கொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்

2,356 . Views .

போக்குவரத்து ஊழியர்களின் மரணத்தின் பின்னர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள லண்டன் பேருந்து ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டமானது வெற்றி அளித்துள்ளது. இதன் பிரகாரம் பேருந்து ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பயணிகளுக்கும் பேருந்து ஊழியர்களுக்குமிடையிலான இடைவெளியை அதிகரிக்கும் பொருட்டு, பேருந்தின் முன் பக்க கதவை மூடுவதற்கு லண்டன் பேருந்து நிறுவனங்கள் சம்மதித்துள்ளன. லண்டன் சோஷலிச கட்சியின் உறுப்பினரும், யுனைட் தொழிற்சங்க உறுப்பினருமான மோ முசின் மணிர் இப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பேருந்தின் முன்பக்க கதவு மூடப்படவேண்டும், மக்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படவேண்டும், பேருந்து ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்புக் கவசம் வழங்கப்பட வேண்டும் எனப் பல கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் தமது இலாபம் இழக்க விரும்பாத TFL (Transport For London) எனப்படும் லண்டன் போக்குவரத்துக்கான அமைப்பு இக்கோரிக்கைகளை ஏற்க மறுத்தது அத்துடன் ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் முன் வரவில்லை. எனினும் ஊழியர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் காரணமாக இறுதியாக அவர்களின் கோரிக்கைகளுக்கு அடிபணிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது லண்டனுக்கு வெளியேயும் பேருந்து ஊழியர்கள் இக்கோரிக்கைகளை முன்வைத்து தத்தமது பேருந்து நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.     

போக்குவரத்து தொழிலாளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படாமையினால் புலம்பெயர் தமிழர்கள் உட்பட 29 போக்குவரத்து தொழிலாளிகள் கொரோனா  வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரை மரணமடைந்துள்ளனர். அதில் அதிகமானோர் பேருந்து ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மற்றும் இலவச சேவைகளை விரும்பாத லண்டன் பேருந்துச் சேவைகளை நடாத்தும் தனியார் நிறுவனங்கள் பேருந்துச் சேவைகளை முன்னரைப் போல் இயல்பு நிலைக்கு கொண்டு வர விரும்புகின்றன. ஊழியர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து கவலை கொள்ளாத நிர்வாகம் தமது லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயற்படுகிறது எனவும் அவற்றுக்கு ஆதரவாக இவ் கன்சர்வேட்டிவ் அரசும் இயங்குகிறது எனவும் ஊழியர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இந்நிலையில் ஆளும் கன்சர்வேடிவ் அரசாங்கத்தை மீறுவதற்கோ அல்லது லண்டன் போக்குவரத்து முறையை போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும், பயணிக்கும் மக்களுக்கும் ஏற்ப பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கோ தேவையான எந்த நடவடிக்கைகளையும் எடுக்க லண்டன் மேயர் சாதிக்கான் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு பக்க கதவுகளுடனான இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இன்னமும் சேவையில் உள்ளன. பேருந்து ஓட்டுனர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அச்சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் அல்லது அப்பகுதியில் இருபக்க கதவுகளுடானான பேருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் பேருந்துச் சேவை இலவசம் என்பதனால் தற்பொழுது அதிகளாவான மக்கள் பயணம் செய்யக்கூடும் ஆகவே அவசியமில்லாத பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும். 

லண்டனில் மட்டும் 9௦௦௦ பேருந்துகளை மக்கள் மருத்துமனைக்கு செல்வதற்காகப் பயன்படுத்துகின்றனர். அதில் வெறும் நூறு பேருந்துகளுக்கு மட்டுமே சிறப்பு மின்னணு எயார் பில்டர்கள் (Electronic Air Filters) பொருத்தப்பட்டுள்ளன. ஊழியர்களினதும் மக்களினதும் பாதுகாப்புக் கருதி மருத்துவமனைக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளிலும் இவ் எயார் பில்டர்கள் நிரந்தரமாகப் பொருத்தப்பட வேண்டும். மேலும் பேருந்து ஊழியர்கள் 1௦-12 மணித்தியாலங்கள் வரை வேலை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளதால் அவர்களுக்கு கொரோனா தொற்றுவதற்குரிய வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகின்றது. தங்களுக்கு கொரோனவினால் மரணம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்திலும் மன உளைச்சலிலும் பல ஒட்டுனர்கள் காணப்படுகின்றனர். ஆகவே சம்பளத்தைக் குறைக்காமல் அவர்களின் வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும். 

மேலும் சில பேருந்து நிலையங்களில் கை கழுவுவதற்கான சானிடைசர், சவர்க்காரம் போன்றன தட்டுப்பாடான நிலையில் உள்ளதாகவும், சில பேருந்து ஊழியர்கள் தாம் வீட்டிலிருந்தே டெட்டோல் ஸ்பிறே போன்றனவற்றைக் கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தனர். தமது ஊழியர்களின் நலனின் மீது அக்கறை கொள்ளாத பேருந்து நிர்வாகங்களின் அக்கறையின்மையினை இது எடுத்துக் காட்டுகின்றது.  

இங்கிலாந்து வேலைவாய்ப்பு உரிமைகள் சட்டம் 1996 இன் பிரிவு 44 (Employment Rights Act 1996) இன் படி தொழிலாளிகள் பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்யக்கூடாது. பேருந்து ஊழியர்கள் மட்டுமல்லாது அனைத்து ஊழியர்களும் இது தொடர்பாக பிற தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் இதனை ஒரு கருவியாகக் கொண்டு கொரோனா வைரசுக்கு எதிரான தமது பாதுகாப்பை தமது நிறுவனத்திடமிருந்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.  

பல பேருந்து நிறுவனங்கள் ஊழியர்களை கட்டாய விடுமுறை செல்ல அல்லது ஊதியம் இல்லாத விடுப்பில் செல்ல அழுத்தம் கொடுக்கின்றன. பேருந்து ஊழியர்களின் வேலைக்கு உத்தரவாதம் இல்லாத நிலையே தற்பொழுது காணப்படுகின்றது. ஆகவே பேருந்து ஊழியர்களின் போராட்டமானது இச் சிறு வெற்றியுடன் முடிவடைந்துவிடக்கூடாது. அனைத்து பேருந்து ஊழியர்களுக்கும் முழுமையான தொடர்ச்சியான கொரோனா வைரசுக்கான பரிசோதனை (Covid-19 Test) மற்றும் முறையான முழுமையான பாதுகாப்புக் கவசங்கள் (PPE) வழங்கப்படும்வரை, முழுமையான சம்பளம் வழங்கப்படும்வரை இப்போராட்டமானது முன்னெடுக்கப்படவேண்டும். பேருந்து, மற்றும் புகையிரத ஊழியர்கள் RMT, யுனைட் போன்ற தொழிற்சங்களுடன் இணைந்து தமது பாதுகாப்பை அச்சுறுத்தும் நிர்வாகத்தின் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் எதிராக இணைந்து போராட வேண்டும். 

 

சு.கஜமுகன் 

gajan2050@yahoo.com