மே தின அறிக்கை 2020: முதலாளித்துவகாட்டுமிராண்டிதனத்தையும், அகில உலக சோஷலிசத்துக்கான தேவையையும் அம்பலப்படுத்தும் கொரோனா பெருந்தொற்று!
–தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி
உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும் தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சோஷலிச புரட்சிகர வணக்கங்கள்!
இந்தாண்டின் மே தினம் அசாதாரண சூழ்நிலைகளின் கீழ் அனுசரிக்கப்படுகிறது. ”முதலாளித்துவத்தின் முடிவில்லா பயங்கரம்” என்று லெனின் எதைக் கூறினாரோ, அதை கொரோனா பெருந்தொற்று இன்று முழுவதுமாக அம்பலப்படுத்தியிருக்கிறது. இப்பெருந்தொற்றின் மீதான முதலாளித்துவ அரசுகளின் கிரிமினல்தனமான பொறுப்பற்ற அணுகு முறையால், தொழிலாளர்களும், அவர்களது குடும்பங்களும் பெரும் நெருக்கடிக்கும், உயிருக்கு ஆபத்தான நிலைக்கும் உள்ளாகியிருக்கின்றனர். தென்னாப்பிரிக்காவிலும், நைஜீரியாவிலும். மேலும் பல பகுதிகளிலும் உணவுக் கலவரங்கள் வெடித்துள்ளன.
பொது முடக்கத்தால் பல நாடுகளில் சர்வதேச தொழிலாளர்கள் தினம் தொடர்பான வழக்கமான பேரணிகளும், இதர நிகழ்ச்சிக்களும் நடைபெற இயலாது. ஆயினும், எங்கெல்லாம் வாய்ப்பிருக்கிறதோ, அங்கெல்லாம் தொழிலாளர்கள் இந்நன்னாளை அனுசரித்து வருகிறார்கள். அவர்களது குரல்களுக்கு வலுசேர்க்கும் விதமாக, மே தினத்தன்று செஞ்சட்டை அணியுமாறு கோரப்படுவதற்கு நாம் முழு ஆதரவு வழங்குகிறோம். அயர்லாந்து நாட்டில் கத்தோலிகம், புரோட்டஸ்டண்ட் என இருபிரிவு தொழிலாளர்கள் வாழும் பகுதிகளிலும், உள்ளூர் சமூகக் கூடங்களிலும், பணியிடங்களிலும் தொழிற்சங்கப் பதாகைகளை அமைக்கவும், செங்கொடிகளை ஏற்றவும் ஊக்குவிக்கும் முன்னெடுப்புகளை அங்குள்ள CWI செயற்பாட்டாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஜெர்மனியில் மே தினத்தை கொண்டாடும் விதமாக, அங்கிருக்கும் CWI செயற்பாட்டாளர்கள் தெருமுனை செயல்பாடுகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். “சர்வதேச தொழிலாளர்களின் மீது அக்கறை காட்டுவதற்கான” தினமான மே 12 அன்று, போராட்டங்களுக்கும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
போராட்டங்கள் மற்றும் ஆதரவு நடவடிக்கைகள் மே தினத்தன்று நடைபெறுவது பொருத்தமான ஒன்றாகும். உலகம் முழுவதும் தொழிலாளர்களின் போராட்டங்களையும், ஒற்றுமையையும் கொண்டாட மே முதல் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டதன் வரலாறு, லட்சக்கணக்கான அமெரிக்க தொழிலாளர்கள் எட்டு-மணி நேர வேலைக்காக போராடிய 1886ஆம் ஆண்டிலிருந்து துவங்குக்கிறது.
மிகப்பெரிய சாவு எண்ணிக்கை:
உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்துள்ளனர், பல லட்சக்கணக்கானோர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஈரான் மற்றும் வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் பல தேவையற்ற மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. உலகம் முழுவதும் கூட்ட நெரிசலாலும், மாசு மற்றும் ஏழ்மை நிலையாலும், மேலும் பல்லாயிரக் கணக்கானோர் இவ்வைரஸால் உயிரிழக்கப் போகின்றனர். வறுமையாலும், பொதுச் சுகாதார சேவைகளின் பற்றாக்குறையாலும், வேறுவகை உயிர்கொல்லி நோய்களுக்கும், தீராத நோய்களுக்கும் சிகிச்சை பெற்று வருபவர்கள், கொரோனா நெருக்கடி காலத்தில் போதிய சிகிச்சையின்றி இறக்க நேரிடக் கூடும் என்பதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தனியார்மயம், தாராளமயம் உள்ளிட்ட நவ-தாராளவாத கொள்கைகளில் எல்லை மீறி சென்ற இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில், இப்பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும், நெருக்கடியின் தாக்கமும் உலகின் வேறெங்கிலும் விட அதிமாக இருப்பது தற்செயலானதல்ல.
நைஜீரியா முதல் பிரேசில் வரை ஏழை முதலாளித்துவ நாடுகளில் சேரிகளில் வசிக்கும் வெகுஜன மக்களால் பாதுகாப்பான சமூக இடைவெளியை எவ்வாறு கடைபிடிக்க முடியும்? கொரோனா தொடர்பான உயிர்பலிகள் முதலில் துவங்கிய தாராவி, மும்பை நகரின் மையப்பகுதியில் ஒரு சதுர மைல் பரப்பில் 8,00,000 மக்களை உள்ளடக்கியுள்ள சேரிப்பகுதியாகும். உலகின் அசுத்தமான வாழ்விடங்களில் வசிப்பவர்களுக்கும், கிராமப்புற ஏழை மக்களுக்கும் சுத்தமான குழாய் தண்ணீரும், பாதுகாப்பான கிருமி நாசினிகளும் கிடைக்கவில்லை. ஊட்டச்சத்து குறைப்பாடுடைய பலர் இத்தொற்று நோய்க்கு எளிதான இலக்குகளாவார்கள். காசநோய், காலரா, மலேரியா போன்ற குணப்படுத்தக் கூடிய நோய்களால் ஆண்டுக்கு பல லட்சம் மக்கள், குறிப்பாக, குழந்தைகள் மரணமடையும் நவ-காலனிய உலகில் இத்தொற்று, இன்னொரு எமனாக முளைத்துள்ளது. ஈகுவேடார் உள்ளிட்ட நாடுகளின் முக்கிய நகரங்களின் கொரோனாவுக்கு பலியானவர்களின் சடலங்கள் அதிகாரிகளால் கொண்டு செல்லப்படாமல் தெருக்களில் கைவிடப்பட்ட நிலையில் கிடக்கின்றன. கொரோனா ஒருபுறமிருக்க, சிரியா மற்றும் ஏமனின் உள்நாட்டுப் போர்கள் உட்பட, முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியம் தொடர்பான பன்முக காரணிகளால் கிட்டத்தட்ட 36 நாடுகளில் பஞ்சம் உருவாவதற்கான அச்சுறுத்தல் நிலவுவதாக சர்வதேச உணவு கழகம் எச்சரிக்கிறது.
முதலாளித்துவ அரசுகளின் கீழ்த்தரமான தோல்வி
பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்ற போதிலும், முதலாளித்துவ அரசுகள் இப்பெருந்தொற்றை சமாளிக்க மிகக் கேவலமான வகையில் தவறியிருகின்றன. ஆளும் வர்க்கங்களின் நலன்களும், உழைக்கும் மக்களின் நலன்களும் ஒன்றுக்கொன்று பொருந்தவில்லை என்பதை இத்தொற்று நோய் தடுப்பு பணிகளில் அரசுகள் காட்டும் குழப்பங்களும், வேண்டா-விருப்பு மனநிலையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. இத்தொற்று நோயின் ஆரம்பக் கட்டங்களில், மக்கள் தங்களது அச்சத்தினால், அரசுகளிடமிருந்து உதவிகளை எதிர்நோக்கியிருந்த காரணத்தால், ஆளும் வர்க்கங்களுக்கு நிலவி வந்த ஆதரவு, தற்போது எதிர்ப்பாக மாறிவருகின்றது.
சுகாதார பணியாளர்களுக்கும், பொதுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும், இதர அத்தியாவசிய பணியாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை போதிய அளவுக்கு வழங்காதது, அவர்களை இந்நோய் தொற்றுக்கு ஆளாக்கி, மரணக் குழியில் தள்ளும் குற்றச் செயலாகும். இந்தியா, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா போன்ற நாடுகளில், உணவு விநியோகமோ அல்லது எந்தவித அரசு சலுகைகளோ வழங்காமல், பொதுமுடக்கத்தை விதித்து, அரசு ஒடுக்குமுறைகளை மட்டும் அதிகரிப்பது ஆளும் வர்க்கங்களின் மிகக் கொடூரமான தன்மையை வெளிப்படுத்துகிறது.
கொரோனா பெருந்தொற்று பரவ தனிப்பட்ட நபர்களையும், உழைக்கும் மக்களையும் காரணமாக காட்டி, அவர்களை தீயவர்களைப் போல் சித்தரிக்க முயலும் முதலாளித்துவ அரசுகள் மற்றும் ஊடகங்களின் முயற்சிகளை தொழிலாளர் இயக்கங்கள் எதிர்த்தாக வேண்டும். உண்மையில், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களைக் கோரியும், பணியிடங்களில் சுகாதாரம் கோரியும், ஊதியம் மற்றும் பணிச்சூழல் பிரச்சனைகளை முன்வைத்தும் உழைக்கும் வர்க்கத்தின் பல பிரிவுகள் போராட்டங்களையும், வெளிநடப்புகளையும் முன்னெடுப்பதோடு, வேலை நிறுத்தத்திற்கான ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து விதமான மருத்துவத்துறை ஊழியர்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவும் சூழலில் மஸாச்சுஸெட்ஸில் உள்ள வொர்செஸ்டெரின் ஒரு பெரிய மருத்துவமனை ஒன்றில் செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, அமெரிக்காவில் உள்ள CWI உடன் ஒருமித்த சிந்தனை கொண்ட சுயாதீன சோஷலிச குழுவினர், 100 கார்களுடன் நடைபெற்ற மாபெரும் கார் பேரணியில் பங்கேற்றனர். லண்டனில், பொதுப் போக்குவரத்து தொழிலாளர்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் பொருட்டு, பேருந்தின் மைய நுழைவு வாயிலில் மட்டும் பயணிகள் ஏறவும் இறங்கவும் வேண்டும் என்ற விதிமுறையை இயற்றக்கோரி போராடிய பேருந்து ஓட்டுநர்கள், CWI ஆற்றிய பெரும் பங்கின் மூலம், குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளனர்.
இப்பெருந்தொற்றின் நெருக்கடி காலம் முழுவதும், உழைக்கும் மக்களின் தேவைகளைக் காட்டிலும், முதலாளி வர்க்கத்தின் சுயநல இலாபத்துக்கும், வர்க்க நலனுக்குமே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இவ்வாறாக, பெரும்பான்மையான அறிவியல் வல்லுநர்களின் அறிவுரைகளுக்கு எதிராக, பொது முடக்கத்தை முன்னதாகவே முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பல அரசுகள் அழுத்தம் கொடுத்து வருவது, கோடிக்கணக்கான மக்களின் உயிர்களின் மீது ஆளும் வர்க்கங்கள் காட்டும் கொடூரமான அலட்சியத்தை அம்பலப்படுத்துகிறது. வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளைப் போதிய அளவிற்கு மேற்கொள்ளாத நிலையிலும், தொழிலாளர்களை அவசரகதியில் வேலைக்கு செல்ல வற்புறுத்தும் ட்ரம்பே ஆளும் வர்க்கங்களின் பிரதிநிதிகளில் மிக மோசமானவராக இருக்கின்றார். ஆனால், இதே அணுகுமுறையே ஜெர்மனியின் மெர்கெல், பிரான்சின் மேக்ரான் உள்ளிட்ட பெருமுதலாளின் சேவகர்களான பல அரசியல் தலைவர்களாலும் பின் தொடரப்பட்டு வருகிறது.
தோற்றுப்போன ஐரோப்பிய ஒன்றியம்
முதலாளித்துவ அரசமைப்பின் தன்மையாலும், உற்பத்தி மூலங்கள், விநியோகத்தின் மீதான தனியுடமையை அடிப்படையாக கொண்ட அதன் இலாப அமைப்பின் தன்மையாலும், உலகெங்கிலும் இந்நோயை எதிர்த்து போராடத் தேவையான அறிவுசார் திட்டமிடுதலுக்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது. இவ்வைரஸ் தாக்கிய போது, உதவி கேட்டுக் கதறிய இத்தாலிக்கு, ஐரோப்பிய முதலாளிகள் ஒன்றியம் பதிலளிக்க தவறியது. தற்போது ஒட்டுமொத்த கண்டத்தையுமே இவ்வைரஸ் சூறையாடிக் கொண்டிருக்கும் போது, முதலாளித்துவ நாடுகளுக்கிடையிலான, அதிலும் குறிப்பாக, பணக்கார வடக்கு நாடுகளுக்கும், தெற்கு நாடுகளுக்கும் இடையிலான போட்டிகளையும், பதற்றங்களையும், உள்ளடக்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஒத்திசைவான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாதிருப்பது நிரூபணமாகியுள்ளது. இத்தகைய நிகழ்வுகள், எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் என்ற ஒரு அமைப்பு இருக்கப் போகிறதா என்பதையே கேள்விக் குறியாக்கியுள்ளன.
போட்டியையும், தனியார் இலாபத்தையும் முதன்மைப்படுத்தும் முதலாளித்துவத்தின் ஆட்சி, கொரோனா பெருந்தொற்றிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதையும், தொற்றுக்கு ஆளான மக்களுக்கு சிகிச்சை முறைகளை வகுப்பதையும் தாமதப்படுத்தி கடுமையான சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதற்கு மாறாக, இத்தொற்று நோய்க்கு முடிவுகட்ட தேவையான அறிவியல் பூர்வமான ஈடுபாட்டையும், ஒத்துழைப்பையும் உலகளாவிய அளவில் உருவாக்க சோஷலிச சமூகத்தால் மட்டுமே முடியும்.
பொருளாதார சரிவு
உலகம் முழுவதும் முதலாளித்துவ அரசுகளின் ஈவு-இரக்கமற்ற பொதுமுடக்க நடவடிக்கைகளின் பொருளாதார விளைவுகள் உழைக்கும் மக்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பேரழிவை உண்டாக்கியிருக்கின்றன. கோடிக்கணக்கானோரின் வேலைகள் ஒரே இரவில் பறிக்கப்பட்டுள்ளன. வருமானங்கள் பறிப்போய்விட்டன. வழக்கமான ஊதியம் இல்லாததாலும், அரசு நிவாரணங்களை பெறுவதற்குப் பல வாரங்கள் அல்லது பல மாதங்கள் தாமதமாவதாலும், பல தொழிலாளர்களால் வாடகை, மின் கட்டணம் மற்றும் மளிகை பாக்கியை செலுத்த முடியாது என்பதில் வியப்பேதும் இல்லை. பசியால் வாடும் குடும்பங்களை சமாளிக்க உணவு வங்கிகளும் திணறி வருகின்றன. நடுத்தர வர்க்கங்களும் கடுமையான துயரங்களை சந்தித்து வருகின்றன. பெரு வணிகங்களுக்கு மட்டும் அரசுகள் முன்னுரிமை அளித்து பாதுகாத்து வருவதால், சிறு வணிகர்களும், சிறு தொழில் புரிபவர்களும், பெருந்திரளான சுயதொழில் புரிபவர்களும் சீரழிவை சந்தித்து வருகின்றனர்.
உலக முதலாளித்துவ பொருளாதாம் சரியப்போகின்றது. ஒரு கட்டத்தில் உலக அளவில் தேவை குறைந்ததால் கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியத்தை தொட்டது. உலக பொருளாதார பேரவையின் கூற்றுப்படி, இந்நோய் தொற்றால் உலக பொருளாதாரம் $1 லட்சம் கோடியை இந்தாண்டு இழக்கப் போகின்றது. பலவீனமான சமூகங்களை இது மிகவும் மோசமாக பாதிக்கப் போகின்றது. ஆப்பிரிக்க கண்டத்தில் 50% வேலைகள் பறிப்போகவிருப்பதாக இப்பேரவை கணித்துள்ளது. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த முதலாளித்துவ நாடான அமெரிக்காவே விழுந்து கிடக்கிறது. வேலையிழப்பு நிவாரண திட்டத்தில் பதிவு செய்ய முடிந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை மட்டும் 2 கோடியே 60 லட்சமாகும். இனி வரும் காலங்களில் பல நாடுகளின் பொருளாதாரங்கள் பெரும் சரிவுக்கோ அல்லது மந்தநிலைக்கோ உள்ளாகப் போகின்றன. இது அந்நாடுகளின் வர்க்க உறவுகளின் மீதும், வர்க்க மோதல்களின் மீதும் ஆழமான தாக்கங்களை உருவாக்கப் போகின்றது.
முதலாளித்துவம் போட்டிக்கானதே ஒழிய, ஒத்துழைப்புக்கானதல்ல
இந்நோய் தொற்றால் உலக முதலாளித்துவ நாடுகள் தங்களது சக்திகளை ஒன்று திரட்டி, இந்நெருக்கடிக்கு ஒரு ஆக்கப்பூர்வமான தீர்வை வகுக்கவில்லை. மாறாக, முதலாளித்துவ நாடுகளுக்கியிலான போட்டியும், பகைமையும் அதிகரித்திருக்கிறது. சீனாவிலிருந்து மருத்துவ உபகரணங்களை வாங்கும் நாடுகள், அப்பொருட்கள் சீன விமான நிலையங்களை வந்தடைவதற்கு முன்பாகவே ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டு காலை-வாரிக் கொள்கின்றன.
சீனா மற்றும் ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்த ட்ரம்ப் இந்நெருக்கடியை பயன்படுத்திக் கொள்கின்றார். இந்த பெருந்தொற்றின் விளைவால், சர்வதேச மற்றும் பிராந்திய சக்திகளுக்கிடையிலான மோதல்களையும், சர்வதேச அளவிலான பதற்றங்களையும், போட்டிகளையும் நாம் காணப் போகின்றோம். சர்வதேச தொழிலாளர் இயக்கங்களின் தீர்மானகரமாக நடவடிக்கைகளால் ஏகாதிபத்திய போர் திட்டங்கள் சீர்குலைந்தால் ஒழிய, இம்மோதல்கள் இரத்தம் தோய்ந்த போர்களுக்கு இட்டுச்செல்ல போகின்றன.
முதலாளித்துவ அமைப்பை அம்பலப்படுத்துவதன் மூலமாக, சமூக மாற்றத்திற்கான அவசியத்தையும் இப்பெருந்தொற்று உணர்த்தியுள்ளது. உழைக்கும் மக்கள் ஒதுங்கி நிற்பதால், அவர்கள் பழைய படி, கட்டற்ற நவ-தாராளவாத கொள்கைகளையும், உலக முதலாளித்துவ சுரண்டலையும், சுற்றுச்சூழல் சீரழிவையும் உள்ளடக்கிய அதே பழைய ஆட்சி முறைகளுக்கு திரும்ப வேண்டும் என்று அர்த்தமில்லை. பல நாடுகளில் முழு பொருளாதார சீர்குலைவை தடுத்து நிறுத்த, அரசுகள் மேற்கொண்டு வரும் தலையீடுகள் நமக்கானதல்ல. இவ்வளவு வளங்கள் இருந்தும், வழக்கமான சமயங்களில் உழைக்கும் மக்களின் வாழ்வுகளை மேம்படுத்த அவற்றை ஏன் பயன்படுத்துவதில்லை? என்ற கேள்வி பலகோடி மக்களின் எண்ணங்களில் உதிக்கிறது.
முதலாளித்துவத்தை தூக்கியெறிந்துவிட்டு, சமூகவுடமையின் கீழ், உழைக்கும் மக்களின் பொது நலனுக்காக திட்டமிடுவதற்கான பொருளாதார சூழலை உள்ளடக்கிய ஒரு சோஷலிச சமூகத்தை உருவாக்க- அடிப்படை மாற்றத்துக்கான ஒரு துணிச்சலான சோஷலிச வேலைத்திட்டத்தை முன்வைக்க இந்நிகழ்வுகள் சோஷலிஸ்டுகளுக்கு வாய்ப்பளிக்கின்றன.
இதற்கு மாறாக, தொழிலாளர் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளும், பல்வேறு தொழிற்சங்கங்களின் தலைமையும், “ இது தேசிய ஒருமைப்பாட்டை காக்க வேண்டிய இக்கட்டான நேரம்” என்ற முதலாளித்துவ வாதத்தை ஏற்றுக்கொள்கின்றன. இத்தகைய ’தேசிய பேரிடர்’ வாதங்கள் யாவும் உழைக்கும் வர்க்கம் தங்களது தேவைகளை ஒதுக்கிவைக்க வேண்டும் என்று கோருகின்றன.
ஆனால், ‘தேசம்’ என்றால் என்ன? பெரும் தனியார் நிலங்களை உள்ளடக்கிய ஆடம்பர மாளிகைகளில் தங்களை சுய தனிமைப்படுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்கும் பெரும் பணக்காரர்களுக்கும், சிறு வீடுகளில் பல பேரை உள்ளடக்கி, வருமானமின்றி, உணவுக்காக போராடி வரும் வெகுஜன உழைக்கும் மக்களின் குடும்பங்களுக்கும் என்ன சம்பந்தம்?
சில இடது சாரி கட்சிகளும், அமைப்புகளும், இந்த ’தேசிய பேரிடர்’ அனுதாபத்துக்கு உள்ளாகி, அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்களும் அவசரகால நடவடிக்கைகளை ஆதரித்து வாக்களித்துள்ளனர். முதலாளித்துவ அரசு எந்திரங்களுக்கு இவ்வாறு கூடுதல் அதிகாரம் அளிப்பதன் பின் விளைவை ஏற்கனவே காண முடிகிறது. உதாரணமாக, பாரிஸ் நகரத்தின் மிகவும் ஏழ்மையான, மக்கள் தொகை மிகுந்த சில பகுதிகளில் பொது முடக்கம் தொடர்பான எல்லை மீறிய நடவடிக்கைகளால் காவல்துறைக்கும் இளைஞர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்துள்ளன. இந்தியாவிலும் கூட நிராயுதபாணிகளான புலம் பெயர்ந்த தொழிலாளர்களை காவல்துறையினர் லத்தியின் மூலம் சுதந்திரமாக விளாசி வருகின்றனர்.
CWI எச்சரித்திருந்ததைப் போல், இப்புதிய அதிகாரங்கள் தொழிலாளர் வர்க்க அமைப்புகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகிறது. அயர்லாந்தின், டப்ளின் நகரில், டெபன்ஹாம்ஸ் மேட்டுத் தெருவில் ஒரு அங்காடியில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள், சமூக இடைவெளியைக் கடைபிடித்து போராட்டம் நடத்திய போதிலும், புதிதாக இயற்றப்பட்ட பெருந்தொற்று சிறப்பு அதிகார சட்டத்தை காரணம் காட்டி காவல் துறையினர் போராட்டக்காரர்களை கலைத்தனர். ஹங்கேரியின் விக்டர் ஆர்பன், பிலிப்பைன்ஸின் ரோட்ரிகோ டியூடெர்ட் போன்ற வலது-சாரி அரசுகள் இந்நோய் தொற்று சூழலை பயன்படுத்திக் கொண்டு, கண்டதும் சுடும் உத்தரவு உள்ளிட்ட, இராணுவ ஒடுக்குமுறை மற்றும் சர்வாதிகார ஆட்சிக்கு நிகரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தொழிலாளர்களுக்கான சுயாதீனமான வேலைத்திட்டங்கள் தேவை
எல்லா நேரங்களிலும், தொழிலாளர் இயக்கத்துக்கு தனக்கே உரிய, சுயாதீனமாக வேலைத் திட்டமும், ஸ்தாபனமும் தேவைப்படுகின்றது. கொரோனா நெருக்கடி காலத்தில், இப்பெருந்தொற்றை எதிர்கொண்டு, உழைக்கும் மக்களை பாதுகாக்க ஒரு அவசர வேலைத்திட்டத்தை CWI தயாரித்திருக்கிறது.(http://ethir.org/cwi_corona_program/ ). இது தற்போது அகிலமெங்கிலும் இருக்கும் தொழிற்சங்கங்களாலும், தொழிலாளர் ஸ்தாபனங்களாலும், உள்ளூர் சமூக செயற்பாட்டாளர்களாலும், மாணவர் அமைப்புகளாலும், சமூக ஆர்வலர்களாலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. சிலி, இந்தியா, நைஜீரியா மற்றும் உலகின் பல நாடுகளில் போர்க்குணம் மிக்க தொழிற்சங்கவாதிகளுடனும், இதர சமூக ஆர்வலர்களுடனும் சேர்ந்து கூட்டு செயற்திட்டங்களை வகுப்பதிலும், கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலும் CWI தோழர்கள் முன்னணியில் உள்ளனர்.
இப்பெருந்தொற்று, முதலாளித்துவத்தின் சீர்கேடுகளையும், கொடூரங்களையும் அம்பலப்படுத்துவதோடு, சர்வதேச தொழிலாளர் இயக்கங்களுக்கு கடுமையான சோதனைகளையும் முன்வைக்கிறது. இனி வரும் காலங்களில், இன்னும் பல புதிய வைரஸ்களையும், கொள்ளை-நோய்களையும், பருவநிலை மாற்றம் தொடர்பான மாபெரும் சீற்றங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் மனிதக்குலம், அவற்றை எப்படி எதிர் கொள்ளப் போகின்றது என்பது சமூகத்தின் வர்க்கத் தன்மையை பொருத்தே இருக்கும். 1% பெரும் பணக்காரர்களால் ஆளப்படும், ஆழமான சமூக ஏற்றத்தாழ்வுகளை கொண்ட ஒரு சமூகத்தில், உழைக்கும் வர்க்கமும் ஏழைகளும் தேவையற்ற பெரும் இன்னல்களை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
பொதுசுகாதாரம் மட்டுமின்றி, சுற்றுச்சூழல், மனித இனம் ஆகியவற்றின் எதிர்காலமும் கூட முதலாளித்துவத்தை வீழ்த்தி, அறிவார்ந்த, ஜனநாயக அடிப்படையில் சோஷலிச மறு-ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட சமூகத்துடன் பின்னிப் பிணைந்தே உள்ளது
இந்த லட்சியத்திற்காக போராட இந்த 2020 மே தினத்தன்று CWI சூளுரைக்கின்றது. தொழிலாளர் இயக்கத்துக்காக இன்னுயிரை ஈந்தோரையும், துணிச்சல் மிக்க போராளிகளையும் நினைவு கூர வேண்டிய இந்நாளில், முதலாளித்துவத்தின் வைரஸுக்கு பலியான அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் இவ்வேளையில், இந்த அறிக்கையை வாசிக்கும் சமூக ஆர்வலர்களை, சோஷலிசத்துக்கான போராட்டத்தில் எங்களுடன் கைக்கோர்க்க வேண்டுகிறோம்!