எலிய மூலம் எழும்ப முயலும் கோத்தபாய 

கடந்த மாத இறுதியில் கோத்தபாய ராஜபக்சவின் எலிய அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வானது லண்டனில் இடம்பெற்றது. வெறும் நூறு பேருக்கும் குறைவானவர்கள் கலந்து கொண்ட அந்நிகழ்வானது தோல்வியடைந்துள்ள ஒரு நிகழ்வாகவே கருதப்படுகின்றது. குறைந்த பட்சம் ஒரு நூறு பேரினைக் கூட திரட்ட முடியாத ஒரு அமைப்பாகவே லண்டன் எலிய அமைப்பு காணப் படுகின்றது. இலங்கை தூதுவராலயத்தில் பணியாற்றியவர்களும் அவர்தம் குடும்பமுமே அதிகமாக அந் நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எலியவின் அங்குரார்ப்பண நிகழ்வானது முதலில் லண்டனிலுள்ள கிங்க்ஸ்பரி கல்லூரியில் நடைபெற இருந்தது. எனினும் எதிர்ப்பு வலுப்பதைக் கண்ட கல்லூரி நிர்வாகம் இடம் வழங்குவதற்கு கடைசி நேரத்தில் மறுத்துவிட்டது. இதனால் பின்னர் இந்நிகழ்வானது கவுண்ஸ்லோ பிரதேசத்தில் இடம்பெற்றது. அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்ற சமயத்தில் ‘’மக்களின் போராட்டத்தை நசுக்கும் எலியவினை எதிர்ப்போம்’’ என்ற தொனிப் பொருளில் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு தனது போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டார் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும், யுத்தக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் சொலிடாரிட்டி அமைப்பானது தனது போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. எலிய, சிங்கள தொழிலாளர் மற்றும் வறிய மக்களுக்கும் எதிர் நிலையில்தான் இருக்கிறது – அவர்கள் ஒடுக்கப்படும் சிங்கள மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மாறாக இது கோத்தபாயவை சனாதிபதி ஆக்கும், அதிகாரம் பிடிக்கும் முயற்சி மட்டுமே என்பதை தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு விளக்கியது.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி எலிய அமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கழுத்தை அறுப்பேன் எனப் பொருள்படும் விதமாக விரல் மூலம் சைகை காட்டியிருந்தார். கடந்த வருடம் இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி இதேபோல் கழுத்தை அறுக்கும் சைகையை  பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரித்தானியாவிலேயே தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை இவ் அதிகாரிகள் மேற்கொள்கின்றனரெனின் இலங்கையில் இதை விட அதிகமாகவே மேற்கொள்வார்கள் என்பது வெளிப்படை. ஆகவே இதுபோன்ற அதிகாரிகளின் ஆதரவுடன் இயங்கும் எலிய போன்ற அமைப்புகளை எதிர்க்க வேண்டியது அவசியமாகும்.      

இலங்கையின்  முன்னால் பாதுகாப்பு மந்திரி கோத்தபாயாவின் எலிய அமைப்பானது 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வரும் ஜனாதிபதித் தேர்த்தலில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பானது மக்களுக்கிடையே இனத்துவேசத்தை தூண்டி, பிளவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் நிகழ்ச்சி நிரலுடன் இயங்கி வருகிறது. அதன் பிரகாரம், கோத்தபாயா ராஜபக்சவினால் மட்டுமே இலங்கையினைக் காப்பாற்ற முடியும், இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டி நிமித்த முடியும் என்றவாறு பிரச்சாரம் செய்யப்படுகின்றது. அத்துடன் எலியவுக்கு எதிரானவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையோர் எனவும் அவர்கள் விடுதலைப் புலிகளின் முன்னால் உறுப்பினர்கள் எனவும் பொய்ப் பிரச்சாரமும் செய்யப்படுகின்றது.

ஆனால் உண்மை நிலைமை என்னவெனில் சுதந்திரக் கட்சியாலேயோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியாலேயோ அல்லது கோத்தபாயாவினாலேயோ இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது, ஏனெனில் மக்கள் சார்பான பொருளாதராக் கொள்கை என்பது அவர்கள் எவரிடமும் இல்லை. மாறாக சர்வதேச நாணய நிதியம் (IMF) சொல்வதை முன்னெடுக்கும் பொருளாதார கொள்கையே அனைத்து அரசியல் தலைமைகளிடமும் காணப்படுகின்றது. காப்ரேட் நிறுவனங்களினதும், முதலாளிகளினதும் முகவராகத் தொழிற்படும் ஐ.எம்.எப் இன் பொருளாதாரக்கொள்கையானது தனியார்மயப்படுத்தலை ஊக்குவித்தல் மற்றும் இலவச அரச சேவைகளை குறைத்தல் என்பனவாகும். ஐ.எம்.எப் இனை எதிர்த்து  மக்கள் சார்பான மக்களுக்கான கொள்கைகளை அமுல்படுத்தும் சிறந்த பொருளாதாரத் திட்டம் கோத்தபாய ராஜபக்சவிடமும் இல்லை. ஆகவே கோத்தபாய கூறுவது போல அவரால் இலங்கையின் பொருளாதரத்தை மீட்டெடுக்க முடியாது என்பதே நிதர்சனம். ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் கூறப்படும் வெற்று வசனங்கள் இவையாகும்.

தற்போதைய நிலவரப்படி கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் கோத்தபாயவுக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கு சில சிக்கல்கள் தோன்றலாம். எனினும் மறுபுறத்தில், வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில்  எலிய மூலம் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் தமக்கு ஆதரவானவர்களை திரட்டிக்கொண்டிருக்கின்றார் கோத்தபாயா.   

பொது பல சேனா போன்று எலியவும் இனவாத்தையும் மதவாத்தையும் தூண்டி அடிப்படைவாதத்தை நோக்கி மக்களை திசை திருப்பும் ஒரு அமைப்பாகும். ஆகவே எலிய போன்ற அமைப்புகளின் வளர்ச்சியினைத் தடுப்பதற்கு சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் அமைப்பாகத் திரண்டு இவ்வாறான அமைப்புகளைக் எதிர்க்க வேண்டும். இலையெனில் அரசியல் புரிதலற்ற இளைஞர்கள் இவ்வாறான இனத்துவேச, தேசியவாத, வலதுசாரியக் கருத்துகளைக் நோக்கி நகரக்கூடும்.    

சு.கஜமுகன் (லண்டன்)

gajan2050@yahoo.com