ஹாங்காங் விடுதலைக்கான போராட்டம்

1,845 . Views .

கீர்த்திகன் தென்னவன்

பிரித்தானிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஹாங்காங் சீனா அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் 1997  ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி கொண்டுவரப்பட்டது.  அன்று தொடங்கி சீனா அரசு தங்களின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் ஹாங்காங் பகுதியைக் கொண்டு வருவதற்கு செயல் பட்டு வருவது குறிப்பிட தக்கது. அதற்காக பல்வேறு அடக்குமுறை சட்டங்களை இயற்றி வருகிறார்கள்.
இவ்வருடம் சீனக் கட்டுப்பாட்டின் கீழ் வந்த நினைவு நாளின் போது மக்கள் சீன அரசுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கினர். பெரும்பான்மை ஹாங்காங் மக்கள் சனநாயக மறுப்பு சீனக் கட்டுப்பாட்டில் வாழ விரும்பவில்லை. அவர்கள் தமது இறையாண்மைகாக போராட்டத்தில் குதித்துள்ளனர். அதை வன்மையாக எதிர்க்கும் சீனா ஒரு நாட்டில் இரு அரச அமைப்புக்கள் இருக்க முடியாது என சொல்லி வருகிறது.
ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப் பட்ட பொழுது வழங்கப் பட்ட பல சனநாயக உரிமைகள் சீன மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை விட அதிகம். இந்த ஒப்பந்தம் 2047ம் ஆண்டு வரை நீடிக்க வேண்டும். ஆனால் அதுவரை பொறுக்கும் நிலையில் சீனா இல்லை.
ஹாங்காங்கில் இருக்கும் சுதந்திரம் சீனாவால் பறிக்க  படுவதற்கு எதிராக பல போராட்டங்கள் அங்கு நடந்து வந்திருக்கிறது.
இந்த வருடம் கைதிகள் ஒப்படைப்பு சட்டத்துக்கு எதிராக  மில்லியன் கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர். கைதிகள் ஒப்படைப்பு சட்டத்துக்கு ஊடக ஹாங்காங்கில் இருக்கும் கைதிகளை சீனாவுக்கு அனுப்பி விசாரணை நடத்தலாம். இது அரசுக்கு எதிராக போராடும் செயற்பட்டாளர் அனைவருக்கும் எதிராக பாவிக்க படலாம். இது தவிர இத்தகைய நடைமுறை சீன தனது கட்டுப்பாட்டை மேலதிகமாக இறுக்கி விடும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த மக்கள் போராட்டம் ஒரு தனிப்பட்ட சட்டம் மட்டும் சார்ந்ததல்ல – மாறாக சீன கட்டுப்பாடுக்கு எதிரானதாகவும் இருக்கிறது.
மக்களின் போராட்டம் இதுவரை ஹாங்காங் வரலாற்றில் இல்லாத கடுமையான முறையில் நடந்து வருகிறது. கடந்த ஜூன் மாசம் 15 திகதி போராட்டக்காரர்  காவல் துறையுடன் மோதுமளவிற்கு போராட்டம் கூர்மையடைந்துள்ளது. அந்த மோதலுக்கு பிறகு தலைமை நிர்வாகி கேரி லாம் கைதிகள் ஒப்படைப்பு சட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக சொல்லி உள்ளார்.  அடுத்த நாளே 2 மில்லியன் மக்கள் போராடத்தில் கலந்து கொண்டனர். ஹாங்காங்  பிரதேசத்தின் மக்கள் தொகையை 7.5 மில்லியன் என்பது குறிப்பிட தக்கது. கேரி லாம் அவர்களைப் பதவியில் இருந்து நீக்கச் சொல்லியும், உடனடியாக நிரந்தரமாக கைதிகள் ஒப்படைப்பு  சட்டத்தை இல்லாமல் செய்யச் சொல்லியும் மக்கள் கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

கேரி லாம்  பதவி விலகாவிட்டால் போரட்டம்  வலுப்படும் வாய்ப்பு உண்டு. இந்தப் போராட்ட அதிர்வுக்கு ஊடாக சீனா நிலப்பகுதியில் கடும் அதிகாரத்தை நிலை நாட்டி வரும் கம்யூனிஸ் கட்சிக்கு பல நெருக்கடிகள் ஏற்படும் வாய்ப்பும் உண்டு.
போராட்டக் காரர்கள் ஹாங்காங்கில் இருந்து சீனாவுக்கு போகிற தொடர் வண்டியில் தமது துண்டுப் பிரசுரங்களை அனுப்பி தமது போராட்டத்துக்கு சீனாவுக்குள்ளும் ஆதரவு தேடுவது சரியான நடைமுறையே. ஆனால் இதே சமயம் காலனி ஆதிக்க பிரித்தானியக் கொடியை ஒரு சிலர் தூக்கித் திரிவது தவறு. இத்தகைய நடவடிக்கைகள் சீன அரசு மக்கள் மத்தியில் தனது பலத்தை வளர்த்துக் கொள்ளவே உதவும். தவிர பிரித்தானிய ஏகாதிபத்திய அரசு ஹாங்காங் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தரப் போவதில்லை. அத்தகைய போலி நம்பிக்கை போராட்டத்தை வலுப்படுத்தாது.
ஹாங்காங் மக்கள் தங்களில் போராட்ட சக்தியைப் பலபடுத்த அப்பிராந்திய மக்கள் மற்றும் உலகெங்கும் இருக்கும் போராட்ட சக்திகளின் ஆதரவை திரட்டுதல் நோக்கி நகர வேண்டும். இதே சமயம் தொழில்துறைசார் போராட்டங்களும் முடுக்கி விடப்பட வேண்டும். துறைமுங்களில், பேருந்துகளில், ரயில்களில், வங்கிகளில் மற்றும் நிதி அலுவலகங்களில் போராட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்க  வேண்டும். வேலை நிறுத்தம் என்ற ஆயுதம் ஹாங்காங் மற்றும் சீன அரசின் பலத்தை உடைக்க வல்லது. இவற்றை முன்னெடுக்க பலமான மற்றும் சுயாதீனமான ஒரு அமைப்பு கட்டப்பட வேண்டும். போராட்டத்தில் இறங்கி இருக்கும் அனைத்து தொழிலாளர்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு அத்தகைய ஓர் அரசியற் பலம் உருவாக்கப் பட முடியும். அதுவே சீனப் பிடியில் இருந்து ஹாங்காங்கை விடுவிக்கும்.