இலங்கையின் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான கலகம்

3,488 . Views .

ஆகஸ்டு மாதத்தின் ஆரம்பம் வரை இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் யார் என்பது பற்றி பெரும் குழப்பமாகவே இருந்தது. அதிகார சக்திகள் மத்தியில் சச்சரவும் போட்டியும் அதிகரித்துள்ளமையை இது சுட்டிக் காட்டுகிறது. தற்போது மஹிந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டு இருக்கிறார். சஜித் பிரேமதாசா  தன்னைத்தானே அறிவித்திருக்கின்றார். மிதவாதிகளின் பிரதிநிதியாக கரு ஜயசூரிய தன்னைக் முன்னிறுத்துகிறார். ஜே.வி.பி வேட்பாளராக அதன் தலைவர் அனுரா குமார போட்டியிடுகிறார்.

அமெரிக்காவில் 2001 ம் ஆண்டு செப்டம்பர் 11 திகதி நடந்த தீவிரவாத தாக்குதலின் பின்பு நடந்த மிகப்பெரிய தாக்குதல் இலங்கையில் இந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடந்தது. இது இலங்கைக்குள்ளும் தெற்காசியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் மேலும் அதிகரித்துள்ளது. வெளிப்படையாக முஸ்லிம் மக்கள் மட்டுமே தாக்கப்படுவது போல தெரிந்தாலும், இந்த அதிகாரசக்திகளின் தக்குதல்கள் உண்மையில் இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் மேலான தாக்குதலாகும்.

அரசு தனக்கு எதிராக எழுந்து வந்த அதிருப்தியை திசை திருப்ப இந்த தாக்குதலை பயன்படுத்தி வருகிறது. தமிழ் மற்றும் இஸ்லாமிய தலைமைகள் இதற்கு எதிரான தமது போராட்டத்தைக் கட்டியெழுப்பும் சக்தி அற்றவர்களாக இருக்கின்றனர் – அல்லது தற்போதைய சூழ்நிலையிலும் தமது இலாபத்தை ஈட்ட நினைக்கின்றனர். மறுபக்கம் ராஜபக்ச தரப்பு இலங்கையின் காவலர்கள் தாம் என பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருக்கிறது. தற்போது மஹிந்த ஆதரிக்கும் ஒருவரே அடுத்த ஜனாதிபதியாக வரமுடியும்‌ என்ற நிலை இருக்கிறது. ஆயினும் கோத்தபாய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு அனைத்து முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டு வெற்றியும் பெற்றுவிட்டார். இதற்காக முன்னாள் இராணுவ அதிகாரிகளைக் கொண்ட “ வியதம”  மற்றும் சிவில் அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளை கொண்ட “எலிய” எனும் அமைப்புக்கள் மும்முரமாக வேலை செய்கின்றன. “எலிய” அமைப்பின் லண்டன் கிளை ஆரம்பிப்பதற்கான கூட்டத்திற்கு எதிராக தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு போராட்டத்தை முன்னெடுத்து இருந்தது. ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு சார்பாக ராஜபக்ச சகோதரர்களுக்கு இடையில் ஏதாவது சண்டை நடைபெற்று விடாதா என்ற நற்பாசையில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் வாயில் மண் விழுந்துவிட்டது.

 இந்தத் தாக்குதலின் பின்னர் தமிழ்த் தேசியவாதிகள் சிலர்  சிங்கள இனவாதிகளுடன் இணைந்து முஸ்லிம் மக்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இது ஒரு  நகைப்புக்குரிய விடயம் மட்டுமல்ல அரசியல் ரீதியில் மிகவும் ஆபத்தானதும் கூட. ஏனெனில் இது மீண்டும் தமிழ் பேசும் மக்களை இராணுவ கொடுமை அதிகாரத்துக்கு உட்படுத்தும். இலங்கை இராணுவம் வடக்குக் கிழக்கு பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என போராடிய இந்த தமிழ் தேசியவாதிகள் தற்போது இராணுவம் இருப்பதுதான்  நமக்கு பாதுகாப்பு எனக் கூறுகின்றனர். இவை இவர்களின் அரசியல் போதாமைகளையும் காட்டுகின்றது.

தமிழ் பேசும் மக்கள் மற்றும் சிங்கள முற்போக்குச் சக்திகளை திரட்டும் வாய்ப்பை கிடப்பில் போட்டு விட்டு நாட்டில்  நிலவும் அசாதாரண நிலையை பயன்படுத்தி அடக்குமுறைகளுக்கு முண்டு கொடுக்கின்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு. அவசரகால சட்டத்திற்கு ஆதரவு கொடுத்தது இதன் அடிப்படையிலேயே ஆகும். இலங்கையில் தமிழ் மக்களை மிகவும்  சிரமத்துக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கிய அடையாள அட்டை அமுலுக்கு வரும் சட்டம் கொண்டுவரப் படுவதற்கு முன்பு தமிழரசுக்கட்சியினர் ஆதரவளித்திருந்ததை அறிவோம். அதற்கு எதிராக நின்ற ஊர்காவல்துறை MP நவரட்டனம் என்பவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அவரை வாக்களிக்க விடாமல் செய்த பெருமைக்கும் உரியவர்கள் இவர்கள். இதை ஏன் இங்கு கூறுகின்றேன் என்றால் இந்த தமிழ் தலைமைகளின் வர்க்க அரசியல் எப்போதும் மேட்டுக்குடி சார்ந்தே இருக்கிறது. சாதாரண மக்கள் சார்ந்த பார்வை இவர்களிடம் எப்போதும் இருந்ததில்லை. இவர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்து ஏதாவது ஒரு முன்னெடுப்பை எடுத்திருக்கிறார்கள் என்பதை யாராவது சொல்ல முடியுமா? இவர்களின் வர்க்க நலன் சார்ந்த நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் அனைத்து மக்களுக்கும் எதிரான IMF இனால் முன்மொழியப்பட்ட பட்ஜெட்டை எந்தவித எதிர்ப்புமின்றி அவர்களால் ஆதரிக்க முடிகின்றது.

 முஸ்லிம்  தலைமைகளின் நிலைபாடும் இதே தான். வரலாற்று ரீதியாக முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், பின்பு அந்தத் தாக்குதல்கள் நியாயப்படுத்தப்பட்டமை ஆகியன மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்தது. இது இம்மக்களுக்கான ஒரு அரசியல் இயக்கம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைமையை உருவாக்கியது.  அந்த வரலாற்றின் அடிப்படையில் அஸ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரசை உருவாக்கினார். அவரின் மறைவின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உடைந்தது. ஒவ்வொரு பகுதியிலும் அங்கு செல்வாக்குப் பெற்றிருந்த உடைந்த கட்சியினர் மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டி தமது வாக்குகளை பலப்படுத்திக் கொண்டனர். கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையில் முரண்பாடுகள் இருக்கின்றனவா என யாரும் கேட்க முடியாது. அவை முதன்மையில் வளப் பகிர்வு சார்ந்த முரண்பாடுகள். வளங்கள் திட்டமிட்டு பகிரப்படும் போது அவை தீர்க்கப்பட்டுவிடும் சாத்தியமுண்டு. இந்த மக்களுக்கு இடையில் இருக்கும் முரண்களை தீர்ப்பது தமது வாக்கு வங்கியைப் பாதிக்கும் என முஸ்லிம் தலைமைகள் அஞ்சுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தற்போது தமக்குக் கிடைக்கும் ஆசனம் சிந்தாமல் சிதறாமல் வந்துவிட வேண்டும் என முரண்பாட்டைக் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றது.

இவ்வாறு இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி தமது அதிகாரத்தை தக்கவைக்க முயல்கின்றது இலங்கை அரசாங்கம். அதிகார வர்க்கங்களுக்கு இலங்கை  மக்கள் மீது ஒரு பயம் இருக்கின்றது. இலங்கை மக்கள் அதிகார அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய வரலாறு உடையவர்கள். அந்தப் போராட்டம்தான் இன்று இலங்கை மக்கள் அனைவரும் பயன்படுத்தும் இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதார சேவைகளைப் பெற்றுத் தந்தது. ஒன்றுபட்ட போராட்டத்திற்கு மக்கள் சென்று விடக்கூடாது என்பதில் இலங்கை அதிகார வர்க்கம் கவனமாக இருக்கிறது. தாக்குதலுக்கு காரணமானதாகக் கூறப்படும் தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும் மற்றும்  பொதுபல சேனாவுக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு பணம் வழங்கியதாக கொழும்பு மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இலங்கை முழுவதும் வலதுசாரிகளை இலங்கை அரசாங்கம் வளர்த்து விடுகின்றது. இலங்கை அரசு மிகவும் பலவீனமான அரசு. அதை இனவாதமே பாதுகாத்து வருகின்றது. அது தனது அதிகாரத்தை பாதுகாக்க இவ்வாறான இனவாத குழுக்களை ஊக்குவிக்கின்றது. வடக்கு கிழக்கில் இந்திய ஆதரவுடன் இந்துத்துவக்குழுக்கள் செயற்படுகின்றது. இவை தமிழ் மக்கள்  மத்தியில் இந்துத்துவ அடிப்படைவாதத்தை வளர்க்க போராடுகின்றன. அடிப்படை வாதத்தை நாங்கள் ஆதரிக்கமுடியாது. அதற்கு எதிரான போராட்டத்தை கட்டி எழுப்பவேண்டியது அவசியம்.

 இவ்வாறு இலங்கை முழுவதும் பல்வேறு வலதுசாரிய குழுக்களும்  அரசியல்வாதிகளும் மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டி அதன் மூலம் தமது அதிகாரத்தை காப்பாற்றிக் கொண்டு இருக்கின்றனர். தமிழ் சொலிடாரிட்டி  வரலாற்று பாடங்களின் அடிப்படையிலும் தற்போதைய போக்கின் அடிப்படையிலும் அடக்கப்படும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான திட்டமிடல்களை மேற்கொள்ளுகின்றது. இதன் அடிப்படையிலேயே தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் வேறு -அதன் தலைமைகள் வேறு என நாம் பேசுகின்றோம். எமது செயற்பாடுகளும்  அரசியல் முன்னெடுப்புகளும் அடக்கப்பட்டு கொண்டிருக்கும் மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கும். நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த தாக்குதலை சாக்காக வைத்து இலங்கை மக்கள் மீது ஏவப்படும் அரச அடக்குமுறைகளை நாங்கள் அனுமதிக்க முடியாது. அதற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அடக்கப்படும்  மக்களுகான விடுதலை பெறுவதே தமிழ் சொலிடாரிட்டியின் நோக்கம். மக்கள் மத்தியில் ஒற்றுமையை கட்டுவதை நாம் முதல் நிபந்தனையாக வைக்கின்றோம் சாதி மத, பால், இன பேதமின்றி நாம் ஒடுக்கப்படும் அனைவருக்குமான குரலாக திரளவேண்டும் என்கின்றோம். எமது அனிதிரட்டல் 12% வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மட்டும் சார்ந்த குறுகிய பார்வை உடையதன்று. மாறாக தமிழ் மக்கள் அனைவரையும் ஒரே தளத்தில் ஒன்றிணைப்பது . இதனால் முஸ்லிம்கள் மீது நடாத்தப்படும் தாக்குதல்கள்  ஒட்டுமொத்த ஒடுக்கப்படும் மக்கள் மீதான தாக்குதல் என்றே நாம் கருதுகின்றோம். வலதுசாரிய துவேஷ அமைப்பான பொதுபல சேனா முஸ்லிம் மக்களை குறிவைத்து தாக்கும் பொழுது நாம் அதற்கு எதிராக எமது பலத்தை திரட்ட முன்வருவோம். நாம் எமது திடமான எதிர்ப்பை கொண்டு இந்த துவேஷ நடவடிக்கை முறியடிக்க வேலை செய்வோம். முஸ்லிம் தலைமைகள் போய் அவர்களை காப்பாற்றும் என நாங்கள் தள்ளி நிற்க முடியாது. அந்தத் தலைமைகளை எதிர்த்தும் தான் நாம் ஒன்று சேர வேண்டியிருக்கின்றது . மலையக மக்கள் போராட்டமும் எம்முடைய போராட்டம் தான். மலையகத்தில்  நமது சகோதரர்களை அடக்கும் அதிகாரத்துடன் நாம் இணங்கிச் செல்ல முடியாது.

இவ்வாறு 25 வீத தமிழ் பேசும் மக்களோடு மட்டும் நாம் சுருங்கி நிற்கப்போவதில்லை சிங்கள மக்கள் மத்தியிலும் எமது கோரிக்கைகளோடு இணைந்து வேலை செய்பவரை திரட்ட வேண்டிய தேவையிருக்கின்றது. ஒன்றுபட்ட பலத்தை திரட்டாமல் இலங்கைக்குள் அடிப்படை மாற்றம் எதையும் கொண்டுவந்துவிட முடியாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கின்றோம். சிங்கள மக்கள் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு 20 வீத மக்களைத் திரட்ட முடியாதா என்ன? இதன் சாத்தியம் தான் இலங்கை அரசு உட்பட அதிகார சக்திகளை மிரள வைக்கிறது. இதை எம்மால் சாதித்துக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அதிகாரத்தில் இருக்கும் மிக மோசமான இனவாதிகளுடன் இணக்கத்தை வைத்துக்கொண்டு குளிர்காயும் அதே வேளை சிலர் எம்மைப் பார்த்து நீங்கள் ஏன் சிங்களவர்களோடு வேலை செய்கின்றீர்கள் என கேட்பார்கள். அதற்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. நமது சிங்கள தோழர்களே தமது செயல் பேச்சு மூலம் பதில் சொல்லட்டும். இத்தகைய திசையில் நகர்வதன் மூலம் மாத்திரமே இலங்கை அரசுக்கு சவால் விடும் ஒரு சக்தியை திரட்ட முடியும். இந்த அடிப்படைப் பலத்தில் நின்று கொண்டுதான் ஜனநாயக உரிமைகளை வெல்லுதல், தேசிய உரிமையைப் பெறுதல் என நாம் நகர முடியும். அவ்வாறு ஒரு சக்தியை கட்டி நிறுத்தாதவரை நாம் யார் யாரோ நிறுத்தும் திசைகளில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டியது தான்.  நமக்கான உரிமைகளையும் கோரிக்கைகளையும் வெல்வதற்கு சமரசம்செய்யாத சுயாதீன அமைப்பு ஒன்றை கட்ட வேண்டிய தேவை இருக்கின்றது. இத்தகைய அமைப்பை ஒடுக்கப்படும் மக்கள் சார்ந்தே கட்டமுடியும். அரசுகளின் அபிலாசைகளுக்கு அசைந்துகொண்டு இத்தகைய அமைப்பைக் கட்டுவது பற்றி கற்பனை செய்வதே தவறு. அது மட்டுமன்றி மேற்சொன்ன பிரிவினைவாத கருத்துநிலைகளை அனுமதித்துக்கொண்டு இத்தகைய அமைப்பை கட்ட முடியாது. எமது அரசியல் நிலைப்பாடு சார்ந்து அதை தெளிவுபடுத்தும் முகமாக தமிழ் சொலிடாரிட்டியானது “எமது அரசியல் நிலைப்படு” என்கின்ற புத்தகம் ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றது அதனை வாசிப்பதன் மூலம் நீங்கள் மேலதிக தகவல்களைப் பெற முடியும். உங்கள் அனைவருக்கும் ஏதேனும் கேள்விகள் இருப்பின் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் உங்களுடன் உரையாடுவதற்கு தயாராகவே இருக்கின்றோம்.

நன்றி

ராகவன்