இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் 8வது ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும். யாரை புறக்கணிக்க வேண்டும்.அல்லது இத்தேர்தல் மூலம் வெற்றிபெறும் புதிய ஜனாதிபதியால் மாற்று தீர்வுகள் உண்டா? என்று ஒடுக்கப்பட்ட சமூத்திற்கு பல கேள்விகள் இருக்கும்.
தற்போதைய அறிவிப்பின்படி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் கோத்தபாய ராஜபக்சவும், ஜெ. வி. பி. யின் தலைவர் அனுர குமாரவும் போட்டியிடுகின்றனர். யூ. என். பி. மற்றும் ஸ்ரீ.ல.சு.க. கட்சிகள் இன்னும் தங்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் யார் என அறிவிக்கவில்லை. தற்போதைய நிலையில், 18 கட்சிகள் மற்றும் குழுக்கள் ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பாளர்களை முன்னிறுத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இத்தேர்தலில் ஒரு கோடி 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். இத்தேர்தலுக்காக இந்தமுறை 400கோடி ரூபாய் ஒதுக்கபட்டுள்ளது.
தற்போதய நிலவரப்படி கோத்தபாய மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இரு இனவாத தலைவர்களும் சிங்கள இனவேர்களில் எழுந்து நிற்கின்றார்கள். ஒருவொருக்கொருவர் மாறி மாறி குற்றம் சாட்டுவதைத் தவிர இவர்களிடம் புதிய முலோபாயமோ, அல்லது அனைத்து மக்களுக்குமான மாற்று அரசியல்திட்டங்களோ இல்லை. இவ்வாறு இருக்கும்போது
எந்த அடிப்படையில் இவ்விரு இனவாதிகளுக்கும் தமிழ்மக்கள் வாக்களிப்பது ?
கோத்தபாய என்னும் முன்னாள் பாதுகாப்பு மந்திரியை பற்றித் தமிழ் மக்களுக்குச் சொல்லிதர தேவையில்லை.
கடத்தல், சித்திரவதைகள், பலாத்காரங்கள், பாலியல் வன்முறைகள் , கொலைகள் என்று பல குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே போகலாம். சுய இலாபத்திற்காக தனது சொந்த மக்களையே நசுக்கக்கூடிய ஒரு அடக்குமுறையாளர். இவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பாலும், தேனும் ஓடாது. இரத்த ஆறுகள்தான் ஓடும் என்பதை கடந்த காலத்தில் அவர் செய்த இனவாத அரசியலை வைத்துக் கூறலாம்..
ஐக்கிய தேசிய கட்சியில் யார் போட்டியிட போகிறார்கள், என்று இன்னும்
கட்சிக்குள் முடிவு செய்யவில்லை.
ரணில், கரு ஜெயசூரியா, மற்றும் கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாச ஆகிய மூவரில் யாரேனும் ஒருவர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரணிலை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கு ரி.என்.ஏ கட்சி குறிப்பாக சுமந்திரன் துடி துடிப்பாக இருப்பதை பார்க்கிறோம். ரணிலின் திட்டங்கள் அனைத்தும் கடந்தகாலங்களில் மக்கள் அறிந்ததுதான். மீண்டும் மறப்போம் மன்னிப்போம் என்ற வசனங்களில் தொடரும் அரசியல்.
யார் இந்த “சஜத் பிரேமதாச”? அப்பாவை மிஞ்சிய மகன். இவருடைய தந்தை பிரேமதாச.
ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
அவருக்குப் பிறந்த மகன் சஜித் என்பதல்ல எமக்கு பிரச்சனை. சிங்கள தேசியவாதத்தை வைத்து பிரச்சாரம் முன்னெடுப்பதையே முதன் நோக்காக கொண்டு இயங்குகிறார். போலியான வாக்குறுதிகள் அளித்து வாக்கு வங்கிகளை நிரப்புவதற்காக கையாளும் வித்தைகள் ஒன்றும் தேர்தலில் போட்டியிடும் இவர்களை போன்ற வேட்பாளர்களுக்கு புதிதான விடையமில்லை, இவை இலங்கை வாழும் ஒடுக்கபட்ட மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மேலும் மேலும் பாதிப்பையும் ஏமாற்றத்தையுமே உருவாக்கிகொண்டிருக்கின்றது. கடந்தகால நல்லாட்சி கூட்டரசு முன்வைத்த 100 நாள் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டனவா? அல்லது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? என்றால்
இல்லை, ஐ.எம்.எப் கடனை மட்டும் இலங்கை நம்பியிருக்கிறது. தொடர்ந்தும் கடன்காரரகவே இருக்கும் அவலநிலைதான் தற்போதய இலங்கையின் நிலமை.
மலையக மக்கள் பிரச்சனைகளோ அல்லது சிறுபான்மையினரது உரிமைகளை சார்ந்து மாற்று வழியில் சிந்தித்தார்களா? இல்லை. கடந்த காலங்களிலிருந்து பார்த்து கொண்டிருக்கின்றோம். யுத்தம் முடிந்த பத்துவருட காலத்தில் சிறு நகர்வையாவது தமிழ் பேசும் மக்களுக்கு மேற்கொண்டார்களா?
இவர்களது ஆட்சிகளினால் கேள்விக்குறியில் செல்கிறது தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகள்.
கோத்தபாய மற்றும் சஜித் இருவரும் யார் சிங்கள மக்களின் தலைவர் என்ற போட்டியை மையப்படுத்தி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பிரச்சாரம் முன்னெடுக்கின்றனர். நாட்டின் முளு மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் இவர்களிடம் இருக்கின்றனவா என்றால் இல்லை. ஆகவே இவர்கள் சிங்கள மக்களின் பிரதிநிதிகளும் இல்லை. கடந்த காலங்களில் இலங்கைத் தேர்தலில் இனவாத கட்சிகள் தொடர்ந்தும் ஆட்சிகள் செய்தன. புதிதாக கட்சி பெயர்கள் மாற்றி போட்டியிட்டாலும் முதலாளித்துவ கொள்கைகளை அமுலடுத்துவதே இவர்களுடைய முதன்மை திட்டமாக இருக்கின்றது. இவ்வகையான திட்டத்திற்கு TNA, மற்றும் கிழக்கில் இருக்கும் சிறு இனவாத சக்திகளும் இணைவதற்கு தயாராகி வருகின்றனர். மலையகத் தமிழ்க் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாகக் கூறியுள்ளனர். ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய புதிய அரசியல் கூட்டணிக்கான உடன்படிக்கை இதுவரை கைச்சாத்திடப்படவில்லை.
#யார் இந்த அனுர குமார திஸாநாயக்க?
தேசிய மக்கள் கட்சியில் போட்டியிடுவதற்கு, ஜே. வி. பி. யிலிருந்து களமிறக்கபட்டவர்தான் அனுர..
இடதுசாரிய தோலை கழற்றி முதலாளித்துவ சால்வைகளை அணிந்து திரிகிறது இவருடைய கட்சியான ஜே. வி. பி.
1994ல் சந்திரிக்கா குமாரதுங்க ஆட்சியிலமர்த்துவதற்கும், 2005 மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் அமர்த்துவதற்கு 2015 மைத்திரிபால சிறிசேனவை நிறுத்துவதற்கும் முன்னின்று உழைத்தவர்கள் ஜே வி பியினர். இவர்கள்தான் நாட்டின் இனவாத சக்திகளுக்கு முழு ஆதரவாக இருந்துவந்தவர்கள். இதன் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கான பிரச்சினைகள் தீர்வு கிடைக்கும் என்று கனவிலும் கூட நினைக்கமுடியாது. இவர்கள் வரலாற்றுரீதியில் செய்த தவறுகளை மறைக்கவும் முடியாது.
வடக்குகிழக்கை உடைப்பதற்கு இவர்கள் செய்த துரோகங்கள் மறக்கமுடியுமா? இன்றும் அவர்களுடைய நிலைப்பாடு அதுவே., ஜே. ஆர் ஜெயவர்த்தன வழங்கிய வடகிழக்கு இணைப்பை கூட இவர்கள் முறியடித்தனர், ஜெயவர்த்தனாவை விட படு மோசமான நடவடிக்கைகளை செய்த இவர்கள், இன்று வடகிழக்கு மக்களை முதலாளித்துவ வர்க்க அரசியலுடன் இணைக்க முயட்சிக்கின்றனர்.
இவர்கள் நடத்தும் நாடகங்களை நன்றாக மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. தற்போதய பொருளாதார நெருக்கடிகளுக்கு இவர்கள் வைக்கும் திட்டங்கள் பாதிக்கபட்ட மக்கள் சார்ந்தனவாகவோ அல்லது போராட்ட உரிமைகள் சார்ந்தனவாகவோ இல்லை. ஊழலற்ற பசுமையான நாட்டை உருவாக்குவார் என்று காலி முகத்திடலில் கூறிய இவருடைய வாக்குறுதி எவ்வாறு சாத்தியப் படப் போகிறது.?
முதலாளித்துவத்துடன் சேர்ந்து கொண்டு கூடவே இருக்கும் இந்த ஊழலை எப்படி மாற்றுவார்கள். இவ்வாறான கேள்விகள் தெற்கில் போராடும் மாணவர்களாலும் கேட்கப்பட்டன. ஆனால் அதற்கு அனுரவிடம் பதிலில்லை.. விஜயவீர காலத்திலிருந்து இவர்கள் பேசும் போலித்தனமான சோசலிசம் இன்று ஏமாற்று வித்தையாக மாறிவிட்டது, இவர்களது இடது சாரிய சாயங்கள் வெளுக்கின்றன. சிறுபான்மை இனமக்களின் பிரச்சனைகளை முன்னெடுக்க இவர்களுடைய சக்திகளை நாம் பயன்படுத்தமுடியாது என்பதை தெட்டதெளிவாக பார்க்கமுடிகின்றது.
ஈஸ்டர் குண்டுவெடிப்பு பின்னதாக இலங்கையில் ஜனநாயக சூழல் மாற்றமடைந்துவிட்டது பல போராட்டங்கள் நசுக்கபட்டுவிட்டன. கோத்தபாய இதை சாதகமாக பயன்படுத்தி நாட்டின் பல பாகங்களில் தனக்கான சக்திகளை திரட்டிகொண்டார். பயங்கரவாதத்தை நாம்தான் முற்றாக ஒழித்தோம், நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என்றால் எம்மால்தான் முடியும் என்று இவரது இனவாத பிரச்சாரம் தொடர்கிறது.
இத்தேர்தலில் தமிழ் தலைமைகளின் நிலைப்பாடு என்ன?
ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்று வருடங்கள் கடத்திவிட்டார்கள். சம்பந்தர் ஐயாவின் நிலைப்பாடு ஒன்றும் புதிதல்ல, இருகட்சிகள் வந்தாலும் அடிவிழும், இரண்டு அடி
குறைத்து வாங்கிதாறேன் என்று மட்டும்தான் அவர் கொள்கை விளக்கம் இருக்கிறது.
கஜேந்திரகுமார் கட்சியின் நிலைப்பாடு ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிப்ப நோக்கி போவதாகப் பேசபடுகிறது.
வாக்கு புறக்கணிப்பதனால் மட்டும் பாதிக்கபட்ட சமூகம் பலமான சக்திகள் என்று நிரூபிக்கமுடியாது. அவ்வாறு புறக்கணித்தாலும் அதற்கான வேலைத்திட்டங்களோ அல்லது மக்களுக்கான அரசியல் தீர்வுகள் மற்றும் மக்களை அரசியலமயமாக்கபடுதல் என்பன முன் வைக்கப் படவில்லை. இன்றுவரை மக்களின் அரசியல் குரல் பலவீனமாக இருக்கின்றது. தற்போதய காலகட்டத்தில் இலங்கை தேர்தலில் மறைமுகமாக ஆட்டத்தை நகர்த்துபவர்கள் சைனா மற்றும் அமெரிக்கா. இவ்வாறான முதலாளித்துவ சக்திகளிடம் இருந்து நமது உரிமைகளை வென்றெடுக்க எமக்கான போராட்ட சக்திகளின் பலம் அவசியமாக இருக்கிறது. இந்த வகையில் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமை உட்பட இலங்கையிலிருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வை நோக்கி நகரும் ஐக்கிய சோசலிச கட்சி பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டும். அத்தகைய கொள்கை அடிப்படையிலான அமைப்புக்கள் பலப்பட நாம் முன்வத்ந்து வேலை செய்ய வேண்டும். மக்களின் அடிப்படை தேவைகளான மருத்துவ வசதிகள், கல்வி,வேலைவாய்ப்பு இவ்வாறான திட்டங்களோடு, தமிழ்பேசும் மக்களது உரிமைகளையும் நாம் சேர்த்து போராட்டத்தை பலப்படுத்துவதன் மூலமே நாம் வெற்றி நோக்கி நகர முடியும்.
தொடரும்.
மதன்
தமிழ் சொலிடாரிடி