பறிக்கப்பட்ட காஷ்மீர் மக்களின் உரிமைகள். 

காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகள் மேல் கடும் தாக்குதல்கள் நிகழ்ந்து வருகிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டம் என  அழைக்கப்படும் 370
மற்றும்35 ஏ பிரிவுகளை  தற்போதய இந்திய மத்திய  அரசு நீக்கிவிட்டது. இதற்கான அறிவிப்பு நாடாளுமன்றத்தில் கடந்த  5-8-2019 அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா அறிவித்திருந்தார்.

இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குறைந்த பட்ச உரிமைகளும் பறிபோய் விட்டடது. மேலும் இந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் ”லடாக்” என்று இரண்டு யூனியனாக பிரிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. சட்டப்பேரவையுடன் ஜம்மு காஷ்மீர் இருக்குமென்றும், சட்டப்பேரவை இன்றி “லடாக்”மற்றுமொரு யூனியனாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது புதிதாக நடந்த விடையம் அல்ல. இவ்வாறான நெருக்கடிகளை உருவாக்குவதற்கு  பாஜகவின்  அரசு முன்கூட்டியே திட்டம் தீட்டியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மத்திய அரசின் மீது இதற்கு முன்னதாக பல முறைப்பாடுகள் எழுந்திருக்கின்றன. அடக்குமுறைகளும்,சித்திரவதைகளையும் காஷ்மீர் மக்கள் சந்தித்திருந்தனர். பலவகையான ,போராட்டங்களையும்,எதிர்ப்புக்களையும் உலகளாவியரீதியில் நடத்தியிருக்கிறார்கள். தற்போதுள்ள நெருக்கடியை எதிர்த்து காஷ்மீரிலும்,   மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் பாரிய எதிர்ப்புக்கள், போராட்டங்கள் என நடைபெற்று கொண்டிருக்கின்றன.

#காஷ்மீர் வரலாறும், உருவாகிய சிறப்பு சட்டமும் .

1947 பிரிட்டிஸ் காலகட்டம் முடிவுக்கு வந்த போது இந்திய பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டு இரு நாடுகள் உருவாகின. இந்த இரண்டு நாடுகளுக்கு மத்தியில் மாட்டிக் கொண்ட காஷ்மீர் பிரதேசம் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இணைய விரும்பவில்லை. காஷ்மீர் ஒரு தனிநாடாக இருக்கவேண்டும் என்று மக்கள் விரும்பினர். காஷ்மீரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த மன்னரும் அதையே விரும்பினார் . ஆனால் அம்முடிவு இந்தியாவிற்கும்,பாகிஸ்தானுக்கும் அதிருப்த்தியை ஏற்படுத்தியது.

அதற்கு முன்னதாக காஷ்மீர் தனிநாடு கோரிய போராட்டங்கள் 1930 ஆண்டு பகுதியில் நடைபெற்றிருக்கின்றன. அதை தொடர்ந்து, 1944 ஆண்டு பகுதிகளில் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என மக்கள் போராட்டங்களும் நடைபெற்றிருக்கின்றன. அவ்வகையான  மக்கள் அளுத்தங்களும்,அபிலாசைகளுக்கேற்பவாறே  1947ல் காஷ்மீர் தனிப்பட்ட நிர்வாகத்தின் கீழ்தான் இருந்தது. ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் காஸ்மீரை ஆக்கிரமித்து கொள்ள தமது இராணுவ பலத்தை உபயோகிக்க முயன்றனர். பாகிஸ்தான் அரச நடவடிக்கைகளை இந்திய அரசு தனக்கு சாதகமாக பாவித்தது – மன்னர் ஹரிசிங்கிடம் ஒரு ஒப்பந்தம் போடுவதற்கு கட்டாயப் படுத்தியது. எதிர் காலத்தில் காஷ்மீர் மக்களின் அபிலாசைகளை அறியும் வாக்கெடுப்பு நடத்தப் படும் என்றும் – அவர்கள் பிரிந்து செல்ல முடிவு செய்தால் பிரிந்து போகலாம் ஏன்றும் – போலி வாக்குறுதிகள் வழங்கப்பட்டு ஒரு பகுதி காஷ்மீர் பிரதேசம் இந்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. பின்வரும் மூன்று கேள்விகளின் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முன்பு ஐக்கிய நாடுகளுடன் சேர்ந்து போடப்பட்ட தீர்மானம் இன்றுவரை நிறைவேற்றப் படவில்லை.

இவைதான் அந்தக் கேள்விகள்:

1)காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்களா?

2)பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா?

3)அல்லது தனிநாடாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறார்களா?

ஆனால் இந்த அடக்குமுறை அரசுகள் தங்கள் சொந்த நலன்களைப் பற்றி மட்டும் கவலை கொண்டார்களே தவிர இன்று வரை அங்கு வாழும் மக்களின் சனநாயக உரிமைகள் பற்றி எந்த அக்கறையும் எடுக்கவில்லை. பிரிவினையைத் தொடர்ந்து இந்திய – பாகிஸ்தான் இராணுவ மோதல்களுக்கு காஷ்மீர் பிரதேசம் ஒரு களமாக இருந்து வந்திருக்கிறது.

பின்பு 1949 இல் 370 வது சட்டப்பிரிவு இந்திய அரசியலமைப்பினுள் இணைக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப் பட்டது.

மக்களை ஏமாற்ற 1951 இல் காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் நடைபெற்றன. ஷேக் அப்துல்லா தலைமையின் கீழ் ஆட்சி அமைக்கப்பட்டது. ஆனால்  1953 இல் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதை தொடர்ந்து, இந்தியாவுக்குத் தனியாக அரசியல் சாசனம் இருப்பதுபோல் காஷ்மீருக்குத் தனியாக அரசியல் சாசனம் உருவாக்கிக் கொள்ள இந்திய அரசு சக்திகள் சில பேச்சளவில் ஒப்புக் கொண்டன.

ஆனால் உருவாக்கப்பட்ட சட்டமோ கஷ்மீரை தொடர்ந்து இந்திய கட்டுப்பாட்ட்டில் வைத்திருப்பதாகவே இருந்தது. 1956-ல் நிறைவேற்றப்பட்டு1957-ல்  நடைமுறைக்கு வந்த சட்டம் ஒரு சில தனிச் சலுகைகளை மட்டும் வழங்கி விட்டு முன்பு ஏற்றுக் கொண்டிருந்த அனைத்து வாக்குறுதிகளையும் குப்பையில் போட்டது. காஷ்மீர் விடுதலைக்கான வாக்கெடுப்பு வெற்றுக் கனவாகிப் போனது. அதற்குப் பதிலாக டெல்லி அதிகாரத்தின் கைப்பாவையாக இயங்கும் ஓரு நிர்வாகம் அமுலுக்கு வந்தது. இன்றுவரை அந்த நிர்வாகம் வெறும் போலியான டெல்லி அரசின் கைப்பாவையாக மட்டுமே இருந்து வந்திருக்கிறது. அங்கு அதிகாரத்துக்கு வந்தவர்கள் ஒரு சிறு முனகல்களை மத்திய அரசுக்கு எதிராக செய்தாலே போதும், அவர்கள் உடனடியாக தூக்கி எறியப்பட்டு வந்தனர். மத்திய அரசுக்கு எதிராகவோ அலது காஷ்மீர் விடுதலைக்கு ஆதரவாகவோ யாரும் காஷ்மீருக்குள் அதிகாரத்தில் இருக்க முடியாது என்பதை இந்திய இராணுவ நடவடிக்கைகள் உறுதிப் படுத்திக் கொண்டன. உலகிலேயே காஷ்மீர்தான் மக்கள் மத்தியில் அதிக இராணுவம் வாழும் பிரதேசமாக இருக்கிறது.

இந்திய இந்துத்துவ தேசியவாதத்தை கிளறி தனது அதிகாரத்தை பலப்படுத்தவும் – பல முதலாளித்துவ சக்திகளை குசிப் படுத்தவும் – அங்கிருக்கும் வளங்களை கார்ப்ரெட் கம்பனிகள் சூறையாட வழி எற்படுத்தவும் – மோடி இன்று காஷ்மீர் மக்களுக்கு இருந்த சொற்ப உரிமைகளையும் பறித்து விட்டார். இதற்காக பல கோடி மக்களின் பணத்தை வாரி செலவிடுகிறது இந்திய அரசு. பாதுகாப்பு என்ற பெயரில் இராணுவ அடக்குமுறையை உருவாக்க அனைத்து இந்திய தொழிலாளர்களின் வரிப்பணங்களும் வீணே செலவாகிறது. இந்தியப் பொருளாதாரம் சரிந்து கொண்டு போவதைப் பற்றியோ அல்லது வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பது பற்றியோ அவர்களுக்கு ஒரு சொட்டுக் கவலையும் இல்லை. ஒரு பக்கம் தனியார் மயமாக்கல் முடுக்கி விடப்பட்டுள்ளது – மறு பக்கம் அதற்கு வரக் கூடிய எதிர்ப்பை முறியடிக்க இந்திய இந்துத்துவ தேசிய வாதத்தை பயன்படுத்த முயல்கிறது அரசு.

மத்திய ஒடுக்குமுறை அரசுகள் தேசிய இனங்களின் உரிமைகளைப் பறிப்பதையும், மாகாண அரசுகளின் அதிகாரங்களை பறிப்பதையும் எதிர்த்து உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குர்திஸ்தான்  இருந்து ஸ்கொட்லாந்து வரை விடுதலைக்கான குரல்கள் வலுப்பட்டு இருக்கும் காலகட்டமிது.

இந்தியாவிலும் தேசிய இனங்கள் இத்தகைய சிக்கல்களையே சந்திக்கின்றன. கல்வி, மருத்துவம்,வரி உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் இந்திய மத்திய அரசு பறித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே நான்காவது அதிக வரியை செலுத்துகின்ற மாகாணமான தமிழ் நாட்டில் மக்கள் பொருளாதார நலன்கள் இன்றி முடக்கி வைக்கப் பட்டிருகிறார்கள். உலகம் முழுக்க தேசிய இனங்கள் எழுச்சி பெற்று வரும் சூழலில் இந்தியாவின் தேசிய இனங்களும் இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்கும் சூழல்களை உருவாக்குகி வருகிறது மத்திய அரசு.

காஷ்மீர் மக்களுக்கு நடந்ததை போலவே இந்திய அரசு  ஈழ மக்களின் போராட்டங்களையும்  நசுக்கி வருகின்றது. இந்திய அரசின் மூலம் ஈழத்திற்கு தீர்வுவரும் என்று பயணிக்கும் தமிழ் தலமைகள் இந்தியாவின் நிலைபாட்டிற்கு எதிராக மாறுவார்களா? அவர்கள் வலது சாரிய சிந்தனையுடன் முதலாளித்துவ அரசியலுடன் இணைந்திருக்கின்றனர். இதை மாற்றுவதற்கான மக்கள் சக்தி பலப்பட வேண்டும். அதற்கு நாம் போராட்ட வரலாற்றிலிருந்து சிலவற்றை கற்று கொள்ள வேண்டும். காஷ்மீர் மக்கள் போராட்டங்களுடன், ஈழ போராட்டங்களும் இணையவேண்டும்.

இடதுசாரிகள் மார்சியர்கள் என்று வீரவசனம் பேசுபவர் இன்றுவரை சுயநிர்ணய உரிமைகளை மறுத்து வருகின்றனர். காஷ்மீருக்கும் ஈழத்திற்கும் விடுதலைகான குரலில் வித்தியாசம் இல்லை. அசாதி என்பது எங்களுடைய சொல்லும்தான். மார்க்சியர் என சொல்லிக் கொண்டு மண்ணுக்குள் தலையை புதைத்துக் கொண்டு கண்மூடித்தனமாக கண்டவை கதைப்பவர்கள் உண்டு. சுதந்திரக் கோரிக்கை வைக்கும் மக்களை எப்படி அணுகுவது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. இந்த வகையில் அனைத்து சுயநிர்ணய உரிமைகளையும் ஆதரிக்கும் cwi அமைப்பின் வேலைத்திட்டம் அதை மக்களின் வாழ்வாதாரத்தோடு இணைக்கிறது. இணைத்து போராடலாம் வாருங்கள். போராட்டமின்றி வெற்றி இல்லை.

Mathan

Mathan@tamilsolidarity.org