வெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்

‘உலகை ஆண்டவர்கள் நாம்’ என்று பொறி பறக்கும் மேடைகள் ஒரு புறம். ‘சீனாக்காரர்  கொரோனவை பரப்புவர் என சிலப்பதிகாரத்திலேயே கூறப்பட்டு இருக்கிறது’ என சமூக வலைத்தள கட்டுக்கதைகள் மறுபுறம்..

நமது உணவு முறைகளும் , வாழ்க்கை பழக்க வழக்கங்களும் என்ன நடந்தாலும் எங்களை பாதுகாக்கும் என்ற வீண் பெருமிதங்களுக்கும் பஞ்சமில்லை.  வைரஸ் போல கட்டவிழ்த்து விட பட்டிருக்கும் கட்டுக்கதைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் எப்போதும் போல் இப்போதும் பஞ்சமில்லை. தமிழ் பேசும் மக்களான நாங்கள்  இயற்கையாகவே பிறரை விட பலமானவர்கள்தான் என்ற விம்பமே இந்த கூச்சல்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் மனோநிலை. ஆனால் Covid-19 தாக்கத்தால் ஏற்பட்ட நிலைமை தொடர்பாக  பிரித்தானியாவில் வெளிவந்திருக்கின்ற அறிக்கை பல செய்திகளை உறைக்க சொல்கிறது.

பிரித்தானியாவில்  covid-19 வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கபடுபவர்கள் பெருபாலும் ஆபிரிக்க மற்றும் ஆசிய இனத்தவர்கள் என்கிறது  தேசிய தீவிர சிகிச்சை தணிக்கை மற்றும் ஆராச்சி மையம்(Intensive Care National Audit and Research Center). இந்த அறிக்கையின் பிரகாரம் பிரித்தானியா முழுவதும் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் 03.04.2020 வரை அனுமதிக்கபட்ட covid-19 தொற்றாளர்களில் 35சதவீதம் பேர் ஆசியா , ஆபிரிக்க இனத்தவர்கள். பிரித்தனியாவின் மொத்த சனத்தொகையின் 13 சதவீதமாக இருக்கும் ஆசிய, ஆபிரிக்க குடிகளே இந்த covid-19 நெருக்கடியால் அதிகம் பாதிக்கபட போகிறர்கள் என தற்போது வெளிவரும் பலஅறிக்கைகள் சொல்கின்றன.

Birmingham போதனா வைத்தியசாலையின் சர்க்கரை நோய் கற்கைகளுக்கான பேராசியாரும் தெற்காசிய சுகாதார அறக்கட்டளையின் அறங்காவலருள் ஒருவருமான வாசிம் ஹனீப் குறிப்பிடுகையில்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ள ஆசியர்களில் தெற்காசியர்களே அதிகம் என்கிறார். மேலும் அவர் கூறுகையில்; பெரும்பான்மையான தெற்காசியர்கள் பிரித்தானியாவில் மிகவும் பின்தங்கிய இடங்களிலே வசிக்கிறார்கள். இருதய மற்றும் சர்க்கரை நோய்களுக்கு அதிகமாக உள்ளக்குகிறார்கள். பிற இனகுழுக்களை விட சர்க்கரை நோய்க்கு ( Type 2 Diabetes) உள்ளாகும் ஆசியர்களின் எண்ணிக்கை 6 மடங்காகும். இவ்வாறான நோய்களுக்கு உணவு பழக்கவழக்கம் , உடல்பருமன் , குடும்ப பின்னணி போன்றவை பின்னணி காரணங்களாக இருந்தாலும் சமூகத்தில் நிலவும் பொருளாதர சமத்துவம் இன்மையும் மற்றும் சுகாதார சேவைகளின் போதமையும் முக்கிய காரணிகளாகும். என்றார்.

Joseph Rowntree அறக்கட்டளை 2017 ஆம் வெளியிட்ட அறிக்கை பிரித்தானியாவில் வறுமை விகிதாசாரம் வெள்ளை இன குழுக்களுடன்  ஒப்பிடுகையில் ஆசிய ஆபிரிக்க இன குழுக்களில் இரு மடங்கு அதிகமாகும் என்கிறது. பிரித்தானியாவில் உள்ள இன குழுக்களுக்குள் சமூக பொருளாதார மட்டத்தில் மிகவும் வறுமை நிலைக்கு உட்பட்டவர்கள்  ஆசிய மற்றும் ஆப்பிரிக்க இனக்குழுமங்களே என்கிறது இந்த அறிக்கை. வறுமை நிலைக்குட்பட்ட குழந்தைகளின் விகிதமும் ஆசிய மற்றும் ஆபிரிக்க இன குழுமங்களிலேயே அதிகம் என மேலும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியா , பாகிஸ்தான், பங்களாதேஷ் , ஆப்பிரிக்க நாட்டுகாரர்களை  எல்லாம் பாருங்கள். இந்த வலது ,இடது அரசியல் எல்லாம் பார்க்காமல் பலர் பாராளுமனற பிரதிநிதிகளாகி  தமது மக்களின் பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைத்துவிட்டார்கள் என்பவர்கள் பிரித்தானியாவில் வாழ்த்து கொண்டிருக்கும் ஆசிய மற்றும் ஆபிரிக்க இன மக்களின் உண்மை  நிலவரத்தை அறிந்துகொள்ள வேண்டும்.

காகம் இருந்து பனங்காய் விழாது என்பதை இனியாவது புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.