போராடும் தொழிற்சங்க தலைமை தேவை

1,056 . Views .

(இந்தியாவில் வங்கி ஊழியராக பணிபுரியும் தோழர் பிரகாஷ் அவர்கள் இந்தியாவில் உள்ள வங்கி ஊழியர்களுக்கு எழுதி akhilam.org யில் வெளிவந்த திறந்த கடிதம்..)

வங்கி ஊழியர்களுக்கான ஒரு வங்கி ஊழியரின் மடல்

இந்தியாவில் வங்கித்துறையில் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் பல மாற்றங்கள் நடந்து இருக்கின்றன. அந்த பெரிய மாற்றங்களில் பெரும் பங்காற்றியது வங்கி ஊழியர்களின் தொழிற்சங்கம். அதில் பெரிதாக கருதப்படுவது வங்கி ஊழியர்களின் ஊதியத்தை இருதரப்பு ஒப்பந்தமாக ( வேலை நேரம் முதல் ஊழியர்களின் பாதுகாப்பு வரை இன்றும் ) மாற்றியது. மற்றும் தனியார் உடைமையாக இருந்த வங்கிகளை அரசுடமை ஆக்கியது முதற்கொண்டு வங்கி சேவையை அடிதட்டு மக்களுக்கும் கொண்டு போய் சேர்த்தது வரை அனைத்து பெருமையும் தொழிற்சங்கம் மற்றும் அதன் ஊழியர்களையே சாரும்.

முன்பு 6 வங்கிகள் மட்டுமே இருந்தன. பின்பு அது அதிகரித்து 29 அரசுடமை வங்கிகள் இயங்கி கொண்டு இருந்தன. இன்று இந்தியா முழுவதும் 1044 அரசு வங்கி, மற்றும் தனியார் வங்கி, கூட்டுறவு வங்கி, Small finance bank. என பெருகி விட்டது. சேவை துறையாக இருந்த வங்கித்துறையை லாபம் சார்ந்த துறையாக மாற்றி விட்டது அரசு. அப்படி இருந்தும் தொழிற்சங்கம் மற்றும் அதன் தொடர் போராட்டத்தால் இப்பொழுதும் பல சேவைகளை அடிதட்டு மக்களுக்கு வழங்க கூடியதாக இருக்கிறது. இந்தத் தருணத்தில் வங்கித்துறையில் நிறைய சறுக்கல்கள் நிகழ்வதை நாம் பார்க்கலாம். வங்கிகளை இணைப்பது என்ற பெயரில் லாபத்தை முதன்மைப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு முடக்கி விட்டுள்ளது. அதை எதிர்த்து தீவிரமாக தொழிற்சங்கங்கள் போராடினாலும் அதை தடுத்து நிறுத்த முடியவில்லை போராட்டத்தை இன்னும் தீவிர படுத்தி இருந்தால் அதை ஒருவேளை தடுத்து இருக்கலாம்.

10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கியாக இணைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் இணைந்து பல ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக AIBEA, BEFI என்ற இரண்டு தொழிற்சங்கங்கள் கடைசி வரை போராடுவோம் என்று அறிவித்தன. மார்ச் மாதம் 27-ம் தேதி 2020 அன்று வங்கி இணைப்பு எதிர்த்து ஒரு நாள் வேலைநிறுத்தம் அறிவித்து இருந்த நிலையில் – அதை நோக்கி தயாராகிக் கொண்டு இருந்த தருணத்தில்தான் *கொரோனா வைரஸ்*-ன் பாதிப்பு உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது இந்தியாவிலும் பரவ நாட்டின் பிரதமர் ஊரடங்கு உத்தரவு முதற்கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தார்.

இத்தனை நாள் மக்களுக்கு வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை காதில் வாங்க கூட நேரமிருக்கவில்லை. இந்த தருணத்தில் இந்த வேலைநிறுத்தம் கட்டாயம் மக்களை போய் சேரும் என்ற எண்ணத்தில் இருக்க திடீரென சங்கத்திடம் இருந்து ஒரு அறிக்கை வந்தது. இந்த அசாதாரண சூழ்நிலையில் நாம் அரசாங்கதிற்கு ஆதரவாக செயல்படவேண்டும் என்ற கருத்துப்பட இந்த 27-ம் வேலைநிறுத்தம் DEFERRED என்று அறிவித்து விட்டனர்.

ஆனால் அரசாங்கமோ நாங்கள் உங்களைப்போல் இல்லை என்று அறிவித்த படி வங்கிகள் இணைப்பை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை என்பது தொழிற்சங்கத்திற்கு மிகப் பெரிய தோல்வி தான்..

அரசாங்கம் இந்த வேலைநிறுத்தத்தை நிறுத்த சொல்லி எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. மாறாக தொழிற்சங்கங்கள் தாமாகவே அதை Deferred என்று அறிவித்தது மிகப் பெரும் தவறு.  தொழிற்சங்கம் தான் நம்மை காப்பாற்றும், சுரண்டல்களை தட்டிக்கேட்கும் என்று அதில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு கொண்டு இருக்கும் என்னையும், என்னைப் போன்ற மற்ற ஊழியர்களின் மனதையும் அந்த அறிவிப்பு ( 27th Strike Deferred circular) சுக்குநூறாக உடைத்து விட்டது.

தொழிற்சங்கத்தால் நாடு முழுவதும் பரவிக்கிடக்கும் இந்த தேசிய வங்கிகளை அதன் இணைப்புகளை தடுக்கமுடியாமல் போனது ஏன்?

சக ஊழியர்கள் இது பற்றி சிந்திக்க வேண்டும். இன்று எந்தப் பாதுகாப்பும் இன்றி வங்கி ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்ய பணிக்கப் பட்டுள்ளனர். வங்கி ஊழியர்களின் பொருளாதார நிலை மட்டுமின்றி அவர்களின் உயிரைகூட பொருட்படுத்தாது நடக்கிறது அரசு. இதனால் வங்கியை பாவிக்கும் மக்களின் உயிரும் பணயம் வைக்கப் படுகிறது. முழுமையான பாதுகாப்பு இன்றி வங்கி ஊழியர்கள் வேலை செய்ய கூடாது என வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய இந்த நேரத்தில் கூட அத பற்றி பொருட்படுத்தாது அரசுக்கு ஆதரவு வழங்கும் தொழிற்சங்க தலைமையை ஊழியர்கள் கேள்வி கேட்க வேண்டும்.

 எமது உரிமைகளுக்காக சமரசம் இன்றி போராடும் தொழிற்சங்க தலைமைக்காக குரல் கொடுக்க நாம் முன்வர வேண்டும். போராட பின் நிற்கும் தலைமைகள் புறந்தள்ளப்பட்டு ஊழியர்களுக்காக முன் நின்று போராடுபவர்கள் தலைமை ஏற்க முன் வர வேண்டும்.

உங்களைப் போல நானும் வலியும் வேதனையும் அனுபவிக்கும் உங்களில் ஒருவன். சக ஊழியரின் அக்கறை பற்றி சிந்தித்து இந்த சிறு மடலை எழுதி உள்ளேன். சிந்தித்து -ஒன்றிணைத்து இயங்குவதும், போராடும் தலைமையை கட்டுவதும் எமக்கு இன்று அத்தியாவசியம். அதற்காக முன்வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பிரகாஷ்