு பாதக குற்றத்தில் அவர்களுக்கும் பங்குண்டு.

சூடான் நாட்டில்  விலைவாசி உயர்வு, வேலையின்மை, பொருளாதார சிக்கல்கள் என்று அடிப்படை பிரச்சனைகளுகளால் துன்பத்துக்கு உள்ளாகிக் கொண்டிருந்த மக்கள் மேல் மேலதிக கஷ்டங்கள் திணிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த எழுச்சி நிகழ்ந்தது.  பாண் மற்றும் எரிபொருளுக்கு வழங்கப்பட்டு வந்த மணியம் மோசமாக வெட்டப் பட்டதைத் தொடர்ந்து மக்கள் பொறுத்தது போதும் எனப் பொங்கி எழுந்துள்ளனர்.


கடந்த டிசம்பர் 19 ம் திகதி, பஷீரின் மூன்று தசாப்த ஆட்சியை எதிர்த்து தேசிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. கடந்த முப்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர் உமர் அல் பஷீர். 1989இல் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் அதிபர் ஆன இவரது ஆட்சிக்காலத்தில் மிகவும் வறுமையில் வாடும் நிலையையே மக்கள் சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் பஷீரின் கொடூர நீதிக்கு புறம்பான நடவடிக்கைகள் பலதை உலக நாடுகள் கண்டும் காணாதவண்ணம் இருந்து வந்தது அறிவோம்.  தமது லாப நோக்கத்துக்கு மட்டுமே தலையிடும் மேற்கு முதலாளித்துவ அரசுகள் தற்போது தமக்கான சந்தர்ப்பத்தை அறிந்து மனித உரிமை கோசம் விடுகின்றன. இதே போல இலங்கையில் பல அப்பாவி மக்களை ராஜபக்ச அரசு கொன்று குவிக்கும் போதும் எவ்வாறு சர்வதேசம் வேடிக்கை பார்த்தது என்பதை அறிவோம்.


எப்படியாவது மக்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்பி விட்டு தாம் மீண்டும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என அந்தரப் படுகின்றனர் இராணுவ அதிகாரிகள். அவர்கள் பேசும் “அமைதிக்கான கோரிக்கை” அதுவே. ஈவிரக்கமின்றி மக்களை கொன்று குவித்த – சித்திரவதைக்கு உள்ளாக்கிய இந்த இராணுவத்தினர், மக்களுக்கு “வன்முறை வேண்டாம்” என போதிப்பது வேடிக்கையான விசயமே.


சூடானில் ஆதிக்கம் செலுத்த முயலும் சவூதி அராபியா போன்ற பிராந்திய நாடுகள் மற்றும் மேற்குலக நாடுகளும் தற்போது மக்களக்கு “அமைதி காப்பது” பற்றி பாடம் எடுக்கின்றன. அவர்களைப் பொறுத்த வரை தமது சார்பான பொம்மை அரசு ஓன்று உருவாகினால் போதும்.


மக்கள் தமக்கு சார்பாக தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசை நிறுவ இவர்கள் யாருமே சம்மதிக்கப் போவதில்லை. அதனால்தான் இராணுவமற்ற அரசு என்ற  அடிப்படைச் சனநாயக கோரிக்கைகளையும் தாண்டிச் செல்ல வேண்டிய தேவை மக்கள் இயக்கத்துக்கு உண்டு. வளங்களைத் தேசிய மயமாக்கல், கடன்களைத் திரும்பி வழங்க மறுத்தல் முதலான கோரிக்கைகளை அவர்கள் முன்னெடுக்க வேண்டும். தென் சூடான் மக்களின் ஆதரவையும் கோர வேண்டும். அல்ஜீரியா, மொரோக்கோ முதலான நாடுகளில் போராட்டத்தில் குதித்துள்ள மக்களின் ஆதரவையும் திரட்ட வேண்டும். அவ்வாறுதான் மக்களின் நலன் முதன்மைப்படுத்திய உற்பத்தி நோக்கி நகர முடியும். திட்ட மிட்ட பொருளாதாரம் மூலம் ஆபிரக்க வளங்களை உற்பத்தியில் ஈடுபதுத்துவதன் மூலம் மட்டுமே நிரந்தரத் தீர்வை நோக்கி நகர முடியும். அத்தகைய சோஷலிச உற்பத்தி முறை நோக்கி நகர வேண்டும் என்ற போராட்டத்தை புரட்சிகர சக்திகள் கோருவது அதனால்தான்.


இங்கிலாந்தில் இயங்கி வரும் சோஷலிச கட்சி சூடான் நிலவரம் பற்றி ஒழுங்கமைத்த கூட்டத்திலும் இக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. சோஷலிச கட்சி முன் வைத்த கோரிக்கைகள் சில :
# அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்.
#அனைத்து விலை உயர்வும் நிறுத்தப்பட்டு, உயர்த்தப்பட்ட விலைகள் உடனடியாக குறைக்கப்படவேண்டும்.
#பாதுகாப்பு கமிட்டி உட்பட செயற் கமிட்டிகளை நாடெங்கும் நிறுவ வேண்டும்.  
#அதிகாரத்தைக் கைப்பற்ற தொழிலாளர்களையும் மற்றும் ஏழைகளையும் ஒன்றிணைத்த சுயாதீன வெகுஜன இயக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டும்.
#சோசலிச கொள்கைகளுடன் தொழிலாளர்களின் அரசாங்கத்தை நிறுவ வேண்டும். உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஜனநாயக சோசலிச சூடானை உருவாக்குவோம்.

மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற நாம் தொழிற் சங்கங்களுடன் இணையவேண்டும். போராட்ட சக்திகள் என தம்மை போலியாக அடையாளப்படுத்தி கொள்பவர்கள் சிலர் வெறும் கோசங்களை போட்டுவிட்டு, நாங்களும் உங்களுடன் இருக்குனறோம் எனச் செல்வார்கள். அவர்தம் அரசியல் நிலைப்பாடு –மற்றும் செயற்பாடு தம் தம் சுயம் சார்ந்த மட்டுப்படுத்தப் பட்ட நிலையிலேயே நிற்பதை நாம் பார்க்காலாம்.  ஆனால் புரட்சிகர சர்வதேச தொழிலாளர்களுக்கான அமைப்பு மட்டுமே மக்கள் போராட்டத்தினை தூரநோக்குப் பார்வை உள்ள அரசியல் அடிப்படையில் ஒருங்கிணைப்பதற்காக செயற்பட்டு வருகிறது.
இந்தப் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. அது மக்கள் முன் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்வரை தொடர வேண்டும்.


தமிழ் பேசும் மக்கள் சூடான் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. இன்று மக்கள் சக்திதான் பஷீர் போன்றவர்களை வீழ்த்தி இருக்கிறது.  பஷீர் ஜெனோசைட் செய்தவர் என்பதை ஏற்றுக் கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அவருக்கு மேலான சர்வதேச பிடியாணை மட்டும் அவரை வீழ்த்தவும் அவர் பிடியில் இருந்து மக்களைக் காக்கவும் போதுமானதில்லை. அந்தச் சக்தி மக்களிடம் மட்டுமே உண்டு என்பதை சூடான் மக்கள் நிருபித்து உள்ளனர்.
எமது பலத்தைக்  கட்டாமல் வேடிக்கை பார்க்கும் மேற்கு அரசிடம் நாம் நீதி கேட்பது நீதிக்கான எமது கனவை நனவாக்க உதவாது.
இந்த வரலாற்று அனுபவத்தை உள்வாங்கிய முறையில் எமது திட்டமிடல்கள் மற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

மதன்