COVID-19: அரசு தலையீட்டையும், தொழிலாளர்களின் எதிர்ப்பையும் உசுப்பிவிடும் பொருளாதார பேரழிவு

1,955 . Views .

தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சர்வதேச செயலகத்தின் அறிக்கை:(தமிழ் மொழிபெயர்ப்பு)

தேதி: 09.04.2020

கொரோனா தொற்று ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்கு தற்சமயம் எந்த ஒரு வழியும் கிடையாது. உலகம் ஒரு பெரிய திருப்புமுனையின் ஊடே பயணித்து வருகிறது. ஆயிரக் கணக்கானோர் மடிந்துள்ளனர், கோடிக்கணக்கானோர் தங்கள் வேலைகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வாங்க பணமில்லாமல் கடனில் மூழ்கியிருக்கின்றனர். ஒவ்வொரு நாடாக, குறிப்பாக நகர்புறங்களில், பொருளாதாரமும் வாழ்வும் கிட்டத்தட்ட முற்றிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. வைரஸ் தொற்று தொடர்ந்து பரவுகையில், சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்வின் மீதான அதன் தாக்கமும் தீவிரமாகின்றது.

ஈக்குவேடார் நாட்டின் மக்கள் நெரிசல் மிகுந்த குவேயாகில் நகரில் வீடுகளிலும் தெருக்களிலும் கைவிடப்பட்ட நிலையில் சடலங்கள் கிடப்பது போன்ற அச்சமூட்டும் கதைகள் உலகம் முழுக்க வலம் வருகின்றன. ஸ்பெயின் நாட்டு தீயணைப்பு வீரர் ஒருவர் “எங்களுக்கு வரும் 85% அழைப்புகள் வீட்டில் தனித்திருப்பவர்கள் இறந்த பின் கதவை உடைத்து சடலத்தை மீட்க கோரியே வருகின்றன…. மக்கள் பலர் தனித்திருப்பது வீட்டில் தானே தவிர, மருத்துவமனையில் அல்ல. அவர்கள் வீட்டிலேயே தனித்திருக்கும் படி அறிவுறுத்தப்படுவதோடு, அவர்களுக்கு எவ்வித பரிசோதனைகளும் செய்யப்படாமல், மருத்துவ உதவிகள் ஏதுமின்றி, இறுதியில் இறந்து விடுகின்றனர்.” என்கின்றார்.

தற்போதைக்கு, தொற்றுநோயின் முதல் அலை சீனாவிலும், தென்கொரியாவிலும் தணிந்து, இத்தாலியிலும், ஸ்பெயினிலும் உச்சத்தை தொட்டிருப்பதை போல் தெரிகிறது. ஆயினும், உலகின் இதர பகுதிகளில், குறிப்பாக அமெரிக்காவில், தினசரி அறிவிக்கப்படும் மரணங்களின் எண்ணிக்கை வியக்கத் தக்கவாறு அதிகரித்து வருகிறது. வெனிசுவெலாவை போன்றே, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஈரானிலும் ட்ரம்பின் தடையால் நிலைமை மோசமாகியுள்ளது. அதேவேளையில், ஆப்பிரிக்காவில் பல பகுதிகளிலும், லத்தின் அமெரிக்காவிலும், ஆசியாவிலும், மத்திய கிழக்கிலும், துருக்கி மற்றும் ஜப்பானை போன்றே தொற்று வேகமாக பரவிவருகிறது.

பலநாடுகளில் விதிக்கப்பட்டுள்ள கதவடைப்புகளின் பொருளாதார மற்றும் சமூக விளைவுகள் நாளுக்கு நாள் வெளிப்படையாகி வருகிறது. சில சமயங்களில் முதலாளித்துவப் பிரச்சாரகர்கள் “ஆக்கப்பூர்வ அழிவை” குறித்து பேசுகின்றனர். தொற்று நோயின் விளைவாலும், சில பத்தாண்டுகளாக நிலவிய நவ-தாராளவாதத்தாலும், அராஜக சந்தையாலும், சமூகப்பாதுகாப்பு என்பது பலவீனமாகி அல்லது இல்லாமல் போனதாலும் மக்களது வாழ்வே இன்று அச்சுறுத்துலுக்கு உள்ளாகியிருப்பதை நாம் இப்போது கண்கூடாக பார்த்து வருகிறோம். 188 நாடுகளில் ஏறக்குறைய 160 கோடி பேர், கல்வி கற்பவர்களில் 91% பேர்,  கல்வி நிறுவனங்களின் மூடல்களால் கல்வியை கைவிட்டுள்ளனர் என்பதோடு, அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது குடும்பங்களை தவிர வேறெந்த ஆதரவும் இல்லாத நிலையில் உள்ளனர்.

கோடிக்கணக்கானோர் எதிர்நோக்கும் வேலையிழப்பு:

உலக அளவில் வர்த்தகங்கள் 13% முதல் 32% வரை சரியக் கூடும் என்று உலக வர்த்தக நிறுவனம் தற்போது கணித்துள்ளது. உண்மையான விளைவானது, தொற்றுநோயின் தாக்கத்தின் அளவைப் பொருத்தே இருக்கும். ஆனால், விளைவு எதுவாக இருப்பினும், “இந்த அளவிலான எண்ணிக்கை மிக மோசமானது – இதிலிருந்து தப்ப வழியே இல்லை. 2008 நெருக்கடியுடனோ அல்லது 1930களின் பெருமந்தத்துடனோ கூட இதை ஒப்பிட வேண்டியது அவசியமானது” என்று உலக வர்த்தக மையத்தின் தலைமை இயக்குநர் விளக்குகின்றார்.

இது வெறும் எண்ணிக்கையை பற்றியதல்ல, வீழ்ச்சியானது அதித்தூரிதமாக இருக்கப்போகிறது, 1930களின் வீழ்ச்ச்சியை விட அதிவேகமானதாக இருப்பதோடு, உலகப்பொருளாதாரத்தின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது.

உலகவர்த்தக நிறுவனத்தின் அறிவிப்புக்கு முன்னரே, ஏறக்குறைய 19.50கோடி நேரடி வேலையிழப்புகளுக்கு வாய்ப்பிருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறிவிட்டது. கடந்த இரு வாரங்களில் கிட்டத்தட்ட 1கோடி அமெரிக்க தொழிலாளர்கள் வேலையிழந்தவர்களாக புதிதாக தங்களைப் பதிவு செய்துள்ளனர் என்பதோடு, வேலையிழப்பு பதிவேட்டில் பதிவு செய்ய முடியாத அல்லது செய்ய விருப்பமில்லாத இன்னும் பல லட்சம் பேரும் இருக்க வாய்ப்புண்டு. கொரோனா வைரஸ் தாக்குவதற்கு முன்பு 3.5% என்ற அளவில் இருந்த வேலைவாய்ப்பின்மை தற்போது 10.5%லிருந்து 40.6% வரை இருக்கக் கூடும் என்று அமெரிக்க மைய வங்கியின் புனித லூயிஸ் கிளை மதிப்பிட்டுள்ளது. 1930களின் பெருமந்தத்தின் போது உச்சகட்டம் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்ட அளவு 1933இன் 24.9% ஆகும். தற்போது இது அதிவிரைவாக 20%ஐ எட்டக்கூடும், அதாவது, 3கோடி பேரின் வேலையிழப்பு என்று அமெரிக்க கருவூல செயலாளர் அஞ்சுகிறார். ஏற்கனவே வெளிவரும் செய்திகள் கடந்த ஒருவாரத்தில் நியூயார்க் நகரவாசிகளில் 30% வேலையிழந்துள்ளதாகவும், 73% அமெரிக்க குடும்பங்களின் வருவாய் சரிந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றன. கூடிய விரைவில், இப்பேரழிவு ஏற்படுத்தப் போகும் அரசியல் விளைவு மிகப்பெரியதாக இருக்கப்போகிறது.

வேலைவாய்ப்பற்றோரின் பதிவேட்டில் பதிவதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதாலோ, அல்லது குறிப்பாக, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நவ-தாராளவாத நடவடிக்கைகளால் இத்தகைய பதிவிற்கான நடைமுறை கடினமாக்கப்பட்டிருப்பதாலும் உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் இத்தகைய பதிவேட்டில் தங்களை பதிவுசெய்யாமல் இருக்கலாம். பிரிட்டனில் அரசு நடவடிக்கைகளால் மார்ச் முதல் மே வரை வேலையிழந்தோரின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஜூலை வரை தெரியப்போவதில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாலும், கதவடைப்பால், குறிப்பாக காலநிலையை சார்ந்திருக்கும், தொழிலாளர்கள் இதர நாடுகளுக்கு பயணிப்பதற்கான வசதி முழுவதுமாக தடைப்பட்டிருப்பதாலும், பெருகி வரும் வேலையிழப்புகள் சர்வதேச அளவிலான பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது. அமெரிக்காவில், பதிவு செய்யப்படாத 80லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அரசு சலுகைகளுக்கு தகுதியில்லாததால் கடும் பாதிப்புக்குள்ளாகப் போகின்றனர். புலம்பெயர்ந்தோரில் பணிக்கால விசா வைத்திருப்பவர்களுக்கு கூட அரசு சலுகைகள் 60 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும், அதற்குள் அவர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்காவிட்டால் அவர்களது விசா இரத்து செய்யப்படும்.

நிலைமையின் தீவிரம் உலகம் முழுவதும் உணரப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்படுத்தப் போகும் பொருளாதார தாக்கத்தை குறித்து துல்லியமாக தெரியாவிட்டாலும், நெருக்கடியின் காலத்தை குறித்தும், தீவிரத்தன்மையை குறித்தும், இது ஒரு தீவிர சரிவாக இருக்கப்போகிறதா அல்லது 1930களின் பெருமந்தத்தை போன்று இருக்கப்போகிறதா என்பதை போன்ற பல கேள்விகள் எழுகின்றன. ஆயினும், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பரவியுள்ள தொற்றால் உலகம் உடனடியான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை சந்தித்து வருகிறது என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது.

மார்ச் முடிவின் நெருக்கத்தில், ஒவ்வொரு மாத கதவடைப்புக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 2% இழப்பு இருக்கும் என்று, நாட்டு வருமானம் சரியப்போவதை கனிவான தொனியில், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான முகமை (OECD) மதிப்பிட்டுள்ளது. ஆனால் OECE வெளியிட்டுள்ள இந்த மதிப்பீடு, நடக்கப்போகும் நிகழ்வின் ஒரு பக்கத்தை பற்றி மட்டுமே பேசுகிறது. “பெரும்பாலான முன்னேறிய பொருளாதாரங்களில் கதவடைப்பால் நாட்டு வருமானத்தின் மீதான பொதுப்படையான துவக்கநிலை நேரடி தாக்குதல் என்பது 20-25%க்குள் இருக்கும்” என்று காட்டிய G7 நாடுகளின் மீதான இன்னொரு அணுகுமுறையையும் OECD கையாண்டது. G7 நாடுகளில் ஜெர்மனியும் ஜப்பானும் கிட்டத்தட்ட முறையே 30%மும் 30%ஐ தாண்டியும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவை சந்திக்கும் அளவுக்கு அந்நாடுகளில் மந்தநிலையின் தாக்கம் மிக மோசமாக இருக்கும். முதலாளித்துவ பொருளாதாரங்களில் என்ன நடக்கப்போகிறது என்பதை துல்லியமாக கணிப்பது கடினம் என்றாலும், ஒரு பெரிய பொருளாதார பேரழிவு ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பது மட்டும் தெளிவு.

உற்பத்தி ஆலைகள் மீண்டும் துவங்கியிருப்பதன் மூலம் சீனாவில் ஓரளவு பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தென்பட்டாலும், வெடிக்கக் காத்திருந்த பொருளாதார நெருக்கடியை கொரோனா வைரஸ் துவக்கிவைத்து விட்டதாக உலக முதலாளிகள் அஞ்சுகின்றனர். ஏற்கனவே சீனாவிலும், ஜப்பானிலும், ஜெர்மனியிலும், ஏனைய நாடுகளிலும் கடந்த ஆண்டு முடிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்ததோடு, 2019இன் இரண்டாவது அரையாண்டில், 2018இன் அதே அரையாண்டை காட்டிலும் குறைவாக இருந்தது.

”இந்நெருக்கடி வேறெந்த நெருக்கடியையும் ஒத்ததல்ல. நாம்  உலகப்பொருளாதாரம் ஸ்தம்பித்துப் போய் இன்று நிற்பதை, பன்னாட்டு பண நிதியகத்தின் வரலாற்றில் இதுவரை பார்த்ததில்லை. நாம் தற்போது பொருளாதார வீழ்ச்சியின் கீழ் இருக்கின்றோம். 2007/09 உலக நிதி நெருக்கடியை விடவும் இது மோசமானது.” என்று நோயின் தாக்கத்தை குறித்து பன்னாட்டு பண நிதியகத்தின் நிர்வாக இயக்குநர் கிரிஸ்டாலினா ஜியார்ஜியேவா விளக்குகிறார்.

”வேலையில்லை, பணமில்லை, உணவில்லை”

தொற்று நோய் தாக்குவதற்கு முன்னரே உலகம் முழுவதும் 82கோடி பேர் பட்டினியால் வாடிக்கொண்டிருந்ததாக ஐநா அகில உணவு திட்டம் (UNWFP) மதிப்பிட்டிருந்தது. தற்போதைய, கொரோனா தொற்று நெருக்கடி மிகப்பெரிய பஞ்சத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த அமைப்பு அஞ்சுகிறது. ”நாங்கள் உண்மையாகவே அபாய மணியை ஒலித்துக் கொண்டிருக்கின்றோம். நிஜமாகவே நமக்கு ஒரு பெரிய நெருக்கடி வரக் காத்திருக்கிறது என்ற அச்சத்தில் உள்ளோம்….. ஏறக்குறைய அனைத்து ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ், பல பிராந்தியங்களில், குறிப்பாக, பொருளாதாரத்திலும் சுகாதார அமைப்பிலும் பலவீனமாக உள்ள பகுதிகளில் உண்மையாகவே ஒரு கடினமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய மனிதநேய அமைப்பான எங்கள் அமைப்பின் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு சூழலை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இதுவரை பிரவேசித்திராத தீவு இது… மேலும் பல கோடி பேர் உண்மையாகவே பட்டினி நிலைக்கு ஆளாகப் போகின்றனர் என்று அஞ்சுவதை கொரோனா வைரஸ் தொற்று நியாயப்படுத்துகின்றது. அவசர உணவு விநியோகத்துக்கான தேவை அதிகரிக்கப் போகிறது.” என்று WFPஇன் பெர்லின் செய்தி தொடர்பாளர் எச்சரிக்கின்றார்.

தடையற்ற வேலை இல்லாத தினக்கூலிகளும், அன்றாடங்காய்ச்சிகளும், அங்காடிகளிலும், சாலையோரங்களிலும் சிறுகடைகளை நடத்தி பிழைப்பவர்கள் என பல கோடி பேர் நித கதவடைப்பால் ஒவ்வொரு நாடாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக, இவர்களோடு சேர்த்து, பெண்களும், இளம் தொழிலாளர்களும், அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிரிக்க-அமெரிக்கர்களும் இந்நெருக்கடியால் பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பவர்கள் ஆவர். பெரும்பாலும், அரசு உதவிகளோ, சமூக நலத்திட்டங்களோ, வேலையிழப்பு நிவாரணங்களோ இல்லாத இவர்கள், வீட்டு வாடகைக்கும், மருத்துவ செலவுக்கும், குடும்பத்தினருக்கு உணவளிக்கவும் என்ன செய்வது என்ற சவாலை சந்தித்து வருகின்றனர். அமெரிக்காவில், ஆப்பிரிக்க அமெரிக்கர்களே இந்த தொற்றுநோயால் அளவற்ற துயரங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

ஆப்பிரிக்காவுக்கான ஐநா வளர்ச்சி திட்டத்தின் இயக்குநரான அஹுன்னா இஸியகோன்வா, ”இந்நெருக்கடியால் ஆப்பிரிக்காவில் அனைத்து வேலைகளும் பறிப்போகக்கூடும். ஏற்கனவே உலகின் மிகவும் வறிய கண்டமாக இருக்கும் இவ்விடத்தில் பொருளாதாரமும், வாழ்வாதாரமும் முற்றிலும் சீர்குலையப் போவதை நாம் காணப்போகிறோம்” என்று எச்சரிக்கிறார். இந்தியாவைப் பொருத்தவரை, லட்சக்கணக்கானோர் நகரங்களை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டதும், சொந்த கிராமங்களில் உறவினர்கள் உணவளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் மிக நீண்ட தூரத்துக்கு மக்கள் நடந்து சென்றதும் பிரதமர் மோடியின் கதவடைப்பு ஏற்படுத்திய உடனடி விளைவாகும்.

முக்கியமான ஏகாதிபத்திய நாடுகளிலும் உலகின் இதர பகுதிகளை போன்றே லட்சக்கணக்கான மக்கள் இந்நெருக்கடியால் பாதிக்கப்படப் போகின்றனர். பிரிட்டனில் வேலையிழந்த பல லட்சக்கணக்கானோருக்கு உடனடி அரசு நிவாரணம் ஏதும் கிடைக்கப் போவதில்லை என்பதும், தனது சொந்த முயற்சியின் மூலமே அவர்கள் நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என்பதும் தெளிவு. தெற்கு இத்தாலி, பொலிவியா, நைஜீரியா போன்ற இடங்களில் துவங்கியதை போன்று சர்வதேச அளவில் போராட்டங்களும் துவங்கியிருக்கின்றன. உயிர் பிழைத்திருக்க வேலையோ, பணமோ இல்லை என்பதால் அரசின் ஆதரவு தேவை என்பதே போராட்டகாரர்களின் பொதுவான முழக்கமாகும்.

அமெரிக்காவில் லட்சக்கணக்கானோர் அன்றாட ஊதியத்தில் தான் ஜீவனத்தை ஓட்டி வருகின்றனர. ஹார்வார்ட் பல்கலை கழகத்தின் வீட்டு வசதி ஆய்வுக்கான கூட்டுமையத்தின் அறிக்கைப்படி, 1.82கோடி அமெரிக்க குடும்பங்கள் தங்களது வருவாயில் 50%ஐ வீட்டு வசதிக்காக செலவிடுகின்றனர். நிலைமையை மேலும் மோசமாக்கும் விதத்தில், அமெரிக்க மையவங்கி நடத்திய ஒரு கணக்கெடுப்பில், அமெரிக்காவில் வயது வந்தவர்களில் 40% பேர் $400 அளவுக்கு எதிர்பாராத செலவை சந்திக்க முடியாத நிலையில் உள்ளனர். வேறுவகையில் சொல்வதானால், கிட்டத்தட்ட பாதி அமெரிக்கர்களுக்கு ஒரு மாத ஊதியம் தள்ளிப் போனாலும் வீட்டுக்கடன் நிலுவையோ அல்லது வாடகை கட்ட இயலாமல் தெருவுக்கு வரவோ நேரிடும்.

மிகப்பெரிய அளவுக்கு வேலையிழப்பு ஏற்பட்டிருப்பதால், கோடிக்கணக்கானோருக்கு அவர்களுடைய வேலையோடு இணைக்கப்பட்டிருக்கும் மருத்துவக் காப்பீடும் பறிபோகப் போகிறது. நெருக்கடியின் துவக்கத்தில் 3கோடி பேர் காப்பீடற்றவர்களாகவும், 4.4கோடி பேர் அரைகுறை காப்பீடுடையவர்களாகவும் இருந்தனர். 33கோடி அமெரிக்கர்களில் மூன்றில் ஒருவர், மருத்துவ செலவை ஏற்க முடியாததாலும், பொதுவாக காணப்படும் மருத்துவ திவால் குறித்த அச்சத்தாலும் தேவையான மருத்துவ வசதிகளை அணுகாமல் காலத்தை ஓட்டிவிடுகின்றனர். நெருக்கடியின் மருத்துவ மற்றும் பொருளாதார தாக்கம் தீவிரமடையுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்த இது ஒன்று மட்டுமே போதுமானது.

 சர்வதேசிய அளவில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் இருக்கும் கோடிக்கணக்கானோர் இத்தொற்று நோயின் உடனடி அச்சுறுத்தலில் உள்ளனர். பல நாடுகளில் பாதுகாப்பான குடிநீரையும் கழிவறைகளையும், போதிய சுகாதார கட்டமைப்பையும் ஏற்படுத்தி கொடுக்க முதலாளித்துவத்துக்கு திராணியில்லாததே இதற்கு காரணமாகும். பல பத்தாண்டுகளாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் ஏற்படுத்திய தாக்கமும் ஒரு காரணமாகும். அமெரிக்காவில் கொலம்பியா மாவட்டத்தோடு சேர்ந்து 17 மாகாணங்கள் சுகாதாரத்துக்கான நிதியை குறைத்துள்ளன என்பதோடின்றி, ஒட்டுமொத்த உள்ளாட்சி நிதித்துறைகளில் 20 விழுக்காடு இதே நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. 2008 துவங்கி 55,000கும் மேற்பட்ட வேலைகளை உள்ளாட்சி சுகாதாரத்துறைகள் இழந்துள்ளன. இதற்கு முன்மாதிரியாக பார்க்கப்படும் ஜெர்மனியிலும் 1991 துவங்கி 470 மருத்துவமனைகள் மூடப்பட்டது, 1,68,000 படுக்கைகளை இழந்தது என்று இதே விளைவு தான் ஏற்பட்டது. உயர்மட்ட மருத்துவ பணியாளர்களின் விகிதாச்சாரத்தை உயர்த்தி சட்டமியற்ற கோரி செவிலியர்களும் இதர மருத்துவ பணியாளர்களும் பல ஆண்டுகளாக போராடிவருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனும் அதன் உறுப்பு நாடுகளுக்கிடையேயுமான் பதற்றத்தைத் தீவிரப்படுத்தும் நெருக்கடி:

 இது ஒரு அடிப்படை திருப்புமுனை என்று நமது தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி (CWI) வாதிட்டு வந்தது. ”கொரோனா வைரஸ் தொற்று நோயானது உலக முதலாளித்துவத்தையும், அதன் சமூக அமைப்பையும் கொந்தளிப்பானதும் கிளர்ச்சியானதுமான ஒரு புதிய சகாப்தத்திற்குள் தள்ளிவிட்டிருக்கிறது. ஒன்றன் பின் ஒன்றாக தனது கோரப்பிடிக்குள் நுழையும் ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ சமூகத்தின் அழுகல்களை இந்நோய் அதிவேகமாக அம்பலப்படுத்தி வருகின்றது.” (CWIஇன் மார்ச்23, 2020 அறிக்கை). பல நாடுகளில் உலகப்போரின் தாக்கத்தோடு இந்நெருக்கடி ஒப்பிடப்படுவதுடன், ”கொரோனா தொற்றுநோய் நெருக்கடிக்கு பின், நிலைமைகள் முன்பிருந்ததை போன்று இனி எப்போதும் இருக்கப் போவதில்லை.” (CWIஇன் மார்ச்31, 2020 அறிக்கை) என்பதே விளைவாக இருக்கப் போகிறது.

வணிக மோதல்களின் உச்சக்கட்டமாக, போட்டி உறுப்பு நாடுகளுக்கிடையே மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் துவங்கி உணவு வரை பெரும்பாலான பண்டங்களின் ஏற்றுமதி-இறக்குமதியை தடுத்து நிறுத்த புதிய முயற்சிகளை முன்னெடுப்பதற்கு இத்தொற்று நோய் வழிவகுத்திருக்கிறது.

ஏலப் போர்கள் நிலவுகின்றது என்ற குற்றச்சாட்டுகளுடன், மருந்துகளுக்கும், மருத்துவ உபகரணங்களுக்கும் உலகளாவிய தட்டுப்பாடு நிலவுவதோடு, ஆதாயமடையும் நாடுகள் தன்னிச்சையான நடவடிக்கை மேற்கொண்டு விநியோகங்களில் குறுக்கிடவோ அல்லது நிறுத்தி வைக்கவோ செய்கின்றன. ஏழை நாடுகளே அதிக பாதிப்புக்குள்ளாவதை தவிர்க்கமுடியாது. ஆயினும், பணக்கார ஐரோப்பாவில் கூட புதிதாக நியமிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின்  ஐரோப்பிய ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் இராஜினாமா செய்திருக்கிறார். “நான் பதவியேற்று 3 மாதங்களுக்குள் .. நான் பதவியேற்றது எவ்வளவு பெரிய தவறு என்று COVID-19 வெளிச்சம் போட்டு காட்டியது: அவசர காலங்களில் தனிநபர்களும், நிறுவனங்களும் தங்களது சுயரூபத்தையும், உண்மையான குணத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர் .. (ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல்பாட்டில்) உறுப்பு நாடுகளுக்கிடையே முற்றிலும் ஒத்துழைப்பின்மையும், ஒத்திசைவான நிதியுதவிகளுக்கான முன்னெடுப்புகளுக்கு எதிராக மீண்டும் மீண்டும் எழும் எதிர்ப்புகளும், ஒருதலைபட்சமான எல்லை மூடல்களும், அறிவியல் முன்னெடுப்புகளுக்கான கூட்டுமுயற்சிகளின் போதாமையுமே நெருக்கடிக்கான பதிலாக உள்ளது.” என்று தனது உயர்ந்த நோக்கங்கள், முற்றிலும் வேறுமாதிரியான நடைமுறையால் நொறுக்கப்பட்டதை அவர் விளக்குகிறார்.

இதுவே முதலாளித்துவத்தின் அடிப்படை தன்மை. இலாப நோக்கத்தை அடிப்படையாக கொண்ட அதன் தன்மையும், முதலாளித்துவ தேசிய அரசுகளுக்கிடையிலான போட்டியும், நெருக்கடி நேரங்களில் கடும் பாதிப்புகளை உண்டாக்குவதோடு, தடுப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து, அவற்றை கெடுக்கவும் செய்யும். கடந்த ஆண்டின் உலக பொருளாதார சரிவு துவங்கியதிலிருந்து ஏற்கனவே நிலவி வரும் அரசுகளுக்கிடையேயான பதற்றங்களும், போட்டி நிறுவனங்களுக்கிடையேயான மூர்க்கமான போர்களும், மேலும் தீவிரமடைவதற்கு இந்நெருக்கடி வழிவகுத்துள்ளது.

கிட்டத்தட்ட நொறுங்கி வரும் விநியோக சங்கிலிகள் உலகமயம் சுருங்கும் போக்கை தீவிரப்படுத்தியுள்ளன. ட்ரம்பின் ”அமெரிக்காவை முதன்மைப்படுத்து” கொள்கைகளே இதன் துவக்கம் என்றாலும், ஐரோப்பாவிலும் அங்காடிக்கு தேவையான அளவுக்கு மட்டும் உற்பத்தியை சுருக்குவதன் மூலம் விநியோகத்தை குறைப்பதைப் பற்றிய விவாதங்கள் நடந்துவருகின்றன. இதன் மூலம் நாடுகளுக்கிடையேயான பகைமைகளுக்கும் அதோடு சேர்த்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கூட்டணிகளுக்கும் வழியேற்பட்டு வருகிறது.

தொற்று நோயால் புதிய நெருக்கடிகள் உருவாகியிருக்கும் ஐரோப்பாவில் இப்போக்கு தென்படுகிறது. பிரிட்டன் வெளியேற்றம் குறித்த பேச்சுவார்த்தைகளால் ஏற்கனவே பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில், நிதி நிலை மட்டுமின்றி, நாடுகள் வெளியேறுவதற்கான சாத்தியமும் பெரும் பிரச்சனையாக உள்ளது.

உதவும்படி பிப்ரவரி மாத இறுதியில் இதர உறுப்பு நாடுகளுக்கு இத்தாலி முன்வைத்த கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தின் சமூக பாதுகாப்பு நடைமுறைகளை பயன்படுத்தி, அந்நாடுகள் சட்டப்பூர்வமாக மறுத்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்று கூட உதவ முன்வரவில்லை. அதற்கு பதிலாக, தங்களுக்கு தேவைப்படக் கூடும் என்ற அச்சத்தில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களின் ஏற்றுமதிக்கு தடைவிதித்தன. பிரச்சனையை மேலும் மோசமாக்கும் விதமாக, ஐரோப்பிய மைய வங்கியின் தலைவர் கிரிஸ்டைன் லகார்ட், வட்டி உயர்வை உறுப்பு நாடுகளுக்கிடையே பகிர்ந்தளிப்பது மைய வங்கியின் வேலையல்ல என்று, இத்தாலி தனது கடன் பத்திரங்களுக்கான வட்டி கிடுகிடுவென உயர்வதை தானே சமாளித்துக்கொள்ள வேண்டும் என்பதை நாசுக்காக சொன்னார். பின்நாளில் இக்கருத்து முறைப்படி திருத்தப்பட்டுவிட்டாலும், சேதம் ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது.

கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் தெற்கு ஐரோப்பிய மண்டல நாடுகளுக்கு உதவலாமா? எவ்வாறு உதவுவது? என்பதைக் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் தற்போது எழுந்துள்ள சர்ச்சை அம்மண்டலத்தில் ஏற்கனவே நிலவும் பதற்றத்துக்கு வலு சேர்த்துள்ளது. ஒருபுறம், ஐரோப்பிய மையவங்கி €1.5லட்சம் கோடி ($1.6லட்சம் கோடி) தேவைப்படலாம் என்கிறது. ஆனால் இதை எப்படி செய்வது என்பதை குறித்து ஒரு உடன்பாடு இல்லை. அத்துடன், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், மற்றும் இதர சில ஐரோப்பிய நாடுகளும் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதும் (ஒருவருக்கொருவர்), அனைவரும் சேர்ந்து திரும்ப செலுத்தக் கூடியதுமான – ”கொரோனா கடன்பத்திரங்களை” (அல்லது யூரோ பத்திரங்கள்) பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றன.

ஆனால், இதனை எதிர்க்கும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் தனிப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மட்டுமே நிபந்தனைகளுடன் கூடிய கடனை தனித்தனியே வழங்கப்பட வேண்டும் என்று வாதிடுவதோடு, கொரோனா பத்திரங்களையும் எதிர்க்கின்றன. மாறாக, கடன்களோடு எந்த ஒரு நிபந்தனையையும் சேர்ப்பதை எதிர்க்கும் இத்தாலி, கடன்களை பரஸ்பரமாக்குவதை ஏற்குமாறு கோருகிறது. ஏதோ ஒரு வகையில் உடனடி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான முயற்சிகள் நடந்து வந்தாலும், இம்முரண்பாடுகள் யாவும் ஐரோப்பாவில் வளர்ந்துவரும் பதற்றத்தையே எதிரொலிக்கின்றன. இதன் அறிகுறியாக, 2018இன் துவக்கத்தில் நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்கேண்டிநேவிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பால்டிக் நாடுகள் ஒன்றிணைந்து “ஹன்சியாடிக் லீக்” என்ற கூட்டமைப்பை உருவாக்கின.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மனோநிலை மாறிக் கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில், 2007/09 நெருக்கடியின் விளைவால் தோன்றிய பதற்றங்கள் மீண்டும் திரும்பி வருகின்றன. வெளிநாட்டவர்களின் குடியேற்றத்துக்கு எதிராக அரசியல் செய்ய துவங்குவதற்கு முன், ஜெர்மனியின் தீவிர வலதுசாரி கட்சியான “ஜெர்மனிக்கான மாற்று” யூரோ நாணயத்திற்கு எதிரான பிரச்சாரத்தின் மூலமே வளர்ச்சியடைந்தது. இத்தாலியிலும் ஐரோப்பிய ஒன்றியம் குறித்த மனநிலையில் தீவிரமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவாக இருந்த அந்நாட்டில், அண்மையில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 67% இத்தாலியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பது இத்தாலியின் நலனுக்கு எதிராக இருப்பதாக வாக்களித்திருந்தனர். யூரோ நாணயத்தை குறித்தும், ஐரோப்பிய ஒன்றியத்தை குறித்தும் மீண்டும் கேள்வி எழுந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் துண்டு துண்டாக உடைந்து சிதறுவதற்கான சாத்தியக் கூறினை எதிர்நோக்கியுள்ளது.

போராட்டங்களும், கலகங்களும் வெடிக்குமென அஞ்சும் அரசாங்கங்கள்:

சில அரசாங்கங்களுக்கு உடனடியாக ஆங்காங்கே சில ஆதரவுகள் எழுந்தாலும், அவையாவும் ஒருமித்ததாக இல்லை. ஜெர்மனியில் கருத்துக் கணிப்பில் மெர்க்கெலின் கிறித்தவ ஜனநாயக ஐக்கியகட்சி – கிறித்தவ சமூக ஐக்கிய கட்சி கூட்டணிக்கு கிடைத்த ஆதரவு 2017 தேர்தலில் அதற்கு கிடைத்த ஆதரவை விட அதிகமாக உள்ளது, ஆனால், அவர்களது சமூக ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கான ஆதரவு சமீபத்திய அடிமட்ட நிலையிலிருந்து சற்று உயர்ந்தாலும், 2017இல் சமூக ஜனநாயக கட்சிக்கு கிடைத்த ஆதரவை காட்டிலும் 20.5% குறைவாகவே கிடைத்துள்ளது. இந்த உயர்வு சொற்பமானதாக இருந்தாலும், நிகழ்வுகள் நிலைமையை மாற்றிவிடக் கூடும். ஆழ்ந்த பொருளாதார சுணக்கம் பணியிடங்களில் நடைபெறும் போராட்டங்களை மட்டுப்படுத்தினாலும், அதன் அரசியல் பின்விளைவுகள் மிகப்பெரியதாகவும், பல நாடுகளின் அரசியல் நிலப்பரப்புகளை மாற்றியமைக்கக் கூடியதாகவும் இருக்கும். சோஷலிசத்துக்காக போராட, தொழிலாளர் கட்சிகளை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புக்களை வழங்க இது வழிவகுக்கும்.

பிரான்ஸில் மாக்ரானுக்கான ஆதரவு அதிகரித்திருந்தாலும், சராசரியாக 57% மக்கள் அவரை நிராகரிப்பதால், அவருக்கான ஆதரவு இன்னும் சிறுபான்மையாகவே உள்ளது. ட்ரம்புக்கு இதுவரை இருந்ததிலேயே சிறப்பான புதிய ஆதரவு இருக்கிறது, ஆனாலும், பெரும்பான்மை மக்கள், தற்போதைக்கு சிறு வித்தியாசத்தில், அவரது ஆட்சியை நிராகரிக்கின்றனர். குடியரசு வாக்காளர்களே கூட- உதாரணமாக புளோரிடாவில், ட்ரம்ப் இந்நோய் தொற்றை கையாண்ட விதத்தை குறித்து கேள்வியெழுப்பி வருவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் ஆளும் வர்க்கத்தின் முக்கிய பிரிவுகளிலிருந்தே ட்ரம்ப் தனது பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை சந்தித்து வருகிறார். தான் தலைமை தாங்கிய விமானம் தாங்கிய கப்பலில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் உடனடி உதவி கேட்டு ட்ரம்புக்கு 4 பக்க கடிதத்தை எழுதியதால், கப்பற்படை வீரர்கள் மத்தியில் மிகப்பிரபலமாகிய, கப்பலின் கேப்டன் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் ட்ரம்ப் தனக்கு தொடர்பில்லாதது போல் ஒதுங்க முயற்சித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்க விஷயமாகும்

இதே போன்று பிரிட்டனிலும் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த சிக்கன நடவடிக்கைகளால் நொடிந்து போயுள்ள சுகாதாரத்துறையின் நிலையை மேலும் மோசமாக்கும் ஜான்ஸன் அரசாங்கத்தின் கையாலாகா தனத்தின் மீதான ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகளின் விமர்சனம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதன் விளைவுகளை தணிக்கும் முயற்சியாக ஜான்ஸன் மீதான விமர்சனத்தை பயன்படுத்தும் ஆளும் வர்க்கத்தின் முக்கிய பிரிவு, இச்செயல்பாட்டில் முதலாளித்துவத்தின் உறுதியான ஆதரவாளரான தொழிற்கட்சி தலைவர் சர். கெயிர் ஸ்டார்மரை இறக்கிவிடவும் திட்டமிட்டு வருகின்றனர்.

உலகம் முழுவதும் ஆளும் வர்க்கங்கள் இந்த உலக நெருக்கடியால் பலவீனமடைந்து வருவதாக அஞ்சுகின்றனர். பொருளாதார ரீதியில் மட்டுமின்றி, உலக அதிகாரங்களுக்கிடையிலான உறவிலும் மாற்றங்கள் குறித்தும் இந்த அச்சம் நிலவுகிறது. சீன உற்பத்திகளின் மீதான சார்பை குறைக்கவும், உள்நாட்டில் முதலாளித்துவத்தை மீண்டும் கேள்விக்கு உட்படுத்தி மாற்றங்களை கோரவும், உலகமயத்தை மறுவடிவமைப்பு செய்யவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பத்தாண்டுகளில் இது இரண்டாவது பெரிய பொருளாதார நெருக்கடியாக இருக்கப் போகின்றது. 2007/9 பொருளாதார நெருக்கடியின் நீண்ட விளைவு, பல அரசாங்கங்களையும், குறிப்பாக நெருக்கடியை உருவாக்கி, மீட்சியால் அதிக ஆதாயமடைந்த முதலாளிகளையும் சந்தேகத்திற்கு ஆளாக்கியது. இந்த ஒரே காரணத்தினாலேயே, சோஷலிச சித்தாந்தம் அமெரிக்காவில் தற்போது பிரபலமாகியுள்ளது.

இதை நன்கு அறிந்த ஆளும் வர்க்கங்கள் பல நாடுகளில் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு சொற்பமான உதவிதொகை உள்ளிட்ட சலுகைகளை வழங்கியுள்ளதுடன், தொழிலாளர்களின் போராட்டங்களை தடுக்கும் முயற்சியாக, தொழிற்சங்க தலைவர்களுடன் அவசரகதியில் கைக்கோர்த்துள்ளன. இவ்வாறு, பிரிட்டனில் பேச்சுவார்த்தை நடத்த திடீரென தொழிற்சங்க தலைவர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் தான், 1980களில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட கடுமையான சட்டவரம்புகளை மேலும் தீவிரப்படுத்துமாறு அரசை டோரி அமைச்சரவை கேட்டுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அல்ஜீரியா, அல்லது ஹங்கேரி போல சில நாடுகள் போராட்டங்களுக்கு தடைவிதிக்கவோ, அல்லது புதிய அடக்குமுறை சட்டங்களை இயற்றவோ இந்த தொற்று நோயை பயன்படுத்திக் கொள்கின்றன என்றால், இலங்கையிலோ, இவை இரண்டுமே நடந்துவிட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜனநாயக கொள்கைகளை பாதுகாக்க “அடிப்படை உரிமைகள் விதி” சட்டப்பூர்வமாக இருந்தாலும், ஹங்கேரி இதை மீறியிருப்பதை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கண்டனக் குரல் ஏதும் எழவில்லை.

கடவடைப்பு அமுலில் உள்ள நாட்களில் மக்களுக்கு வேண்டிய பொருட்கள் மற்றும் நிதியுதவிகளை தந்து, வைரஸ் பரவலை தடுக்க உரிய நடவடிகைகளை மேற்கொள்வதற்கு மாறாக, தாக்குதல்களையும், அபராதங்களையும் உள்ளடக்கிய ஒடுக்குமுறை நடவடிக்கைகளே கதவடைப்புக்களின் முக்கிய அம்சமாக உள்ளது. தென்னாப்பிரிக்காவில் கதவடைப்பு அறிவிக்கப்பட்ட முதல் வாரத்திலேயே, ஊரடங்கை மீறியதாக கிட்டத்தட்ட 7500 பேர் மீது அபராதம் விதிக்கப்பட்டது. அதே சமயம், மக்கள் மீதான கண்காணிப்பையும் ஒடுக்குமுறைகளையும் தீவிரப்படுத்த சில அரசுகள் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.

அரசு தலையீடு திரும்புகிறது:

இந்நெருக்கடியின் தீவிரத்தன்மையானது, பொருளாதாரத்தில் அரசு தலையிடுவதற்கான நிர்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதலாளித்துவத்தின் பலவீனங்களையும், வரம்புகளையும் இத்தலையீட்டு நடவடிக்கை வெளிக்காட்டுகிறது. ஒவ்வொரு நாடாக, அரசுகள் பெற்ற வருமானத்தை பொருளாதாரத்தில் நேரடியாக கொட்டிக்கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் பாராளுமன்றம் ஒப்புதலளித்திருக்கும் $2.3லட்சம் கோடி தொகையுடன் சேர்த்து, இந்த ஆண்டின் அரையாண்டு வாக்கில் இன்னொரு $5லட்சம் கோடியை பொருளாதாரத்தில் புகுத்த வாய்ப்பிருப்பதாக மைய வங்கி தெரிவிக்கிறது. இந்த அரசு பணம் முதலாளித்துவத்துக்கு எதிர்காலத்தில் ஆபத்தை உருவாக்கும் என்றாலும், தொற்று நோயின் விளைவுகளை சமாளிக்க வேறுவழியின்றி செய்யப்படும் இச்செலவை தொழிலாளர் மற்றும் நடுத்தர வர்க்கங்கள் ஏற்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும்.

2007/09 நெறுக்கடியை சமாளிக்கும் முயற்சியில், கார்களையும், கதகதப்பூட்டும் சாதனங்களையும் வாங்குவதற்கு மானியம் அளிக்கும் திட்டங்களை அறிவித்தன. இவ்வகையான கொள்கைகள் மீண்டும் திரும்பலாம். ட்ரம்ப் ஒரு கட்டமைப்பு திட்டம் குறித்து நீண்டகாலமாக பேசி வருகிறார். பெட்ரோல், டீசல் மற்றும் கலப்பு வாகனங்களின் விற்பனையை 2035லிருந்து தடை செய்து, மின்சாரம் அல்லது ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்களின் விற்பனையை மட்டுமே அனுமதிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.

அதே சமயம், ஜெர்மனி, பிரான்சு உள்ளிட்ட பல நாடுகளில் அரசுடமையை கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இத்தகைய நிறுவனங்களை அரசு முதலாளித்துவ நிறுவனங்களாகவே நடத்த அரசுகள் திட்டமிட்டுள்ளன என்ற போதிலும், முக்கிய நிறுவனங்களை அரசு கையிலெடுப்பதே 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் நவதாராளவாத பிரச்சாரத்தை செல்லாததாக்கி, அரசுடமைக்கும் தனியுடமைக்கும் இடையிலான விவாதத்தை மீட்டெடுக்கப் போகிறது. நேரடி நாட்டுடமையின் மூலமாகவோ அல்லது அரசின் நேரடி நிதியுதவியிலோ இந்நிறுவனங்கள் பிழைத்திருப்பதால் தனிப்பட்ட முதலாளிகளின் நலனுக்காகவா அல்லது ஒட்டு மொத்த சமூக நன்மைக்காக இயங்கப் போகின்றனவா? என்ற கேள்வியை அவை எதிர்கொள்ளப் போகின்றன. பிற்காலத்தில் இந்நிறுவனங்களை மீண்டும் தனியார்மயமாக்க முன்னெடுக்கப்படும் முயற்சிகள் போராட்டங்களை சந்திக்க நேரிடக் கூடும். அரசுடமைக்காக முதலாளிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய நிவாரணத்தொகை, அந்நிறுவனங்களின் மேலாண்மையை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைப்பது உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளை எழுப்பக்கூடிய இந்த அரசுடமை தொடர்பான நிகழ்வுகள் சோஷலிசவாதிகளுக்கு பல வாய்ப்புக்களை உருவாக்கித் தரப்போகின்றது. கார்ப்பரேட் இலாபத்துக்காக அல்லாமல், மக்களின் முக்கிய தேவைகளை தீர்ப்பதற்கான ஜனநாயகப் பூர்வமான பொருளாதார திட்டமிடலை அமல்படுத்தும் வண்ணம், பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய துறைகளை தேசியமயமாக்குவது தொடர்பான கேள்விகளை இது எழுப்பக் கூடும்.

சொத்துக்கள் ஓரிடத்தில் பெருமளவு குவிந்ததன் பின்னணியில் முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கைகள் யாவும் -தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்த சேவைகள் வெட்டும் கொள்கைகளாலும், அதை சார்ந்த பணிச்சூழல்களாலும் தாங்கள் பீடிக்கப்பட்டு வந்தது ஏன் என்ற கேள்வியை கேட்பதற்கான வாய்ப்பை தொழிலாளர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் வழங்கியிருக்கின்றன. போராட்டங்களுக்கும், கலகங்களுக்கும், புரட்சிகளுக்குமான வாய்ப்பை இது உருவாக்குகின்றது. இத்தகைய சூழல்களுக்கு அஞ்சியே அமெரிக்காவின் சொற்பமான பண நிவாரணம் போன்ற பல சலுகைகளை அளிக்கும் நிர்பந்தங்களுக்கு ஆளாகியிருப்பதை உலக முதலாளித்துவ வர்க்கங்கள் உணர்ந்துள்ளன. ஸ்பெயினில் ஆளும் சோஷலிச கட்சி – பொடெமோஸ் முதலாளித்துவ சார்பு கூட்டணி “அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம்” திட்டத்தை அறிவிக்க பரிசீலித்து வருவதாக அறிவித்தது. இது குறைந்தபட்ச ஊதியமான 950யூரோ என்ற அளவை விட குறைவானதாக, கிட்டத்தட்ட 440யூரோ என்ற அளவில் இருக்கக் கூடும். ஆனால் இச்சலுகை மக்களில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே பொருந்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாளித்துவத்தின் இந்த குட்டிகரணம் பைனான்ஸியல் டைம்ஸின் சமீபத்திய கட்டுரையில் பிரதிபலித்தது. கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் தியாகங்கள் தவிர்க்க முடியாதவையாகும், ஆனால் அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படக் கூடியவர்களின் மறுவாழ்வை மீட்டெடுக்க என்ன செய்யப் போகின்றோம் என்பதை ஒவ்வொரு சமூகமும் நிரூபித்தாக வேண்டும் என்று அக்கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

உத்வேகமான சீர்திருத்தங்கள் – கடந்த நாற்பதாண்டு காலக் கொள்கைப் போக்கை மாற்றுவது – விவாதிக்கப்பட்டாக வேண்டும். பொருளாதாரத்தில் சுறுசுறுப்பான பங்காற்ற வேண்டியிருப்பதை அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொதுச்சேவைகளை அவர்கள் சுமைகளாக பார்க்காமல், முதலீடுகளாக பார்ப்பதோடு, உழைப்பு சந்தைகளின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான வழிகளை தேட வேண்டும். மறுப்பகிர்வை குறித்த விவாதம் மீண்டும் துவங்கப் போகிறது; செல்வந்தர்களுக்கும் முதியவர்களுக்குமான சலுகைகள் மீண்டும் கேள்விக்குட்படுத்தப்படப் போகின்றன. சமீப காலம் வரை வினோதமானவைகளாக கருதப்பட்ட அடிப்படை ஊதியம், சொத்துவரிகள் உள்ளிட்ட கொள்கைகள் மீண்டும் ஒன்று கலக்கப் போகின்றன. 

”கதவடைப்புகளின் போது மக்களின் வியாபாரங்களையும், வருவாயையும் காப்பாற்ற கட்டுப்பாடுகளை மீறி அரசுகள் எடுத்துவரும் நடவடிக்கைகளை, கடந்த 70 ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகள் அனுபவித்திராத போர்க்கால பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது சரியாக இருக்கும்.” (ஏப்ரல்4 2020).

நெருக்கடியின் பாதிப்புக்கு எதிராக தொழிலாளர்களின் போராட்டம்:

தொழிற்சங்கங்களையும், அவ்வப்போது இடதுசாரி கட்சிகளையும், நெருக்கடியை சமாளிக்கும் விதமாக தேசிய அல்லது சமூக கூட்டணிக்குள் ஈடுபடுத்தும் முயற்சிக்கான பின்புலம் இதுவே.

தொழிற்சங்கங்களையும், இடது சாரி தலைவர்களையும் மக்கள் இயக்கங்களை தடுத்து நிறுத்துவதற்கான தடையாக பயன்படுத்தி, பொங்கிவரும் பெரும் சவாலை தடுத்து நிறுத்தும் முயற்சியாக மட்டுமே ஆளும் வர்க்கங்கள் இதைச் செய்கின்றன.

குறிப்பாக, கடந்த கால அனுபவங்களால், பல தொழிலாளர்கள் வலது சாரி அரசுகளின் திடீர் பல்டியால் சந்தேகத்திற்குள்ளாவார்கள். ஆரம்பத்தில் அரசுகளும், முதலாளிகளும் மிகவும் வெளிப்படையாக செயல்பட்ட இடங்களில் கூட தொழிலாளர்கள் அவர்களது செயலை கொண்டு மட்டுமே மதிப்பிடுவார்களே ஒழிய, சொற்களை வைத்தல்ல.

அரசுகளின் மீதான இத்தகைய சந்தேகம், கடந்த தசாப்தங்களாக உழைக்கும் மக்களின் அனுபவத்திலிருந்து உருவாகியதே. பல நாடுகளில் தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காணாத அதேவேளை, நிரந்தரமற்ற வேலைகளின் எண்ணிக்கை ஏகபோகமாக பெருகிவிட்டது. அமெரிக்காவில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தில் கூறியுள்ள படி, வளர்ந்த நாடுகளில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளில், 50% மக்களின் சராசரி வருமானம் தொடர்ந்து குறைந்து வந்துள்ளது.

தொற்று நோயின் தாக்கத்திலிருந்து தங்களது வேலைகளையும் உடல் நலத்தையும் தற்காத்துக் கொள்ள பல நாடுகளில் தொழிலாளர்கள் தற்போது முன்னெடுக்கும் தீவிரமான போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் இதனைப் பிரதிபலிக்கின்றன. இந்நடவடிக்கைகளில் பெரும்பாலும் தொழிற்சங்கங்களின் அடிமட்ட உறுப்பினர்களாலோ அல்லது ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களாளோ துவக்கி வைக்கப்பட்டவையாகும். பலர் தொழிலாளர்கள் சங்கங்களில் இணைந்தும் வருகின்றனர்; பிரிட்டனில் மார்ச் மாதம் UNITE சங்கத்தில் 16,000 தொழிலாளர்கள் புதிதாக இணைந்தனர். தொழிலாளர்களின் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) இணையத்தளமான socialistworld.net இல் தெரிவிக்கப்படுவதைப் போல், பாதுகாப்பற்ற பணிச் சூழல்களுக்கு எதிராகவும், முற்றான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும், பணி நீக்கத்துக்கு எதிராகவும், நியாயமான ஊதியத்துக்காகவும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. துவக்க நடவடிக்கைகளில் சில ஐரோப்பாவில், குறிப்பாக, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும், வடக்கு அயர்லாந்திலும், ஆஸ்திரியாவிலும் முன்னெடுக்கப்பட்டு, பின்னர் உலகம் முழுவதும் பரவின. அமெரிக்கா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் லெசோதோ போன்ற நாடுகளிலும் போதுமான உபகரணங்களை கோரி மருத்துவ ஊழியர்கள் வேலை நிறுத்தங்களையும் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர்.

சமீப வாரங்களில் அமெரிக்காவிலும் மோட்டார் வாகன தொழிலாளர்களாலும், துறைமுக தொழிலாளர்களாலும், அமேசான் கிடங்கு தொழிலாளர்கள், ஹெர்ஷீஸ் நிறுவன தொழிலாளர்கள், இறைச்சி பொட்டல தொழிலாளர்கள் மற்றும் இதர துறைகளின் தொழிலாளர்களாலும் நடத்தப்பட்ட வேலை நிறுத்தங்கள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பல நடவடிக்கைகள் தொழிலாளர் வர்க்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மஸாஸுசெட்ஸில் ஜெனெரல் எலெக்ட்ரிக்ஸ் தொழிலாளர்கள் தங்களை பணிநீக்கம் செய்வதற்கு மாறாக, கொரோனா நோயாளிகளுக்கான சுவாச கருவிகள் உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் பணியை மேற்கொள்வதன் மூலம் உற்பத்தியை தொடர்ந்து நடத்த கோரி நடத்திய போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மேலாண்மைக்கு எதிரான இந்த சவாலில், தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் உற்பத்தியை கொண்டுவந்து சமூகத்துக்கு பயன்படும் வகையில் உற்பத்தியை தொழிலாளர்களே நடத்துவது என்ற சிந்தனையும் அடங்கியுள்ளது. மேலும், மஸாஸுசெட்ஸில் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்தக் கோரி 13,000 கட்டுமான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஆளும் வர்க்கத்தின் மீதான இந்த அவநம்பிக்கையை மேலும் ஆழமாக்கி, இந்நெருக்கடியை கையாளும் வேலைத் திட்டத்துக்கு ஆதரவாக சுயாதீனமான தொழிலாளர்களின் நடவடிக்கைகளை கட்டியெழுப்பவும் தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி (CWI) பாடுபடும். ஒரு குறிப்பிட்ட கோரிக்கைகளுக்காக அரசிடமும், முதலாளிகளிடமும் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், முதலாளித்துவ அமைப்பை காப்பாற்ற அவர்களோடு கைக்கோர்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. சுயாதீனமான நடவடிக்கைகளை முன்னெடுக்க தேசிய அளவில் தொழிற்சங்க தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கும் அதேவேளை, பணியிடங்களிலிருந்தும், சமூக நிறுவனங்களிலிருந்தும், வெகுஜன இயக்கங்களை சோஷலிஸ்டுகள் கட்டியெழுப்ப பாடுபடுவார்கள். இதன் மூலம் தொழிலாளர் இயக்கம் வலுவடைவதோடு, மிகப்பெரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியும்.

போட்டியை அடிப்படையாக கொண்டு, இலாபத்தை முன்னிலைப்படுத்தும் முதலாளித்துவ அங்காடி முறையால் சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்பதை இந்நெருக்கடி மீண்டும் ஒருமுறை காட்டியிருக்கிறது. இதனால் தான் உலகம் முழுவதும் அரசுகள் தலையிடுவதற்கான நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளன. ஆனால், இத்தலையீடு உழைக்கும் மக்களின் நலன்களுக்காக இருக்க வேண்டுமே ஒழிய, பெரு நிறுவனங்களின் இலாபங்களுக்காக அல்ல. இதை அடைய, பெரும்பான்மை சமூகத்தின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய உற்பத்தி மற்று விநியோகத்திற்கான ஜனநாயகப் பூர்வ சோஷலிச திட்டமிடல் அவசியம். தேவையான முடிவுகளை மேற்கொள்ள அதிகாரமளிக்கும் பொருட்டு, பொருளாதாரத்தை இயக்கிக் கொண்டு, அதன் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் பெரு நிறுவனங்களையும், வங்கிகளையும், நிதி நிறுவனங்களையும் உழைக்கும் வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாடு மற்று மேலாண்மையின் கீழ் சமூகவுடமையாக்க வேண்டும். அவற்றின் முந்தைய உடமையாளர்களுக்கு நிரூபிக்கப்பட்ட இழப்புகளுக்கு மாத்திரம் இழப்பீடுகளை வழங்க வேண்டும்.

அரசுகளுக்கு இந்நெருக்கடி, அவை யாருடைய நலனுக்காக செயல்படுகிறது, என்ன செய்து கொண்டிருக்கிறது என்பனவற்றை மதிப்பிடுவதற்கான சோதனையாக அமையப்போகிறது. இந்த நெருக்கடி ஏன் ஏற்பட்டது, அரசுகள் இதை எப்படி கையாண்டன என்ற கேள்விகள் சோஷலிஸ்டுகளுக்கு முதலாளித்துவத்தின் தன்மையை விளக்கி, உழைக்கும் மக்களின் ஈடுபாட்டுடன் அவர்களை முன்னிலைப்படுத்தி சமூகத்தை சோஷலிசம் நோக்கி இட்டுச்செல்லக் கூடிய அரசுகளை அதிகாரத்தில் இருத்தும் இலட்சியத்துக்கு ஆதரவு திரட்ட வாய்ப்பளிக்கக் கூடிய இன்றியமையாத கேள்விகளாகும்.

அசுர வேகத்தில் பரவும் இச்சமூக, பொருளாதார நெருக்கடியானது ஒரு சர்வதேச தீர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் உலகளாவிய சிக்கலாகும். வெறும் பொருளாதார ரீதியில் மட்டுமின்றி, சமூக ரீதியிலும், சுற்றுச்சூழல் ரீதியிலும் நமது பூமியின் எதிர்காலம் குறித்த மிகப்பெரிய கேள்விகளை இது எழுப்பப் போகிறது. முதலாளித்துவத்தால் இந்த நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை என்பதையும் அறுதிப் பெரும்பான்மை மக்களின் உயிரை காப்பாற்ற இயலவில்லை என்பதையும் இது காட்டியிருக்கிறது. தொழிலாளர்களது சர்வதேச மாற்று என்ற சிந்தனையும், உலகின் வளங்கள் பெரும் பணக்காரர்களின் நலனுக்காக சுரண்டப்பட்டு சீரழிக்கப்படாமல், அறுதிப்பெரும்பான்மை மக்களது தேவைகளுக்காக மட்டும் ஆக்கப் பூர்வமான வழிகளில் பயன்படுத்தப்படும் ஒரு சோஷலிச பொன்னுலகு குறித்த சிந்தனையும் முன்பை விட இப்போது தான் மிகவும் அவசியமானதாகவும், பொருத்தமானதாகவும் உள்ளது. இந்த சோஷலிச மாற்றத்திற்காக போராடி, அதை நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு இயக்கத்தை கட்டியமைப்பதே இன்றைய அத்தியாவசிய பணியாகும்.

நன்றி www.akhilam.org