முதலாளித்துவம் மற்றும் கொரோனா வைரஸின் கொடூரத்தை எதிர்த்துப் போராடும் இந்தியா

Migrant workers seen walking with their belongings at New Delhi’s National Highway
1,883 . Views .

-ஜெகதீஸ் சந்ரா

உலகெங்கிலும் உள்ளதைப் போலவே, கொரோனா வைரஸ் நெருக்கடி இந்தியாவின் முதலாளித்துவ அரசின் போதாமைகள், இயலாமைகள் மற்றும் தீர்க்கமுடியாத முரண்பாடுகள் அனைத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது. உலகின் ஆளும் வர்க்கம் தங்கள் அமைப்பு வளர்ந்து வருவதாகவும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் முன்னேறி வருவதாகவும் மக்கள் நம்ப வேண்டும் என்று நினைக்கின்றது. இதே நோக்கோடு இந்தியாவும் ஒரு ஜனநாயக முகமூடி அணிந்துகொள்கின்றது.

பரந்த சந்தை மற்றும் இயற்கை வளங்களைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகளுக்கு “வளர்ந்து வரும் பொருளாதாரம்” எனும் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கோவிட் -19 ஆல் உருவான நெருக்கடி யதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளது. மற்றும் இந்த நாடுகளில் ஆளும் ஆட்சியாளர்களின் தோல்வி அப்பட்டமாக தோலுரித்து காட்டப்பட்டிருக்கிறது.

இப்போது மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு பிரதமர் நரேந்திர மோடியால் ஒரு மோசமான சர்வாதிகார வழியில் அறிவிக்கப்பட்டது. ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ் அல்லது தேசியவாத தன்னார்வ கேடட்கள்) க்கான விசுவாசமான செயல்பாட்டாளராக அவர் இருந்த காலகட்டத்தில் உத்தரவிடுவதில் அவர் நன்கு பயிற்சி பெற்றிருக்கிறார். மார்ச் 24 அன்று, 1.34 பில்லியன் மக்களை உரடங்கில் வைக்கும் உத்தரவை குறித்து அறிவிக்கும் போது அனைவர்க்கும் வெறும் 4 மணிநேர அவகாசம் மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. முதலாளித்துவ பிரதிநிதிகளின் திறமையற்ற தன்மையை இது காட்டுகிறது. குறிப்பாக இந்தியா போன்ற நவ-காலனித்துவ நாடுகளில், கொள்கை வகுத்தல் மற்றும் முடிவுகளை நிறைவேற்றுவது ஆகியவை அரசியல் எதிரிகளை எதிர்க்கும் புள்ளிகளாகவே கருதப்படுகின்றன.

இந்தியா – அதிதீவிரமாக சமூக விலகலை பின்பற்றும் நாடு.

ஒரு சதுர கி.மீ.க்கு 464 நபர்கள் என்ற எண்ணிக்கையில் இருக்கும் இந்தியாவைப் போல அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நாட்டில் சமூக விலகல் குறித்து மிக எளிதாக உத்தரவிட முடிகிறதே தவிர கடைபிடிக்க முடியவில்லை. முரண்பாடு என்னவென்றால், இந்திய சமூகம் இன்றும் நிலப்பிரபுத்துவத்தின் வெறுக்கத்தக்க “சாதிய” சின்னத்தை தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளின் சமூக விரோதப் போக்கையும் பின்பற்றுகிறது. ஆகையால், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கு ஏற்கனவே இருக்கும் இந்த சமூக இடைவெளியை பின்பற்றுவது அவர்களுக்கு  பொருத்தமாக தோன்றுகிறது. நோய் மற்றும் மரணத்தைத் தவிர்ப்பதற்காக 1.34 பில்லியன் மக்களை சமூகவிலகளை கடைபிடிக்க கட்டாயப்படுத்துகின்றனர். பல சுகாதார வல்லுநர்கள் சொல்வது போல், நாடு முழுவதும் கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்படாவிட்டால், 30 முதல் 40 மில்லியன் இந்தியர்கள் ஓரிரு மாதங்களில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்படலாம். 2021 ஐப் பார்க்க எத்தனை பேர் வாழ்வார்கள் என்பதை யாராலும் யூகிக்க முடியவில்லை.

21 நாட்களுக்கு ஊரடங்கை மோடி அறிவித்த உடன் செழிப்பான நடுத்தரவர்க்கத்தினர் கடைகளை நோக்கி படையெடுத்தனர். பெரும்பாலும் உணவுப்பண்டங்களையும் மளிகை பொருட்களையும் வாங்கிக்குவித்தனர். பல கடைகளில் உடனடியாக கிருமி நாசினிகள் விற்று தீர்ந்துவிட்டது. செல்வாக்கு படைத்த நடுத்தர வர்க்கமும் பணக்காரர்களும் இதை வலதுசாரி மோடியின் “தொலைநோக்கு” நடவடிக்கை என்ற விதத்தில் பாராட்டுகளை அள்ளிவீச ஆரம்பித்துவிட்டனர்.

86% உயர்மதிப்பு பண தாள்களை அழித்தொழித்த 2016 இன் படுதோல்வியான பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆளும் பாஜக வேண்டுமென்றே மறக்கவிரும்பலாம். கிட்டத்தட்ட முழு நாடும் அவர்களின் சேமிப்பை புது பண தாள்களை கொண்டு மாற்றிக்கொள்வதற்காக வங்கி வாசல்களில் காத்துக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டது. ஏறக்குறைய பத்து வாரங்களுக்கு நாடெங்கிலும் குழப்பம் நிலவியது, இதன் விளைவாக 180 க்கும் மேற்பட்டோர் இறந்தனர், நீண்ட வரிசைகளில் நிற்க நேர்பட்டதாலும் பணத்தை பெற முந்திக்கொள்ள இருந்ததாலும் இந்த மரணங்கள் நேரிட்டது.

இந்த முடக்கம் பணம் படைத்தவர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியதின் விளைவாக அவர்கள் சாலையோர கடைகளில் பொருட்களை வாங்க துவங்கிவிட்டனர். புதிய தாராளமயமாக்கல் துவங்கியபின் மூன்று தசாப்தங்களாகவே பொது விநியோக முறை (PDS) பலவீனமாகி முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. பரவலான விநியோக பற்றாக்குறை காரணமாக உணவு விநியோகம் முற்றிலும் ஸ்தம்பித்துப்போயிருக்கிறது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்

உள்நாட்டில் 14 முதல் 16 மில்லியன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமற்ற கணக்கெடுப்பின்படி புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை இதனைவிட அதிகம். கட்டுமானம், சாலை அமைத்தல், துணைத் தொழில்கள் மற்றும் பல அபாயகரமான வேலைகளில் ஈடுபட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் – மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும் இந்த தொழிலாளர்கள் – நெருக்கடியின் போது கைவிடப்பட்டுள்ளனர். இப்போது அவர்கள் உள்ளூர் மாஃபியாக்கள், பறிமுதல்காரர்கள், நில உரிமையாளர்கள் மற்றும் கடன் காரர்கள் ஆகியோரால் துன்புறுதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். பெரும் நகரங்களிலும் டவுன்களிலும் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த திடீர் ஊரடங்கு அறிவிப்பு ஒரு மரண ஓலையாக மாறிருக்கின்றது. இதில் பெரும்பாலானோர் சமூக பாதுகாப்பு சலுகைகளையோ பிற நலனுதவிகளையோ அனுபவிப்பதில்லை.

இந்தியாவின் சமூக சாபம் – சாதி அமைப்பு. சாத்திய ஒடுக்குதலை செய்வோர் தொழிலாளர் வர்க்கங்களுக்கு எதிராக அக்கறையின்மை மற்றும் பகைமையைக் கொண்டுள்ளனர்.. சமுதாயத்தின் சலுகை பெற்ற பிரிவுகள் – குறிப்பாக வசதியான வருமானம் உள்ளவர்கள் மற்றும் நிலம், குடிநீர், தொழிற்சாலைகள், வீடுகள் போன்ற வளங்களை சொந்தமாகக் கொண்டு கட்டுப்படுத்துபவர்கள் சமூகத்தில் உண்மையான செல்வத்தை உருவாக்குபவர்களிடம் வெறுப்பைக் காட்டுகின்றனர்.

மோடி அரசாங்கத்தின் கீழ் உள்ள ஆட்சி இரண்டு காரணங்களுக்காக ஏழைகளுக்கு எதிரானதாக உள்ளது. முதலாவதாக, அதன் சமூக அடித்தளம் இதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சி அரசாங்கங்களைப் போல் ஏழ்மையான பிரிவுகள் அல்ல. இது அடிப்படையில் வர்த்தகர்கள் மற்றும் “வெற்றிகரமான” நடுத்தர வர்க்கங்களின் கட்சி. உழைக்கும் ஏழைகளுக்கு எதிரான இந்திய உயரடுக்கின் வெறுப்பை இது தடையின்றி பிரதிபலிக்கிறது. இது மிகவும் ஆழமாக அமைந்திருக்கிறது.  ஏழைகள் மிக முக்கியமான பங்காற்றுகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றார்கள்.

பாஜகவின் சித்தாந்தவாதிகள்,  இந்து கலாச்சாரத்தின் மேலாதிக்கத்தின் வாதத்தையும் அதன் ‘மரபையும்’ மறைமுகமாக முன்வைப்பது தற்செயலானது அல்ல. உயர்ந்த சமூக ஒழுங்கை அடிப்படையாகக் கொண்டதால் இந்துத்துவம் தனித்துவமானது என்று அது கடுமையாக வாதிடுகிறது. தொழிலாளர்களின் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட -அவர்களின் சமூக படி நிலையை வரையறுக்கும் வர்ண முறை – பரம்பரையின் அடிப்படையில் இந்த மோசமான சமூக அந்தஸ்தின் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் உள்ளார்ந்த மிருகத்தனங்களை அவை விதி என்ற வாதத்தின் மூலம் ஆதரிக்கும். அவர்களுக்கு “நிவாரணம்” வழங்குவதற்கான யோசனையை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் ஏற்கனவே தயங்குகிறது. வீட்டுவசதி, உணவு, சிறந்த ஊதியம், தானியங்கள் மற்றும் அங்கீகாரம் போன்றவையை கூட விட்டுவிடலாம், பிபிஇ (தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள்) வழங்குவதிலேயே அவர்களுக்கு தயக்கம் இருக்கின்றது.

கருத்தை உருவாக்கும் – உயர்-நடுத்தர வர்க்கங்கள் மற்றும் சலுகை பெற்ற சாதிகளில் இருக்கும் இரண்டு அல்லது மூன்று சதவிகிதத்தினர் – வரலாற்றில் அனைத்து வளங்களையும் கைப்பற்றியது மட்டுமல்லாமல், அரசாங்கக் கொள்கைகளையும் (பாஜக அல்லது காங்கிரஸ்) தீர்மானிக்கிறார்கள். இது முக்கியமாக அவர்களின் பேராசையைப் பூர்த்தி செய்கிறதே தவிர பெரும்பான்மையினரின் அடிப்படைத் தேவைகளை அல்ல. இந்த கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது இதுவரை வெளிச்சத்தில் இருந்து மறைக்கப்பட்ட இந்த கோரமான உண்மை அப்பட்டமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜனநாயகம் என்பது வளைந்த முதுகிலும், பட்டினியால் வாடப்பட்ட வயிற்றிலும் சவாரி செய்வதன் மூலம் “உடமையுள்ள” சிறுபான்மையினர் மட்டும் அனுபவிக்கும் ஒரு பாக்கியமாகும்.

எதிர்பார்க்கப்படாத கிராமப்புறத் துயரம்

2011 ஆம் ஆண்டின் சமூக பொருளாதார மற்றும் சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, “இந்தியாவின் கிராமப்புற மக்களில் 51% நிலமற்றவர்கள்”. பல மாநிலங்களில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு, வயல்களில் வேலை நிறுத்தப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் அரசாங்கம் ஒரு பொருளாதாரச் சலுகையை அறிவித்தபோதும், அந்த நிவாரணம் நிலம்படைத்த விவசாயிகளுக்கானதாகவே உள்ளது. நிலமற்ற தொழிலாளர்களுக்கு, கடந்த மூன்று வாரங்களாக எந்த வருமானமும் கிடைக்கவில்லை, இதனால் அவர்கள் தங்கள் சொந்த உணவு உண்பதைக் குறைப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஆரம்பகாலகட்டத்தில், ஆளும் வர்க்கத்தின் நலன்கள் காங்கிரஸ் கட்சி அரசாங்கங்களால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டன. அவர்கள் சமூகநல கொள்கைகளை கைவிட்டனர். இருந்தாலும் பசியில் வாடும் மக்களுக்கும் குறிப்பாக நிலமற்ற தொழிலாளர்களுக்கு “வேலைக்கான உணவு” போன்ற திட்டங்கள் மூலம் தங்களின் “சமூக ஜனநாயக” முகத்தை காப்பாற்றிக்கொள்ள முயன்றார்கள். இது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட பணிகளுடன் கூடுதலாக வழங்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம், ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் ஒரு வருடத்தில் 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பை உத்தரவாதம் செய்கிறது. இப்போது மோடி தலைமையிலான பாஜக, பாரம்பரியமாக ஒரு வர்த்தகர்களின் கட்சியாக இருப்பதால், இந்த சிறிய நல திட்டத்தை கூட வெறுத்தது, இருப்பினும் காங்கிரஸின் தோல்வியைக் காட்ட இதனை தொடர்ந்தது.

ஊரடங்கு தொடங்கியபோது நூறாயிரக்கணக்கான இளம் தொழிலாளர்கள் வீடு திரும்ப முடிவு செய்தனர். திறமையற்ற வகையில் இந்த ஊரடக்கை கையாண்டதால் தளவாடங்களும் ரயில் மற்றும் சாலை போக்குவரத்தும் மெல்ல நிறுத்தத்திற்கு கொண்டு வரப்பட்டது. பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து நடக்கத் தொடங்கினர், அவர்களது குடும்பத்தினருடன் சேர மட்டுமல்லாமல், அறுவடைக்கான பருவகால வேலைகள் கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் அவர்கள் நடந்தனர். பலர் நினைத்துப்பார்க்க முடியாத நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தே சென்றனர். மற்றவர்கள் லாரிகளில் எப்படியோ தங்களுக்கான இடங்களை பிடித்துக்கொண்டனர். தங்களின் சொந்த இடங்களை அடையும் தருவாயில், அவர்களின் கால்களில் இருந்து கசிந்த ரத்தம் இதியாவின் தூசி படிந்த கிராமப்புற சாலைகளில் ஒரு வழி சுவட்டை ஏற்படுத்தியிருகிறது. பலர் குறிப்பாக முதியோர்களும் பெண்களும் இந்த பயணத்தின் போது இறக்கநேர்ந்தது.

“வயல்களில் வேலை இல்லை, வேறு எங்கும் வேலை இல்லை”

பல கிராமங்களில் உள்ள பெரும் விவசாயிகள், குறிப்பாக இந்தியாவின் வடமாநிலங்களில் உள்ள விவசாயிகள் ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது மிகவும் கடினம் என்பதால் அறுவடை இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்தனர். இதன் விளைவாக, பண்ணைத் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான வருமானமும் இல்லாமல் போய்விட்டது.

இந்தியாவின் “சர்வ வல்லமையுள்ள” பிரதமர் திரு. மோடி வாக்குறுதியளிப்பதில் மன்னர். அவர் 6 வருடங்களாக அளிப்பதாக கூறிவரும் நலத்திட்டங்களை அதே வேகத்தில் செய்து முடித்திருந்தாள் அவர் சொன்ன “அச்சே தின்” (“நல்ல நாட்கள்”) ஒரு யதார்த்தமாக மாறியிருக்க வேண்டும். முற்றிலும் வெள்ளை பொய்களாலும் உயர்ந்த திட்டங்களிலும் ஆன அவரது சமீபத்திய தொலைக்காட்சி ஒளிபரப்பில் கிசான் (விவசாயிகள்) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ₹ 2,000 ($ 26) நேரடியாக அவர்தம் வங்கிகளுக்கு இடமாற்றப்படும் என்று அவர் அறிவித்தார். இது ஒரு மிகப்பெரிய முட்டாள்தனம் ஆகும். விவசாயிகளுக்கு எப்படியும் ஆண்டொன்றிற்கு ₹6,000 ($78) பெற்று கொள்ளும் உரிமை உள்ளது. இது பொதுவாக மூன்று தவணைகளில் வழங்கப்படுகின்றது. அரசாங்கம் கூடுதலாக வெறும் ஒரு தவணையை வழங்குவதற்கு முன்வந்திருக்கிறது. இந்த குறைந்தபட்ச உத்தரவாதம் கூட நிலமற்ற தொழிலாளர்கள் அல்லது சிறு குத்தகை விவசாயிகளுக்கு நீட்டிக்கப்படவில்லை.

பொது விநியோக முறை மூலம் இலவச அரிசி கிடைக்கும் என்று மோடி அரசு அறிவித்துள்ள நிலையில், ஊழல் காரணமாக வாக்குறுதியளிக்கப்பட்ட அரிசி பறிமுதல் செய்யப்படுவதாக மாநிலங்கள் முழுவதிலும் இருந்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன. சிறு குழந்தைகளுடன் உள்ளவர்கள் மிகவும் மோசமான வழியில் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உணவளிக்கக்கூட சிரமப்படுகிறார்கள். கிராமப்புறங்களில் தாய்மார்கள் ஏற்கனவே பட்டினி கிடக்கின்றனர், மேலும் தங்கள் குழந்தைகளுக்கு அவர்களால் பாலூட்ட முடியவில்லை.

ஏராளமான விடயங்களுக்கு இடையே வறுமை கொல்கின்றது

ஒருபுறம், மில்லியன் கணக்கான டன் உணவு தானியங்கள் அரசாங்கத்தின் குடோன்களில் அழுகி வருகின்றன. மறுபுறம், குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாத பெற்றோர்கள் குழந்தைகளை கைவிடுகின்றார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) ஒரு பெண் தனது ஐந்து குழந்தைகளையும் உத்தரபிரதேசத்தின் படோஹி மாவட்டத்தில் கங்கா ஆற்றில் வீசியது ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போதைய ஊரடங்கு ஏற்கனவே மிகப்பெரிய ஒரு மனிதாபிமான நெருக்கடியைத் தூண்டியுள்ளது: ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையான வெப்பத்தில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வதும், ஏழைகள் பட்டினியால் இறப்பதும், பெரும் அளவு உணவு வீணாகப் போவதும் நடந்துகொண்டிருக்கிறது. யாருடைய நலனுக்காக இந்திய உணவுக் கூட்டுத்தாபனத்திடம் வைத்திருக்கும் 77 மில்லியன் டன் உணவு தானியங்கள் விநியோகிக்காமல் அழுகி வருகின்றன? இப்போது இல்லையென்றால், இந்த ஆட்சியாளர்கள் பட்டினியால் வாடும் மில்லியன் கணக்கானவர்களைக் காப்பாற்ற எப்போது அந்த பொருட்களைப் பயன்படுத்தப் போகிறார்கள்?

அரசு எந்திரம்

இஸ்லாமியர்களுக்கு பாகுபாடுகாட்டுவதோடு அவர்களின் இருத்தலையே கேளிவிக்குள்ளாக்கிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிர்த்து போராடும்போது தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

இந்திய அரசியலமைப்பை மீறுகிறது என்ற அடிப்படையில், சிஏஏவை விசாரிக்கும் மனுக்களை உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.  மோடியின் கீழ் உள்ள பாஜக ஜனநாயகம் என்ற பாசாங்கைக் கூட கைவிட்டுவிட்டது என்பது இதன்முலம் தெரியவருகின்றது. போராட்ட இடங்களை மூடுவது, சி.ஏ.ஏ-க்கு எதிரான கவிதைகளை எழுதுபவர்களைக் கூட தடுப்பது, சமூகஆர்வலர்களை முடக்குவது, 10 வயது பள்ளி குழந்தைகளை கூட சி.ஏ.ஏ-க்கு எதிரான நகைச்சுவையை பதிவிட்டதற்காக கைது செய்வது ஆகிய செயல்கள் இந்திய அரசின் இனவாத தன்மையை தெளிவாகக் காட்டியுள்ளது.

மோடி அண்ட் கோவைப் பொருத்தவரை, கோவிட் -19 உடனடி மரண பயத்தை தூண்டி மக்களைக் கட்டுப்படுத்த கடவுள் அனுப்பிய கருவியாகும். மத மற்றும் தேசிய சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லிம்களை மேலும் குற்றவாளியாக்க அவர்கள் கோவிட் -19 சூழலைப் பயன்படுத்தினர்.

பாஜகவின் ஊதியத்தில் ஐ.டி குண்டர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலையை மக்களிடையே தூண்டுவதற்காக ஒரு வதந்தி யுத்தத்தை கட்டவிழ்த்துவிட்டனர். சமீபத்திய டெல்லி கலவரங்கள் (பெரும்பாலும் இஸ்லாமியர்களுக்கு எதிரானது) இந்துக்களிடையே ஒரு அச்சுறுத்தல் ஏற்படுத்த அவர்களுக்கு தேவையான சான்றை கொடுத்தன. ஒவ்வொரு மதக் குழுவும் ஊரடங்கு விதிமுறைகளை மீறிக்கொண்டிருக்கும்போது, இஸ்லாமிய சபைகள் குறிவைக்கப்பட்டு, முஸ்லிம்களுக்கு எதிரான பொதுக் கருத்தை உருவாக்க ‘கொரோனா ஜிஹாத்’ வதந்திகள் பரப்பப்பட்டன.

பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல்துறையினர் ஊரடங்கு விதிமுறைகளைப் பயன்படுத்தி மக்களுக்கு எதிராக பயங்கரவாத ஆட்சியைத் தொடங்குகின்றனர். அதே நேரத்தில் சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு இடையே வைரஸ் தடையின்றி பரவுகிறது. ஊரடங்கு அதிகநாட்களுக்கு நீடித்தால் இது மிகவும் மோசமாகிவிடும்.

லாப நோக்கம்

கோவிட் -19 க்கு முன்பே, உலகின் குழந்தை இறப்புகளில் நான்கில் ஒரு பங்கை இந்தியா கொண்டிருந்தது. ஏனென்றால், சந்தை லாபகரமானதை உற்பத்தி செய்கின்றதே தவிர சமூக ரீதியாக அவசியமானதை உற்பத்தி செய்வதில்லை ஆடம்பரங்கள் உருவாக்கப்படுகின்றதே தவிர பொது மருத்துவமனைகள் அல்ல.

நாடு முழுவதும் உள்ள பிராந்தியங்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவை சார் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறார்கள், அத்துடன் சோதனைக் கருவிகள், மருத்துவமனை படுக்கைகள், வென்டிலேட்டர்கள், முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள், சுகாதாரப் பொருட்கள், துப்புரவு பொருட்கள், போக்குவரத்து மற்றும் இந்த நெருக்கடியிலிருந்து மீண்டுவர தேவையான அனைத்து பொருட்களுக்கும் பற்றாக்குறை இருக்கின்றது.

சமுதாயத்தின் தற்போதைய அமைப்பு, ஒரு கொள்ளையடிக்கும் முதலாளித்துவ வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டது. மற்றும் அவர்களின் சொந்த நலன்களை மட்டுமே பாதுகாக்க உழைக்கிறது. இது இந்தியாவை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்ற முடியாது. காப்பாற்றவும் விடாது. ஊரடங்கை அமுல்படுத்துவதற்கு முன்பு, அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களையும் அத்தியாவசியத் தொழிலாளர்களையும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை உபயோகிக்க வைத்திருக்க முடியும். அத்தியாவசியத் தொழில்களை மட்டும் நடத்தி அபாய ஊதியம் மற்றும் சலுகைகளை வழங்கி பேரழிவை தவிர்த்திருக்கலாம்.

முக கவசங்கள் மற்றும் கையுறைகள் உற்பத்தியை மேற்பார்வையிட ஆடை உற்பத்தியாளர்களிடம் கேட்டிருக்கலாம். மருத்துவமனை வார்டுகள் கட்டுவதற்கு வெற்று கட்டிடங்களையும் மற்றும் கட்டுமான இடங்களையும் கைப்பற்றிருந்திருக்கலாம். தொழிற்சாலைகளில் வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் டாங்குகள் உற்பத்தி செய்து இருக்கலாம். மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல விநியோக டாக்ஸி நிறுவனங்களை துரிதப்படுத்தி இருக்கலாம்.

21-நாள் கோவிட் -19 இன் ஊரடங்கின் கீழ் (இப்போது 40 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது – நிவாரண நடவடிக்கைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை) – புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துன்பம் மேலும் அதிகரிக்கும். அண்மையில் சூரத் மற்றும் மும்பையில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் கூடியத ன்மூலம் ஊரடங்கின் எதிர்ப்பின் அறிகுறிகள் வெளிப்பட்டது. அவர்கள் விரும்புவதெல்லாம் மிருகத்தனமான ஊரடங்கு அமுலில் உள்ள இச்சமயத்தில் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதுதான் – மிக அடிப்படையான மனித தேவைகள் நெருக்கடியில் உள்ளன.

மார்க்சிஸ்டுகள் மற்றும் சோசலிஸ்டுகள் குறைந்தபட்சம் நெருக்கடி நிலைமையைத் தணிக்கக்கூடிய அனைத்து சீர்திருத்தங்களுக்காகவும் போராடுவார்கள்.  அதே நேரத்தில், அத்தகைய சீர்திருத்தங்கள் முற்றிலும் தற்காலிகமானது என்பதையும் கூறுகின்றார்கள், முதலாளித்துவம் வழங்கும் எதையும் அவர்களின் அமைப்பை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கோடு திரும்ப பெற்றுக்கொள்ளலாம் அல்லது எதையும் செய்யலாம் என்பதை குறித்தும் எச்சரிக்கின்றனர்.

அம்பலமானது

இந்து பெரும்பான்மையினரின் நலன்களை இதயத்தில் வைத்திருப்பதாக கூறும் மோடியின் பிரச்சாரம் முற்றிலும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. மிகக் குறைந்த ஊதியம் பெற்று அபாயகரமான வேலைகளைச் செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஊரடங்கின்போது துச்சமாக நடத்தப்பட்டனர். அவர்களால் எங்கும் செல்ல முடியவில்லை. ஒவ்வொரு இந்து குடிமகனும் சமமாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் கூற்று கூட வீடுகளை அடைய நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்துசென்ற போது உடைந்துபோனது. ஒடிசா, பீகார், உ.பி., ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பெரும்பாலும் ஏழை இந்துக்கள், அவர்கள் எந்த கடவுளை வணங்குகிறார்கள் என்பதைத் தாண்டி அவர்கள் எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கடினமான உண்மையை புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு என்ன நடக்கவிருக்கிறது அல்லது அது முடிவடையும் போது என்ன நடக்கக்கூடும் என்பதைபற்றி தற்போது யாராலும் யூகிக்க முடியாது. ஆனால் எதுவும் அப்படியே இருக்கப்போவதில்லை என்கிற ஒரு விஷயம் நிச்சயமாக யூகிக்கக்கூடியது. கார்ல் மார்க்ஸ் கூறுவதுபோல் “சூல்நிலை பிரஞ்சையை தீர்மானிக்கின்றது”. நிச்சயமாக கோவிட் -19 இன் வைரஸ் உழைக்கும் மக்களின் நனவில் புரட்சியை ஏற்படுத்தும் அனைத்து திறன்களையும் கொண்டுள்ளது. அது, முதலாளித்துவத்தின் கொடிய தொற்றுநோயிலிருந்து இந்தியாவையும் உலகின் மற்ற பகுதிகளையும் விடுவிப்பதற்கான ஒரு வெற்றிகரமான போராட்டத்திற்கு வழிவகுக்கும்.