அகில உலக கொரோனா பெருந்தொற்றும், முதலாளித்துவ நெருக்கடியும், அமெரிக்காவில் தீவிரமாகிவரும் வர்க்க பிளவுபாடும்:

CWI சர்வதேச செயலகத்தின் அறிக்கை:

கொரோனா பெருந்தொற்றின் அழிவுகரமான பின்விளைவும், அதிலிருந்து கிளம்பிய வரலாறு காணாத உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியும் அனைத்து கண்டங்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது. மந்த நிலைக்கான கூறுகளைக் கொண்டிருக்கும் இது, முதலாளித்துவ வரலாற்றிலேயே மிகத் தீவிரமான பொருளாதார சரிவுகளில் ஒன்றாக இருக்கக் கூடும். அமெரிக்காவில் முதன்முறையாக வரலாறு காணாதவாறு எதிர்மறைக்கு சென்றிருக்கும் எண்ணெய் விலை விழ்ச்சி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சுட்டிக் காட்டுகிறது. எண்ணெய் வாங்குவதற்கு ஆளே இல்லாத நிலையில், சேமிப்பு கிடங்கிலும் இடமில்லாமல் போனதால், எண்ணெய் வாங்கும் நிறுவனங்களுக்கு கூலி கொடுக்கும் நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சொற்பமான, அல்லது தேவையே இல்லாத நேரத்தில் மிகை உற்பத்தியால் ஏற்பட்டிருக்கும் ஒரு அதி தீவிரமான சூழ்நிலையின் ஒரு உதாரணமே இது. எண்ணெய் உற்பத்தியை நம்பியிருக்கும் வெனிசுவேலா, மத்திய கிழக்கு, உள்ளிட்ட நாடுகளில் இது பேரழிவை ஏற்படுத்தக் கூடும். 2007/08 வீழ்ச்சியை தொடர்ந்து ஏற்பட்டு வந்த சிறு மீட்சி முடிவுக்கு வந்த தருணத்தில்கொரோனா பெருந்தொற்று துவங்குவதற்கு முன்பே –  ஒரு பொருளாதார சரிவு / சுணக்கத்துக்கான அச்சுறுத்தலை முதலாளித்துவம் சந்தித்து வந்தது.

தற்போதைய நெருக்கடியின் பின்விளைவுகள் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட நவகாலனிய உலகில் மாபெரும் அரசியல், சமூக எழுச்சிகளுக்கும், சில நாடுகளிலும், பிராந்தியங்களிலும் காட்டுமிராண்டி நிலையை உண்டாக்கக் கூடிய அளவுக்கும் – கடும் வீழ்ச்சிக்கும் வித்திட்டு வருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட பெரும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும், சீனாவுக்கும் கூட இந்நெருக்கடி மரண அடியை தந்திருக்கிறது. முந்தைய அறிக்கைகளில் நாம் விளக்கியிருப்பதை போல், முதலாளித்துவ சமூகத்தில் நிலவிவரும் ஆழமான, கசப்பான பிளவுகளை இந்நெருக்கடி அம்பலமாக்கியிருக்கிறது. இனி வரப்போகும் வாரங்களிலும், மாதங்களிலும் மோசமான வர்க்கப் போர்களை தூண்டிவிடும் அளவுக்கு இவை தீவிரமடையப் போகின்றன.  தொற்று நோய்க்கு மறுபுறம், புதிய பிராந்திய அரசியல் உறவுகளையும், அதிகார உறவுகளையும் உள்ளடக்கிய ஒரு சகாப்தம் உருவாகி வருகிறது.

சமீபத்திய சரிவை அடுத்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் அடைந்திருக்கும் வரலாறு காணாத பலவீனமும், சீனா பெற்றிருக்கும் பலமும் சர்வதேச உறவுகளில் ஒரு புதிய சமநிலையை வடிவமைக்கவிருக்கின்றன. 1930களின் பெருமந்த நிலையிலிருந்து மீண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம், ஒரு வல்லமை பொருந்திய நிலையை எட்டியது. ஆனால், தற்போதைய நெருக்கடியிலிருந்து அந்நாடு, பலவீனமான நிலையில், சீனாவின் சவாலோடு சரிவை சந்தித்து நிற்கிறது. சர்வதேச புதிய உறவுகளுக்கான ஒரு புதிய சகாப்தம் காத்திருக்கிறது. அமெரிக்க – சீன உறவில் மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியம், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்காவின் பிராந்திய சக்திகளுக்கிடையிலான உறவிலும் இதே நிலை தான்.

நோய் தொற்று நேரத்திலும் கூட ஈரான் மற்றும் கியூபா மீதான அழிவுகரமான பொருளாதார தடைகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து வருகிறது. கியூபாவிடம் மருத்துவ உதவி பெறும் எந்த ஒரு நாட்டின் மீதும் பொருளாதார தடைகளை விதிப்போம் என்று அமெரிக்க நிர்வாகம் எச்சரித்திருப்பதின் மூலமே ட்ரம்ப் வகையறாக்களின் கோரமுகம் நன்றாக தெரிகிறது. மாதுரோ ஆட்சியை கவிழ்க்க முயல்பவர்களுக்கு ஆதரவாக, அமெரிக்கா ஒரு பெரிய கப்பற்படையை, போதைப் பொருள் கடத்தல் கும்பலை ஒழிப்பதற்கு என்ற பெயரில், வெனிசுலாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.

நெருக்கடியின் தீவிரம், சமீபத்திய பொருளாதார மதிப்பீடுகளீல் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பன்னாட்டு பணநிதியகம் கூட வளர்ச்சிக்கான குறியீட்டைக் குறைத்திருக்கிறது. 1930களின் பெருமந்த நிலையிலிருந்து இதுவரை கண்டிராத அளவுக்கு முக்கிய முதலாளித்துவ பொருளாதாரங்கள் சுருங்கப் போகதாக அது கணித்துள்ளது. உலகப் பொருளாதாரத்தின்  3% விரிவாக்கம் என்ற தனது முந்தைய கணிப்பை தற்போது 3% சுருக்கம் என்று மாற்றியிருக்கிறது. முக்கியமான முதலாளித்துவ பொருளாதாரங்கள் தற்போது சராசரியாக 6.1%க்கு சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் காலாண்டில் பொருளாதாரம் 6.8% சரிவை கண்டிருக்கும் சீனாவின் மறுகணக்கீட்டு புள்ளி விவரங்கள் ஒரு பேரழிவை படம்பிடித்துக் காட்டுகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த வளர்ச்சி விகிதத்தை சந்தித்த 2019ஆம் ஆண்டின் மந்தமான போக்கின் தொடர்ச்சியே இது. 2020ஆம் ஆண்டின் முடிவில் சீன பொருளாதாரம் ஓரளவுக்கு மீட்சியை அடைந்தாலும், 1960களின் கலாச்சார புரட்சி காலத்திலிருந்து இதுவரை கண்டிராத அளவுக்கு மந்தமான விகிதாச்சாரமாகவே அது இருக்கும். உலகப் பொருளாதாரத்தில் இத்தகைய சரிவு ஏற்படக்கூடும் என்ற எதிர்ப்பார்ப்பே, ஏற்கனவே அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது. ஒரு புதிய பொருளாதார சூறாவளி உருவாகி வருகிறது என்பதை, இந்நெருக்கடிக்கு முன்னரே  ”தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி” (CWI) விளக்கியது. பன்னாட்டு பண நிதியகமும், இதர முதலாளித்துவ பொருளாதார நிறுவனங்களும் கூட “பிரச்சனை வரப்போகிறது” என்பதை ஒப்புக் கொண்டிருந்தனர். இருப்பினும், ஆங்கிலேய பொருளாதார வல்லுநர் ‘லாரி எலியட்’ சுட்டிக்காட்டியதை போல், பிரச்சனை எந்த திசையிலிருந்து வரப்போகின்றது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. 1941இல் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் சிங்கப்பூரில் தனது காலனியை காப்பாற்றிக் கொள்ள மேற்கொண்ட நடவடிக்கையுடன் இதை ’லாரி’ ஒப்பிடுகிறார். ஒரு பெரிய கடல்வழி தாக்குதல் வரக்கூடும் என்று எதிர்பார்த்து, அனைத்து ஆயுதங்களையும், போர் தளவாடங்களையும் கப்பற்படை தளத்தில் குவித்து வைத்து காத்திருந்தனர். ஆனால், தாக்குதலோ, பின்புறத்திலிருந்து, மலாய் தீபகற்பத்தின் நிலப்புறத்திலிருந்து வந்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மையக்கருவில் நெருக்கடி:

நெருக்கடி இப்போது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மையப்புள்ளியில் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது; அங்கு உருவாகி வரும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிகள் யாவும் சக்திவாய்ந்த ஏகாதிபத்தியநாடாக இருந்த அமெரிக்காவுக்கு ஒரு வரலாற்றுத் திருப்பு முனையாகும். இது, முதலாம் உலகப்போருக்கு பின் முடிவுக்கு வந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு இணையான ஒரு கணிசமான வரலாற்று ஒப்பீடாகும். 1914-18 போரிலிருந்து பலவீனமான நிலையில் மீண்டெழுந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியம், உள்நாட்டிலும், கடல் கடந்தும், புரட்சிக்கான ஆபத்தையும், மிகப்பெரிய வர்க்கப் போர்களையும் எதிர்கொண்டது.

வர்க்கமாக திரண்டு, தனக்காகப் போராடக் கூடிய சக்திவாய்ந்த உழைக்கும் வர்க்க ஸ்தாபனங்களை காணப்போகும், வர்க்கப் பிளவுகளையும், போராட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு புதிய சகாப்தத்தினுள் அமெரிக்க சமூகம் நுழைந்துக் கொண்டிருக்கின்றது. இது உலக சூழலில் ஒரு தீர்மானகரமான விளைவை ஏற்படுத்தப் போகின்றது. ட்ரம்ப் தலைமையின் கீழ் ஏற்கனவே காணப்படுவதை போல், மிகப்பெரிய அரசியல் பிளவுகளும் இச்செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கப் போகின்றது. அமெரிக்க வரலாற்றின் ஒரு அம்சமான, மிகக்கூர்மையான வடிவிலான வர்க்கப் போர்களை உள்ளடக்கிய உள்நாட்டுப் போருக்கான கூறுகளையும் இது கொண்டிருக்கும்.

இத்தொற்று நோய் குறித்த ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தின் பிதற்றல்களும், நிலையற்ற எதிர்வினைகளும் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. தேர்தலில் மீண்டும் வெல்ல வேண்டும் என்ற வெறியிலும், வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற வேட்கையிலும் ட்ரம்ப் மேற்கொண்ட கிரிமினல் நடவடிக்கைகளே கொத்துக் கொத்தாக நிகழும் மரணங்களுக்கான காரணமாகும். 1918இன் காய்ச்சல் மரணங்களுக்கு பின், அமெரிக்க மண்ணில் அமெரிக்க குடிமக்களின் படுகொலைகளுக்கு தலைமை தாங்கிய முதல் அதிபர் ட்ரம்ப் ஆவார். இந்த அறிக்கை எழுதப்படும் தருணத்தில், அமெரிக்காவில் மட்டும் அதிகாரப்பூர்வமாக 6,70,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, 39,000க்கும் மேற்பட்ட கொடூர மரணங்கள் (அவற்றில், ஒரு நாளைக்கு 4 தொழிலாளர்களை காவு வாங்கும் நியூயார்க் நகரில் மட்டும் 15,000 மரணங்கள்) நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, கறுப்பின மக்களும், லத்தீனோ சமூகத்தினரும் இவ்வைரஸால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோய் தாக்குதலுக்கு இரையானவர்களின் எண்ணிக்கை தற்போது அமெரிக்காவில் தான் அதிகமாக உள்ளது. தனியார்மயமான சுகாதார துறையும், ஒரு நியாயமான பொதுச் சுகாதார அமைப்பு இல்லாமல் போனதுமே அமெரிக்காவில் மரண விகிதத்தை கிடுகிடுவென உயரச் செய்துள்ளது. தனியார் சுகாதார சேவைகளை அரசுடமையாக்குவது, வரிப்பணத்தை ஆதாரமாக கொண்டு நடுவண் அரசால் திட்டமிடப்பட்ட ஒரு பொது சுகாதார அமைப்பை ஏற்படுத்துவது, அதை இலவசமாக மக்களுக்கு கிடைக்கச் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் அமெரிக்க சோஷலிஸ்டுகள் மற்றும் தொழிலாளர்களுக்கான போராட்ட வேலைத்திட்டத்தின் ஒரு இன்றியமையாத பகுதியாகும்.

உலகம் முழுவதும், இந்நோய் தொற்றுக்கு தயாராக இருக்க தவறிய ஆளும் வர்க்கங்களின் கிரிமினல்தனம் சுட்டிக்காட்டப்பட வேண்டும். இது போன்ற நிலை ஒரு கட்டத்தில் ஏற்படும் என்று விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் ஆளும் வர்க்கங்களை திரும்ப திரும்ப எச்சரித்திருந்தனர், குறிப்பாக, 2002-2003 சார்ஸ் தொற்றின் பிறகும், 2003-2007 பறவை காய்ச்சலுக்கு பின்பும், 2009இன் பன்றிக் காய்ச்சலுக்கு பிறகும், 2012இன் மத்திய கிழக்கு சுவாச கோளாறு வைரஸ் தொற்றின் பிறகும், 2013-2016 எபோலா தொற்றுக்கு பிறகும் தொடர்ச்சியாக எச்சரித்து வந்திருந்தனர். 1990 துவங்கி, அமெரிக்காவில் மட்டும், நோய் தொற்று தருணங்களில் தேவைப்படும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக் குறையை குறித்து எச்சரித்து ஒரு டஜன் அறிக்கைகள்  இதுவரை சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. 1993லேயே தொற்று நோயை சமாளிப்பதற்கு தனியார் மற்றும் பொதுத்துறைகளுக்கு இருக்கும் திறன் குறித்த ஒரு ஆய்வை நடத்துமாறு கிளிண்டன் நிர்வாகம் கேட்டிருந்தது.

இந்நெருக்கடியில், பொருளாதாரத்தை சரிவிலிருந்து காப்பாற்ற $2.3லட்சம் கோடியை தொழில் நிறுவனங்களுக்கு சலுகையாக வழங்கும் நிலைக்கு ட்ரம்ப் தள்ளப்பட்டார். 43,000 அமெரிக்க கோடீஸ்வரர்களுக்கு, ஆளுக்கு தலா $16 லட்சம் கிடைக்கப் போகின்றது! இதனால் கூட ஒரு ஆழ்ந்த பொருளாதார சரிவோ, பெருமந்தமோ துவங்குவதை தடுக்க முடியவில்லை. ட்ரம்பும், அவரது முதலாளி வர்க்க கும்பலும் மே மாத துவக்கத்தில் கதவடைப்பை இரத்து செய்துவிட வேண்டும் என்று தற்போது அலைந்துக் கொண்டிருக்கின்றனர். ”நோயை காட்டிலும் உடல் நிவாரணம் மோசமாக இருக்கக் கூடாது”, என்று கூறும் ட்ரம்ப் “வியாபாரத்துக்காக அமெரிக்கா திறந்து விடப்படும்” என்று அறிவித்திருப்பதன் மூலம் முதலாளித்துவத்தின் கொலைகாரக் கணக்கீடு வெளிப்படுகிறது. “முதியவர்கள் உள்ளிட்ட பலவீனமானவர்கள் மடிந்துவிடுவார்கள் என்பதற்காக, கதவடைப்பின் மூலம் நாட்டையும் பொருளாதாரத்தையும் நம்மால் தியாகம் செய்ய முடியாது” என்று டெக்ஸாஸ் மாகாணத்தின் துணை ஆளுநர் ’டிக் பேட்ரிக்’ கூறுவதைப் போல் இதர குடியரசு கட்சி தலைவர்களும் அடிமுட்டாள்தனமாக பேசி வருகின்றனர். ” முதியவர்களின் இறப்பு கிடுகிடுவென அதிகரித்ததன் வாயிலாக ”வணிகத்துக்காக திறந்திருந்ததன்” விலையை ஸ்வீடன் தற்போது கொடுத்துக் கொண்டிருக்கிறது.

மிச்சிகன் மாகாணத்திலும், அமெரிக்காவின் பல பகுதிகளிலும், சிறிய அளவிலான, ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்கள், கதவடைப்பை இரத்து செய்யக் கோரி, ஆயுதம் தாங்கிய ட்ரம்ப் ஆதரவாளர்களால் நடத்தப்படுகின்றன. அமெரிக்காவில் அரசியல் பிளவு நிலவும் தருவாயில், உள்நாட்டுப் போருக்கான கூறுகளும் களமிறங்கக் கூடும் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். ”ஆபரேஷன் முட்டுக்கட்டை” என்ற பதாகையின் கீழ் ஜனநாயக கட்சி ஆளுநரை குறிவைத்து வலதுசாரி குழுக்களால் இப்போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்க கல்வித்துறைச் செயலாளரும், அமைச்சரவையின் உறுப்பினருமான ‘பெஸ்தி தேவோஸ்” உடன் தொடர்புடைய, ட்ரம்ப் ஆதரவு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வரும் “மிச்சிகன் பிற்போக்கு கூட்டணியால்” இந்த போராட்டம் தூண்டிவிடப்பட்டு நடத்தப்படுகிறது. இப்போராட்டங்களை தொடர்ந்து, ட்ரம்பும் “ மிச்சிகன், விர்ஜீனியா உள்ளிட்ட சில மாகாணங்களுக்கு விடுதலை கிட்டட்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

உயிர் வாழ்வதற்கான ஊதியத்தை பெற மீண்டும் பணிக்கு திரும்புகிறோம் என்று கோரும் மக்களை நோக்கி இந்த போராட்டங்கள் அழைப்பு விடுக்கின்றன. கதவடைப்பு காலம் முழுவதும் அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்களது ஊதியத்துக்கு இணையான தொகையை அவரவர் நிறுவனங்களோ அல்லது அரசோ வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை சோஷலிஸ்டுகளும், தொழிலாளர் இயக்கங்களும் இந்த தருணத்தில் எழுப்பியாக வேண்டும். கதவடைப்புக்கு எதிரான வலது சாரி குழுக்களை கண்டித்து கொலரடோவில் மருத்துவப் பணியாளர்கள் நடத்திய போராட்டம், அரசியல் நிலைமையின் தீவிரத்தையும், அது எந்நேரத்திலும் மோசமாக வாய்ப்பிருப்பதையும் எடுத்துரைக்கின்றது. ஏனைய நாடுகளை போன்றே, அமெரிக்க ஆளும் வர்க்கமும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், பொருளாதாரம் திறக்கப்பட வேண்டுமென்றும், இழந்த தங்களது இலாபங்கள் மீண்டும் கிடைக்க வேண்டுமென்றும் விரும்புகிறது.

இலாபங்கள் இன்றி முதலாளித்துவ அமைப்பால் இயங்க முடியாது. இக்காரணத்துக்காகவே, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்திசைவான நடவடிக்கையால், ஆஸ்திரியாவிலும், இத்தாலியிலும், ஸ்பெயினிலும், இதர ஐரோப்பிய நாடுகளிலும் கதவடைப்பை தளர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெருக்கடி துவங்கிய காலத்தில் உதவாததற்கு இத்தாலியிடம் இப்போது மன்னிப்புக் கேட்டு ஐரோப்பிய ஒன்றியம் கபட நாடகமாடுகின்றது. ஸ்பானிய பிரதமர் பெட்ரோ சான்ச்சிஸ் எச்சரித்தவாறு, இத்தாலியில் அபரிதமாக வளர்ந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்புணர்வு, ஐரோப்பிய மண்டலமும், ஐரோப்பிய ஒன்றியமும் தொடர்ந்து இயங்குவதை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கிறது.

1930களுக்குப் பின் இதுவரை கண்டிராத மனிதத் துயரம்

இதர நாடுகளை போன்றே, அமெரிக்காவிலும் பொருளாதார சரிவின் பின்விளைவுகள் பேரழிவை ஏற்படுத்துகின்றன. மனித துயரமும், வேதனைகளும் கோடிக்கணக்கானோரின் வாழ்வுகளை ஆட்டிப்படைத்து வருகின்றன. 1930களின் பெருமந்தத்தை விவரிக்கும் ஜான் ஸ்டீன்பெக் என்ற நாவலாசிரியரின் ”பெருங்கோபத்தின் விளைவுகள்” என்ற நாவலில் விவரிக்கப்படும் காட்சிகள் 2020இல் அரங்கேறிவருகின்றன. சில வாரங்களுக்குள்ளாகவே வேலையிழப்பு அதிவேகமாக பெருகியிருக்கிறது. 16/04/2020 ஆம் நாள் வரை 52 லட்சம் பேர் வேலையின்மை நிவாரணத்திற்காக விண்ணப்பித்துள்ளனர்! கடந்த மாதம் வரை  இதற்காக 2கோடியே 20லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். மேலும் வேலை வாய்ப்பற்ற பல லட்சம் பேரால் நிவாரணத்துக்கு பதிவு செய்ய முடியாமல் போனதால், அரசு புள்ளி விவரத்தில் சேர்க்கப்படவில்லை. 2007/8 ஆம் ஆண்டின் பொருளாதார சரிவுக்கு பின்னர் புதிதாக உருவான, சொற்பமான ஊதியமும், நிச்சயமற்ற தன்மையும் கொண்ட ஒப்பந்த வேலைகள் அனைத்தும் இந்த வேலையிழப்பு சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன! அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சக் கட்டமாக ஏறக்குறைய 30% – அதாவது கிட்டத்தட்ட 4கோடியே 90 லட்சத்தை- எட்டக் கூடும் என்று பல வல்லுனர்கள் கணக்கிடுகிறார்கள். இது 1930களின் பெருமந்தநிலை எட்டிய உச்சத்தை விட மிக அதிகமான அளவாகும். (1934இல் அதிகாரப் பூர்வ வேலையில்லா திண்டாட்டம் உச்சகட்டமாக 24.9%ஐ எட்டியது).

5,00,000ஐ தாண்டிவிட்ட வீடற்ற அமெரிக்கர்களின் துயரமும், உணவு வங்கிகளை நாடுவோரின் எண்ணிக்கை 98% உயர்ந்திருப்பதும் நிலைமையை மோசமாக்கியிருக்கிறது. ஒருங்கிணைப்பாளர்களின் கணக்கீட்டின் படி, இனி வரும் மாதங்களில் கூடுதலாக 1கோடியே 71லட்சம் பேருக்கு உணவு – இலவச உணவு -தேவைப்படும். வழக்கமாக, வாரத்துக்கு 60,000 இலவச உணவுப் பொட்டலங்களை இந்த உணவு வங்கிகள் விநியோகித்து வந்தன. இது தற்போது 1,20,000 என்ற அளவை எட்டியிருக்கிறது.

அண்மைக்கால சில பத்தாண்டுகளாக, அமெரிக்க சமூகத்தை கிழித்துப் போட்ட ஏற்றத்தாழ்வுகளோடும், ஏழ்மையோடும் தற்போதைய நெருக்கடியும் சேர்ந்து கொண்டது. ஏப்ரல் 10ஆம் நாளன்று நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியான ஒரு கட்டுரை இதன் பின்விளைவை குறித்து எச்சரித்தது. 1980லிருந்து அமெரிக்க உள்நாட்டு உற்பத்தி 79% உயர்ந்திருப்பதை இக்கட்டுரை சுட்டிக் காட்டுகின்றது. ஆயினும், சமூகத்தின் கடைசி 20% மக்களின் வருவாய் 20% அளவுக்கு மட்டுமே உயர்ந்துள்ளது. மேல் மட்டத்திலிருக்கும், அமெசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் பொன்ற இரக்கமற்ற கொடுங்கோலர்களின்- 1% பேரின் வருவாய் 420% பெருத்துள்ளது. ஜனவரி 2011 துவங்கி, நாட்டின் பின் தங்கிய 90% மக்கள் சேர்ந்து, உச்சத்திலிருக்கும் 1% பேரில் ஒவ்வொருவருக்கும் $1,10,367.15 ஐ கொடுத்துள்ளனர்.

இவை யாவும் புரட்சிகர இயக்கங்களையும், எழுச்சிகளையும் தட்டியெழுப்பக் கூடிய சமூக பொருளாதார நிலைமைகளாகும். CWI சுட்டிக்காட்டியவாறு, புரட்சிக்கான அவசியத்தை குறித்து அமேசான் நிறுவனத்தின் ஊழியர் பேசுவதில் வியப்பேதும் இல்லை. இந்நெருக்கடியின் போக்கில், இதர தொழிலாளர்களும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரி போராட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் முன்னெடுத்துள்ளனர். சமூகத்துக்கு மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும் சுவாசக் கருவிகளை உற்பத்தி செய்யக் கோரி, ஜெனரல் எலெக்ட்ரிக் (GE) நிறுவனத்தின் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். சுவாச குழாய் அடைப்பானை முப்பரிமாண அச்சுவார்த்தல், அல்லது மெர்ஸிடஸ் அணியினர் கூறும் வழிமுறை போன்ற மாற்று தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சுவாச கருவிகளால், பல நாடுகளில் நிலவும் பற்றாக்குறையை தீர்க்க முடியும். உழைக்கும் மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் ஆலைகளை கையகப்படுத்தி, புதிய திறமைகளையும், புத்தாக்க திறன்களையும் பயன்படுத்தி, ஒரு அவசர உற்பத்தி திட்டத்தை செயல்படுத்துவதன் மூலமே பிரச்சனைகளை தீர்க்க இயலும். ட்ரம்ப் உள்ளிட்ட எந்த ஒரு முதலாளித்துவ அரசும், இதனை செய்யத் திராணியற்று நிற்கிறது – அல்லது இதனை செய்ய முன்வராதிருக்கிறது.

ட்ரம்ப் -14ஆம் லூயிஸ் மற்றும் ஜார் மன்னர்

இந்நெருக்கடியானது, ஆளும் வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகளுக்கிடையிலும், அதன் அரசியல் எந்திரங்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கிடையேயும் மோதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் நிலையில்லாதவாறும், முன்னுக்குப் பின் முரணாகவும் நடந்துக்கொள்ளும் ட்ரம்ப், 1789 பிரெஞ்சு புரட்சிக்கு முன்பிருந்த 14ஆம் லூயிஸின் அரசவையை போன்றும், ரஷ்யாவில் 1917க்கு முன்பிருந்த ஜார் மன்னனை போன்றும் செயல்பட்டு வருகின்றார். உலகம் முழுக்க முதலாளித்துவம், அமெரிக்காவின் ட்ரம்ப், பிரேசிலின் போல்சனாரோ, இந்தியாவின் மோடி, பிரிட்டனின் ஜான்ஸன் போன்ற ஆபத்தான, நம்பகத்தன்மையற்ற அரசியல்வாதிகளை வைத்து இந்நெருக்கடியை சமாளிக்க வேண்டியுள்ளது. இது, சில நாடுகளில், ஆளும் வர்க்கங்கள் அரசியல் மேல்கட்டமைப்பின் மீதான கட்டுப்பாட்டை கணிசமாக இழந்து, அதுவும் இது போன்ற நெருக்கடி தருணத்தில், ஆபத்தான நிலையில் இருப்பதைக் காட்டுகிறது.

சில மாகாணங்களின் அதிகாரங்களை மீறப்போவதாகவும், கதவடைப்பு எப்போது நிறைவடையும் என்பதை தானே தீர்மானிக்கப் போவதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஏப்ரல் 13ஆம் நாளன்று அறிவிக்கப்பட்ட “அமெரிக்காவை மீண்டும் திறப்பதற்கான கவுன்சில்” முழுவதுமாக, ட்ரம்பின் மகள் ’இவாங்கா’, மருமகன் ‘ஜேர்ட் குஷ்னர்’ உள்ளிட்ட அவருக்கு வேண்டப்பட்ட நபர்களால் நிரப்பப்பட்டுள்ளது. இவர்களில் யாரும் சுகாதார அதிகாரிகளல்ல! அதேவேளை, கதவடைப்பை எப்போது, எப்படி தளர்த்துவது என்பது குறித்து கூட்டாக ஒத்துழைத்து முடிவெடுக்கப் போவதாக, நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரியூ குவோமாவும், ஆறு வடமாகாணங்களின் ஆளுநர்களும் அறிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தனித்து செயல்படப்போவதாக கலிஃபோர்னியா மாகாணம் அறிவித்துவிட்டது. மேலும், குறிப்பிடத்தக்க திருப்பமாக, தனது நியமனங்கள் சிலவற்றை மேற்கொள்வதற்காக, காங்கிரஸ் அமர்வை தான் இரத்து செய்யப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ட்ரம்பின் செயல்பாடுகளால் எரிச்சலைடைந்த குவோமா, “நம்மிடம் அரசியல் சாசனம் தான் இருக்கிறதே ஒழிய, அரசன் அல்ல!” என்று பதிலடி தந்துள்ளார்.

மின்னல் வேகத்தில் அரங்கேறும் நிகழ்வுகள், நிலைமைகளின் அதிவேகமான, ஆழமான மாற்றங்களைக் குறிக்கின்றன. நேற்று கற்பனையைப் போன்று தெரிந்தவை இன்று உண்மையை போல் தோன்றி, நாளை மறக்கப்படுகின்றன. வைரஸ் ஏற்படுத்திய விளைவுகளால், வியக்கத் தக்கவாறு முடங்கிக் கிடக்கும் அமெரிக்க பொருளாதாரமும், ட்ரம்பின் கையாலாகாதனமும், நவம்பர் தேர்தலில் அவர் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்படுவதை மிகப்பெரிய கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காவிட்டாலும், இரண்டாவது முறையாக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்பில்லாமல் இல்லை. குடியரசு கட்சியினருக்கு பலனளிக்கும் வகையில், பல்லாயிரக் கணக்கானோரின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதும் – வாக்காளர் மறைப்பு – மற்றும் மக்கள் தொகை மிகுந்த மாகாணங்களுக்கும், நகரங்களுக்கும் சரிசமமாக கருதப்படும் ஜனநாயகத் தன்மையற்ற தேர்தல் பிரதிநிதிக் குழுவும் சேர்ந்து ட்ரம்பை மீண்டும் வெற்றியடைய செய்யலாம். வாக்காளர் மறைப்பு நடைபெறும் இடங்களில் சோஷலிஸ்டுகள் அதனை எதிர்ப்பதும், ஜனநாயகமற்ற தேர்தல் பிரதிநிதிக் குழு முறையை ஒழிக்குமாறு கோருவதும் அவசியமாகும்.

கார்ப்பொரேட் ஜனநாயகவாதிகளுக்கான ஜோ பைடன்

அதே சமயம், ஜனநாயக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடிய ஜோ பைடனுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. பைடன், கார்பொரேட் ஜனநாயகவாதிகளின் வேட்பாளரும், முதலாளி வர்க்கத்தின் வெளிப்படையான பிரதிநிதியுமாவார். தற்போதைய கட்டத்தில், ட்ரம்புக்கு எதிராக, முதலாளித்துவ ஜனநாயக கட்சியின் அனைத்து பிரிவுகளையும் ஒன்று திரட்டும் முயற்சி என்று சொல்லிக் கொள்ளும் நடவடிக்கையாக, அவர், பராக் ஒபாமா, எலிசபெத் வாரென் மற்றும் பெர்னி சாண்டர்ஸ் உள்ளிட்டோரின் ஒப்புதலை பெற்றிருக்கிறார்.

2020ஆம் ஆண்டின் தேர்தல் பிரச்சாரமே, அமெரிக்க வரலாற்றின் தேர்தல் பிரச்சாரங்களிலேயே, பெரிய அளவுக்கு சமூக மற்றும் வர்க்க பிளவுகளை பிரதிபலிக்கும், கோஷ்டி மோதல் தேர்தல் பிரச்சாரமாக இருக்கப் போகிறது. தேர்தல் பிரச்சாரம் உச்சத்தை எட்டும் போது, இம்மோதல்களும் கூர்மையடையப் போகின்றன. மிச்சிகனிலும், இதர பகுதிகளிலும் கதவடைப்பை முடிவுக்கு கொண்டுவரக் கோரி, ட்ரம்ப் ஆதரவாளர்களால் தூண்டிவிடப்பட்டு நடந்த ஆயுதம் தாங்கிய போராட்டங்கள், தேர்தல் நெருங்கும் தருவாயில் கோஷ்டி மனப்பான்மை வளரக்கூடும் என்பதற்கான அறிகுறிகளாகும். உள்நாட்டுப் போருக்கான சாத்தியக் கூறுகளும் உள்ளன.

தேர்தல் பிரச்சாரங்களின் மூலம், குறைந்தபட்ச தீங்கிழைப்பவர்களை தேர்ந்தெடுக்கும் மனநிலைக்கு மக்கள் வருவது நிச்சயம். ட்ரம்பை தோற்கடிக்க வேண்டும் என்ற ஆசையே பல தொழிலாளர்கள், இளைஞர்களின் சக்தி வாய்ந்த மனநிலையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

சோஷலிஸ்டுகள் இந்த மனநிலையை புரிந்துக்கொண்டு, ட்ரம்பை தோற்கடிக்கும் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும். அதேவேளை, அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்துக்கு முதலாளித்துவ ஜனநாயகவாதிகளாலும், பைடனாலும் ஒரு நன்மையும் ஏற்படப்போவதில்லை என்று எச்சரிக்க வேண்டியது அவசியமாகும். பைடன் அதிகாரத்தில் அமர்ந்த பின், அமெரிக்க முதலாளி வர்க்கத்தின் ஏதேச்சதிகார ஆட்சிக்கு முடிவுகட்டவும் போவதில்லை – தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன்களைப் பாதுகாக்கவும் போவதில்லை. தேர்தலுக்கு பின், யார் வெற்றியடைந்தாலும், அதே கிளர்ச்சிகளும் நெருக்கடியும் தான் உருவாகப் போகின்றன.

தொற்று நோயை ட்ரம்ப் கையாளும் விதத்தை பைடன் ஒரு போராட்ட தொனியில் விமர்சிக்க தவறுவதாலும், அவருக்கு எதிரான பிரச்சாரங்களில் மந்தமாக செயல்படுவதாலும் பலரது மனங்களில் சந்தேகங்களும், தயக்கங்களும் உருவாகியுள்ளன. பைடன் ஒரு பலவீனமான, நம்பகத்தன்மையற்ற வேட்பாளராவார். இக்காரணத்துக்காகவே, அவரது பிரச்சாரத்துக்கு உத்வேகமளிக்கும் பொருட்டு, ஜனநாயக தலைமை அவருக்கு ஒபாமா, வாரென் மற்றும், குறிப்பாக, சாண்டர்ஸின் ஆதரவுகளை திரட்டிக் கொடுத்தது. சாண்டர்ஸால் அதிக அளவுக்கு இளைஞர்களின் வாக்குகளை திரட்ட முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். முன்னாள் ஜனநாயக கட்சி அதிபர் ஒபாமா, பைடனுக்கு ஆதரவளிக்கும் போது, தனது கட்சியின் போட்டி வேட்பாளர்களை மிகவும் வசீகரமான ஜனநாயக வேட்பாளர்கள் என்று பாராட்டினார். அமெரிக்க பூர்வீகத்தை கொண்டவரான சாண்டர்ஸ், ட்ரம்பை தோற்கடிக்க முக்கியமானவர் என்று கூறினார். இதுவும் போதாமல் போய், பைடன் உத்வேகம் எடுக்க தவறுவாரெனில், நியூயார்க் நகரின் ஆன்ட்ரிவ் கௌமா போன்ற இன்னொருவரை தேர்வு செய்ய ஜனநாயக கட்சி கூட்டத்தில் மாற்று வரைவு தயாரிக்கப்பட வாய்ப்பில்லாமல் இல்லை.

மற்றொரு வாய்ப்பையும் விரயம் செய்த சாண்டர்ஸ்

ஜனநாயக கட்சியுடனான தனது உறவை முறித்துவிட்டு, உழைக்கும் மக்களுக்கான ஒரு புதிய கட்சியை துவங்குவதற்கு இருந்த வாய்ப்பை சாண்டர்ஸ் இரண்டாவது முறையாக விரயம் செய்தார். 2016இல் ஜனநாயக கட்சியினருக்கு ஆதரவளிக்குமாறு தனது ஆதரவாளர்களை முடுக்கிவிட்ட சாண்டர்ஸ், இறுதியில் ஹிலாரி கிளிண்டனை ஆதரிக்கும் நிலைக்கு ஆளானார். அதே கணக்கீட்டை 2020இல் அவர் திரும்ப செய்துள்ளார். 2016இல் ஜனநாயக கட்சியிலிருந்து வெளியேறி, புதிய கட்சியை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், ட்ரம்ப் தோற்கடிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படவும் வாய்ப்பிருந்தது. ஒருவேளை 2016 தேர்தலில் சாண்டர்ஸ் தோற்றிருந்தாலும், இந்நேரம் ஒரு வலிமையான தொழிலாளர் கட்சியை அவர் கட்டியெழுப்பியிருந்திருக்க முடியும். இந்நெருக்கடித் தருணத்தில் ட்ரம்பை தோற்கடிக்கக் கூடிய வெகுஜன ஆதரவை வென்றெடுக்கும் அளவுக்கு அக்கட்சி மிக வலிமையானதாக இருந்திருக்கும்.

அமெரிக்காவில் ஒரு தொழிலாளர் கட்சிக்கான தேவையை குறித்து CWI தொடர்ச்சியாக வாதிட்டு வந்தது. சாண்டர்ஸுக்கு அதை செய்வதற்கான வாய்ப்பிருந்தும் செய்யத் தவறிவிட்டார். அவர் தனது பிரச்சாரத்தை துவங்கியதிலிருந்தே இது குறித்து அவரிடம் எச்சரித்து வந்தோம். அமெரிக்க சோஷலிச மாற்றை போன்றும், முன்னாள் CWI உறுப்பினரும் சியாட்டில் நகர கவுன்சிலருமான க்‌ஷாமா சாவந்தை போன்றும், அமெரிக்க ஜனநாயக சோஷலிஸ்ட்களை போன்றும் CWI அவருக்கு உற்சாகமளித்துக் கொண்டிருக்கவில்லை. அமெரிக்க சோசலிச மாற்றை போல், ஜனநாயக கட்சிக் கூட்டத்தின் வாயிலாக தொடர்ந்து பிரச்சாரம் செய்யுமாறும், வேட்புமனு தாக்கல் செய்ய போராடும்படியும் CWI அவரை நிர்பந்திக்கவில்லை. துவக்கம் முதலே சாண்டர்ஸ் சுயாதீனமாக செயல்பட்டிருக்க வேண்டும், ஜனநாயக கட்சியிலிருந்து பிரிந்து ஒரு புதிய கட்சியை துவங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற அவர் மீதான தங்களது முந்தைய விமர்சனத்தை அமெரிக்க சோசலிச மாற்று கைவிட்டுவிட்டது.

அமெரிக்க சோஷலிச மாற்றின் சந்தர்ப்பவாதிகள், ஜனநாயக கட்சியின் இதர வேட்பாளர்களையும் விமர்சனமின்றி ஏற்றுக் கொள்கின்றனர். ஜனநாயக கட்சியினரின் “உள்ளே வெளியே” நிலைப்பாட்டையே அமெரிக்க ஜனநாயக சோஷலிஸ்டுகளும் எதிரொலிக்கின்றனர். சாண்டர்ஸ் தொடர்பான இத்தகைய சந்தர்ப்பவாத நிலைப்பாடும், பதவிக்கு தேர்ந்தெருக்கப்பட்ட அமெரிக்க ஜனநாயக சோஷலிஸ்டுகளை, சோஷலிஸ்டுகள் என்று அழைக்கும் அமெரிக்க சோஷலிச மாற்றாளர்களின் விமர்சனமற்ற அணுகுமுறை, அவர்களது ஸ்தாபனத்தில் தற்போது பிளவுக்கு வித்திட்டிருக்கிறது. அமெரிக்க சோஷலிச மாற்றின் முன்னாள் உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் தற்போது அமெரிக்க ஜனநாயக சோஷலிசவாதிகளாக சரிந்திருக்கின்றனர். ஒரு சுயாதீனமான தொழிலாளர் கட்சியை கட்டியெழுப்ப அமெரிக்க சோஷலிச மாற்றாளர்கள் தொடர்ச்சியாக வாதிடாமல் போனதன் விளைவால், தற்போதைய நெருக்கடியில் அவசர தேவையாக இருந்தும், அத்தகைய கட்சி உருவாகவில்லை.

சாண்டர்ஸை தனது பிரச்சாரத்திற்கும், அவரது ஆதரவாளர்களை தனக்கும், ஜனநாயக கட்சிக்கும் ஆதரவு தளமாகவும் பைடன் பயன்படுத்திக்கொள்வார் என்பது தெளிவு. இதை தற்போது அவர் வெளிப்படையாகவே அறிவிக்கிறார். ஒரு படி மேலே செல்லும் சாண்டர்ஸ், பைடனை ஆதரிக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கும் தனது ஆதரவாளர்கள் சிலரை பொறுப்பற்றவர்கள் என்று சாடுவதன் மூலம், ஜனநாயக கட்சி தலைமையின் கட்டளையை நிறைவேற்றி வருகிறார்.

தற்போதிருக்கும் இரண்டு முதலாளித்துவ கட்சிகளையுமே தேர்தலில் எதிர்கொண்டு, போராட்டத்தை அடிப்படையாக கொண்டு மட்டுமே, அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்துக்கான ஒரு புதிய கட்சியை உருவாக்கவும், அதற்கான இளைஞர் ஆதரவை திரட்டவும் முடியும். அதனைச் செய்வதற்கான நேரம் இதுவே! ஆனால், சாண்டர்ஸ் அதற்கான வாய்ப்பை வீணடித்துவிட்டார்.

அமெரிக்க இடதுசாரிகளில் சிலர், வரவிருக்கும் முதற்கட்ட வாக்கெடுப்பில் சாண்டர்ஸின் ஆதரவாளர்கள், ஜனநாயக கட்சியின் ஓட்டெடுப்பில் அதிகபட்ச பிரதிநிதிகளை வென்றெடுக்கும் பொருட்டு, அவருக்கே வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர். ஜேகோபின் இணையத்தில், டேனியல் டென்விர் தான் பதிவிட்ட கட்டுரையில் பின்வருமாறு பதிவிட்டார்: ”பெர்னீ தனது பிரச்சார ஸ்தாபனத்தை நொறுக்குவதற்கு பதிலாக, அதை மறுவடிவமைப்பு செய்தாக வேண்டும்.” (11 ஏப்ரல் 2020). இதில், சாண்டர்ஸ், அடிப்படையில், ஜனநாயக கட்சி வேலைத்திட்டத்தை இடப்புறம் நோக்கி நகர்த்தவும், ஜனநாயக கட்சி மாநாடுகளில் “சிறப்பு  பிரதிநிதிகளின்” பங்கை சொற்பமான அளவுக்கு குறைக்கும் வகையில் சில நடைமுறை மாற்றங்களை மேற்கொள்ளவும் தனது போராட்டங்களை தொடர வேண்டும் என்கிறார் அவர். இன்னொரு வகையில் சொல்வதானால், ஜனநாயக கட்சியை மாற்றியமைப்பது என்ற சாத்தியமற்ற இலட்சியத்துக்காக போராட வேண்டும் என்று யோசனை கூறுகின்றார். கட்சியின் வேட்புமனுவுக்காக சாண்டர்ஸ் இருமுறை முயற்சித்து தோல்வியடைந்ததே, ஜனநாயக கட்சியை போன்ற ஒரு முதலாளித்துவ கட்சியை, தொழிலாளர்களையும், அவர்களது குடும்பங்களையும் உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியாக மாற்றுவது சாத்தியமற்றது என்பதற்கான உதாரணமாகும்.

ஏப்ரல் 8, 2020ஆம் நாளின் CNN உள்ளிட்ட செய்தி நிறுவனங்களின் தகவல்களின் படி, சாண்டர்ஸ் தனது வேட்புமனுவை திரும்பப் பெறும் வரை, ஒபாமா அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். சாண்டர்ஸின் பிரச்சார அணியும் கூட பைடன் அணியினரை பலமுறை சந்தித்திருந்தனர்.

2020 பிரச்சாரம் நடத்தப்பட்ட விதம் குறித்து சாண்டர்ஸின் ஆதரவாளர்கள் பின்வருமாறு விமர்சிக்க துவங்கியுள்ளனர்: அதிக ஊதியம் பெறும், கூலிப்படை ஸ்தாபன அரசியல் ஆலோசகர்களால் தேசிய பிரச்சாரம் வழிநடத்தப்பட்டது. அவர்களில் சிலர், பைடன் அணியுடன் சென்றுவிட்டனர், அல்லது, ஜனநாயக கட்சி ஸ்தாபனத்தில் வேறு ஏதாவது பதவிகள் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கின்றனர். 2020 பிரச்சாரத்தின் போது சாண்டர்ஸின் அரசியல் அணுகுமுறையை இது எடுத்துரைக்கிறது.

அமெரிக்காவில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழலால், பைடனின் பிரச்சாரத்தில் சில புரட்சிகரமான சொற்றொடர்களும் முன்வைக்கப்படக் கூடும். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட பின், அவரது நிர்வாகம் தொழிலாளர்களின் மீது தாக்குதலை தொடுக்கும் என்பதும், கொரோனா வைரஸ் நெருக்கடிக்கான விலையை தொழிலாளர்களே கொடுக்குமாறு செய்யும் என்பதும் நிச்சயம்.

தொழிலாளர்களுக்கான ஒரு கட்சியும், சோஷலிச வேலைத்திட்டமும் தேவை

இந்த அதிர்வுகளும், கிளர்ச்சிகளும் அமெரிக்க பாட்டாளி வர்க்கத்தால் ஒரு புதிய கட்சி நிறுவப்படுமா என்ற கேள்வியை முன்வைக்கின்றன. இத்தகைய சூழல்களில், அமெரிக்க சமூகத்தின் தன்மையை கணக்கில் கொண்டு பார்க்கையில், இத்தகைய ஒரு செயல்பாடு துவங்கிவிட்டால், மின்னல் வேகத்தில் வளர்ச்சியை காணும். தொழிற்சங்கங்களும், சாண்டர்ஸ் பிரச்சாரத்தின் ஆதரவாளர்களும் இத்தகைய ஒரு கட்சியை உருவாக்குவதற்கான நடவடிக்கையில் பெரும் பங்கினை ஆற்ற முடியும். இச்செயல்பாடு, குறிப்பாக, பெரும்பாலான தொழிற்சங்க தலைமையின் தீவிரமான அதிகாரத்துவத்தையும், ஊழல் தன்மையையும் வைத்து பார்க்கும் போது, தேசிய அளவில் துவங்காமல் போகலாம். மாகாண அளவிலும், நகர அளவிலும், தொழிலாளர்களையும், தொழிற்சங்கங்களையும், மேலும் சிலரையும் கொண்டு உள்ளூர் முன்னெடுப்புக்களாக துவக்கப்படலாம். இது நடந்துவிட்டால், பிறகு, தேசிய அளவுக்கு தானாக வளர்ந்துவிடும்.

முதலாளித்துவத்துக்கு மாற்று சோஷலிசம் தான் என்பதை குறித்த ஒரு பொதுவான எண்ணம் அமெரிக்காவில் ஏற்கனவே நிலவி வருகிறது. இப்பொதுவான எண்ணத்துக்கு உரமிடும் வண்ணம் ஜனநாயக சோஷலிச மாற்றம் என்றால் என்ன என்பதை விளக்கியும், முதலாளித்துவத்தை தோற்கடிப்பதற்கும் ஸ்திரமான கோரிக்கைகளையும், வேலைத் திட்டங்களையும் உருவாக்க வேண்டும். சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் ஒரு வர்க்கமாக தொழிலாளி வர்க்கம் ஏற்கனவே உருவெடுக்கத் துவங்கிவிட்டது. இந்நெருக்கடி தீவிரமடைகையில், இம்மாற்றத்துக்கான செயல்பாடும் வேகமாக வளரக்கூடும். அமெரிக்காவில் செயல்படும் CWIஇன் ஒத்திசைவான சிந்தனையாளர்கள், இந்த வரலாற்று நிகழ்வுகளில் தலையிட்டு, தொழிலாளர்களுக்கான ஒரு கட்சியை உருவாக்கவும், அமெரிக்காவில் முதலாளித்துவத்தை, அதன் கோட்டையிலேயே வீழ்த்துவதற்கான ஒரு சோஷலிச வேலைத்திட்டத்தை கட்டியெழுப்புவதற்கான அவசியத்தை புரிந்துக் கொள்ளவும் தொழிலாளர்களுக்கு உதவுவார்கள்.

Thank You : www.akhilam.org