கொரோனா நெருக்கடி தீவிரமடைகையில், ஆழமாகும் வர்க்கமுரண்

1,100 . Views .

தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) சர்வதேச செயலகத்தின் அறிக்கை (தமிழ்மொழிபெயர்ப்பு);

தேதி: 31.03.2020

கொரோனா தொற்றுநோய் நெருக்கடிக்கு பின், நிலைமைகள் முன்பிருந்ததை போன்று இனி எப்போதும் இருக்கப் போவதில்லை. இது இருபதாம் நூற்றாண்டின் இரு உலகப்போர்களுக்கு பின்னர் நிலவிய சூழ்நிலைகளை ஒத்ததாகவே இருக்கப் போகிறது. பொதுச்சூழல் ஏற்கனவே துல்லியமாக, இம்மிப்பிசகாமல் மாற்றமடைந்துள்ளது. மேலும், இச்சூழலின அம்சங்களில் ஒன்று, மின்னல் வேக நிகழ்வுகளாகும். முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் ப்ரவுன் கூட, தனது புதிய தொழிற்கட்சி அலையின் தூய்மை தன்மையோடு, தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் வாதத்தை மெய்ப்பிக்கும் வண்ணம், லெனினது மேற்கோளை கையிலெடுத்து, “நெருக்கடியின் போது, சில சமயம், பத்தாண்டு காலத்தின் நிகழ்வுகள் அனைத்தும் ஒரே வாரத்தில் நடந்தேறக்கூடும்” என்கின்றார்.

முன்னேறிய தொழிற்துறை நாடுகளில் எழக்கூடிய தொழிலாளர்களின் எழுச்சிகள், நவகாலனிய உலகில் எழக்கூடிய எண்ணற்ற புரட்சிகள் உள்ளிட்ட உலகளாவிய சமூக, பொருளாதார பேரழிவுகளிலிருந்து தங்களையும், தங்களது அமைப்பையும் காப்பாற்றும் முயற்சிக்கான உத்தியாக, கடந்த மாதம் வரை ஏற்றுக்கொள்ள முடியாத சோஷலிச நடவடிக்கைகள் என்று தாங்கள் கருதிய அனைத்தையும் முதலாளித்துவமும், அதன் அரசுகளும் அவசர அவசரமாக கையிலெடுத்துள்ளன.

பிரிட்டனின் ஒரு பூர்ஷ்வா விமர்சகர் அறிவித்த படி, ”வலதுசாரி டோரி சித்தாந்தமா அல்லது உணவுப் பஞ்சமா” என்ற இவ்விரண்டில் ஒன்றை தேர்வு செய்யும் நிலைக்கு டோரி நிதி அமைச்சர் தள்ளப்பட்டார். அவர் செய்த தேர்வு தான் என்ன? இதற்கான பதிலை டோரி அமைச்சரவையின் மற்றொரு அமைச்சர் அப்சர்வர் நாளிதழில் அளித்தார்:  “நாங்கள் பொருளாதாரத்தை சற்று நாட்டுடைமையாக்கி இருக்கிறோம்.” இது முற்றிலும் துல்லியமான பதிலல்ல என்ற போதிலும், டோரிக்கள் சமூகத்தின் தேவைக்காக அல்லாமல், தனியாருக்கான இலாபத்தை அடித்தளமாக கொண்ட தங்களது அமைப்பை காப்பாற்றிக்கொள்ள ஆயிரம் கோடிக் கணக்கில் அரசு பணத்தை – நமது வரிப்பணத்தை – செலவழித்துள்ளனர் என்பதே உண்மை. பல எச்சரிக்கைகளுக்கு மத்தியில், குறிப்பாக, அமைப்பு சீர்குலைந்து, அதனால் பெரிதும் பாதிக்கப்படப் போகும் தொழிலாளர் வர்க்கத்தின் கோபக் கணைகள் வெடித்துச் சிதறுவதற்கான அச்சுறுத்தல் குறித்த பேச்சுக்களுக்கு நடுவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

முதலாளித்துவ அமைப்பு முற்றிலும் தோல்வியடைந்திருப்பதை இந்நெருக்கடி அப்பட்டமாக அம்பலப்படுத்தியிருக்கிறது – எல்லாவற்றிலும் மேலாக, முக்கியத்துவம் வாய்ந்த தேசிய சுகாதார சேவையில் (NHS) தோல்வியடைந்துள்ளது. பிரதமர் போரிஸ் ஜான்ஸனும் அவரது கூட்டாளிகளும் “நமது NHS” என்று இத்திட்டத்தை புகழ்ந்தாலும், அவர்கள் அத்திட்டத்தை அமைப்புரீதியாக தனியார்மயப்படுத்தி, சுயலாபம் அடைந்துள்ளனர். வரலாற்று ரீதியில் தேசிய சுகாதார சேவையானது (NHS) போர் முடிந்து வீடு திரும்பிய உழைக்கும் வர்க்கமும், இராணுவ வீரர்களும், வேலையிழப்புக்களையும், வறுமையையும் உள்ளடக்கிய போருக்கு முந்தைய காலத்துக்கு மீண்டும் திரும்ப மாட்டோம் என்று முழங்கி- 1945க்கு பின் உருவான தொழிலாளர் பேரியக்கத்தின் கொடையாகும். அதனை தொடர்ந்து, NHS உருவாக்கத்தின் போது ’அனியுரின் பேவன்’ டோரி கட்சியின், அதிலும் குறிப்பாக, அக்கட்சியின் மருத்துவர்களின் மூர்க்கமான எதிர்ப்பை சந்தித்தார். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இலாபகரமான தனியார் மருத்துவ பணிகளில் ஈடுபட்டுக்கொள்ள அனுமதி வழங்கியதன் மூலம் அவர்களின் வாய்களை தங்கத்தால் மூடி தான் இந்த NHS திட்டத்தை நிறைவேற்ற முடிந்தது என்று பேவன் ஒப்புக்கொண்டார். பிற்காலத்தில் ‘தட்சர்’ தனது எதிர்புரட்சி நடவடிக்கைகளின் போது ‘NHS’இன் கணிசமான பகுதிகளை தனியார்மயமாக்கி, அத்திட்டத்தை பலவீனப்படுத்த இந்த ஒப்புகையை ஒரு கருவியாக பயன்படுத்திக்கொண்டார். அவரது அழிவுகரமான முன்னெடுப்புகளை மேலும் தொடர்ந்த ப்ளேயர், கேமரூன், மற்றும் மே தேசிய சுகாதார சேவையை மேலும் பலவீனப்படுத்தினர்.

இன்றைய நெருக்கடியில் இவை யாவும் அப்பட்டமாக வெளிப்படுகிறது. அவசரகால படுக்கைகள், சுவாச கருவிகள் மற்றும் இதர உயிர் காக்கும் உபகரணங்களுக்கான கடும் தட்டுப்பாட்டிற்கு நேரடி காரணம் இவையே. சிக்கன நடவடிக்கைகளால் பேரழிவுக்குள்ளான NHS ல், 1987-88 துவங்கி 2018-19 வரை பொதுப்பிரிவிலும், தீவிர சிகிச்சை பிரிவிலும் 44% படுக்கைகளை இழந்தது. ”20 ஆண்டுகாலமாக தனியார் மருத்துவமனைகளுக்கான சந்தை விரிவடைந்ததை காரணம் காட்டி, சுகாதார சேவைகளுக்கு போதிய முதலீட்டை ஒதுக்காததை அரசு நியாயப்படுத்தி வந்தது … ’இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை’ அமைப்புடனான ஒப்பந்தமானது உண்மையில் பிரிட்டனின் தனியார் மருத்துவ துறையையும், அதன் கட்டிட உரிமையாளர்களான பெரும் வணிக நிறுவனங்களையும் மீட்டெடுப்பதற்கான திட்டமே” என்று ஒரு சுகதார ஆராய்ச்சியாளர் பைனான்ஸியல் டைம்ஸ் என்ற இதழில் எழுதிய தனது விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தார். மருத்துவமனை பிரிவுகளில் கூடி வரும் பெரும் கூட்ட நெரிசல்களின் வாயிலாக. சுகாதார பணியாளர்களையும், நோயாளிகளையும் மரண குழியில் தள்ளக்கூடிய பேராபத்தை தற்போது பிரிட்டன் மக்கள் விலையாக தருகின்றனர்.

 ‘முன்னுக்கு வரும் சோஷலிச சமூகம்’

தேசிய சுகாதார சேவையை “சோஷலிச சுகாதாரம்” என்று விமர்சித்து கடுமையாக எதிர்க்கும் ட்ரம்பின் ஆட்சியின் கீழ் அமெரிக்காவில் ஒரு பொது சுகாதார அமைப்பு கூட இல்லை. இது தனியார் மருத்துவ கட்டணங்களை சுமக்க முடியாத ஏழை அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தை பெரும் ஆபத்துக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த அக்கிரமமான சுகாதார அமைப்பிற்கும், ட்ரம்ப் போன்ற அதன் ஆதரவாளர்களுக்கும் எதிராக கிளர்ச்சிகள் கூட துவங்க இதன் மூலம் வழிவகை ஏற்பட்டுள்ளது. இந்நெருக்கடியை சமாளிக்க உடனடி அரசு தலையீட்டை குறித்த வினாக்களை எதிர் நோக்கியிருக்கும் முதலாளித்துவத்தின் போதாமைகளையும் தனிச்சொத்துடமையின் போதாமைகளையும் இது முழுவதுமாக வெளிக்காட்டியிருக்கிறது.

நொடிந்து கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்களை அரசுடமையின் மூலம் தலையிட்டு, காப்பாற்றும் நிர்பந்தத்துக்கு பூர்ஷ்வா அரசு தள்ளப்படும் இந்நிலை “படையெடுத்துவரும் சோஷலிச சமூகம்” என்று ஏங்கெல்ஸால் விவரிக்கப்பட்டது(the invading socialistic society). இதற்கு மேல் இயங்குவதற்கான திறன் முதலாளித்துவத்திடம் இல்லை என்பதோடு, முதலாளித்துவ அரசு அதனை அரசுடமையின் மூலம் காப்பாற்ற வேண்டியிருந்தது. இது தொழிற்துறையின் பெரும்பான்மை பகுதியை அரசுடமையாக்குவது தொடர்பான கேள்வியாக உருவெடுக்கிறது. முறையான சோஷலிச திட்டமிடல் குறித்த யோசனையும் முன்வைக்கப்படுகிறது.

விரக்தியான– குறிப்பாக ஏழைகள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் – பொருளாதார சூழ்நிலையின் பின்னணியில், சில அசாதாரணமான நிகழ்வுகள் அமெரிக்காவில் அரங்கேறி வருகின்றன. டொனால்ட் ட்ரம்புக்கும –  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் போதிய முனைப்பு காட்டவில்லை என அவர் மீது குற்றம் சுமத்தும் விமர்சகர்களுக்கும் இடையில் அதிகரித்து வரும் கடுமையான யுத்தத்திற்கு, ஒரு வீரியமற்ற சிறு அவசர சட்டம் கூட, எவ்வாறு மையப்புள்ளியாகியிருக்கிறது என்பதை பைனான்ஸியல் டைம்ஸ் இதழ் விவரிக்கிறது. பாதுகாப்பு முகக்கவசங்கள், மருத்துவமனை சுவாசக்கருவிகளின் விநியோகம் மிகவும் குறைந்துவிட்டது. தொற்றுநோயை எதிர்த்துப்போரிட உதவுமாறு பெருநிறுவனங்களை நிர்பந்திக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பொருட்களை உற்பத்தி செய்து தருவதற்கு நிறுவனங்களை கட்டாயப்படுத்தும் “இராணுவ உற்பத்தி சட்டத்தை” பயன்படுத்த ட்ரம்ப் தயங்குவதை ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, அவரது குடியரசு கட்சியை சேர்ந்த சிலரும் விமர்சித்துள்ளனர். அவர் தற்போது “ஜெனரல் மோட்டார்ஸ்” (GM) நிறுவனத்தின் மீது இச்சட்டத்தை பயன்படுத்தும் நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளார். ”கோரிக்கைக்கு செவிமடுக்கவும், மிகவும் அவசரமான தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், ஏனைய நிறுவனங்களோடு ஒத்திசைவாக செயல்படவும் தனியார் துறைக்கு இருக்கும் இயலாமையை குறித்து எச்சரித்தும், இச்சட்டத்தை உடனடியாக பயன்படுத்தக் கோரியும் நூற்றுக்கணக்கான தேசிய பாதுகாப்பு வல்லுநர்கள் அதிபருக்கு கடிதம் எழுதினர். இதனை அடுத்து, அமெரிக்க தொழிற்துறை அமைப்புகளின் காங்கிரஸ் மற்றும் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் “N95 முகக்கவசங்கள் மற்றும் சுவாசக் கருவிகளின் உற்பத்தியை பெருக்க மேற்கொள்ளப்படும் தற்போதைய அரைகுறை முயற்சிகள் யாவும் இதுவரை எடுபடவில்லை என்பதோடு, இனியும் எடுபடாது” என்று அப்பட்டமாக கூறியதன் மூலம் அமெரிக்க தொழிற்சங்கங்களும் தமது குரலை பதிவுசெய்துள்ளன.

ஜனநாய கட்சியில் அதிபர் பதவிக்கான முன்னணி போட்டியாளராக திகழும் ஜோ பைடென், நியூயார்க் மாகாண கவர்னரான ஆன்ட்ரியூ கோமா ஆகியோரிடமிருந்தும் இம்மாதிரியான எச்சரிக்கைகள் வெளிவந்ததை அடுத்து அவர்களின் தலையீடு ஆரம்பமானது. ”அமெரிக்க வர்த்தகத்தின் பிரிவுகளை அரசுடமையாக்க தனக்கு விருப்பமில்லாததால்” ட்ரம்ப் இதனை செய்ய மறுத்தார். அவர் தற்போது “ஒரு போர்க்கால அதிபர்” என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் போதிலும், ஒரு போர்க்கால சூழ்நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாக சட்டப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளவற்றை கையிலெடுக்க மறுக்கின்றார்.

கொரோனா வைரஸ் கதவடைப்பால் பொருளாதாரத்திற்கு தேசிய அளவில் ஏற்பட்டுள்ள சேதத்தை எடுத்துரைக்கும் வண்ணம் கடந்த வாரம் 30லட்சம் அமெரிக்கர்கள் வேலையிழப்பு நிவாரணத்துக்கு விண்ணப்பித்த போதும், பொருளாதாரத்தின் மீதான அதே வரட்டு சித்தாந்த பிடிவாதமே வெளிப்பட்டது. வேலையிழப்பு நிவாரணத்துக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை முந்தைய வாரத்தின் 2,82,000லிருந்து 33லட்சம் என்ற அளவுக்கு உயர்ந்தது: “அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட 17லட்சத்தை விட இருமடங்கு பெரிதான இந்த எண்ணிக்கை, மாகாணங்களிலும் நகரங்களிலும் பொதுமக்கள் கூடுவதற்கும், சில இடங்களில் வீட்டை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரம் நிறைவடைவதற்குள் வேலையில்லாத் திண்டாட்டத்தின் தள்ளாட வைக்கும் அளவை காட்டுகிறது.” 1967இல் அரசு முதன் முதலில் வேலை வாய்ப்பின்மை குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட துவங்கியதிலிருந்து கடந்தவாரம் வரை ஏற்பட்ட வேலையிழப்புகளில் உச்சகட்டம் இதுவே. “இந்த எண்ணிக்கையை புரிந்துக்கொள்வது சாத்தியமே இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் உருவாகியிருக்கும் வேலைகளை நாம் முழுவதுமாக இழந்துவிட்டோம்… இது மக்கள் படும் துயரங்களின் குறியீடு என்பதை நாம் அவசியம் நினைவில் கொண்டாக வேண்டும்” என்று தொழிலாளர் பொருளியலாளர் ஒருவர் குறிப்பிட்டார். அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி ஏற்கனவே துவங்கியிருக்க வாய்ப்புள்ளது என்று மத்திய வங்கியின் தலைவர் ஜே பவல் கூறுகின்றார் என்பது மட்டுமின்றி, இனிவரும் வாரங்களில் 1.5கோடியிலிருந்து 2கோடி பேர் வரை வேலையிழக்கக் கூடும் என்று ஆக்ஸ்போர்ட் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். அலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகமது எல்-எரியன் “நாம் ஒரு சகாப்தத்தை தீர்மானிக்கும் தருணத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம்” என்கிறார்.

”இப்போர்க்கால அதிபர்” (வியட்னாமில் போரிட இராணுவம் அழைத்தபோது ஓடி ஒளிந்த மாவீரர்!) இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தலில் தான் எதிர்ப்பார்த்ததை விட அதிக எதிர்ப்பை சந்திக்க கூடும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு தேடி வரும் காசோலை, 4 மாதம் கூடுதலான வேலையிழப்பு நிவாரணம் உள்ளிட்ட $2லட்சம் கோடி திட்டம் தேர்தலுக்கு கைக்கொடுக்கும் என்று எதிர்ப்பார்த்தார். எதிர்கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் அரசியல் பலவீனத்தாலும், – குறிப்பாக, சர்வதேச தொழிலாளர் கமிட்டி  கூறுவதைப் போல், 2கோடியே 20 லட்சம் பேர் படிப்படியாக வேலையிழந்த 2008ஆம் ஆண்டு நெருக்கடியை காட்டிலும், தற்போதைய நெருக்கடியில் 2.5கோடி பேர் அதிவேகமாக வேலையிழக்க வாய்ப்புள்ளதாலும் – ட்ரம்பின் நெருக்கடி நிவாரணம் அவருக்கு தேர்தல் அனுகூலத்தையும் அளிக்க வாய்ப்புண்டு.

 ஐரோப்பிய ஒன்றியத்தின் தேசிய முரண்கள்:

நெருக்கடியின் கசையடியால், பங்குதாரர்கள் என்று அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நிலவும் தேசிய முரண்பாடுகள் கூர்மையாகியிருக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் “தன்னலத்தோடு நடந்துக்கொள்வதாக” ஐரோப்பிய கமிஷனின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் குற்றம் சாட்டியுள்ளார். தொற்றுநோயை எதிர்நோக்கியுள்ள தருணத்தில், அந்நாடுகள் வர்த்தக தடைகளையும் எல்லை கட்டுப்பாடுகளையும் விதிப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார். குறிப்பாக, மருத்துவ பொருட்களை விநியோகிக்கும் படி கோரிய இத்தாலிக்கு பதிலளிக்காததையும், அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருக்கும் தடைகளையும் சுட்டிக்காட்டும் அவர், “ஒருவருக்காக அனைவரும் என்ற உத்வேகம் ஐரோப்பாவுக்கு உண்மையாகவே தேவைப்பட்ட போது, “எனக்கு மட்டும்” என்ற நிலையையே துவக்கத்தில் பெரும்பாலான நாடுகள் எடுத்தன… தாங்கள் இளைப்பாறும் நிழலை பகிர்ந்துக்கொள்ள மறுத்தன. தங்களது ஒத்துழைப்பின்மையின் பின்விளைவை கூடிய விரைவிலேயே அந்நாடுகள் உணர்ந்தன.” என்று குறிப்பிடுகிறார்.  ”மருத்துவ உபகரணங்களை இதர ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்திய ஜெர்மனியையும்…. வெளிநாட்டவர் கண்டிப்பாக உள்ளே நுழையக்கூடாது என்று தடை செய்து தனது எல்லை நெடுகே ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்துக்கு நீண்ட போக்குவரத்து நெரிசலை உருவாக்கி பலரது கண்டனங்களுக்கு ஆளான போலந்து அரசையும்” அவர் குறிப்பாக சுட்டிக்காட்டுகிறார்.

அதேவேளை ஐரோப்பிய மைய வங்கியின் தலைவரான கிறிஸ்டின் லகார்ட் “யூரோ நாணயத்தின் மீது நமக்கு இருக்க வேண்டிய அர்ப்பணிப்புக்கு எல்லையே கிடையாது” என்கின்றார். தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டி (CWI) தொடர்ந்து வாதிட்டு வந்த படி, ஒரு கடும் நெருக்கடி – அதிலும் தற்போதைய நெருக்கடி ஒரு பேரழிவு – ஏற்படும் பட்சத்தில் யூரோவை சில நாடுகள் கைவிடுவதற்கு சாத்தியமில்லாமல் இல்லை. உதாரணத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இத்தாலியை பிணைத்து வைத்திருப்பது எப்போது வேண்டுமானாலும் உடைய காத்திருக்கும் ஒரு பலவீனமான பணவியல் சங்கிலி மட்டுமே. ஐரோப்பிய ஒன்றியம் என்பது சமூக, பொருளாதார நெருக்கடிகள் தீவிரமடையும் போது உடைந்து சிதறக்கூடிய, லிபரல்    நாடுகளின் தன்னார்வ ஒன்றியமாகவே இன்னும் நீடிக்கிறது. இவ்வாறாக, பிராந்திய கூட்டமைப்புகளுக்கு இடையேயும், அக்கூட்டமைப்புகளின் உறுப்பு நாடுகளுக்கிடையேயும் ஏற்படக்கூடிய முரண்பாடுகள், இனி வரும் காலங்களில் முக்கிய அம்சமாக இருக்கப்போகிறது.

நோய்த்தொற்று நெருக்கடியின் ஆரம்ப நிலையில் கூட அடுத்து நடக்கவிருப்பதை குறித்த தெளிவான சிந்தனை முதலாளித்துவத்திடமும் அதன் அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்களிடமும் கிடையாது. முதலாளித்துவ உலகில் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் குவிந்துவரும் ஆபத்தான பிரச்சனைகளுக்கு எளிமையான குறுகிய-கால தீர்வுகள் ஏதும் இல்லை என்ற ஒரு மங்கலான புரிதல் மட்டும் அவர்களுக்கு உள்ளது. பொருளாதார முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிய தேவைபட்டால், இதற்கு முன் யாரும் மேற்கொண்டிராத நடவடிக்கைகளை கூட எடுக்க தயாராகவே உள்ளனர். சாத்தியமற்ற நடவடிக்கை என்று நேற்றுவரை கண்டித்து வந்த யோசனைகளை கூட பொருளாதார பேரழிவுக்கான குறுகிய கால தீர்வாக தற்போது தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர். “ஹெலிகாப்டர் பணம்” – பண நிவாரணம் அளிப்பது என்பது பிரிட்டனில் ஓரளவுக்கு தற்போதைய டோரி அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையாக உள்ளது. சில மாதங்களுக்கு முன், இதே திட்டத்தை ஜெர்மி கார்பினும், ஜான் மாக்டொன்னெலும் முன்மொழிந்த போது, சாத்தியமற்ற திட்டம் என்று கண்டிக்கப்பட்டது. நலத்திட்டங்களுக்கு செலவழிக்கும் அளவுக்கு, ”பணம் காய்க்கும் மரம் ஏதும் இந்நாட்டில் இல்லை” என்று ஒருகாலத்தில் டோரிக்கள் கொக்கரித்தனர். தற்போது, தங்களது ஆட்சி அமைப்பை காப்பாற்றிக் கொள்ள தேவைப்படும் போது மட்டும் பணம் காய்க்கும் காட்டையே கண்டுபிடித்துள்ளனர்.

பொருளாதார சரிவு மட்டுமல்ல, பொருளாதார மந்தநிலையும் ஏற்படுவதற்கான வாய்ப்பை கண்டு அஞ்சும் இவர்கள், பொருளாதார வீழ்ச்சியை நிறுத்த அதிதீவிர நடவடிக்கைகளை தற்போது பரிசீலித்து வருகின்றனர். தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டிக்கு (CWI) அடுத்த படியாக, 2007-08 நெருக்கடி வரப்போவதை ஆதாரப் பூர்வமாக கணித்த முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான நூரியல் ரூபினி போன்றவர்கள் இப்போது இந்நெருக்கடி இன்னும் தீவிரமானதாகவும், மிக நீண்டதாகவும், குறிப்பாக ஒரு பொருளாதார மந்தநிலையாக மாறக்கூடும் என்றும் கணிக்கின்றனர். இந்நெருக்கடி உடனடியாக மீளக்கூடிய ‘V’ வடிவில் அல்லாமல், பெரும்பாலும் ‘L’ வடிவிலோ, அல்லது இன்னும் ‘I’ வடிவிலோ கூட இருக்கும், அதாவது, எப்போது, எப்படி மீளப்போகின்றது என்று தெரியாத அளவுக்கு முற்றிலும் சீர்குலைந்ததாக இருக்கும் என்று அவர் வாதிடுகிறார். இது ஒரு தொடர்ச்சியான நீண்டகால தேக்கநிலையை தொடர்ந்து நிகழப்போகும் வீழ்ச்சி, அதாவது, மந்தநிலையாகும். கார்டியன் (லண்டன்) இதழின் பொருளாதார ஆசிரியர் லாரி எலியட் கூட நிலைமை பெரும்பாலும் இவ்வாறு தான் இருக்கப்போகிறது என்று வாதிடுகிறார்.

1930களின் உலகப் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு 90 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஒரு விமர்சகர் சுட்டிக்காட்டிய படி, வெவ்வேறு தன்மைகள் கொண்ட பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் இதுவரை வந்து போயிருந்தாலும், 1929இல் அமெரிக்காவில் துவங்கி உலகம் முழுவதும் பரவிய ஒரே ஒரு பொருளாதார பெருமந்த நிலையை மட்டுமே இந்த உலகம் கண்டிருக்கிறது. ஆனால், இதன் சிறப்பம்சம் வெறும் பொருளாதார தேக்க நிலை மட்டுமல்ல, மாறாக, வலதுசாரி தீவிரவாத இயக்கங்களும், பாசிஸ்டுகளும் அதிகாரங்களை கைப்பற்ற வாய்ப்பளித்த எதிர்மறை விளைவுகளையும், அதற்கு முன்னர், தொழிலாளர் இயக்கமும், அமைப்பாக திரண்ட தொழிலாளர்களும் நடத்திய வெகுஜன புரட்சிகர இயக்கங்களும், அதிகாரத்தை கைப்பற்ற அந்த இயக்கங்களுக்கு வாய்ப்பளித்த நிகழ்வுகளையும் உள்ளடக்கிய உலகளாவிய அரசியல் மாற்றங்களும் – பொருளாதார தேக்கநிலை நிகழ்வுகளின் ஒரு பகுதியே ஆகும்.

 1930களின் பெருமந்தம்

அசுர வேகத்தில் உருவாகிய பொருளாதார நெருக்கடிகள், 1930களில் உழைக்கும் வர்க்கத்தின் பெரும்பகுதியை, ஆரம்பத்தில் ஸ்தம்பிக்கச் செய்தன. அப்போதிருந்த வெகுஜன எதிர்ப்பு இயக்கங்கள் வளரத் துவங்கிய போது, அவர்களை சோர்வடைய செய்த பெருமந்தம், பல தொழிலாளர்களை போராட்ட பாதைக்கு செல்ல விடாமல் தடுத்தது. பொருளாதாரம் கணிசமான அளவுக்கு மீண்ட பிறகே – குறிப்பாக, 1934-36இல் அமெரிக்காவில் – தொழிலாளர் இயக்கம் தானாக எழுந்து முதலாளிகளுக்கும், ஆளும் வர்க்கத்துக்கும் எதிரான போராட்டத்தில் இணைந்தது. அமெரிக்காவில் 1933 முதல் 1936 வரையிலான காலம், உழைக்கும் வர்க்கத்தின், குறிப்பாக, சுரங்கத்துறை உள்ளிட்ட பாரம்பரிய தொழிற்துறையின் போராளிகளோடு சேர்த்து, எஃகு மற்றும் மோட்டார் வாகன காலத்தின் புதிய தொழிற்துறை தொழிலாளர்களையும் உள்ளடக்கிய ஒரு அசுரத்தனமான தொழிற்துறை மற்றும் அரசியல் விழிப்புணர்வால் குறிக்கப்படுகிறது.

அதே சமயம் அழியும் தருவாயில் இருந்த பழைய தொழிற்சங்கங்கள் புத்துயிர் பெற்றன. முப்பது லட்சம் தொழிலாளர்களை, பெரும்பாலும் புதிய தொழிற்துறைகளிலிருந்து தொழிற்சங்கங்களில் இணைத்த பெரிய அளவிலான ஆள்சேர்ப்பை மேற்கொள்ள, ‘புதிய ஒப்பந்தத்தை’ தொழிற்சங்க தலைவர்கள் ரூஸ்வெல்டின் திரைமறைவு ஆதரவோடு பயன்படுத்தினர். அமெரிக்காவின் ஐக்கிய சுரங்க தொழிலாளர்கள் அமைப்பின் தலைவர் ஜான் லூவிஸ் – “சனாதிபதி நீங்கள் தொழிற்சங்கத்தில் சேர்வதை  விரும்புகிறார்” என்று சற்று உண்மை தன்மையற்ற துண்டறிக்கைகளை லட்சக்கணக்கில் தயாரித்தார். தொழிற்சங்கங்களில் மிகப்பெரிய அளவிலான ஆள்சேர்ப்புக்கு இது உதவியது. மேலும் அமெரிக்காவில், ஃபாரெல் டாப்ஸ் எழுதிய “டீம்ஸ்டர் கிளர்ச்சி” என்ற நூலில் துவங்கி, தொடர்ச்சியான பல புத்தகங்களில் இடம்பிடித்த டீம்ஸ்டர் சங்கத்திலும், குறிப்பாக, மோட்டார் வாகன உற்பத்தி துறையிலும் ட்ராஸ்கியவாதிகள் ஆற்றிய பங்கு தற்செயலானதல்ல. இக்கட்டத்தில் அமெரிக்காவின் ‘சோஷலிச தொழிலாளர் கட்சி’ டிராஸ்கியின் அரசியல் செல்வாக்கின் கீழ் தான் உறுதியாக இருந்தது.

வரலாறு இதே வடிவில் மீண்டும் திரும்புவதற்கோ அல்லது 1930களில் புதிய சங்கங்களை உருவாக்கிய அதே பாதையில் செல்வதற்கோ வாய்ப்பில்லை. எவ்வாறாயினும், அமெரிக்காவில் புதிய சங்கங்கள் உருவாகி வளர முடியாத அளவுக்கு, தொழிற்சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஆனால், ஏற்கனவே இருக்கும் தொழிற்சங்கங்களில் நிகழும் மோதல்களின் வாயிலாக, போர்க்குணம் மிக்க புதிய தலைமை உருவாகி, தற்போதைய தொழிற்சங்கங்களின் தன்மையை மாற்றி புத்தாக்கம் புனையவும், புதிய போராளிகளின் மூலம் ஜனநாயகமயமாகவும் வாய்ப்புண்டு. இதன் மூலம் புதிய சங்கங்கள் உருவாகவும், நிகழ்வுகளின் தாக்கத்தால் அவற்றில் உறுப்பினர்களின் எண்ணிக்கை பெருகவும் வாய்ப்புள்ளது. தொழிற்சங்க பணியை கைவிட்டதாலும், அடையாள அரசியலுக்கு ஆட்பட்டதாலும் தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியிலிருந்து (CWI) அண்மையில் பிரிந்து சென்றவர்கள் எவரும் தற்போதைய சூழலில் எவ்வித பங்கையும் வகிக்க வாய்ப்பில்லை. தற்போது அனைவரும் காணும் ட்ரம்பின் கையாளாகாத தனத்தால் உருவாகும் முதலாளித்துவ பேரடியால் உறக்கத்திலிருந்து விழித்தெழப்போகும் அமெரிக்க பாட்டாளி வர்க்கத்தின் பெரும்பகுதியை எட்ட மூடியாமல் போவதை அவர்கள் உணரப்போகின்றனர்.

லாரி எலியட் பெரும்பாலும் பிரிட்டன் குறித்து மட்டுமே எழுதியிருப்பினும், அவரது ஆய்வுகள் இதர நாடுகளின் நிலைமைகளுக்கும், குறிப்பாக, அமெரிக்காவுக்கும் ஒத்துப்போகின்றன. அழிவை தவிர்க்க முடியாது… என்று கூறும் அவர், “மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டதை போன்ற ஒரு நிலையே இது. நாடுகள் சரிந்து வருவதால், உலகப்பொருளாதாரம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது…. 2020ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பிரிட்டன் பொருளாதாரமும் 15% சுருங்கப்போகிறது. இது வெறும் பொருளாதார சரிவல்ல, தற்கால வரலாற்றின் பொருளாதார பெருமந்தம் உள்ளிட்ட அனைத்தையும் கடந்த ஒரு மாபெரும் வீழ்ச்சி.” என்கிறார். அரசின் செலவீனங்களின் மீதான தனது கண்டிப்பான கட்டுப்பாடுகளை ஜெர்மனி அடுத்த பத்தாண்டுகளுக்கு தளர்த்தியிருப்பதே, ஐரோப்பிய அரசாங்கங்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இவ்வீழ்ச்சி மற்றும் குழப்பத்தின் தீவிரத்தன்மையை குறிக்கிறது. இதற்கு முன் தீவிரமான கேள்விகளுக்கு உள்ளாகியிருந்த நிதியியல் ஸ்திரத்தன்மை, தற்போது ஜெர்மனியில் கூட பின் வாசல் வழியாக பறந்து சென்றுவிட்டது.

 நவ-காலனிய உலகை நெருங்கிவரும் பேரழிவு:

தொடர்ச்சியான தேசிய பேரிடர்களை சந்தித்துவரும் நவகாலனிய உலகில் நிலைமை இன்னும் தீவிரமானதாகவும், அழிவுகரமானதாகவும் உள்ளது. இந்நெருக்கடியை ”தேசிய பேரிடராக” ஏற்கனவே அறிவித்துவிட்ட தென் ஆபிரிக்க அரசு, ஆப்பிரிக்க நகரங்களில் எவ்வித பிரச்சனை எழுந்தாலும் சமாளிக்கும் விதமாக இராணுவத்தை நிறுத்தி வைத்து 21 நாட்கள் கதவடைப்பை அனுசரித்து வருகிறது. சமூக இடைவெளியும், கைகழுவும் பழக்கமும் வைரஸ் தொற்றை தடுக்கக்கூடிய பாராட்டத்தக்க செயல்கள் தான் என்றாலும், எங்கு பார்த்தாலும், குறிப்பாக, சிறு கிராமங்களிலும், முக்கிய நகரங்களிலும் பெரும் கூட்ட நெரிசலாக காட்சியளிக்கும் நவகாலனிய உலகின் பெரும் பகுதிகளில் இந்த அத்தியாவசியமான செயல்கள் கற்பனைக்கும் எட்டாத தொலைவில் உள்ளன. உதாரணத்துக்கு, நைஜீரியாவின் லாகோஸ் நகரில் 2கோடியே 10லட்சம் மக்கள் நெரிசல் மிகுந்த விவரிக்க முடியாத சூழலில் வாழ்கின்றனர். ஒருமுறை கை கழுவுவது கூட ஆடம்பரமாக கருதப்படும் இது போன்ற இடங்களில் வைரஸ் பரவுவதை தடுக்க, அடிக்கடி கைக்கழுவுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் அறிவுரைகளை பின்பற்றுவது சாத்தியமே இல்லை.

எண்ணெய் உள்ளிட்ட இதர மூலப்பொருட்களின் விலை வீழ்ச்சியால் ஏற்றுமதி அடிவாங்கியிருப்பதாலும், கடன் சார்ந்த இடர்பாடுகள் வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தி வருவதாலும் உலகின் வறிய நாடுகளின் மீது மேலும் புதிய கடன் நெருக்கடிகள் குவிவதற்கான அபாயமும் உருவாகியுள்ளது. சரக்குகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன: 2020 துவக்கம் முதல் தாமிரம் 21%, எண்ணெய் 61%, காபி 15% வீழ்ச்சியடைந்துள்ளன. பொருளாதாரத்தின் மீது வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை தடுத்து நிறுத்த உடனடியாக செயலில் இறங்கும்படி ஏழை நாடுகள் கோரி வருகின்றன. பலவீனமான பொது சுகாதார அமைப்புகளும், சரக்கு ஏற்றுமதி, சுற்றுலா, வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் அனுப்பும் பணம் ஆகியவற்றை மட்டுமே சார்ந்திருக்கும் தன்மையுமே, இந்நோய் தொற்றால் கடுமையான பாதிப்பிற்குள்ளாகும் ஆப்பிரிக்க நாடுகள் சந்திக்கப் போகும் பிரச்சனைகளை மேலும் தீவிரமாக்கப் போவதற்கான அறிகுறிகளாகும். கடனை திரும்ப செலுத்துவதற்கான அவகாசத்தை இந்நாடுகளுக்கு நீட்டிக்குமாறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆயினும், தொற்று நோயால் ஏற்கனவே தீவிர பாதிப்புக்குள்ளாகி இருக்கும் இந்த ஏழை நாடுகள் பெற்றிருந்த கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும், உலகின் மிக வறிய கண்டமான ஆப்பிரிக்காவில் 54 நாடுகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கின்றன.

நொடிந்துப் போன தொழிற்சாலைகளை அரசு கையகப்படுத்துவதற்கு பேராதரவு எழக்கூடிய நவகாலனிய உலகில் இத்தகைய செயல்பாட்டின் துவக்கத்தில் நாம் இருக்கின்றோம். ஆனால், ஆப்பிரிக்காவுக்கும், இதர ஏழை நாடுகளுக்கும் “மார்ஷல் திட்டத்தை’ போன்ற ஒரு புதிய திட்டம் வருவதற்கு சாத்தியமில்லை. முதலாளித்துவ ஒட்டுண்ணிகள் – வேறுவகையில் சொல்வதானால், தனியார் முதலீட்டாளர்கள் – அழிவுகரமான விலை குறைப்பின் மூலம் புதிய சந்தைகளிலிருந்து $8300கோடியை திரும்ப எடுத்துக்கொண்டனர். தேசிய அளவில் பொருளாதாரத்தின் பெரும் பிரிவுகளையும், தொழிற்சாலைகளையும் அரசுடமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தற்போது எழுப்பியாக வேண்டும். ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவுக்கான ஜனநாயக சோஷலிச கூட்டமைப்பை உருவாக்கும் கோரிக்கையாக இது உருவெடுக்க வேண்டும்.

 பெருமளவு அரசுடமை நிறுவனங்கள் உருவாக்கியுள்ள அல்லது உருவாக்கும் செயல்பாட்டில் உள்ள சமூகங்கள் நோய் தொற்றை கையாளுவதில் வழக்கமான முதலாளித்துவ நாடுகளை காட்டிலும் மிகுந்த திறனுடன் செயல்பட்டு வருவது இங்கு கவனிக்கப் பட வேண்டியதாகும். உதாரணமாக, முன்னாள் ஸ்டாலினிய நாடான வியட்னாம் அதன் அண்டை நாடான தாய்லாந்தை காட்டிலும் நோய் தொற்றை திறனுடன் கையாண்டு வருகிறது. நிலைமையை திறனற்ற வகையில் கையாண்ட தாய்லாந்து, வெளிநாட்டவர்களை தவிக்கவிட்டதோடு, கையில் பணமில்லாத இளைஞர்களிடமும், சுற்றுலா பயணிகளிடமும் – பணையத் தொகையை போல் – தாறுமாறான கட்டணங்களை அவ்வபோது பறித்து வருகிறது. இந்தியாவின் மோடி அரசை போன்ற, ஆசிய முதலாளித்துவ நாடுகளை காட்டிலும் தவிர்க்கக் கூடிய பலிகளை தடுத்து நோய்த்தொற்றை சீனா திறம்பட கையாண்டதும் தற்செயலானதல்ல. சோஷலிசம் பத்திரிக்கையிலும், தொழிலாளர் அகிலத்துக்கான கமிட்டியின் (CWI) socialistworld.net வலைதளத்திலும் வெளிவந்த செய்திகளின் படி, சமீபத்தில் மோடி அரசாங்கம் வகுப்புவாத மோதல்களை தூண்டிவிட்டதோடு, குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்களும் அப்பாவி இஸ்லாமியர்களும் கொலை செய்யப்பட்டனர். தற்போது மோடியின் தலைமையில் நாடு முழுக்க கதவடைப்பு நடந்து வருகிறது. நீண்டகாலமாக இந்திய மக்கள் அனுபவித்து வரும் சோதனைகளுக்கும் உபத்திரங்களுக்கும் மேலும் வலு சேர்க்கும் விதமாகவும், ஏற்கனவே எரிந்துக் கொண்டிருக்கும் வெகுஜன எதிர்ப்புக்கு எண்ணெய் ஊற்றும் விதமாகவும் கடுமையான உணவு தட்டுப்பாடுகளும், துன்பங்களும் உருவாகக் கூடும். கிராமங்களிலிருந்து பிழைப்பு தேடி வந்த தொழிலாளர்களை மிருகத்தனமாக நடத்துவதும், உணவோ, வருமானமோ அளிக்காமல் லட்சக்கணக்கானோரை நகரங்களை விட்டு வெளியேற நிர்பந்திப்பதும் கலவரங்களுக்கும், கடும் ஒடுக்குமுறைகளுக்கும் வழிவகுத்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் மிகப்பெரிய அளவில் மக்கள் இடம் பெயர்வது இதுவே முதல் முறை. இந்நெருக்கடியை சமாளிக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவும் ஒரு கட்டத்தில் மோடிக்கான ஆதரவு தேய்ந்துப் போக வழிவகுக்கும். முதலாளிகள் மற்றும் நிலக்கிழார்களின் ஆதிக்கம் மிகுந்த, திறமையற்ற வன்முறை அரசாங்கங்களை எதிர்த்து நவகாலனிய உலகம் முழுவதும் உருவாகி வருவதை போன்றே, இந்தியாவிலும் ஒரு மிகப்பெரிய கலகம் அடிமட்ட சமூகத்திலிருந்து உருவாக காத்திருக்கிறது.

 வரலாற்றின் கலக்கமான காலங்கள்:

 உலகம் முழுவதும் ஏதோ ஒரு வகையில் தொற்று நோயால் நாசமாகிக் கொண்டிருக்கும் வேளையில், நடந்து கொண்டிருக்கும் ஆய்வுகள் அனைத்தும் மாபெரும் துன்பகரமான பின்விளைவுகளை கொண்ட அதி தீவிர கொந்தளிப்பான ஒரு வரலாற்று கட்டத்தில் உலகம் நுழைகின்றது என்ற முடிவையே தருகின்றன. அதே சமயம், அரசு மற்றும் உற்பத்தி சக்திகளின் மீதான முதலாளித்துவ தனிச்சொத்துடமை கட்டுப்பாட்டின் மோசமான எதிர்வினை தன்மையையும், திறமையற்ற, கையாளாகாத தன்மையையும் இது அடிக்கோடிட்டு காட்டப்போகிறது. திறந்த பொருளாதார சந்தை முறையே உற்பத்தியையும், விநியோகத்தையும் ஒருங்கிணைக்க சிறந்த வழி என்ற சிந்தனை ஏற்கனவே சித்தாந்த பேரடிக்கு உள்ளாகியிருக்கிறது. இனி வரும் காலத்தில் உழைக்கும் வர்க்கமும் அதன் ஸ்தாபனங்களுமே சமூகத்தை ஜனநாயக கட்டுப்பாட்டுடன் பொருளாதாரத்தின் ஒவ்வொரு நிலைகளையும் நிர்வகிக்கும் சோஷலிச வழியில் சமூகத்தை மறுஒழுங்கமைப்பு செய்வது குறித்த பிரச்சனையை கையிலெடுக்கப் போகின்றன.

 அதே சமயம், முன்னேறிய நாடுகள் என்று சொல்லப்படும் தொழிற்துறை நாடுகளிலும், நவகாலனிய உலகில் கொடூரமாக ஒடுக்கப்பட்டு சுரண்டலுக்கு உள்ளாகும் கண்டங்களிலும், நாடுகளிலும் சேர்த்து, உலகின் அனைத்து பகுதிகளிலும் உழைக்கும் வர்க்கத்தின் தன்னிச்சையான இயக்கங்களும், வர்க்கப் போருக்கான வேலைத்திட்டங்களும் கோடிக்கணக்கான தொழிலாளர்களால் கையிலெடுக்கப்பட போகின்றன. சமீபகாலம் வரை, பிரேசிலில் போல்சனாரோ, அமெரிக்கவில் ட்ரம்ப் மற்றும் இந்தியாவின் மோடி போன்ற எதிர்வினை கொடுங்கோலர்களால் நிலைமையை சமாளிக்க முடிவதை போல் தெரிந்தது. ”மக்களின் உயிர்களை காப்பாற்ற இறுதி நடவடிக்கையாக நாட்டின் இரண்டு பெரிய நகரங்களில் கதவடைப்பை அமுல்படுத்தி, பெரிய அளவிலான தனிமைப்படுத்தல் நடவடிக்கையை மேற்கொண்டு நோய் தடுப்பு முயற்சியில் இறங்கிய போது, அதனை உதாசினப்படுத்திய ட்ரம்ப், ’இந்நோய் தொற்று தனக்கு ஏற்பட்டால் தனக்கு ஒன்றும் ஆகிவிடாது என்று பெருமிதப்பட்டார், போல்சனாரோவும் அவரது கருத்தை எதிரொளித்தார்.” (Guardian). தேசத்துக்கு அவர் ஆற்றிய ஐந்து நிமிட உரையில் பயத்தையும் பதற்றத்தையும் தணிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும், ஆகவே, சில மாகாணங்களில் விதிக்கப்பட்டுள்ள கதவடைப்பை கைவிடுமாறும் அழைப்பு விடுத்தார். இப்பேச்சு பரவலான போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் உசுப்பிவிட்டதோடு, போராட்டகாரர்களில் ஒருவர், “நம் நாட்டை இப்போது தலைமை தாங்கிக் கொண்டிருப்பது அதிபரல்ல – தான் என்ன செய்கிறோம் என்று தனக்கே தெரியாத கோமாளி!” என்றார்.. அவர் பேச்சை தொடர்ந்து ட்ரம்ப்! ட்ரம்ப்! என கூட்டத்தினர் எதிரொலித்தனர்.

போல்சனாரோவின் செயலால் ஆத்திரமடைந்த பிரேசிலின் குப்பத்து மக்கள் சிலர் தாங்களாகவே நிலைமையை கையிலெடுத்து, மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த சேரிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல், தனித்திருக்குமாறு வாட்ஸ்ஆப் மூலம் தகவல் பரப்பினர். வேறு வார்த்தையில் சொல்வதானால், இந்நோய் தொற்றை வெறும் மூக்கொழுகல் என்று கூறி, அதிபர் போல்சனேரோ நடவடிக்கை எடுக்க மறுத்த நிலையில், மக்கள் தங்களுக்கு தெரிந்த வழியில் தாங்களாகவே தங்களை காப்பாற்றிக் கொள்ள முயற்சித்தனர். அதிபரின் இந்த மாபெரும் புறக்கணிப்பையும், குப்பத்து ஏழை மக்கள் தங்களுக்கு தெரிந்த வழியில் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள எடுத்த முயற்சியையும் பைனான்ஸியல் டைம்ஸ் விவரிக்கிறது. “சன் பவுலோ நகரில் பெரும்பாலானோர் சுய தொழில் புரிபவர்கள் என்பதால் பணமோ உணவோ இல்லாமல் அடுத்த நாள் எவ்வாறு வாழப் போகின்றோம் என்ற கவலையில் உள்ளனர்!“ என்று அந்நாளிதழ் கூறுகிறது. ஏற்கனவே பெரிய அளவிலான போராட்டங்களை தூண்டியிருக்கும் போல்சனாரோவின் நிலைப்பாடு, அவருக்கும், அவரது அரசுக்கும் எதிராக கலகம் உருவாகவும் வழிவகுக்கும். வெடிக்க காத்திருக்கும் பிரஷர் குக்கரை போன்ற பிரேசிலின் வரலாறை வைத்து பார்க்கையில், அங்கும், சிலி போன்ற லத்தின் அமெரிக்காவின் இதர பகுதிகளிலும் வெகுஜன எழுச்சிகளுக்கு வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

 இக்கோமாளிகளும், கொடுங்கோலர்களும் தொற்று நோயை புரிந்துக்கொள்ளவும், மக்களை காக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வக்கற்றவர்களாக ஏற்கனவே அரசியல்ரீதியில் அம்பலமாகிவிட்டனர். அரசியலில் அவர்களின் நிலைமை சீரடைவதற்குள்ளாக, பொருளாதார நிலைமை மோசமாகிவிடக் கூடும். உண்மையான சோஷலிச சித்தாந்தத்தை நோக்கிய தேடலில், ஜனநாயகம் மற்றும் உழைக்கும் வர்க்கத்தை அடிப்படையாக கொண்டு, உலகை மாற்றும் ஒரு இயக்கமாக திரளும் உலகளாவிய வெகுஜன இயக்கங்களே நிகர விளைவாக இருக்கப் போகிறது!

நன்றி www.akhilam.org