உலகம் முழுதும் கொரோனா வைரஸ் எனும் கொடிய நோய்த் தொற்று பல உயிர்களை காவுகொண்டிருக்கிறது. இலச்சக்கணக்கான மக்கள் இந்த கோவிட் 19 வைரஸால் தொற்றுகுள்ளாகியிருக்கின்றனர்.
பல நாடுகள் பயண தடை மற்றும் அவசரகால சட்டத்தை பயன்படுத்தி மக்களை வீட்டுக்குள் முடக்கி விட்டுள்ளது. சில மேற்கத்தைய நாட்டு அரசுகள் மக்களுக்கான சிறிதளவு நிவாரன தொகைகள் மற்றும் ஊதிய தொகையை வழங்குகின்றன. ஆனால் தெற்காசிய நாடுகளை பொறுத்தவரை குறிப்பாக இலங்கையில் அரச ஊழியர்களுக்கு மட்டும் முழுமையான தொகையை வழங்கி ஏனைய தொழிலாளர்களை அரசு கணக்கில் எடுக்கவில்லை. வெறுமனமே சிறு தொகையான 5,000 ரூபா கொடுப்பதற்கு மட்டும் அரசு இணங்கி உள்ளது.
இலங்கையில் இதுவரை இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் 197 க்கும் மேற்பட்டவர்கள். இதில் இறந்தவர்கள் 7 க்கும் மேற்பட்டவர்கள், இதில் 54 நபர்கள் இதுவரை முற்றாக குணப்படுத்தபட்டிருக்கின்றனர். இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 வரை உயரும் என்று இலங்கை சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஏனைய மக்கள் பெரும் அச்சத்திலும், மறுபக்கம் அன்றாட வாழ்கைச்சிலவினங்களை எதிர்கொள்ள முடியாமலும் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அரசின் அறிவிப்பின்படி மக்கள் பின்பற்ற கோரப்பட்டுள்ள சில நடைமுறைகள் வருமாறு:
- உள்ளுர் கடைகள் திறக்கலாம். கடையை சுற்றியுள்ள மக்கள் வாகனத்தில் செல்லாமல் நடந்து சென்று வாங்கலாம்.
- வெதுப்பங்கள் திறக்கலாம். வீடு வீடாக வாகனங்களில் கொண்டு சென்றும் விற்கலாம்.
- பல்பொருள் அங்காடிகள் பொதிகளாக்கி வீடு வீடாக சென்று விநியோகிக்கலாம்.
- மீன் பிடித்து வீடு வீடாக கொண்டு சென்று விற்கலாம்.
- அரிசி ஆலைகள் இயங்கலாம்.
- மரக்கறிகளும் உள்ளுரில் கொண்டு சென்று விற்கலாம்.
- ஐஸ் கட்டி தொழிற்சாலைகள் இயக்கி மீன்பிடிக்கு தேவையானவைற்றை உற்பத்தி செய்யலாம்.
- மருந்தகங்கள் திறக்கலாம். உரிய கிளினிக் கொப்பியுடன் சென்று வாங்கலாம்.
- நோயாளர்கள் அருகிலுள்ள கிளினிக் கொப்பியுடன் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு செல்லலாம்.
- அனைத்து நடவடிக்கைகளின் போதும் பாதுகாப்பு நடைமுறைகளை பேணுவது அவசியம்.
இலங்கை அரசாங்கமோ தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு ஒரு சில திட்டங்களை மட்டுமே உருவாக்குகின்றது. முறைப்படி தொற்றை எதிர்கொள்ளும் பரிசோதனைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படவில்லை. தவிர மக்களின் அன்றாட வாழ்வாதரத்தை நிவர்த்தி செய்வதில் அரசு ஆர்வம் காட்டவில்லை. இதுவரை கடன் வாங்கியயுள்ள அரசு பெரும் வியாபரங்களின் லாபம் காக்கும் வேலைத்திட்டத்தை மட்டும் செய்துவருகிறது. இந்த கடன் சுமை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. இது மட்டுமிற்றி மக்களது வரிப்பணத்தை முழுமையாக இராணுவ மற்றும் சிவில் பாதுகாப்புக்களுக்கு வழங்கி கொண்டிருக்கிறது. கடந்த நாட்களில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 22,000 யூரா பணம் இலங்கைக்கு அத்தியாவசிய தேவைக்காக நிதியுதவி வழங்கப்பட்டது. மற்றும் சுகாதார சேவைகளுக்காக அமெரி்க்கா 1.3 மில்லியன் டொலர் இலங்கைக்கு வழங்கியது. அத்துடன் உலக வங்கி 128.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கியுள்ளது.
இலங்கைக்கு 10 டன் அத்தியாவசிய மருந்துகள் இலவசமாக இந்தியா அளித்துள்ளது. மற்றும் சீனா இவ்வாறான பொருட்களை ஏற்கனவே இலங்கைக்கு கொடுத்திருக்கின்றது.ஐந்நூறு மில்லியன் டாலர்களுக்கு மேல் மீண்டும் சீனாவிடம் இலங்கை கடன் வாங்கியுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் புதிய ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச பதவியேற்ற பின்னர் அரச சமூக மட்டங்களில் அதிகளவிலான இராணுவ பிரசன்னம் இலங்கை முழுதும் கொண்டுவரப்பட்டு – இன்று இராணுவ ஆட்சிக்குள் இலங்கை கொண்டுவரப்பட்டிருக்கிறது. சிவில் சேவைகளிலும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அனைத்துமட்ட தடுப்பு நடவடிக்கைகளும் இராணுவத்திடம் கொடுக்கப்பட்டு இலங்கை முழுதும் இராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. யுத்த காலம் முடிந்தும் மீண்டும் இராணுவத்தை பலப்படுத்த வேண்டிய அவசியமில்லை. மக்களுக்கான வாழ்வாதரத்தை மேம்படுத்த வேண்டும் என்று தமிழ்சொலிடாரிட்டி அமைப்பு கடந்த 10 வருடங்களாக கூறிவருகின்றது.
இவ்வாறு இருக்கையில் மக்கள் இந்த பொருளாதார நெருக்கடியில் அன்றாட வாழ்க்கை சிலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் மிகவும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாடசாலை மே மாதம் வரை பூட்டப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டத்தை மீறியதென இதுவரை 22 ஆயிரம் பேர்கள் பொலிசார் மற்றும் இராணுவத்தினரால் கைது செய்யபட்டுள்ளனர். வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். ஆனால் முகக்கவசமோ மக்களுக்கு இலவசமாக கிடைப்பதில்லை. ஒருபக்கம் சுகாதார அதிகாரிகளையும் நாட்டின் இராணுவத்தினரையும் புகளாரம் செய்வதை மட்டும் முன்னிலைப்படுத்தி மீடியாக்கள் காட்ட முயற்சிக்கின்றனர். மற்றுமொரு பக்கம் நிவாரண உதவிகள் என வெளிநாட்டு நிவாரணங்கள் மட்டும் மக்களிடம் செல்கிறது. இது முற்று முழுதுமாக செல்வதில்லை. கடந்த தினங்களில் யாழில் உணவின்றி பட்டினியால் ஒருவர் இறந்துள்ளார். இவ்வாறான நிலமைகள் நீடித்தால் இலங்கையில் கொரோனாவைவிட பசி மற்றும் ஏழ்மையால் இறப்புக்கள் அதிகரிக்கும்.
தமிழ் சொலிடாரிட்டி முன் வைக்கும் கோரிக்கைகளில் சில பின்வருமாறு:
- தொழிலாளர் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்த வேண்டும். அதாவது தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கு.
- அனைவருக்குமான கொரோனா பரிசோதனையை வழங்கு.
- சுகாதார துறையில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களினதும் சுகாதாரத்தை – பாதுகாப்பை உறுதிப்படுத்து – அதற்கு தேவையான அனைத்து முதலீட்டையும் எவ்வித தாமதமும் இன்றி செய்.
- 100 வீதம் ஊதியம் வழங்கு. எக்காரணம் கொண்டும் ஊதியத்தை வெட்டாதே.
- சிறு தொழில் வியாபாரிகள் மற்றும் சுய தொழில் செய்வோர் எவ்வித நட்டத்தையும் சந்திக்காமல் இருக்க தேவையான நட்ட ஈட்டை வழங்கு.
- வேலை அற்றோர் மற்றும் வேலை செய்ய முடியாதோருக்கு தேவையான முழு பண உதவிகளையும் வழங்கு.
- ஓய்வூதியம் பெறுவோருக்கு தேவையான மேலதிக பண உதவி – சுகாதாரப் பாதுகாப்பு – மற்றும் உணவைப் பெறும் வசதிகளை உடனடியாக வழங்கு.
- மின்சாரம் முதற்கொண்டு பல்வேறு வீட்டு கட்டணங்களை தற்காலிகமாக என்றாலும் ரத்துச் செய்.
- வீட்டு வாடகை தற்காலிகமாக ரத்துச் செய்.
- வேலை செய்யும் உரிமை மறுக்கப்பட்டு இருக்கும் அனைவருக்கும் தேவையான மாதாந்த உதவிப் பணத்தை உடனடியாக வழங்கு.