கொரோனாவை எதிர்த்து போரிடவும், உழைக்கும் மக்களை பாதுகாத்திடவும் தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) அவசர கால வேலைத்திட்டம்:

baby and mom during a coronavirus pandemic

கொரோனா தொற்றுப் பரவலும், அதிவேக பொருளாதார சரிவும் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், முதலாளித்துவமோ, ஆளும் வர்க்கமோ இப்புவியின் அறுதிப்பெரும்பான்மை மக்களை பாதுகாக்கும் என்று நம்பிக் கொண்டிருக்க முடியாது என்று தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி (CWI) கருதுகிறது.

முதலாளித்துவ அரசுகள் தற்போது எந்த நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அதன் இறுதி நோக்கம் தங்களது அதிகாரத்தை தக்கவைப்பதை நோக்கியே இருக்கும். இன்றோ, நாளையோ, என்றாவது ஒருநாள் இந்நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்களின் மீதும், ஏழை மக்கள் மீதும், நடுத்தர மக்களின் மீதும் சுமத்தவே அவை முயலும். ஒரு சோஷலிச பதிலடியை கொடுக்க வேண்டியது அவசியம் என்று CWI கருதுகிறது. இந்நோய் தொற்றை தோற்கடிக்கவும், மக்களின் வாழ்க்கை தரத்தைப் பாதுகாக்கவும் கூடிய ஒரு வேலைத்திட்டத்தை உங்கள் முன் விவாதத்திற்காகவும், செயல்பாட்டிற்காகவும் நாங்கள் சமர்ப்பிக்கின்றோம். இது, தொழிலாளர் இயக்கங்களும், சமூக அமைப்புகளும், பல்வேறு நாடுகளில் உள்ள சுகாதார மற்றும் மருத்துவ அமைப்புகளும் விவாதிக்கக் கூடியதும், – உள்ளூர் சூழல்களில் தங்களது தேவைகேற்ப வேறு கோரிக்கைகளை இணைத்தும் -நிறைவேற்றிக் கொள்ளக் கூடியதுமான பரந்துபட்ட கோரிக்கைகளை தழுவிய ஒரு சர்வதேச வேலைத் திட்டமாகும்.

பாதுகாக்கப்பட வேண்டியது உழைக்கும் மக்களே!  முதலாளித்துவ இலாப அமைப்பு அல்ல!

கொரோனா நோய் உலகளாவிய மருத்துவ, பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை தோற்றுவித்திருக்கிறது. பலகோடி பேர் தொற்று நோயுடன் சேர்த்து, அதிவேகமாக தீவிரமாகி வரும் பொருளாதார நெருக்கடியின் அச்சுறுத்தலையும் சந்தித்து வருகின்றனர்.

ஈகுவேடார் நாட்டின் மிகப்பெரிய நகரான குவாயாகில் மாநகரை உள்ளடக்கிய குவாயாஸ் மாகாணம், நடக்கக் கூடிய கொடூரத்தை படம்பிடித்துக் காட்டுகிறது. ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், குவாயாஸ் நகரில் 1000 பேர் இறக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6,700 பேர் மடிந்தனர். குவாயாகில் நகரில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடம் கிடைக்காமல் 5 நாட்கள் வரை வீட்டில் வைத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருப்பதோடு, சில பிணங்கள் தெருக்களில் கைவிடப்படும் அளவுக்கு அங்கு எண்ணற்ற மக்கள் இறந்துக் கொண்டிருக்கின்றனர்.

கொரோனா தொற்றை தோற்கடிக்கவும், வறுமையில் மூழ்கும் அச்சுறுத்தலுக்கு எதிராகவும் அவசர நடவடிக்கை உடனடியாக தேவைப்படுகிறது. என்ன செய்ய முடியும்?

பல நாடுகளில், அனைவருக்கும் கிடைக்கக் கூடிய தாராளமான, தரமான தேசிய சுகாதார அமைப்பு இல்லாமல் போனதாலும், ஐரோப்பா உள்ளிட்ட பல பகுதிகளில் வெகுஜன சுகாதார அமைப்புக்கும் மருத்துவமனைகளுக்குமான செலவை அரசு குறைத்திருந்ததாலும் தொற்று நோயின் பாதிப்பு தீவிரமாகியிருக்கிறது. உலகின் செல்வந்த நாடான அமெரிக்காவின் நிலையே ”தலையிடா சந்தையால்” ஒட்டு மொத்த மக்களுக்குமான சுகாதார வசதியை அளிக்க முடியாத நிலைக்கு ஒரு சாட்சியாகும்.

பெரும்பாலான நாடுகளில் ஏழைகளும், வயதானோரும், நீண்டகாலமாக உடல்நிலை சரியில்லாதோரும் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு, லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒரு புதிய பேரழிவை ஏற்படுத்துவதற்கான அச்சுறுத்தலை இத்தொற்று நோய் உண்டாக்கியிருக்கும்  அதேவேளை, வறுமையாலும், மலேரியா, காசநோய், டைப்பாய்டு உள்ளிட்ட நோய்களால் ஏற்கனவே உழன்றுக் கொண்டிருக்கும் சில நாடுகளில் இந்நோய் காட்டு மிராண்டி நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

உழைக்கும் மக்கள் ஏற்கனவே உலக ஆளும் வர்க்கங்களும், முதலாளித்துவ அரசுகளும் முதலாளித்துவ இலாப அமைப்பை காப்பாற்றுவதையும், அவர்களது மோசமான நடவடிக்கைகளையும் பார்த்திருக்கின்றனர். ஆகவே, தீவிரமாகி வரும் இந்த மருத்துவ மற்றும் பொருளாதார நெருக்கடிகளை, உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையோ, ஏழை மக்களின் நலன்களையோ, அல்லது நடுத்தர மக்களின் நலன்களையோ கருத்தில் கொண்டு சமாளிக்க முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் முன்வருவார்கள் என்பதையோ-  இந்நெருக்கடியை சமாளிப்பதற்கான திறன் அவர்களுக்கு உண்டு என்பதையோ உழைக்கும் மக்களால் நம்ப முடியாது.

கொரோனா தொற்று நோயால் உண்டாக்கப்பட்ட நெருக்கடிக்குப் பதிலடியாக ஒரு சோஷலிச வேலைத்திட்டத்தைத் தழுவி, தொழிலாளர்களின் சுயாதீன நடவடிக்கைகளைக் கட்டியெழுப்ப தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி (CWI) இத்தருணத்தில் போராடுகின்றது. அதாவது, ”இந்நெருக்கடியில் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும், நாம் ஒவ்வொருவரும் தியாகங்களை செய்ய வேண்டும்” என்று முதலாளித்துவ அரசுகள் முன்வைக்கும் கோரிக்கைகளை கடுமையாக எதிர்க்கின்றது. தொற்று நோய் தாக்குதல்களை சமாளிக்க தயார் நிலையில் இல்லாத, அதிலும் குறிப்பாக, சமீப ஆண்டுகளாக சுரண்டலை தீவிரப்படுத்தியதன் மூலம் கொள்ளை இலாபம் அடைந்த, சமூகத்தை இயக்கிக் கொண்டிருக்கும் ஆளும் வர்க்கங்களே விலையை கொடுக்க வேண்டும் என்று CWI வாதிடுகிறது.

நோயுற்றோருக்கு சிகிச்சையளிக்கவும், இந்நோய் தொற்றின் பன்னோக்கு பக்கவிளைவுகளை சமாளிக்கவும் முழு மனதோடு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையையும் CWI ஆதரிக்கின்றது. ஆனால், முதலாளித்துவ அரசுகள், மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இல்லாததால், தடுப்பு நடவடிக்கைகளின் மீதான, சுகாதார பணியாளர்களையும், உழைக்கும் மக்களின் உண்மையான பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய தொழிலாளர்களின் கட்டுப்பாட்டைக் கோருகின்றோம்.

தொழிற்சங்கங்களோ அல்லது இடது சாரி கட்சிகளோ, குறிப்பிட்ட கோரிக்கைகளுக்காக அரசுடனும் முதலாளிகளுடனும் பேரம் பேசும் சூழ்நிலைக்கும், முதலாளிகள் தனது அதிகார அமைப்பை காப்பாற்றிக் கொள்ள முயலும் தருவாயில் அவர்களுடன் கைக்கோர்ப்பதற்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உண்டு என்று CWI நம்புகிறது.

இந்த அவசர சூழ்நிலையில், உழைக்கும் மக்களின் ஸ்தாபனங்கள், குறிப்பாக தொழிற்சங்கங்களும். இடதுசாரி கட்சிகளும், இலவச மருத்துவ சிகிச்சைகளுக்காக போராட வேண்டும். கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகளையும், குணப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் கண்டறியும் முன்னெடுப்பிற்கு அழுத்தம் தர வேண்டும். மக்களின் வாழ்க்கைத் தரம் பறிபோகாமல் பாதுக்கும் அரணாக விளங்க வேண்டும்.

கதவடைப்பு காலங்களில் பணிக்கு செல்ல இயலாதவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்கவும், தேவையான அளவு உணவும் மருத்துவ பொருட்களும் கிடைப்பதை உறுதி செய்யவும், சமூகத்தின் ஏழை மக்களைப்  பாதுகாத்திடவும் உடனடி நடவடிக்கைகளை எடுக்கும்படி CWI கோருகிறது. முக்கியமான கோரிக்கைகளை வென்றெடுக்கும் பொருட்டு, வெகுஜன ஆதரவை திரட்ட தொழிற்சங்கங்கள் சுயாதீனமான நடவடிக்கைகளில் இறங்க அழைப்பு விடுக்கும் அதே நேரம், பரந்த அளவிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடிய சமூக அடித்தளத்திலிருந்து – பணியிடங்கள், சமூக நிறுவனங்கள் போன்றவற்றிலிருந்து – வெகுஜன இயக்கங்களை கட்டியெழுப்பவும், நிகழ்வுகளின் மீது ஜனநாயக கடிவாளங்களையும், கட்டுப்பாட்டையும் நிறுவுவதற்கான முன்னெடுப்பையும் உருவாக்க சோஷலிஸ்டுகள் முயலுவார்கள். தொழிலாளர் இயக்கத்தை உழைக்கும் மக்களுக்கான ஒரு சக்திவாய்ந்த போராட்ட சக்தியாக புத்துயிர் பெறச் செய்வதற்கும், உலகம் முழுக்க சோஷலிசத்துக்கும் இது ஒரு அடிப்படையாக இருக்கும்.

தொற்று நோயையும், உருவாகி வரும் பொருளாதார நெருக்கடியையும் தோற்கடிப்பதற்கான ஒரு சோஷலிச வேலைத்திட்டத்திற்கான மையப்புள்ளிகள் பின்வரும் பரந்துபட்ட கோரிக்கைகளை தழுவியவையாக இருக்கும் என்று CWI கருதுகிறது:

மருத்துவ வசதியும் சிகிச்சையும்

  • தேவைப்படும் அனைவருக்கும் இலவசமான தரமான சிகிச்சை வேண்டும். முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் யாவும் தேவைப்படும் இடத்தில் அல்லது கோரப்படும் போது இலவசமாக விநியோக்கிக்கப்பட வேண்டும்.
  • சுகாதார சேவைகளுக்கும், சமூக பாதுகாப்புக்கும் ஒதுக்கப்படும் நிதியின் அளவு உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும். தனியார் மருத்துவ கட்டமைப்புக்களை உடனடியாக அரசுடமையாக்குவதுடன், மருத்துவமனைகள், பணியாளர் உள்ளிட்ட பொது சுகாதார வசதிகளை மிகப்பெரிய அளவுக்கு விரிவாக்க திட்டமிடல் வேண்டும்.
  • களத்தில் பணிப்புரியும் மருத்துவப் பணியாளர்களுக்கும், அவசர பிரிவு உள்ளிட்ட அனைத்து துணைப்பிரிவுகளின் பணியாளர்களுக்கும் போதிய பாதுகாப்பு வேண்டும்.
  • மக்களது தேவைகளை தீர்க்கக் கூடிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் அதிவிரைவான உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கும், அவசர-கால ஆராய்ச்சிக்கும் உத்திரவாதமளிக்கும் பொருட்டு, பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களையும் மற்றும் அவை தொடர்பான இதர நிறுவனங்களையும் அரசுடமையாக்க வேண்டும்.
  • அத்தியாவசிய மருந்துப் பொருட்களையும், மருத்துவ உபகரணங்களையும், பாதுகாப்பு உடைகளையும் இலாபத்துக்காக அல்லாமல் தேவைக்காக தயாரிக்கும் பொருட்டு, போர்க்காலங்களை போன்றே தொற்றுநோய் காலங்களிலும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் உற்பத்தி கட்டமைப்புகளை தொழிலாளர்களின் கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்தின் கீழ் உடனடியாக சமூகவுடமையாக்கி, அவசரகால மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
  • கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், அம்மருந்து உடனடியாக உலகம் முழுக்க இலவசமாக விநியோகிக்கப்பட வேண்டும்.

தொழிலாளர்களின் பாதுகாப்பு

  • பணிப்புரிகிறார்களா இல்லையா என்பதை கணக்கில் கொள்ளாமல், அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு பாதுகாப்பும், வேலைக்கான உரிமைகளும் வழங்கப்பட வேண்டும்.
  • வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான செலவை எந்த தொழிலாளியும் சுமக்கக் கூடாது. கதவடைப்பால் பாதிக்கப்பட்ட, சுய தனிமைப்படுத்தலை கடைபிடிக்க வேண்டிய, தன்னை சார்ந்திருக்கக் கூடியவர்களை பார்த்துக்கொள்ள – அல்லது குழந்தைகளை கவனிக்க வேண்டிய நிலையில் இருப்பதாலோ அல்லது போக்குவரத்து முடங்கியிருப்பதாலோ பணிக்கு வர இயலாத தொழிலாளர்களுக்கு, -இந்நெருக்கடி நீடிக்கும் வரை முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதோடு, பணிக்கு வர இயலாத நாட்களை ஊதியமில்லா விடுப்பு நாட்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • சுயதொழில் புரிபவர்கள், வரையறுக்கப்பட்ட மற்றும் வரையறுக்கப்படாத ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் முகமைப் பணிகளில் உள்ளோரில் சுய-தனிமைப்படுத்தலால் அல்லது கதவடைப்பால் பாதிக்கப்பட்டோருக்கு உயிர்வாழ்வதற்கு தேவையான உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
  • வழக்கமான சலுகைகளை உடனடியாக ஏற்பாடு செய்ய முடியாத இடங்களில் கதவடைப்புக் காலங்களில் தொழிலாளர்களுக்கும், வேலை வாய்ப்பற்றோருக்கும், ஏழை மக்களுக்கும் உயிர்ப்பிழைத்திருக்க தேவையான பொருட்களை வாங்கி வைத்திருக்க வழிசெய்யும் பொருட்டு, சிறப்பு மானியங்களை அதிவிரைவாக வழங்கிட வேண்டும்.
  • இந்நெருக்கடியை காரணம் காட்டி உற்பத்தி மற்றும் தளவாட துறைகளைச் சார்ந்த பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்வதோ, ஊதியமற்ற விடுப்புக்கள் அறிவிக்கப்படுவதோ அல்லது பணிச்சூழல்களில் தொழிலாளர் விரோத மாற்றங்களை புகுத்துவதோ கூடாது. அத்தகைய நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் தேர்வு செய்த பிரதிநிதிகளின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.
  • தொழிலாளர்கள் வருவாய் இழப்பு மற்றும் வேலையிழப்பதற்கான அச்சுறுத்தல் நிலவும் நிறுவனங்களை தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாடு மற்றும் மேலாண்மையின் கீழ் அரசுடமையாக்க வேண்டும். நிறுவன உரிமையாளருக்கான நிவாரணத்தை, அவசியம் என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில் மட்டுமே வழங்க வேண்டும். இத்தகைய நிறுவனங்களில் நீண்டகால மீட்சிக்கு தேவையான திட்டங்கள் விவாதிக்கப்பட்டு அமல்படுத்தப்படும் அதேவேளை, தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்குவதற்கு வேண்டிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
  • உள்ளூர் சிறுதொழில்களுக்கு உதவ, உள்ளாட்சி அதிகாரிகளின் வாயிலாக அரசு ஒதுக்கீடு செய்யும் இடர்பாட்டு நிதி, தொழிலாளர்களையும், தொடர்புடைய சமூகக் குழுக்களையும் உள்ளடக்கிய கமிட்டிக்களின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட வேண்டும்.
  • அமேசான், DHL, UPS போன்ற பெரும் தளவாட நிறுவனங்களை, தபால் சேவைகள் மற்றும் சிறுதொழில்களோடு ஒத்துழைத்து, பெரும்பான்மை மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த விநியோக சேவைகளை வழங்கும் பொருட்டு அரசுடமையாக்கப்பட்டு, நல்ல ஊதியம் மற்றும் பணிச்சூழல்களுடனும் – சேவை மனப்பான்மை கொண்ட ஒப்பந்தமில்லா நிரந்தரப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி இயக்கப்பட வேண்டும்.
  • தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் ஜனநாயகப்பூர்வமாக இயங்குவது உள்ளிட்ட தொழிலாளர்களின் அமைப்பு சார்ந்த உரிமைகள் எதையும் பறிக்கக் கூடாது.
  • ஒவ்வொரு பணியிடங்களிலும் பாதுகாப்புக்கு உத்திரவாதமளிக்கும் பொருட்டு, கூட்டு நடவடிக்கைகளுக்கு உடன்படக் கூடிய அனைத்து சங்க பாதுகாப்பு மற்றும் சுகாதார கமிட்டிக்கள் இருப்பதை தொழிற்சங்கங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சமூகப்பாதுகாப்பு

  • தேவைப்படும் இடங்களில், அத்தியாவசியப் பொருட்களை சேகரிப்பது, நியாயமான விலைகளில் அவற்றை விநியோகிப்பது, கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கும், பதுக்குபவர்களுக்கும் எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பது போன்ற பணிகள் ஜனநாயகப்பூர்வமான சுய-ஒருங்கிணைப்பு செய்யப்படுவதை முன்நின்று ஊக்குவிக்க வேண்டும்.
  • தேவைப்படும் இடங்களில், உணவு மற்றும் மருந்து பொருட்களையும், அத்தியாவசிய பண்டங்களையும் விநியோகிப்பதற்கான சமூக நிவாரண மையங்களை அமைக்கவும், பொது சமையல்களுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இலவச குடிநீரையும் பாதுகாப்பான கழிவறைகளையும் போதிய அளவுக்கு ஏற்படுத்தி கொடுக்க உடனடி நடவடிக்கை தேவை. இத்தகைய சமூக விநியோகங்களில் ஊழலையும், விலையேற்றத்தையும், இதர ஏமாற்று வேலைகளையும் தடுக்கும் பொருட்டு, குடியிருப்போர் சங்கங்கள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சமூகக் குழுக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் இவற்றை இயக்க வேண்டும்.
  • பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் இடங்களில், வறிய குடும்பங்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்களின் குழந்தைகளுக்கு தரமான அங்கன்வாடி மையங்களை, தகுந்த பாதுகாப்போடு, கல்விப் பணியாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் உருவாக்க வேண்டும். பள்ளிகளில் வழங்கப்படும் உணவுகளை சமுதாயம் மற்றும் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்து வழக்கம் போல் வழங்கிட வேண்டும்.
  • ஊரடங்கால் போக்குவரத்து முடங்கியிருக்கும் தருணங்களில், அத்தியாவசிய பணியாளர்கள் வேலைக்கு செல்லவும், வீடு திரும்பவும் சமூக இடைவெளியை பின்பற்றி பயணிக்கும் வண்ணம் சிறந்த போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தருவதோடு, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பூரண பரிசோதனைகளையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டும்.

வீட்டுவசதி

  • கொரோனா வைரஸ் காரணமாக யாரும் வீட்டை இழந்தவர்களாகி விடக்கூடாது; இந்நெருக்கடி காலங்களில் வீட்டை காலி செய்வதோ, ஜப்தி செய்வதோ கூடாது.
  • வேலையிழந்தோருக்கும், வருவாய் இழந்தோருக்கும் கடன் தவணை, வாடகை, சேவை வரிகள் உள்ளிட்டவற்றை, இந்நோய் தொற்று காலம் வரை தள்ளுபடி செய்ய வேண்டும், அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைத்து, பின்னர், ஏற்புடையது என ஜனநாயகப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளால் நிர்ணயிக்கப்படும் தொகையை மட்டும் நெருக்கடி தீர்ந்த பின் வசூலிக்க வேண்டும்.
  • வருவாய் இழப்பையும், வாடகைச் செலவையும் முழுவதுமாக ஈடுசெய்யக் கூடிய வீட்டுவசதி நலத்திட்டங்களை அரசு உருவாக்க வேண்டும்.
  • உண்மையாகவே உதவி தேவைப்படும் சிறிய வீட்டு உரிமையாளர்களுக்கு, ஜனநாயகப்பூர்வமாக இயங்கும் உள்ளாட்சி அமைப்புக்களின் மூலம் அரசின் நெருக்கடி கால நிவாரண நிதியை வழங்கிட வேண்டும்.
  • உள்ளாட்சி அமைப்புகள் காலியாக உள்ள வீடுகளை கையகப்படுத்தி, வீடற்றோரை குடியமர்த்த வேண்டும். தங்கும் விடுதிகளைக் கூட அவசரகால குடியிருப்புக்களாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • பல ஆண்டுகளாக தனியார் வீட்டு உரிமையாளர்களும், கட்டுமான நிறுவனங்களும், பேராசைப்பிடித்த சமூக நிலக்கிழார்களும் உழைக்கும் வர்க்கத்தை சுரண்டி கொள்ளை இலாபம் அடைந்துள்ளனர். வீட்டு வசதிக்கான போதாமைக்கும், அநியாயமான குடியிருப்பு சூழல்களுக்கும், தாறுமாறான வாடகைக்கும் முடிவுகட்ட, அரசு சார்பில் வெகுஜன வீட்டுவசதி கட்டுமான திட்டங்களும், நியாயமான வாடகையும், பாதுகாப்பான குடியமர்வும் தேவை.

ஜனநாயக உரிமைகள்

  • கொரோனா தொற்றுக்கு எதிரான போர் என்ற பெயரில் அரசு வன்முறைகளும், காவல்துறை ஒடுக்குமுறைகளும் நடக்க விடக்கூடாது. ஜனநாயக உரிமைகளை தாக்குதலுக்கு உள்ளாக்குவதும், ஏதேச்சதிகார சட்டங்களை இயற்றுவதும் நடக்க விடக்கூடாது.
  • கருத்துச் சுதந்திரமும், மக்கள் கூடுவதற்கான உரிமையும், பத்திரிகை மற்றும் ஊடக சுதந்திரமும் வேண்டும். வைரஸை எதிர்த்து போராடும் அதேவேளை, அடிப்படை ஜனநாயக உரிமைகள் அனைத்தும் பாதுக்காக்கப்பட வேண்டும்.
  • நோய் தொற்றையும் அதன் தாக்கத்தையும் தணிக்க மேற்கொள்ளப்படும், பொது இடங்களில் கூட்டம் கூடுவது, போராட்டங்கள் நடத்துவது, சிறப்பங்காடி விநியோகத்தை நிர்வகிப்பது போன்ற அவசரகால நடவடிக்கைகள் அனைத்தையும் ஜனநாயகப்பூர்வமான தொழிற்சங்கங்களின் மேற்பார்வைக்கு உட்படுத்த வேண்டும்.

முதலாளித்துவம் இலாபத்துக்காக இயங்குவது- மக்களின் தேவைக்காக இயங்குவது அல்ல

சுகாதாரத்திலும், இதர பொதுச் சேவைகளிலும் ஏற்பட்டிருக்கும் இந்நெருக்கடிக்கு காரணமானவர்களான முதலாளித்துவ-சார்பு அரசியல்வாதிகள் இதனை சமாளித்துவிடுவார்கள் என்று மட்டும் நம்பிவிடவே கூடாது. உலகம் முழுக்க கோடிக்கணக்கான மக்களுக்கு பொதுசுகாதார வசதியை அளிக்க முடியாத ஒரு அரசியல் அமைப்புக்கு தான் அவர்கள் வக்காலத்து வாங்கி, பாதுகாத்து வருகின்றனர். வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் உட்பட பெரும்பாலான நாடுகளில், தனியார்மயமாக்கத்தின் மூலமாக முதலாளிகள் சுகாதாரத்துறையில் இலாபத்தை குவிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தரும் பொருட்டு, தொடர்ச்சியான சிக்கன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கதவடைப்புக் காலத்திலும், சில நாடுகளில், சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத இடங்களில் கூட அத்தியாவசியமற்ற தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன. பிரிட்டனின் கட்டுமான துறையிலும் இதே அவலநிலை நிலவுகின்றது.

  • முழு ஊதியத்துக்கான போராட்டத்தோடு சேர்த்து, பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்காகவும், தொழிற்சங்கங்கள் தேசிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். பொதுவிடங்களிலும், பணியிடங்களிலும் மக்களுக்குத் தேவையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கோரி வேலை நிறுத்த நடவடிக்கையிலும் அவை இறங்க வேண்டும்.
  • கதவடைப்பால் முடங்கிக் கிடைக்கும் பொருளாதாரத்தை மீண்டும் துவக்கி, பொருளாதார வீழ்ச்சிக்கான அச்சுறுத்தலை முறியடிக்க அவசரத் திட்டங்கள் வரையப்பட வேண்டும். ஆனால், இத்திட்டங்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டுமே ஒழிய, முதலாளிகளின் இலாபத்தை நோக்கமாக கொண்டிருக்கக் கூடாது. அதிபர் ட்ரம்பும், இதர உலக தலைவர்களும் பொருளாதாரத்தை விரைவாக மறுத்துவக்கம் செய்ய கொடுக்கும் அழுத்தம் இலாபத்தையும், அரசியல் ஆதாயத்தையும் நோக்கமாக கொண்டது. நவம்பர் மாத அமெரிக்க தேர்தலின் மீதே ட்ரம்பின் கண்கள் உள்ளன. நிதியமைப்பிலும், பங்கு சந்தை சூதாட்டத்திலும் ஈடுபடாத முதலாளிகளின் இலாபங்கள் தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பிலிருந்தும், உற்பத்திப் பண்டங்களின் விற்பனையிலிருந்தும் வருகின்றன. கொரோனா தொற்றிற்கு இதுவரை தடுப்பு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாத நிலையிலும், தனது தொழிலாளர்களும், பரந்த மக்கள் தொகையும் தொற்றுநோயின் புதிய அலையில் சிக்க நேரிடும் என்பதைப் பற்றி கவலை படாமல், பல முதலாளிகள் பொருளாதாரத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மறுத்துவக்கம் செய்து தங்களின் இலாப வேட்டையை மீண்டும் துவக்க விரும்புகின்றனர்.
  • தொழிலாளர் நலனை நோக்கமாக கொண்ட மறுதுவக்க திட்டங்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் தேவைப்படுகின்றன. உற்பத்தியையும் வணிகத்தையும் அல்லாமல், அத்தியாவசிய தேவைகளைக் கருத்தில் கொண்டு, தொழிற்சங்கங்களாலும், உழைக்கும் வெகுஜனத்தாலும் அத்திட்டங்கள் ஜனநாயகப் பூர்வமாக வரையப்பட வேண்டும். வாழ்க்கைத் தரத்தை தக்கவைத்து, மேலும் உயர்த்தும் அதேவேளை, இதற்கு முன் இரக்கமின்றி புறக்கணிக்கப்பட்ட சமூக மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளை பூர்த்தி செய்வதையும் அத்திட்டங்கள் நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்.
  • இத்தொற்று நோயிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் பொருட்டு, உழைக்கும் மக்கள், மருத்துவ நிபுணர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோரின் பிரதிநிதிகளை கொண்ட குழுவை அமைத்து, என்ன நடந்தது என்பதை குறித்த ஒரு ஜனநாயகப் பூர்வமான விசாரணை நடத்தப்பட வேண்டும். எதிர்கால தொற்று நோய்களை சமாளிப்பதற்கான திட்டங்களை தயாரிக்கவும், கொரோனா தொற்று நோயின் தாக்கத்தை தீவிரமாக்கிய சேவைகளை வெட்டும் கொள்கைகளுக்கும், அரசியல் முடிவுகளுக்கும், தயாரிப்பின்மைக்கும் காரணமானவர்களை மக்களின் முன் நிறுத்தி தண்டிக்கவும் இந்த விசாரணை அவசியமாகும்.

முதலாளித்துவத்தால் உழைக்கும் மக்களை காப்பாற்ற முடியாது – தொழிலாளர்களின் மாற்றுத்தீர்வை கட்டியெழுப்புங்கள்

 இலாபத்தை முதன்மைப்படுத்தி, போட்டியை அடிப்படையாகக் கொண்டு, மீண்டும் மீண்டும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் இந்த முதலாளித்துவ சந்தை முறையால் சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்பதை இந்நெருக்கடி மீண்டும் காட்டியிருக்கிறது. அதனால் தான் அவ்வப்போது அரசு தலையிட்டு, பெரும் நிறுவனங்களுக்கும், பெரும் செல்வந்தர்களுக்கும் மானியங்களையும், ஊக்கத்தொகைகளையும், வரிச்சலுகைகளையும் வாரி வழங்க வேண்டியிருக்கிறது.

ஆனால் பெருந்திரளான மக்கள், இத்தலையீடு மக்களின் நலனுக்காக இருக்க வேண்டும் என்றும், பெரும் நிறுவனங்களின் இலாபத்துக்காக இருக்கக் கூடாது என்றும் விரும்புகின்றனர். இதை அடைவதற்கான ஒரே வழி, பெரும்பான்மை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய, உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான ஜனநாயக சோஷலிச திட்டமிடுதலை அமுல்படுத்துவதே.

இந்நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கான விலையை யார் கொடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வியுடன் மக்களின் வாழ்க்கைத் தரத்தை குறைக்க முதலாளிகள் முயன்று வருகின்றனர். முதலாளிகள் எழுப்பிவரும் இந்த கேள்விக்கான பதில் ஜனநாயக சோஷலிச திட்டமிடுதல் தான் என்று CWI உறுதியாக நம்புகிறது. தனித்தனியாகவும், நிறுவனங்களின் மூலமாகவும் பெரும் இலாபத்தை அடைந்து அதை ஒளித்து வைத்திருக்கும் முதலாளிகளே இவ்விலையை கொடுக்க வேண்டுமே தவிர, உழைக்கும் வர்க்கமோ, ஏழைகளோ அல்லது ஓய்வூதியதாரரோ அல்ல என்பதை தொழிலாளர் இயக்கங்கள் மிகத்தெளிவாக கூற வேண்டும். மேலும், அதிகரித்து வரும் அரசின் தலையீடுகள், முதலாளித்துவத்தால் இந்நெருக்கடியை சமாளிக்க இயலவில்லை என்பதை அம்பலப்படுத்துகின்றன. பொருளாதாரங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் பெரும் நிறுவனங்களையும், நிதி நிறுவனங்களையும், வங்கிகளையும் சமூகத்தின் பெருந்திரளான ஆதரவோடு, உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாடு மற்றும் மேலாண்மையின் கீழ் சமூகவுடமையாக்கி, நமக்கான முடிவுகளை நாமே மேற்கொள்ள வழிவகை செய்யும் தொழிலாளர் அரசுகளே இப்போதைய தேவை. இழப்பை நிரூபித்தால் மட்டுமே சமூகவுடமைக்கான நிவாரணத்தை முதலாளிகளுக்கு வழங்க வேண்டும்.

இதனை சாதிக்க, பெரும் நிறுவனங்களின் ஆதரவு கட்சிகளுக்கு விடாப்பிடியான அரசியல் மாற்றுத் தீர்வாக, தொழிலாளர்களையும், இளைஞர்களையும், சோஷலிஸ்டுகளையும், சமூக ஆர்வலர்களையும் மட்டுமின்றி, சுற்றுச்சூழல், சாதி ஒழிப்பு மற்றும் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து போராடுபவர்களையும் ஒன்று திரட்டி, வெகுஜன தொழிலாளர் கட்சிகளை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்.

என்ன செய்கிறார்கள், இதற்கு முன் என்ன செய்திருக்கிறார்கள், எவரது நலன்களுக்காக செயல்படுகிறார்கள் என்று மதிப்பிடப்படுவதால், இந்நெருக்கடியானது அரசுகளுக்கும் ஒரு சோதனையாகும். இந்த நெருக்கடி ஏன் நிகழ்ந்தது என்பதும், அரசு இதனை எவ்வாறு கையாண்டது என்பதும், சோஷலிஸ்டுகளால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய முக்கியமான கேள்விகளாகும்; முதலாளித்துவத்தின் ஆபத்தான, இரக்கமற்ற தன்மையை பற்றி விளக்கி, உழைக்கும் மக்களை உள்ளடக்கி, அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசுகளை ஆட்சியில் அமர்த்தி சோஷலிச மாற்றத்தை உருவாக்குவதற்கான ஆதரவை திரட்ட இது ஒரு வாய்ப்பாகும்.

அதிவேகமாகப் பரவும் சமூக, பொருளாதார நெருக்கடியானது, ஒரு சர்வதேச தீர்வுக்கான தேவையை கடுமையாக முன்வைக்கும் ஒரு உலகப் பிரச்சனையாகும். இது, புவியின் எதிர்காலம் குறித்த பரவலான கேள்வியை வெறும் பொருளாதார ரீதியில் மட்டுமின்றி, சமூக ரீதியிலும், சுற்றுச் சூழல் ரீதியிலும் எழுப்பக் கூடியது. அரறுதிப்பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதுகாப்பு வழங்க முடியாததோடு, சமூக நெருக்கடிகளை சமாளிக்கவும் முதலாளித்துவத்தால் முடியவில்லை என்பதை மீண்டும் ஒரு முறை இது காட்டியிருக்கிறது. புவியின் வளங்கள் பெரு முதலாளிகளின் நலன்களுக்காக சுரண்டப்பட்டு சீரழிக்கப்படுவதற்கு மாறாக, அரறுதிப் பெரும்பான்மை மக்களின் நன்மைக்காக பயன்படுத்தப்படும் ஒரு சோஷலிச பொன்னுலககை உருவாக்குவது குறித்த, தொழிலாளர் அகிலத்தின் முன்னெடுப்பு, முன்பை விட இப்போது இன்னும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. தனிப்பட்ட நாடுகளிலும், சர்வதேச அளவிலும் சோஷலிச மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சக்திவாய்ந்த போராட்ட இயக்கங்களை கட்டியெழுப்புவதே CWI உறுதியாக கையிலெடுத்திருக்கும் இன்றைய தலையாய பணியாகும்.

நன்றி www.akhilam.org