பிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்

பிரக்சிட் நெருக்கடியினால் முன்னால் பிரதமர்  தெரேசா மே பதவி விலகியதைத் தொடர்ந்து போரிஸ் ஜோன்சன் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இப்சோஸ் மோரி (Ipsos Mori) என்னும் நிறுவனம், இவ்னிங் ஸ்டாண்டர்ட் (Evening Standard) பத்திரிகைக்காக நடத்திய கருத்துக் கணிப்பின்படி கன்சர்வேடிவ் கட்சிக்கான ஆதரவு தற்பொழுது பத்துப் புள்ளிகளால் அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினை விட முன்னணியில் அவர் நிற்பதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. பிரக்சிட்டினால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாகவே அடுத்த பிரதமராக வரக்கூடிய சாத்தியம் அதிகமாயிருந்த ஜெரமி கோர்பின் பின்னுக்கு தள்ளப்பட்டு வலதுசாரி கட்சித் தலைவர் போரிஸ் ஜோன்சன் தற்பொழுது முன்னணிக்கு வந்துள்ளார். இதனால் பிரக்சிட் தொடர்பாக புதிய பிரதமர் எடுக்கும் முடிவுக்கு மக்கள் ஆதரவு உண்டு என்று அர்த்தமில்லை. ஐரோப்பிய யூனியனுடன் எந்த வித உடன்படிக்கையும் மேற்கொள்ளாமல் முற்றாக பிரிதல் (No Deal Brexit) என்ற போரிஸ் ஜோன்சனின் முடிவுக்கு இன்றும் பல மக்களும், அமைப்புகளும் தமது எதிர்ப்பை வெளியிட்ட வண்ணமிருக்கின்றன. 

போரிஸ் ஜோன்சன் கொண்டு வரவிருக்கும் பிரக்சிட்டானது முதாலாளிகாளுக்கான பிரக்சிட்டே தவிர மக்களுக்கான பிரக்சிட் அல்ல. இதன் மூலம் பெரும் வர்த்தக நிறுவனங்களும், பெரும் முதலாளிகளும், கன்சர்வேடிவ் கட்சிக்கு நிதி அளிக்கும் மில்லியனர்களுமே லாபம் அடைவர்களே தவிர சாதாரண மக்கள் மிகுந்த நெருக்கடிக்குள்ளாவார்கள். ஆனால் போரிஸ் ஜோன்சனோ மக்களைப் பற்றிக் கவலை கொண்டு இயங்குபவர் அல்ல. தாம் பிரதிநிதித்துவம் செய்யும் பெரும் வியாபாரிகளுக்கு லாபம் பெருக்குவதும் ஜெரமி கோபின் ஆட்சியினைக் கைப்பற்றுவதை தடுப்பதும் அவரது முக்கிய நோக்கங்கள். ஐரோப்பிய யூனியனுடன் உடன்படிக்கை எதனையும் மேற்கொள்ளாமல் பிரக்சிட்டினை கொண்டுவர முயற்சிப்பதால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார் போரிஸ். அத்தகைய பிரக்சிட்டினால் மருந்துப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கும் எனவும், வைத்தியசாலைகளில் மிகுந்த நெருக்கடிகள் ஏற்படும் எனவும், வைத்தியருக்காக காத்திருக்கவேண்டிய நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும், உணவு வங்கியில் உணவுக்கு காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகாரிக்கும் எனவும் சொல்லப்படுகிறது. மிகுந்த பொருளாதார நெருக்கடியை பிரித்தானிய சந்திக்க வேண்டி வரலாம் எனக் கருதப்படுகிறது. 

பிரித்தானியாவின் ட்ரம்ப் என அழைக்கபடும் போரிஸ் ஜோன்சன் ஐரோப்பிய யூனியனிலிருந்து, உடன்படிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் பிரிந்த பின்பு அமெரிக்காவுடன் இறுக்கமான வர்த்தக உடன்பாடிக்கைகளை மேற்கொள்ள விருக்கின்றார் என சொல்லப்படுகிறது. அதன் பிரகாரம் ஆஸ்துமா, நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்களின் மருந்துகளின் விலையானது ஏழு மடங்கு வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீரிழிவு நோய்க்கான ஊசியின் செலவு 14.08 இலிருந்து 105.60 பவுண்ஸ் ஆகவும், புற்றுநோய் ஊசிக்கான செலவு 686.36 இலிருந்து 2333.62 பவுண்ஸ் ஆகவும், ஆஸ்துமா நோய்க்கு ஒரு தரம் கொடுக்க வேண்டிய மருந்தின் செலவு 33.50 இலிருந்து 105.60 பவுண்ஸ் ஆகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களே அதிக லாபத்தை சம்பாதிக்கப் போகின்றன. அமெரிக்க மருந்து நிறுவனங்களின் நலனுக்காக பிரித்தானிய மக்களின் நலன்கள் தாரை வார்த்துக் கொடுக்கப்படுகின்றன. 

பிரக்சிட் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்பதே ஜெரமி கோர்பின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு ஆகும். ஆனால் போரிஸ் ஜோன்சன் போல் கடுமையான நிலைப்பாட்டை – அதாவது ஐரோப்பிய யூனியனுடன் எந்தவித உடன்படிக்கையையும் மேற்கொள்ளாமல் பிரிதல் என்ற நிலைபாட்டை (Hard Brexit)  எடுக்க முடியாது என்பது கோபினின் நிலைப்பாடு. அதனாலேதான் ஜெரமி கோர்பின் மென்மையான போக்கை (Soft Brexit) கடைப்பிடிப்பவாராகக் காணப்படுகின்றார். 

ஐரோப்பிய ஒன்றியத்தை கடுமையாக எதிர்க்கும் தொழிற்சங்கமான RMT உட்பட பல சோஷலிச மற்றும் மக்கள் சார்ந்து இயங்கும் அமைப்புகள் போரிஸ் ஜோன்சன் கொண்டுவர இருக்கும் பிரக்சிட்டை எதிர்த்து வருகின்றன. தொழிலாளர் பிரக்சிட் அல்லது மக்கள் பிரக்சிட் என இவர்கள் பேசுவதற்கும் போரிஸ் பேசும் லாபத்தை முதன்மைப்படுத்தும் பிரக்சிட்டுக்கும் ஏராளாமான மாறுபாடுகள் உண்டு. போரிஸ் ஜோன்சன் மக்கள் நலனுக்கு நேர் எதிர் திசையில் நின்று இயங்கி வருகிறார். இது பற்றிய புரிதல் இல்லாமல் சில தமிழ் மக்களும் அவர் சார்ந்த அமைப்புகளும் போரிஸ் ஜோன்சனுக்கு ஆதரவு அளிக்ககின்றனர். பிரித்தானியாவில் வாழ்ந்தாலும் பிரித்தானிய அரசியல் பற்றிய அடிப்படை ஆறிவு அற்றவர்களாகவே இன்னும் சில தமிழர்கள் இங்கு வாழ்கின்றார்கள். 

பாராளுமன்ற கணித முறைமையினால் பிரக்சிட் நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது. கடந்த வருடம் இலங்கையில் பாராளுமன்ற நெருக்கடி ஏற்பட்பட்டபோதும் நாம் இதனையே வலியுறுத்தி வந்தோம். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தம் வர்த்தக நண்பர்களுக்கு சார்பான அல்லது தமது கட்சிக்கு நிதி அளிக்கும் நிறுவனங்களுக்கு சார்பான பிரக்சிட் நடவடிக்கைகளை மேற்கொள்வார்களே தவிர மக்கள் நலன் சார்ந்த பிரக்சிட்டினை நடைமுறைப்படுத்த மாட்டார்கள். ஆகவேதான் பாராளுமன்ற கணித முறைமை பிரக்சிட் நெருக்கடிக்கு சரியான தீர்வினைத் தராது எனக் கூறப்படுகிறது.

பாராளுமன்றத்தினால் தற்போதைய பிரதமர் போரிஸ் ஜோன்சன் முடக்கப்பட்டால் பிரக்சிட் நெருக்கடியினை சமாளிக்க இன்னுமொரு தேர்தலுக்கு அழைப்பு விடலாம். அவ்வாறு இன்னுமொரு தேர்தல் இடம்பெறுமானால் அது பிரித்தானிய வரலாற்றில் இடம்பெறும் மிக முக்கியமான தேர்தலாகக் காணப்படும். ஏனெனில் அத்தேர்தலின் போது கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர் கட்சிகளுக்கிடையே கடுமையான பிளவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கன்சர்வேட்டிவ் கட்சியில் உள்ளவர்களில் சிலர் வெளியேறி லிபரல் கட்சியுடன் இணைந்து புதிய கட்சி ஒன்றினை உருவாக்குவது பற்றியும் பேசப்படுகிறது. இருப்பினும் மக்கள் மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மேல் இருக்கும் வெறுப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி என்பனவற்றை போரிஸ் தனது பிரச்சாரத்துக்கு பாவிக்கும் வாய்ப்புண்டு. இதனால் அவர் அடுத்த தேர்தலில் வெல்லும் வாய்ப்பு உண்டு. 

அதனை முறியடிக்க ஜெரமி கோர்பின் சரியான நிலைப்பாடு ஒன்றினை எடுத்து பிரச்சாரம் செய்ய வேண்டும். இது ஜெரமிக் கோர்பினுக்குக் கடைசித் தேர்தலாக அமையலாம். அதில் அவர் தோற்கும் பட்சத்தில் அவரின் ஆரசியல் வாழ்வு அத்துடன் மடிந்து போய்விடக் கூடிய சாத்தியமும் உண்டு. பிரக்சிட், கோர்பின் மற்றும் இங்கிலாந்தின் முக்கிய கட்சிகளின் எதிர்காலம் ஆகியவற்றை தீர்மானிக்கும் முக்கிய தேர்தலாக இருக்கும் அடுத்த தேர்தல்.

RMT போன்ற தொழிற் சங்கங்கள் கோர்பினுக்கு தமது ஆதரவை வழங்குகின்றன, கோர்பினுக்கு அவரது கட்சிக்கு வெளியில் நிறைய ஆதரவு உண்டு. ஆகவே  பாராளுமன்றம் மற்றும் தொழிலாளர் கட்சியின் வலதுசாரிகளின் நெருக்கடிக்கு விட்டுக் கொடுக்காமல் அவர் இயங்க வேண்டும். கடந்த தேர்தலில் முன் வைத்ததை விட சிறந்த முற்போக்கு – சோஷலிச கொள்கையுடன் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்குவாராயின் கோர்பின் வெல்வதற்கு சாத்தியமுண்டு. கோர்பின் வெற்றிதான் மக்கள் சார் பிரக்சிட்டுக்கான வாய்ப்பை ஏற்படுத்தும்.

சட்டவிரோதமாக தங்கியுள்ள 500,000 பேருக்கு குடியுரிமை வழங்குவதற்கு ஆதரவு அளித்துள்ளார் போரிஸ் ஜோன்சன். இதனால் சில தமிழ் மக்கள் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர். பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்த பின்னர் ஏற்படப் போகும் தொழிலாளர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யவே இத்தகைய ஒரு முடிவை எடுத்துள்ளாரே தவிர குடியேற்றவாசிகள்  மீதான அக்கறையினால் அல்ல. இது தெரியாத சில தமிழர்கள் எமக்காகவே இவ் முடிவை பிரித்தானிய பிரதமர் எடுத்துள்ளார் என பினாத்தித் திரிகின்றனர். முதலாளித்துவத்தின் பிரதிநிதியாக தெளிவாக சிந்தித்து செயற்படுகின்றார் போரிஸ் ஜோன்சன் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கிலாந்தில் வாழும் அனைத்து ஐரோப்பிய தொழிலாளர்களும் தாங்கும் உரிமை – அகதிகளுக்கான உரிமைகள் – மற்றும் தடுப்பு முகாம்களை மூடுதல் – போன்ற பல்வேறு கொள்கைகளை கோர்பின் கடந்த தேர்தலிலேயே முன் வைத்ததை இவர்கள் கவனிக்கவில்லை.

பிரக்சிட் தொடர்பான எந்தவிதக் கலந்துரையாடல்களிலும் விவாதங்களிலும் ஈடுபடாத தமிழ் அமைப்புகள் பல எழுந்தமானமாக கருத்துக்களை முன்வைத்து வருகின்றன.  பிரக்சிட்டினை ஏன் ஆதரிக்க வேண்டும் அல்லது ஏன் எதிர்க்க வேண்டும், அதன் பின்னணி என்ன  எனத் தெரியாத சில தமிழர்களும் அவர் சார்ந்த அமைப்புகளும் கண் மூடித்தனமாக போரிஸ் ஜோன்சனினை ஆதரிக்கின்றனர். புதிய பிரதமரால் பிரக்சிட் நெருக்கடிக்கு தீர்வு வரும் என நம்புகின்றனர். தாம் ஏன் ஆதரவு வழங்குகிறோம், தாம் எந்தப் பக்கம் நிற்கிறோம் என்பது கூட இத் தமிழர்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் இவர்கள் மிக சிறுபான்மையர். பெரும்பான்மை தமிழ் இளையோர் மற்றும் தொழிலாளர்கள் கோர்பினுக்கு ஆதரவு என்பதை கடந்த தேர்தலை கூர்மையாக கவனித்தோருக்குத் தெரியும்.

பிரித்தானியாவிலுள்ள தமிழ் சொலிடாரிட்டி அமைப்பானது பிரெக்சிட் தொடர்பாக பல்வேறு கலந்துரையாடல்கள், விவாதங்களை மேற்கொண்டது. இதில் கூட கலந்து கொள்ள முடியாத ஒரு சிலர்தான் வலைத்தளங்களில் சுழன்றடித்து கன்சவேடிவ் கட்சிக்கு ஆதரவு செய்து வருகின்றனர். பெரும்பாலான பிரித்தானிய தமிழ் மக்கள் பிரித்தானிய அரசியலில் அல்லது அது தொடர்பான கலந்துரையாடல்களிலோ அல்லது விவாதங்களிலோ ஈடுபடுவதில்லை. புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கூட அவ்வாறான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதில்லை. இவ்வாறான நிலையில் அமைப்புகள், பிரித்தானிய அரசியல் தொடர்பான விடயங்களில் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுக்கும் என்பது சந்தேகத்திற்குரியதே. அதனால்தான் பெரும்பாலான தமிழ் அமைப்புகள் பிரக்சிட் தொடர்பான தமது நிலைபாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை, இது அவர்களின் வங்குரோத்து அரசியலையே எடுத்துக் காட்டுகின்றது. தமிழீழத்தை நோக்கிப் பயணிப்போம் என வெற்றுச் சவால்கள் விடுவது மட்டுமே இவ்வைகையான அமைப்புகளின் தலையாய பணியாகும். இது போன்ற அரசியல் தெளிவற்ற அமைப்புகளின் பின்னால் செல்லாமல் மக்கள் நலன் சார்ந்து இயங்கும் பிரித்தானிய அமைப்புகளுடன் இணைந்து இயங்க மக்கள் முன் வர வேண்டும்

 

சு. கஜமுகன்

gajan2050@yahoo.com