கொரோனா நெருக்கடியில் தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர்கள்  கூட்டம் – அறிக்கை மற்றும் முடிவுகள்

2,142 . Views .

தற்போது இருக்கும் கொரோனா நெருக்கடி காரணமாக அரசியல் கூட்டங்களோ  வேறு எவ்வித கூட்டங்களோ நடத்தப்படாத முடியாத சூழல்நிலையே தற்போது இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் தமிழ் சொலிடாரிட்டி இணையவழி ஊடாக உறுப்பினர்கள் கலந்துரையாடலை கடந்த சனிக்கிழமை 18ம் திகதி நடத்தியிருந்தது.

தற்காலிகமாக  வேலை செய்பவர்கள், ஒப்பந்தம் இன்றி வேலை செய்பவர்கள், தற்போது சமீபத்தில் வேலை தொடங்கியவர்கள், அகதிகள், பதியாமல் வேலை செய்பவர்கள் இவர்கள் அனைவரும் எமது தமிழ் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் இந்த கலந்துரையாடலின் போது பாரிய பிரச்சனையாக தமிழ் மக்கள் மத்தியில் இருப்பது  அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் வேலை செய்யாதவர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்கப்படும் என்ற கேள்வி உள்ளது. அதுமட்டுமல்லாமல் பெலோக் (Furlough) எவ்வாறு வழங்கப்படும் என்பதைப் பற்றியும் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் (PPE )

தனிப்பட்ட பாதுகாப்பு உபகாரணகள் இந்த நெருக்கடி சூழ்நிலையில் மக்கள் மத்தியில் வேலைசெய்யும் பணியாளர்களுக்கு போதுமானதாக வழங்கப்படவில்லை. அவ்வாறு வழங்கினாலும் அவை உபயோகப் படுத்தும் நிலையில் இல்லை. உதாரணமாக NHS  தொழிலாளர்களுக்கு காலாவதியான முகமூடிகளை வழங்கியுள்ளது இந்த அரசாங்கம். இவ்வாறான ஒரு அவல நிலையிலேயே அரசாங்கம் இந்த கொரோனா நெருக்கடியை கையாள்கிறது.

வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பு இல்லை என்றால் எவ்வாறு வேலை செய்ய முடியும். தொழிலாளர்களின் உரிமை பாதுகாப்பான இடத்தில் வேலை செய்வது. ஆனால் இங்கு அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை காணக்கூடியதாக உள்ளது. மற்றும் கூடுதலான தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர்கள் குறிப்பாக இந்த கலந்துரையாடலுக்கு வந்தவர்கள் வேலை செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

வர்த்தக நிலையங்கள், எரிபொருள் நிரப்பும் இடம், மற்றும் சாதாரண கடைகளில் வேலை செய்பவர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வில்லை. இவர்கள் ஒரு ஆபத்தான சூழ்நிலையில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதில் என்ன கொடுமை என்றால் முன்னணி தொழிலாளர்களான  (Frountline workers) NHS தொழிலாளர்களுக்கு PPE இல்லை. ஆரம்பத்தில் இந்த அரசாங்கத்தின் எடுத்த முடிவுகள் மிகத்தவறு. எல்லோருக்கும் இந்த வைரஸ் பரவட்டும், எல்லோருக்கும் ஒரே நேரத்தில் வந்தவுடன் கொஞ்ச பேர் இறப்பார்கள். ஆனால் மற்றவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியால் போராடினால் மறுபடியும் வைரஸ் பரவாது என்று எடுக்கப்பட்ட முடிவு அறிவின்மையால் எடுத்த முடிவு என்றே கூறமுடியும். பல நாடுகளில் எல்லா மக்கள் கூடும் இடங்களையும் முடக்கிய பின்பு பிரித்தானியாவில் மிகவும் காலதாமதமாக நடமாட்டத்தை முடக்கியது இந்த அரசு. இதனால் இவர்கள் தேவையான தனிப்பட்ட உபகரணங்களை கொள்முதல் செய்ய முடியாமல் இருந்தது. மற்ற நாடுகளில் கொள்முதல் செய்யும்போது பிரித்தானியா பின்தங்கிய நிலையிலேயே இருந்தது.

கூடுதலான PPE சீனாவில் தான் உற்பத்தி செய்கின்றார்கள். மற்றும் கூடுதலான மருந்துக்கள் இந்தியாவில் தான் உற்பத்தி செய்கிறார்கள். இந்த நாட்டில் இவர்களின் இதுசார்ந்த உற்பத்தியை மேம்படுத்தவில்லை. இந்த அரசாங்கம் மக்களை பாதுகாப்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் முன்கூட்டியே செய்யவில்லை, தற்போதும் செய்யவில்லை. தங்களது கஜானாவை பாதுகாப்பதில் நேரத்தை செலவிடுகிறது இந்த அரசு. எல்லா தொழிலாளர்களுக்கும் கட்டாயம் PPE வழங்கப்படவேண்டும். NHS  தொழிலாளர்களுக்கு கூட PPE இல்லை என்றால் என்ன ஒரு கொடுரமான அரசாங்கம் இது என சிந்தித்துப் பாருங்கள்.

அகதிகள்

ஐரோப்பிய நாடுகளில் பிரித்தானியாவில் மட்டும் தான்  அகதிகளுக்கு வேலை செய்யும் உரிமை கிடையாது. இந்த உரிமைக்காக அகதிகள் உரிமை அமைப்பின் மூலம் போராடிக்கொண்டு தான்  இருக்கின்றோம். இந்த அரசாங்கத்தால் படுமோசமாக சுரண்ட படுபவர்களாக இந்த அகதிகள் காணப்படுகின்றனர். மற்றும் இந்த அரசாங்கம் கிழமைக்கு £37.75 தொகை மட்டும் வழங்குகின்றார்கள். இதனால் குறிப்பிட்ட தொகையினர் சட்ட விரோதமாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். அவ்வாறு கிடைக்கும் ஊதியமும் குறைவாகத்தான் காணப்படுகின்றது. தற்போது இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பல்வேறு கடைகளில் அகதிகள் கோரிக்கையாலர்களை மிக குறைந்த ஊதியத்திற்கு வேலைக்கு அமர்த்தி அவர்தம் உழைப்பு சுரண்டப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.

அகதி கோரிக்கையாளர்களுக்கு வழங்கும் உதவி தொகையை அதிகரிக்க வேண்டும். தற்போது வழங்கப்படும் சொற்ப பணத்தில் வாழ்வது சாத்தியமில்லை. ஒரு சாதாரண தொழிலாளருக்கு வழங்கப்படும் ஊதியத்தை உதவி தொகையாக வழங்க வேண்டும் என்று தமிழ் சொலிடாரிட்டி  ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளது.

பதிவுகள் இன்றி வேலை செய்பவர்களுக்கும் இதே நிலைமைதான். Tesco, Asda, Sainsbury போன்ற  வர்த்தக தளங்கள் வரையறுக்கப்பட்ட மணி நேரம் மட்டுமே திறந்து மூடுவதனால், சிறு கடைகளுக்கு தொடர்ந்து வாடிக்கையாளர்கள்  வந்துகொண்டே இருக்கிறார்கள். இதனால் மற்ற நாட்களை விட மிகவும் கடுமையான மற்றும் கூடுதலான வேலை செய்கின்றார்கள். ஒரு உறுப்பினர் போராடி இந்த சூழ்நிலையில் வேலை செய்ய வேண்டுமானால்  கொஞ்சமாவது கூடுதலான ஊதியம் வேண்டுமென கேட்டு பெற்றுள்ளார். ஆனால்  இந்த முதலாளிகள் ஒன்றும் தாராள மனம் படைத்தவர்கள் இல்லை. இச்சூழ்நிலையில் அவர்களை வேலைக்கு வைத்திருக்க வேண்டும் என்ற  எண்ணத்திலேயே கொடுத்துள்ளனர். இருப்பினும் இந்த சிரமமான காலப் பொழுதில் கூட தமது லாபத்தை மேலும் பெருக்க துடியாக துடிக்கும் இந்த கழுகுகளை விரைவில் அம்பலப் படுத்த வேண்டும் என பலரும் விரும்புகின்றனர்.

வணிகத் துறையில் வேலை செய்பவர்கள் மிகவும் குறைந்த ஊதியத்திற்கு  கூடுதலான வேலை செய்கின்றார்கள். ஆனால் இவ்வாறான துறையில் வேலை செய்கிறார்கள் எனத் தெரிந்தும் இந்த அரசாங்கமும் சரி முதலாளித்துவமும் சரி தங்களின் லாபத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றது. தொழிலாளர்கள் நேரடியாக சுரண்டப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.

வணிக தொழிலாளிகள் (Retail Workers)

 ஒரு சில உறுப்பினர்கள் வேலை செய்யும் இடத்தில் (Lidl) தற்போது ஓரளவான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் வழங்கப்பட்டாலும், அங்கு சமூக  தூரத்தை கடைபிடிக்க முடியாதுள்ளது. காரணம், அவர்கள் நேரடியாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் உள்ளனர். மட்டுமல்லாது நிறைய தொழிலாளர்களை ஒரே நேரத்தில் வேலைக்கு அமர்த்துவது தூரத்தை கடைப்பிடிப்பதை சாத்தியமற்றதாக்குகிறது.

ஒரு தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர் Tesco வில் வேலை செய்கின்றார். அவருக்கு இந்த கொரோனா அறிகுறிகள் வந்த போதும் அவரின் மேனேஜர் பராசிட்டமோல் (Paracetamol) எடுத்துவிட்டு வேலைக்கு வர சொல்லி இருக்கிறார். இதனால் இவர்  தற்போது வேலையை இழந்து நிற்கிறார். இவ்வாறான சிக்கலை தான் எமது தொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

ஒப்பந்தமின்றி வேலை செய்பவர்கள் (Zero hour contrect ) அதாவது எந்தவிதமான விடுமுறை ஊதியமோ, ஓய்வூதியமோ மற்றும் சுகயீன காலத்துக்காண ஊதியமோ (Sickpay) கிடையாது. எப்போது  அவர்களுக்கு வேலை இருக்கிறதோ அப்போது தான் கூப்பிடுவார்கள். வேலை ஆரம்பிக்க ஒரு மணித்தியாலமோ அல்லது பத்து நிமிடமோ இருந்தாலும் அவர்களை வேலைக்கு அழைக்கலாம். அதுமட்டுமின்றி வேலை இல்லை என்றால் வீட்டுக்கு அனுப்பலாம். இந்த ஒப்பந்தத்தில் உள்ளவர்களுக்கு ஒரு தொழிலாளியாக எந்த ஒரு பாதுகாப்புமில்லை.  இந்த ஒப்பந்தம் வேலையின்மையை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்டது என்றும் தொழிலாளர்கள் தமது தேவைக்கேற்ப வேலை நேரத்தை மாற்றி அமைத்து வேலை செய்ய வசதியாக இருக்கும் என்று சொல்லி இந்த ஒப்பந்தமின்றி வேலை செய்யும் முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அதாவது வேலை செய்ய வேண்டும் என்றால் வேலைக்கு வரலாம். இல்லையென்றால் வேலை செய்ய தேவை இல்லை. ஆனால் எந்த தொழிலாளி இந்த நிலையில் இருக்கிறார்கள். இவ்வாறான ஒப்பந்தத்தில் பணக்காரர்களோ வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாதவர்களோ ஒரு சிலர் இருக்கலாம். தொழிலாளர்களின் ஓய்வூதியம், விடுமுறை ஊதியம், சுகயீன காலத்துக்கான ஊதியம்  என்பவை போராடிப் பெற்ற அடிப்படை உரிமைகள். அதை பறிப்பதாக இந்த ஒப்பந்தம் அமைந்திருக்கின்றது.

தற்போது 20 வீதமான ஊதியத்தை குறைப்பது மட்டுமன்றி முழுநேர வேலையுடன்  கூடுதலான வேலையும் செய்ய வேண்டிய நிலையில் எமது உறுப்பினர்களும் உள்ளனர். இதிலும் மின்சார கட்டணம் வீட்டுவாடகை போன்ற பல்வேறு கட்டணங்களை இந்த 80 வீத ஊதியத்தில் மட்டுமே தொழிலாளிகள் சமாளிக்க வேண்டியுள்ளது. பலர் வீட்டில் இருப்பதால் இந்தக் கட்டணங்களும் மிக அதிகரித்துள்ளது. இவ்வாறான சிக்கல்களை எதிர்ப்பதற்கு சட்டத்தரணிகளை, தொழிற்சங்கங்களை மற்றும் கவுன்சில்களை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறான அவசரகால நிலைகளில் ஏற்கனவே இருக்கும் சட்டங்கள் செல்லுபடியாகாது. அதனால் தான் புது சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றது. அதனால் நாங்கள் தொடர்ந்தும் போராட வேண்டியுள்ளது.

தமிழ் சொலிடாரிட்டி  எப்போதுமே சொல்லும் விடயம் தான் இருந்தாலும் ஞாபகப்படுத்த வேண்டிய நிலையுள்ளது. தொழிலாளர்கள்தான் பொருளாதாரத்தை இயக்குகிறார்கள். இது எந்த அளவு உண்மை என்பது இப்போது சில முதலாளிகளுக்கும் புரிந்து இருக்கக்கூடும். சில கடைகளில் அதாவது சில முதலாளிகள் ஊதியம் கொஞ்சம் கூடுதலாக வழங்குவதற்கு காரணம் தொழிலாளர்களின் எதிர்பை மட்டுப் படுத்தவே. ஆனால் எமது கோபத்தை கட்டுப் படுத்த இது போதாது. தொழிலாளர்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றது. தன்னால்தான் லாபம் வருகின்றது என்று தொழிலாளர்களுக்குத் தெரியும். தொழிலாளி வேலை செய்யாவிட்டால் முதலாளிக்கு எந்த லாபமும் வரப்போவதில்லை. பொருளாதாரத்தை இயக்குவது நாம்தான்.

இந்த சிக்கலான தருணத்தில் தொழிலாளர் தமது ஊதியத்தை விட்டுக் கொடுக்காது 100 வீதம் ஊதியம் வழங்க வேண்டும் என கேட்க வேண்டும். தவிர மேலதிக உதவிகளை வேலை வாங்குவோர் செய்து கொடுக்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் இருக்கம் நிலையில் வேலை செயும்படி நிர்பந்திபது சமூக அநீதி, அதற்காக இவர்கள் விசாரிக்கப் பட்டு தண்டனை வழங்கப் பட வேண்டும். அத்தைகைய நடைமுறைகள் பல நாடுகளில் நடக்க தொடங்கி விட்டது. அதற்கான வேலைகள் மற்றும் அத்தகைய சமூக எதிர்ப்பு வேலைகளை செய்யும் முதலாளிகளை பகிரங்கப் படுத்தல் முதலிய வேலைகளை தமிழ் சொலிடாரிட்டி செய்யும். சமீபத்தில் வேலை ஒன்றில் இணைந்த ஒருவரை வேலைத் தளம் மூடும் பொழுது வேலையை விட்டு நிறுத்தி இருக்கின்றனர். முன்னைய சட்டப் படி இது செல்லுபடி ஆகலாம். ஆனால் தற்போது இது சமூக நீதி. இத்தகையோரை அம்பலப் படுத்த தமிழ் சொலிடாரிட்டி பின் நிற்கப் போவதில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

நீங்கள் தொழிற் சங்கத்தில் உறுப்பினராக இல்லை என்றால் உடனடியாக தொழிற் சங்கத்தில் இணையும் படி உறுப்பினர்களையும் மற்றும் ஆதரவாளர்களையும் தமிழ் சொலிடாரிட்டி கேட்டுக் கொள்கிறது. எவ்வாறு இணைவது என்ற குழப்பம் இருப்பின் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள். மற்றும் வேலைத் தளங்கள் – முதலாளிகள் அநீதியான நடவடிக்கைகள் செய்வதை எமக்கு தெரியத் தாருங்கள். அத்தகையோரின் விபரங்களை திரட்டி – அவர்களின் நடைமுறையை நாம் மக்கள் முன் வெளிப்படுத்த தயாராகி வருகிறோம்.

எமது உறுபினர்களின் எந்த உரிமைகளையும் நாம் விட்டுக் கொடுக்க தயாரில்லை. பலர் சாவுக்கு போராடிக் கொண்டிருக்கும் பொழுதுகூட கஜானாவில் அக்கறையுடன் இருப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கவும் நாம் தயங்கப் போவதில்லை என தமிழ் சொலிடாரிட்டியின் தேசிய செயற்குழு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தொடர்புகளுக்கு

Nadesan – nadesan@tamilsolidarity.org

Isai priya – isaipriya@tamilsolidarity.org