பயங்கரவாதத்துக்கும் இனவாதத்துக்கும் எதிராக அணிதிரள்வேம்

Photo: JEWEL SAMAD/AFP/Getty Image

கடந்த ஞாயிற்க்கிழமை(26/04/2019) ஈஸ்டர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்த மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உட்பட, எட்டு இடங்களில் திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கொழும்பில் ஆறு  இடங்களை தவிர, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் உள்ள புகழ்பெற்ற தேவாலயங்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரை எழுதும்போது 350 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்மூடித்தனமான தாக்குதலின் பின்னணியில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் சிங்களவர்கள் என வேறுபாடின்றி அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அத்துடன் இலங்கைக்கு சுற்றுலாவிற்கு வருகை தந்திருந்த வெளிநாட்டு பயணிகளும் கொல்லப்பட்டதுடன் பாதிக்கப்பட்டுள்னர்.

இத்தாக்குதலின் பின்னால் யார் யார் உள்ளனர் என்று தெளிவாக தெரியவில்லை. தாக்குதல் நடைபெற்று இரண்டு நாட்களின் பின்னர் ஐஎஸ்ஐஎஸ் (ISIS) தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல்கள் “மத தீவிரவாதிகளால்” நடத்தப்பட்டதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. நியூசிலாந்தில் நடந்த தாக்குதலையும் இந்த தாக்குதலையும் பிரதமர் இணைத்து பேசியுள்ளார். இந்த நிச்சயமற்ற நிலையில், நாட்டை ஒருவித பயம் அலைக்கழிக்கிறது. அரசாங்கம் அனைத்து சமூக வலைத்தளங்களையும் தடை செய்ததோடு தேசிய அளவில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி இருக்கின்றது. அத்தோடு  ஊரடங்கு உத்தரவையும் அறிவித்துள்ளது. அரசாங்கம் நாட்டை மிகவும் பதற்றமான நிலையில் தொடர்ந்து வைத்திருக்கும் அதே நிலையில், தெருக்களில் இராணுவமும் பொலிஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  .

இத்தாக்குதல்கள் இடம்பெற்ற இடங்களின் தேர்வு மற்றும் அது சுட்டிக்காட்டிய மததீவிரவாதம் அனைத்து சமூகங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன் இலங்கை வரலாற்றில் இந்த மாதிரியான படுகொலை ஒருபோதும் நிகழ்ந்திருக்கவில்லை என்றாலும் இவ்வாறன வன்முறைக் கொலைகள் இலங்கைக்கு புதியவை அல்ல. கடந்த முப்பதாண்டுகளுக்கு நீடித்த உள்நாட்டு யுத்தம்  முடிவுக்கு கொண்டு வந்து பத்தாண்டுகள் நிறைவடைகின்றது. யுத்தத்தின் கடைசி கட்டத்தில் 140,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போதைய பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது தமிழ்மக்களின் இனப்படுகொலை மற்றும் படுகொலைகளுக்கு பெரும் பொறுப்பாக இருந்தனர்.  கடந்த காலங்களில் பாதுகாப்பு அமைச்சு உட்பட, அரச இயந்திரத்தின் பெரும்பகுதி ராஜபக்ச குடும்பமே கட்டுப்படுத்தியது.

மே 2009 ல் யுத்தம் முடிவடைந்ததில் இருந்து இலங்கையில் வாழும் மூன்று பிரதான சமூகங்களுக்கிடையிலான பதட்டம் பாரியளவில் தூண்டிவிடப்பட்டுள்ளது. யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கு எவ்வித உறுதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படாததோடு பல அரசியல் கைதிகளின் விடுதலையும் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது. அத்துடன் வலுக்கட்டாயமாக காணாமல் போனோரின் பிரச்சினைகள் மற்றும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிப்பதற்கான எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அத்தோடு  ஜனநாயக உரிமைகளும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றது.

மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினால் யுத்தம் முடிவடைந்தவுடன் தேசியவாத பௌத்த பேரினவாதம் பலப்படுத்தப்பட்டது.பௌத்த கடும் போக்குவாதிகளுக்கான ஆதரவு சிங்கள மக்கள் மத்தியில் மிக சிறிய அளவிலேயே இருந்தாலும் அவர்கள் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினால் மீண்டும் மீண்டும் ஆதரவளிக்கப்பட்டு பிரபல்யப்படுத்தப்பட்டனர். இனவாதத்தை கக்கும் பௌத்தத் துறவிகளின் அமைப்பான பொதுபல சேனாவின் உருவாக்கத்திலும் பலப்படுத்தலிலும்  முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேரடியாக ஈடுபட்டார். இவர்களின் வெறுப்புப் பிரச்சாரம் முஸ்லிம் மக்கள் மீதான பல தாக்குதல்களுக்கு காரணமாகிறது. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை மேலெழுந்து வருகிறது.

வெளிப்படையாகச் சொல்வதானால் அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கும் வலதுசாரி கும்பல்களுக்கும் கோத்தபாய போன்ற தனி நபர்களுக்கும் தான் இத்தகைய பிளவுகள் தேவைப்படுகின்றனவே தவிர, இவை சாதாரண மக்களுக்கு எதையும் வழங்கி விடப்போவது இல்லை. கோத்தபாயவினால் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எலிய எனும் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் முன்னணி உறுப்பினர்கள் பிற இனத்தவர்கள் மேல் குறிப்பாக தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் மீது வெளிப்படையாகவே துவேச கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

1990களில் விடுதலைப் புலிகளால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தமிழ்-முஸ்லிம் மக்களிடையே ஒரு பிளவினை ஏற்படுத்தி இருந்தது. அந்தக் காயம் இன்னும் முழுமையாக குணமாகவில்லை 1915ம் ஆண்டிலிருந்து  முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மற்றும் முன்முடிவுகள் என்பன அந்த சமூகத்தை தனிமை படுத்துகின்றது. முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் நியாயப் படுத்தப்படுவதால் ஏற்படும் ஒருவித பயம் காரணமாக அந்தச் சமூகத்தில் தம்மை தலைவர்களாக அறிவித்துக் கொண்டவர்களின் குரல்கள் வலிமையாக  வெளிப்பட தொடங்கின ஆயினும் இந்தப் பிரிவினை வாதங்களும் மதவாதங்களும் சாதாரண மிகவும் வறுமையில் வாடும் பெரும்பான்மை முஸ்லிம்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவவில்லை. இவ்வாறான எண்ணங்கள் மற்றும் உலகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் காரணமாக இலங்கை முஸ்லிம்கள் இடையில் வலதுசாரி மத அடிப்படைவாத சிந்தனை தலையேடுக்க தொடங்கின இருப்பினும் இது மிகச் சிறுபான்மையே. பெரும்பான்மை முஸ்லீம்கள் இந்த வலதுசாரிய மத அடிப்படைவாதத்திற்கு எதிராகவே இருக்கின்றார்கள் இவ்வாறான வலதுசாரி குழுக்களை இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் துணை இராணுவ குழுக்களாக பல தசாப்தமாக பயன்படுத்தியது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. வலதுசாரி இலங்கை அரசாங்கம் தனது நிலையை காப்பாற்றுவதற்காக பல்வேறு மத அடிப்படைவாத குழுக்களை உருவாக்கி சமூகங்களுக்கிடையில் மோதலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.

இந்த வரலாற்றின் அடிப்படையில் இந்த தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சு அல்லது முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் பங்கு இருக்கக் கூடும் என சிலர் சந்தேகிக்கின்றனர். அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் மனோகணேசன் தனக்கு அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள தகவல் கிடைத்துள்ளதாக கூறியதாக தெரிவிக்கின்றார். பல அமைச்சர்கள் தம்மையும் தங்கள் குடும்பத்தையும் தாக்குதகளிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து இருக்கின்றார்கள். ஆனால் இலங்கை அரசாங்கம் இது தொடர்பாக மக்களை அறிவுறுத்த அல்லது தாக்குதல்களை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

நடைபெற்ற தாக்குதலில் இருந்து அரசியல் ஆதாயம் பெறுவதற்கு அனைத்து சமூகங்களும் ஐக்கியப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அணிவகுத்து நிற்கின்றன வலதுசாரி சக்திகள். அதேவேளையில் சமூகங்களுக்கு இடையேயான வெறுப்பு பிரச்சாரம் இவர்களால் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் தமது பங்கிற்கு இந்த கொடூர சம்பவத்தில் ஆதாயம் தேடுகின்றனர். இந்த தாக்குதல்  பாகிஸ்தானியர்கள் ஈடுபட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இதை  தடுப்பதற்கு மகிந்த குடும்பம் மீண்டும் பதவிக்கு வர வேண்டும் என்பதோடு இவ்வாறான தாக்குதல்கள் இந்தியாவில் நடைபெறாமல் இருப்பதற்கு மோடி மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்கிறார் அறியப்பட்ட வலதுசாரி அரசியல்வாதியான சுப்ரமணியன் சுவாமி.

இலங்கை அரசு மற்றும் அனைத்து வலதுசாரிய கட்சிகளும் ஐக்கியமும் சமாதானமும் எனும் அடிப்படையில் ஒன்றிணைவோம் என கூறுகின்றனர்.  ஆனால் அவர்களின் முக்கிய அங்கத்தவர்கள்  சிறுபான்மை இனங்களின் மீது துவேசத்தை கக்குகின்றார்கள். கோத்தபாய ராஜபக்சவின் எலிய அமைப்பின் தொடர்பில் உள்ளவர் தமிழ் சொலிடாரிட்டி முன்னணி அமைப்பாளர்களை தொடர்பு கொண்டு இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக இணைய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்தத் தாக்குதலில் வெளி நாடுகளில் சதி இருப்பதாகவும் கூறினர். தமிழ் சொலிடாரிட்டி இந்தத் தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றது.  அனைத்து சமூகங்களின் உரிமைகளை காப்பாற்றவும் அதனை பெறுவதற்காகவும் உண்மையாக போராடும் அமைப்புக்களுடன் இணைந்து வேலை செய்வதற்கு எப்போதும் தயாராகவே உள்ளது. ராஜபக்ச மற்றும் அவரது சக சிந்தனையாளர்களின் போர்வெறி மற்றும் பிற இன, மதங்களுக்கு இடையில் பிரிவினையை தூண்டும் செயல்பாடுகளை துல்லியமாக எடுத்துக் காட்டி அந்த கோரிக்கையை தமிழ் சொலிடாரிட்டி நிராகரித்தது.

முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளில்

பௌத்த கடும்போக்காளர்கள் ஈடுபடக்கூடும் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது. கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையேயான  பதட்டம் கூர்மைப்படுத்தலாம். பலவீனமான இலங்கை அரசு வரலாற்று ரீதியாக இனம் மற்றும் மதப் பிரிவினைகளைத் ஒருங்கிணைத்து அதிகாரத்தில் நிலைத்து நிற்கின்றது. குறிப்பாக கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு தான் சிறந்தவர் என தன்னை முன்னிலைப் படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறு இருப்பினும் வறிய மற்றும் உழைக்கும் மக்கள் தமக்கு இடையிலான தோழமையை குறுகிய நேரத்துக்கேனும் வெளிப்படுத்தினர்.  தாக்குதலில் காயம் பட்டவர்களுக்கு இரத்தம் வழங்குவதற்காக கல்முனை வைத்தியசாலை முஸ்லிம்களால் யாழ்ப்பாண வைத்தியசாலை தமிழர்களாலும் அம்பாந்தோட்டை வைத்தியசாலை சிங்களவர்களும் நிரம்பி வழிந்தது. இலங்கை உரிமைகளுக்காக ஒன்றிணைந்து போராடும் ஒரு வலுவான வரலாற்றினைக் கொண்டது. ஐக்கிய சோசலிச கட்சி(USP) அந்த மரபின்  மேல் வலுவான உறுதிப்பாட்டை கொண்டது. தொடர்ச்சியாக தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றிணைத்து மதங்களை பின்பற்றும் உரிமை, கூடுவதற்கான உரிமை, வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமை, பிரிந்து செல்லக் கூடிய சுயநிர்ணய உரிமை உட்பட அனைத்து ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடி வருகின்ற அதே நேரம் இந்த முதலாளித்துவ அமைப்பை முடிவுக்குக் கொண்டுவந்து ஜனநாயக சோஷலிச திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தை கொண்டு வருவதே அனைத்து அடக்குமுறைகளுக்குமான தீர்வு என ஐக்கிய சோசலிச கட்சி வாதிடுகின்றது.

இந்தக் கொடூரமான கொலைகள் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியாது. இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் காரணிகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும்.  நமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்கும் நாம் ஒன்றிணைந்து போராடவேண்டும். மக்களைப் பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நாம் எதிர்க்கவேண்டும். இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்களுக்கான விலையை வறிய மக்களும் தொழிலாளர்களும் மாத்திரமே கொடுக்க வேண்டியிருக்கின்றது. ஆளும் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நமது ஜனநாயக உரிமைகளை குறைத்து தமது அதிகாரத்தை வலுப்படுத்தவே முனைவார்கள் இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டனம் செய்யும் அதேவேளையில் இலங்கை அரசாங்கத்தின் பாசாங்குத்தனத்தையும் நாம் எதிர்க்க வேண்டும் தொழிலாளர் வர்க்கத்தினை ஒன்றிணைத்து ஒரு பலமிக்க தொழிலாளர்கள் அமைப்பினை ஏற்படுத்த வேண்டும்.  இதுவே எம்மை இவ்வாறான பிரிவினைகளில் இருந்தும் எமது உரிமைகளை பெறுவதற்கு ஏதுவாக இருக்கும்.