ஷோபாசக்தியின் மிதவாத அலம்பல்

1,417 . Views .

1. புறவயப் பார்வை – தன்னை முன்னிலைப்படுத்தாத சமூகம் சார் நிலைப்பாடு – ஒடுக்கப்படும் பெரும்பான்மை மக்களின் பக்கச் சார்பு – எனப் பல்வேறு பண்புகளோடு அரசியற் பார்வை உருவாக வேண்டும். சமூகம் சார்ந்த விஞ்ஞான அறிதல் அதற்கு அவசியம்.

ஆனால் சுய விளம்பரத்தைத் தாண்டிச் செல்லாத நோக்கில் வெறும் தர்க்க வாதங்களைக் கோர்த்து – தாமும் ‘முற்போக்கு’ என தம்பட்டம் அடிக்கும் அரைகுறை ஆய்வுகள்தான் தமிழில் மலிந்து கிடக்கிறது.

ஷோபாசக்தி தானும் இதற்கு விதி விலக்கிலை என்பதை தொடர்ந்து நிறுவி வருகிறார். முன்னுக்குப் பின் முரணாக கதைத்தல் – தனக்கு ஏற்றாப் போல் தனது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளுதல்- நேரடி உரையாடலை தவிர்த்து சுத்திச் சுழன்று வருதல் என பல்வேறு திருவிளையாடல்களை அவர் செய்வதை அனைவரும் அறிவர்.

கோர யுத்த அழிவின் போது- படுகொலை நிகழ்வின் போது, நடந்த விசர் கதைகள் மற்றும் வியாபாரங்கள் பற்றி நாம் தொடர்ந்து எழுதியுள்ளோம். கொலை மறைக்கும் அரசியல் என்ற நூல் கூட வெளி வந்துள்ளது. இன்றுவரை எந்த அரசியல் புள்ளிக்கும் ஷோபாசக்தியோ அல்லது அவரது ஆசான்களோ பதில் சொல்லவில்லை. மெதுவாக பதுங்கி விட்டார்கள். ஆழமான அரசியல் தத்துவ உரையாடல் வந்தால் பதுங்குவது – யாராவது செத்த பாம்பைக் கண்டால் துள்ளி துள்ளி அடிப்பது. இதுதானே உங்கள் பழக்கம். அது ஒரு கெட்ட பழக்கம் தம்பி.

விகடனின் மே மாத தடம் இதழில் மீண்டும் தடம் புரண்டுள்ளார் ஷோபாசக்தி. ‘புலிகளில் தொடர்ச்சியாக இருப்பதற்கு நீங்கள் புலிகளாக இருக்க வேண்டும்’ என்ற தலைப்பில் ஒன்று. அது கட்டுரையா? – அரசியல் ‘ஆய்வா’? என எமக்குச் சொல்லத் தெரியவில்லை. முதல் கோணினால் முற்றிலும் கோணல் மாதிரி தலையங்கமே பிழை. ஒரு வரலாற்றின் தொடர்ச்சி என்பது அப்படியே அந்த வரலாறாகவே இருக்க வேண்டியதில்லை. போல்சுவிக்குக்களின் தொடர்ச்சி என்பது ஸ்டாலினின் தொடர்ச்சியா? கியுபா புரட்சியின் தொடர்ச்சி என்பது பிடல் கஸ்ரோவின் தொடர்ச்சியா? இது வலது சாரி அமைப்புக்களுக்கும் பொருந்தும். சில வரலாற்று அசைவுகள் திடீர் முறிவோடு முடிவுக்கு வந்து விடுவதில்லை. பிரஞ்சுப் புரட்சி இன்றும் தொடர்கின்றது எனச் சொல்வோரும் உண்டு. அதில் ஒரு உண்மை உள்ளது. ஆனால் தலையங்கம் வைத்தவருக்கு இது பற்றி கவலை இல்லை. வைத்த தலையங்கத்தின் அரசியலை விளக்க வேண்டும் என்ற அக்கறையும் இல்லை. தனக்கு எட்டியததைத் தானே அவர் செய்ய முடியும்.

2.  புலிகள் இட்டுச் சென்ற வெற்றிடத்தை இன்று யாருமே நிரப்பவில்லை.

‘புலிகளின் வெற்றிடத்தை நிரப்பினாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் அரசியல் தொடர்ச்சி இல்லை’ என்று சொன்னால் அதன் அர்த்தம் என்ன? புலிகள் விட்டுச் சென்ற எந்த வெற்றிடத்தை அவர்கள் நிரப்பி உள்ளார்கள்? அதிகாரம் சார்ந்த வெற்றிடமா? ஆயதப் போராட்டம் சார்ந்த வெற்றிடமா? ‘மக்களின் பிரதி நிதிகள்’ என்ற பார்வையா?

குழப்பமான – தர்க்க ரீதியான எழுத்தோடு வாதிடுவது சிக்கல்தான். தேர்தல் தளத்தில் மட்டுமே இன்று கூட்டமைப்பு பலமாக உள்ளது. புலிகள் இயக்கம் இருந்த இடத்தை நிரப்ப அவர்கள் முயற்சிக்கவே இல்லை. (கஜேந்திர குமாரைச் சொன்னாலும் பரவாயில்லை- போயும் போயும் கூட்டமைப்பை சுட்டுவது இலங்கை அரசியலை கூர்ந்து கவனிக்காதவர்கள் செய்யும் வேலை). கூட்டமைப்பின் மிதவாத அரசியல் ஒரு நூலிலையில் ஆடிக்கொண்டு இருக்கிறது. தெற்கின் பயம் இல்லை என்றால் –தேர்தல் கவர்ச்சி இல்லை என்றால் – கூட்டமைப்பு எப்பவோ சிதறிச் சுக்கலாய்ப் போயிருக்கும்.

3. இடது சாரிய சரிவுள்ள அமைப்புக்களைத் தாக்குதல்.

இவ்வாறு ஒரு மேம்போக்கான வசனத்தை விசிறி விட்டு ஷோபாசக்தி திடீரென புலிகளின் வெற்றிடத்தை நிரப்ப முயன்றதாக மூன்று அமைப்புக்களைத் தாக்குகிறார். கட்டுரையின் முதன்மை நோக்கமே இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். சம உரிமை இயக்கம் – மே 18 இயக்கம், தமிழ் சொலிடாரிட்டி ஆகிய அமைப்புக்கள் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகள் கொண்ட அமைப்புக்கள். அது பற்றிய எந்த நுணுக்கமும் அவருக்கு தேவைப்படவில்லை. இவை முன்பு “இறுக்கமான இடதுசாரி தத்துவங்களை உதிர்த்துக் கொண்டிருந்த குழுக்கள்” என்று வேறு ஒரு கருத்து. இந்த மூன்று அமைப்புக்களுமே யுத்தத்துக்குப் பின் உருவானவை. அடிப்படைத் தகவல் பிழையை வைத்துக் கொண்டு அவசரக் குடுக்கையாக பிரதட்டை செய்கிறார். போதும் தம்பி பிள்ளையார் இதுக்கெல்லாம் வரம் தர மாட்டார்.

சம உரிமை இயக்கம் ஒருபோதும் தாம் புலிகள் இயக்க அரசியலின் தொடர்ச்சி எனச் சொன்னதில்லை. அவர்களின் அரசியற் தோற்றம் முற்றிலும் வேறு வரலாற்றுப் பின்னணி கொண்டது. மே 18 இயக்கம் என்று ஒரு இயக்கம் இருப்பது எனக்குத் தெரியாது! மே 17 இயக்கம் என்ற ஒரு இயக்கம் உண்டு. எழுதுகிற அரசியல் ஞானத்தை வைத்துப் பார்த்தால் அதுபற்றி ஷோபாசக்தி கேள்விப் பட்டிருக்க நியாயமில்லை. அவர்கள் தமிழ் நாட்டை மையமாக வைத்து இயங்கி வரும் அமைப்பு. சாதிய ஒடுக்குதலுக்கு எதிர்ப்பு என பல்வேறு தளங்களில் விரிந்தவை அவர்கள் நடவடிக்கைகள்.

தமிழ் சொலிடாரிட்டி போராட்டத்தின் தொடர்ச்சி என்பதைதான் தொடர்ந்து பேசி வருகிறது. போராட்டத்தின் தொடர்ச்சி என்பது வேறு – புலிகள் இயக்கத்தின் இயக்க வரலாற்றுத் தொடர்ச்சி என்பது வேறு. புலிகள் இயக்க இலட்சினைகளை வைத்து வியாபாரம் செய்து வருவோர் சிலர் தாம் புலிகளின் தொடர்ச்சி என வாதிட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டப் போதாமையை – மக்கள் நலன்களை விற்பனை செய்வதை -தமிழ் சொலிடாரிட்டி தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அதனாலும்தான் தாம் போராட்டத்தின் தொடர்ச்சி என தமிழ் சொலிடாரிட்டி அழுத்தி சொல்லி வருகிறது.

இது தவிர ‘எமது அரசியல் நிலைப்பாடு’ என ஒரு புத்தகத்தைக் கூட தமிழ் சொலிடாரிட்டி வெளியிட்டுள்ளது. அதெல்லாம் படிச்சு பார்த்துக் கட்டுரை எழுதும் அரசியல் பொறுப்போ அவசியமோ ஷோபாசக்திக்கு கிடையாது. “புலிகளின் வெற்றிடத்தை நிரப்புவது என்ற நற்பாசை தவிர இக்குழுக்களுக்கு வேறு தனித்துவமான அரசியல் நிலைப்பாடுகள் இல்லாததால் இவை செயலாற்ற சாலை அமைப்புக்களாகிப் போயின” – என சும்மா ஒரு விசுக்கு விசுக்குகிறார். இது ஒரு வெறும் அலட்டல். வீட்டில இருந்து சம்பல் அடிச்சு குத்தி முறியிற மாதிரிக் கட்டுரை எழுத வெளிக்கிட்டால் இப்படித்தான்.

சாலை அமைப்பு என்றால் என்ன தம்பி ? தார் ஊத்தி தட்டி நிரப்பும் வேலையோ? சுலோகங்களை தெருவில் தூக்கி வந்து போரடுவது உங்களுக்கு அவ்வளவு இளக்காரமாகிப் போச்சோ? நிற வெறியர்கள் வீடற்று சாலையில் நிற்போரை தாக்கும் துவேசத்தின் வலதுசாரிய வேகமும் வெறுப்பும் இங்கு தெரிகிறது. நீங்கள் வீடு வாசல்காரனாகி விட்டீர்கள். அதனால் இப்படியும் பேசுவீர்கள். வலது சாரிய கொழுப்பு வீங்கி உங்கள் கண்கள் மங்கத் தொடங்கி விட்டன.

சரி எமது அடுத்த கேள்வி. உங்கட கணக்குப் படி தனித்துவமான அரசியல் என்றால் என்னப்பு? புலி எதிர்ப்பு என்ற ஒற்றை கொம்பை பிடித்து தொங்கி நின்றது தவிர எந்த உருப்படியான அரசியலையும் இதுவரை நீவிர் பேசியது கிடையாது. எங்காவது கிடந்தால் எடுத்துக் காட்டுங்கள். புலி எதிர்ப்பு செய்தால் மட்டும் அரசியல் புனிதப்படும் நிலைதான் உங்கள் நிலைப்பாடு. உங்கள் அளவுகோல் மிகச் சிறியது- உங்கள் சுய நல சிறு மூளையை அளக்க கூட அது போதாது. கொலை மறைக்கும் அரசியல் புத்தகத்தில் உங்களின் அரசியல் விளக்கமின்மைகள் பல புட்டுப் புட்டு வைக்கப் பட்டுள்ளன. அந்தக் கொலை மறைத்த வரலாறு இன்னும் பட்டுப் போகவில்லை. எமக்கு பசுமையாகத்தான் இருக்கிறது.

ஆயிரக் கணக்கான கட்டுரைகள் – மற்றும் ஒலி, ஒளி பதிவுகள் என ஏராளமான பதிவுகள் உண்டு. படிக்க முடியவில்லை போலும் – ஆனால் பினாத்தலுக்கும், இந்த அமைப்புக்களுடன் தொடர்புடய ஆயிரக் கணக்கானவர்களின் அறிதல் மேல் ஆதாரமின்றி துப்புதலுக்கும் குறைவில்லை.

4. சர்வதேச அரசியல் பிச்சு உதறப்பட்டுள்ளது.

அரசியல் நடைமுறைகளை சரியானபடி அவதானிகாத்தவர் ஒருவர் வெறும் கூகிள் தேடல் தகவல்களை மட்டும் நம்பி எழுதுவது எவ்வாறு என்பதற்கு இலக்கணமாக இருக்கிறது ஐ.நா பற்றிய ஷோபசதியின் அவதானங்கள். அந்த வெற்றுக் கருத்துக்களுக்கு இங்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. இலங்கைக்கு கால தவணை எப்போதிலிருந்து வழங்கப் பட்டு வருகிறது- எத்தகைய துவேசிகள் எல்லாம் அங்கு பேசி இருக்கிறார்கள் என்ற விபரங்கள் எதுவுமே அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. சும்மா வில்லங்கத்துக்கு தனக்கும் ஏதொ தெரியும் என்ற படி கிடைத்த ஒரு சில தகவல்களை மட்டும் வைத்து எழுதி இருக்கிறார்.

யாரப்பா இந்த பாவத்தை செய்தது- சிறுகதை எழுதினமா – படங்களில் நடித்தமா என்று கிடந்த பொடியனைப் பிடித்து ‘அரசியற் கட்டுரை’ – எழுதச் சொன்னால் பொடி என்ன செய்வது பாவம். கூகிளையும் தனது குறுகிய நண்பர் வட்டத்தையும் வைத்து வழமை போல தனது விளக்கமின்மையை விளம்பரம் செய்திருக்கிறார் “எழுத்தாளர்”.

5 தேசியம் பற்றிய முன் முடிவுகள்.

‘ஆயுதப் போராட்ட அரசியலில் இருந்து விலகி நிற்கின்றனர் இளையோர் – அறிவுத்துறை சார்ந்தோர் தனி நாட்டுக் கோரிக்கையை முன் வைப்பதில்லை’. போன்ற பொன் மொழிகளும் உதிர்க்கப் பட்டு இருக்கிறது. என்றைக்கு ‘அறிவுத்துறை’ வரலாற்று நிகழ்வுகளை – மக்களின் கோரிக்கைகளை தீர்மானித்திருக்கிறது என்பதைச் சொல்லவில்லை. இது தவிர அறிவுத்துரை என அவர் தானே தீர்மானித்து வைத்திருக்கும் நபர்களை வைத்துக் கொண்டு எழுதுவதுதான் கேவலம். ஆதிக்க அரசியல் உட்புகுந்த அரசியல் பார்வை புரை ஏறி விட்டது என்பதற்கு இதுவும் நல்ல எடுத்துக் காட்டு.

ஈழத்துக்குள்ளும் இந்தியாவிலும் – உலகெங்கும் இருக்கும் புரட்சிகர சக்திகள் – மக்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரிக்கும் சக்திகள் – அறிவுத்துறை என தம்மை அடையாள படுத்துவதில்லை. அவ்வாறு தம்மை சுருக்கிக் கொண்டு மக்களுக்கு வெளியில் நிற்பவர்கள் அல்ல புரட்சிகர சக்திகள். மாறாக வரலாற்றை மாற்றும் நீரோட்டத்தோடு நிற்பவர்கள். நீங்கள் சொல்வது போல் ஒரு சொற்ப புலி எதிர்பாளர் – மற்றும் அரச ஆதரவாளர் ஒன்றுபட்ட இலங்கை என பேசுகின்றனர். ஏனெனில் அதில் அவர்களுக்கு சுகம் மற்றும் சுய லாபம் உண்டு. அரசியல் ஆய்வில் இருந்து பிறந்தால் சுட்டிக் கட்டுங்கள் பார்க்கலாம். பிரிவினை உணர்வு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மிக அதிகமாக வளர்ந்து வருகிறது. முன்பு இருந்ததை விட அதிகமாக என்றுகூட சொல்லலாம். இது இளையோரைத் தேசியம் சார் நடவடிக்கைகளை நோக்கித் தள்ளுகிறது. இந்த அடித்தளத்தை மருவி விட்டு வாக்குப் பெற கூட்டமைப்பும் தேர்தல் காலங்களில் தேசியத்தை கையில் எடுப்பதை நாம் பார்க்கிறோம். இது இப்படி இருக்க ஷோபாசக்தி செய்யும் கற்பனைக்கு அளவில்லை.

இதைச் சொல்லும் அதே வேலை அதிகமாக வளர்ந்து வரும் சிங்கள இன வாதத்தை சுட்டிக் காட்டுகிறார். ஆனால் அது பற்றிய எந்த முடிவுக்கும் அவரால் வர முடியவில்லை. தவிர அந்த முரண் நிலையையும் விளக்க வில்லை. எப்படி எதிர்நிலையில் தமிழ் தேசிய வாதம் ஆகியன வளர்ச்சி அடையாமல் இறுகும் என விளக்கி இருக்க வேண்டும். இல்லை என்றால் அறிவுத்துறை சொல்வது சொற்பனம் என விளக்கி இருக்க வேண்டும்.

6 தீர்வு பற்றிய திகைக்க வைக்கும் தகவல்கள்.

இலங்கையில் இருக்கும் பிரச்சினையை சட்ட ரீதியாக தீர்த்து விடலாம் என கட்டுரையாளர் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இந்த அநியாயம் இதுவரை யாருக்கும் தெரியாமல் போய் விட்டது. சட்டத்தை மாற்றுங்கள் – அதை அமுல் படுத்துங்கள் – அதனால் இனங்களுக்கிடையில் ஒற்றுமை வந்திவிடும் – அதன் பிறகு எல்லோரும் அன்பொழுக வாழலாம் என ஒரு குழந்தைப் பிள்ளை கருத்தை முடிவாக வைத்திருக்கிறார். யாரும் சொல்வதைக் கேட்டு ஐ.நா உரிமை தராது என எழுதுபவர் ஒரு நாட்டின் அரசியல் சாசனத்தின் பின் இருக்கும் அரசியலை அறிந்து வைத்து எழுதவில்லை. இனியாவது யாராவது சொல்லிக் கொடுங்கள். அரசியல் சாசனத்தின் மூலம் சிறுபான்மையர் “பேரம் பேசும்” சக்தியாக மாறி விடுதலை பெறலாம் என்றால் எப்பவோ தொண்டமானும் – அமிர்தலிங்கமும் அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுத்திருப்பர். இப்ப சுமந்திரன் செய்வது என்ன ? இதே வாதத்தைதான் அந்த மிதவாதியும் வைக்கிறார். இதுக்கு மேல் நாம் என்ன சொல்ல முடியும்?

கொலை மறைப்பு கதையாடல் முடிஞ்சு இப்ப பகை மறைப்பு புதுக்கதை தொடங்கப் பட்டுள்ளது. நீங்கள் எவ்வளவுதான் முக்கினாலும் வர்க்கப் பகை மறைக்கப் பட முடியாதது. அடிப்படை அற்ற – அரசியல் அற்ற ஒற்றுமை – ஒன்றுபடுதல் சாத்தியமற்றது. இதே இதழில் வெளி வந்திருக்கும் ‘இறையாண்மை இல்லாத இலங்கை அரசு’ என்ற கட்டுரையை படிப்பவர்களுக்கு தெரியும் – கட்சிகளின் ஒற்றுமையின் பின் இருக்கும் சிக்கல்கள். இவை புறவய அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்தவை. ஒருவரின் கற்பனையில் உருவாகுபவை அல்ல. ( ஒரு சாதாரண தொழிலாளர் இது பற்றி பின்வருமாறு சொல்லி இருப்பார்: கண்ணை மூடிக்கொண்டு முக்கினால் கக்கூசுதான் வரும் தம்பி கட்சிகள் ஒன்றுபடாது).

நாம் ‘பிரக்டிக்களாக’ சிந்திக்கிறோம் எனச் சொல்வோர் வாதங்கள்தான் கட்டுரையில் நிரம்பிக் கிடக்கிறது. யதார்த்தம் இதுதான் இதற்குள் மக்களுக்கு தேவையானதை எடுக்கும் நடைமுறையை பேசுவோம் என்போரின் வாதங்கள் இவை. அத்தகையோர் யார்? வலது சாரிய கட்சிகளை நிரப்பி நிற்போரும் – சுய நல அரசியல் செய்வோருமே அவர்கள் மிதவாதிகள். தன்னை அவ்வப்ப்போது முற்போக்காக காட்டி நடித்துக் கொள்ளும் ஷோபாசக்தியும் அந்த வரிசையில் இணைந்து கொண்டுள்ளார். உங்கள் வாழ்க்கை முறை மாறி விட்டது. அதற்கேற்றால் போல் உங்கள் கருத்து நிலையும் மாறும்தானே. நாம் ஆச்சரியப் படவில்லை. இங்கு சொன்ன விஷயங்கள் சரியாக சுடும் – ஒன்டும் புதிசில்லை என மூச்சு பேச்சு இல்லாமல் ஒதுக்கி வைத்து விட்டு உங்கள் வேலை பார்ப்பீர்கள். பெரியார் சொன்ன அதிகாரத்தின் குணங்களின் எல்லா அடையாளங்களும் தங்கள் வசம் வந்து சேர்ந்து விட்டது. இப்படி ஒரு விளக்கமில்லாத கட்டுரை எழுத முதல் யோசித்திருக்க வேண்டும் – விவாதத்துக்கு தயாரற்ற முறையில் அவதூறுகளுக்கு இறங்கி இருக்கக் கூடாது.

முன்பே சொன்னேன் – சும்மா இப்படி அரசியற் கட்டுரைகள் என எழுத வெளிக்கிட்டு நாற வேண்டாம். வேற வேலை பார்க்கவும் என. கெட்ட பிள்ளை சொற் கேளாது என்பர்.

-சேனன்