இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் பற்றிய தமிழ் சொலிடாரிட்டி

852 . Views .

 கொரொனா நெருக்கடி உலக பொருளாதாரத்தை உலுக்கி கொண்டிருக்கும் நிலையில் இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ராஜபக்சக்கள் எவ்வாறாயினும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுவிட வேண்டும் என்று தமது வியூகங்களை வகுத்து வருகின்றனர். தற்போதைய நெருக்கடி அவர்களுக்கு அதற்கான வாய்ப்பை வழங்கவும் கூடும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாகவே காணப்படுகிறது. மறுபுறம் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமக்கான ஆணையை மக்களிடம் கோருகின்றது. அதேநேரம் பல கட்சிகள் மாற்று என களம் காண்கிறார்கள். ராஜபக்சேகளின் கட்சியைத் தவிர இலங்கையின் அனைத்துக் கட்சிகளும் தமக்குள் பிளவுபட்ட நிலையிலேயே இருக்கின்றன. இந்த நிலையில் தமிழ் மக்கள் என்ன முடிவினை எடுக்க போகிறார்கள்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சனநாயக உரிமை மறுப்பு, தேசிய இனப் பிரச்சனை, பொருளாதார நெருக்கடி என்பன அவர்களின் கழுத்தை நெருக்கிக் கொண்டு இருக்கிறது. இந்தப் பாராளுமன்றத் தேர்தல் இவற்றுக்கான தீர்வினைத் தந்து விடுமா என்றால் இல்லை. பாராளுமன்றம் அதிகாரத்தில் இருப்பவர்களை வலுப்படுத்தும் நிறுவனமே அன்றி உழைக்கும் மக்களுக்கோ ஒடுக்கப்படும் மக்களுக்கோ விடுதலையை பெற்றுத் தந்துவிடும் இடமல்ல. ஒடுக்கப்படும் மக்களுக்காக போராடுபவர்கள் பாராளுமன்றம் செல்வது என்பது அந்த அதிகாரத்தை உடைத்து மக்கள் அதிகாரத்தை உருவாக்குவதற்கே ஆகும். மாறாக இலங்கையின் அரச அதிகாரத்தை பலப்படுத்துவதற்கு அல்ல.

ராஜபக்சேகளின் இலக்கு தமது அதிகாரத்தை வலுப்படுத்துவதாக இருக்கிறது. அதற்காக தனித்த சிங்கள வாக்குகளைப் பெறுவதற்கு எந்த எல்லை வரையும் அவர்கள் செல்வார்கள். அதே சமயம் பொது ஜன பெரமுனவுக்கோ  ஐக்கிய தேசியக் கட்சிக்கோ பொருளாதார கொள்கைகளிலும்,  தேசிய இனப்பிரச்சினை தீர்வு விடயங்களிலும் எந்தவிதமான அடிப்படை வேறுபாடும் கிடையாது. தமிழ்பேசும் மக்கள் இந்தக் கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் எந்தவிதமான மாற்றங்களையும் பெற்றுவிட முடியாது. இந்த இரு கட்சிகளும் அதிகாரத்தில் இருந்த இருக்கின்ற கட்சிகள். இவர்களின்  இலங்கையின் இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவைகளை தனியார் மயப்படுத்துவது போன்ற வலதுசாரிய நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக ஒட்டுமொத்த இலங்கையின் ஒடுக்கப்படும் மக்களும் அணிதிரள வேண்டியது அவசியம். தமிழ் சொலிடாரிட்டியைப் பொறுத்தவரை இந்த இரண்டு கட்சிகளும் தேசிய அளவிலேயே தோற்கடிக்கபடவேண்டியவை. துரதிஷ்டவசமாக முன்னாள் இடதுசாரிகளான  வாசுதேவ நாணயக்கார, விக்ரமபாகு கருணாரத்ன ஆகியோர் இந்த வலதுசாரி கட்சிகளை ஆதரிப்பது  தமது பிறவிப்பயன் என்று பேசுவது கண்டிக்கத்தக்கது. இவர்கள் அரசியல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். முன்னாள் இடதுசாரிகளான கம்மூனிசக் கட்சியும், லங்கா சம சமாஜ கட்சியும் ராஜபக்ச வெற்றிக்காக பாடாத பாடு படும் வெற்றுக் கட்சிகளாக மாறி விட்டன. மக்கள் விரோத முன்னாள் இடதுசாரிகளையும் எதிர்த்து நிற்க வேண்டியது அவசியம். 

ஜனதா விமுக்தி பெரமுன அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் 2020இல் அதிகாரத்தை பிடிப்போம் என்று முன்பு பிரகடனம் செய்திருந்தார்கள். இன்று அந்த கோஷம் இல்லை. அவர்களால் அதிகாரத்தைப் பிடிக்கவும் முடியாது. ஜேவிபி இன்னொரு இடதுசாரிய முலாம் பூசப்பட்ட பௌத்த இனவாதக் கட்சி. அவர்கள் சொல்லும் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைச் சாத்தியமாக்கும் எந்தச் செயல் திட்டங்களும் அவர்களிடம் இல்லை. அவர்களின் செயல் திட்டம் அனைத்தும் இலங்கையின் ஒருமைப்பாட்டை பேனுவதிலேயே இருக்கின்றது. அதன் இடதுசாரியக் கவர்ச்சி பல தமிழ் பேசும் இளைஞர்களை தன்பால் இழுத்து இருக்கின்றது. இவர்கள் குறைந்த பட்சம் தமது கட்சிக்குள் இருக்கும் இனவாதத்தை ஒழிப்பதற்காகவாவது முயல வேண்டும்.

முன்னணி சோசலிசக்கட்சியின் பெரும்பாலான கொள்கைகளில் எமக்கு உடன்பாடு ஆயினும் குறிப்பாக அவர்களின் தேசிய இனப் பிரச்சனை தொடர்பான நிலைப்பாட்டை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சனநாயக உரிமைகளுக்காக மற்றும் தனியார் மயமாக்களை எதிர்க்கும் அவர்கள் நடவடிக்கைகளில் சேர்ந்து வேலை செய்கிறோம் – செய்வோம். ஆனால் தமிழ் மக்களின் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்களின் உரிமைகளை எவ்வாறு வென்றெடுப்பது என்பது பற்றி அவர்களிடம் சரியான திட்டமிடல் இல்லை. அவர்களும் தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமையை வெளிப்படையாக ஆதரிக்க வக்கற்றவர்கலாகவே இருக்கிறார்கள்.

இன்று இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளில் தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப்பிரச்சனையில் பிரிந்து செல்லக் கூடிய சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் ஒரே ஒரு கட்சி ஐக்கிய சோசலிச கட்சி மட்டுமே. இது பொருளாதாரக் கொள்கைகளிலும் சரியான அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சி. வரலாற்று ரீதியான அதன் தமிழ் பேசும் மக்கள் சார் நிலைப்பாட்டின் படி தமிழ் சொலிடாரிட்டி ஐக்கிய சோசலிச கட்சியை ஆதரிக்கின்றது (ஈழத்தமிழ் மக்கள் போராட்டங்கள்: மார்க்சியப் பார்வை – என்ற சோஷலிச கட்சியின் புத்தகத்தில் இக்கட்சி ஒவ்வொரு கால கட்டத்திலும் எடுத்த நிலைப்பாடு தொகுக்கப் பட்டுள்ளது. இப்புத்தகத்தை வாங்கிப் படித்து அவர்தம்  நிலைப்பட்டை மற்றக் கட்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் படி கேட்டுக் கொள்கிறோம்). அவர்தம் தெளிவான அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர்களுக்கான ஆதரவை நாம் வழங்குகிறோம். 

கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இலங்கையின் இன முரண்பாடு கூர்மைபடுத்தப்பட்டிருக்கின்றது. குறிப்பாக வட பகுதியில் தேசிய உணர்வு மிகவும் அதிகமாக இருக்கின்றது. பொருளாதார நெருக்கடி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கையறு நிலை என்பன மக்களை ஒரு விரக்தி நிலைக்குள் தள்ளியுள்ளது. மக்களின் விரக்தி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் போதாமை இன்று பல கட்சிகளை தாமே மாற்று என்ற கோஷங்களுடன் களமிறக்கி இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களை மீண்டும் பலமான அணியாக பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என்று மக்களிடம் கோருகின்றார்கள். தமிழர்களுக்கான தீர்வை கொண்டுவருவோம் என்கின்றார்கள். மறுபுறம் கஜேந்திரகுமார் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் தாங்கள்தான் மாற்று. தேசியம் சுயநிர்ணயம் தன்னாட்சி தான் எமது கொள்கை என்று கூறுகின்றார்கள். இவர்கள் அனைவருக்கும் இடையில் இருக்கும் பொதுவான ஒற்றுமை என்பது பாராளுமன்றத்தில் கதிரை பிடித்தல் என்பதில் மட்டுமே இருக்கிறது. அவ்வாறு இல்லையெனில் தேசியம் சுயநிர்ணயம் தன்னாட்சி என்பதை அடைவதற்குரிய திட்டமிடலை மக்கள் முன் வைக்க வேண்டும். தமிழ் தேசிய கட்சிகள் முன்வைக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது முழு இலங்கைக்குமான அதிகாரத்தை மாற்றுதல் சார்ந்தது. இவ்வாறு அதிகாரத்தை மாற்றவேண்டும் என்றால் நீங்கள் முழு இலங்கைக்குமான அதிகாரத்தை பிடித்தல் என்பதை  நோக்கிய திட்டமிடல்களை முன்வைக்க வேண்டும். மாறாக யாழ் மையமாக சிந்தித்தல் மட்டும் எவ்வாறு அதிகாரத்தைப் பிடித்தலை நோக்கி நகர்த்தும். வடக்கு கிழக்குக்கு வெளியில் இருக்கும் தமிழ் பேசும் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என இவர்கள் யாரும் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.அந்த மக்களுக்கான தலைமைதுவத்தை எடுக்க இவர்கள் தயாராக இல்லை.உன்மையில் இவர்கள் அனைவரும் பிராந்தியக் கட்சிகள் ஆகவே இருக்கின்றார்கள். இவர்கள் தமிழ் பேசும் மக்களின் தலைமை தான்தான் எனக் கூறுவதே மிகவும் வேடிக்கையானது.  அரசியல் போதாமைகளை வைத்துக் கொண்டு எவ்வாறான தீர்வு திட்டத்தை கொண்டு வரப் போகிறீர்கள் என தெளிவுபடுத்த வேண்டும்.

இம்முறை யாழ்ப்பாணத்தில் தோழர் செந்தில் வேல் அவர்களின் கட்சி போட்டியிடுகின்றது. கடந்த காலங்களில் தேர்தலில் நின்ற இடதுசாரிகளை கடுமையாக நிராகரித்து வந்த இவர்கள் அந்த குறுங்குழு நிலைபாட்டை கைவிட்டதை வரவேற்கிறோம். சமூகத்தில் கூர்மைப்படுத்த பட்டிருந்த சாதிய வேறுபாடுகளுக்கு எதிராக தோழரின் போராட்டங்களை நாங்கள் வரவேற்கின்றோம். கடந்தகால போராட்டங்களில் இவர்களின் நிலைப்பாடு – மற்றவர்கள் மீதான இவர்களின் அவதூறு – அடையாள அரசியலை நோக்கி நகரும் அரசியல் நிலைப்பாடுகளுக்கு தமிழ் சொலிடாரிட்டி ஆதரவு வழங்க முடியாது. தமிழ் பேசும் மக்களின் தேசிய உரிமை பற்றிய தெளிவான பார்வை இவர்களிடம் இல்லை. லெனினிச கட்சி என தங்களைச் சொல்லிக் கொள்ளும் இக்கட்சி தேசிய பிரச்சினை சார்பில் எவ்வாறு லெனினில் இருந்து மாறுபடுகின்றனர் என்பதை (அல்லது எவாறு லெனினிசத்தை வளர்த்து எடுத்துள்ளனர்? என்பதை) இன்று வரை விளக்கவில்லை. சாதிய ஒழிப்புக்கு குரல் கொடுப்பதில் நாம் உடன் சேர்ந்து போராடுவோம். ஆனால் சாதி ஒழிப்பு செய்வதற்கான திட்டமிடல்கள் என்ன முன் வைக்கப்பட்டிருக்கின்றன? எவ்வாறு சாதி ஒழிப்பு செய்யப் போகிறார்கள் என்பதை முன் வைக்காது – சாதி அடிப்படையில் வாக்கு கேட்பது மட்டும் செய்வது மிகவும் கண்டிக்கத் தக்கது. சோசலிசம்தான் ஒற்றைத் தீரவு என தட்டிக் கழித்து செல்லாமல் திட்டமிடல்கள் பற்றி பேசுவோம் வாருங்கள். இடது சாரிகள் என சொல்லிக் கொண்டவர்கள் மக்கள் உரிமைககளுக்கு எதிராக திரும்பி நிற்கும் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளால் நிரம்பிக் கிடக்கிறது இலங்கை அரசியல். மக்களின் நம்பிக்கையை மீளப் பெற இடது சாரிகள் மிக பொறுப்பாக கடின வேலை செய்ய வேண்டி உள்ளது. சரியான அரசியல் நிலைப்பாடு பற்றிய வெளிப்படையான உரையாடல் அதற்கு மிக அவசியம்.

கூர்மை அடைந்துள்ள இன முரண்பாடு அனைத்துத் தேர்தல்களிலும் தமிழ் மக்களை இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானதாகவே தமது தேர்தல் நிலைப்பாடுகளை எடுக்க வைத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பை அவர்கள் அரசுக்கு எதிரான தமது ஆயுதமாகவே பார்த்து வந்திருக்கிறார்கள்.

ஆனால் இவர்களின் அரசோடு ஒத்தோடிதனம்  மக்கள் மத்தியில் ஒரு விசனத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இது தமிழ் தேசிய பொப்புலிசத்தை  கையில் எடுத்திருக்கும் கஜேந்திரகுமார் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோருக்கு ஆதரவாக மாறக்கூடும். கிழக்கில் கருனா அவர்களின் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் அவருக்கு கணிசமான ஆதரவைப் கொடுக்கக் கூடும். அவருக்கு ஆதரவு அளிக்கும் மக்களை ஒட்டுமொத்தமாக துரோகிகள் என்று சொல்லி விட்டு போக முடியாது. அவ்வாறான நிலைமைக்கு மக்களை  கொண்டு சென்றதுக்கு தமிழ் தலைமைகள் அனைத்தும் பொறுப்பு ஏற்க வேண்டும். ஒடுக்கப்படும் முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காக எந்தக் கட்சி குரல் கொடுத்துள்ளது? முஸ்லிம் மக்கள் எல்லாப் பக்கத்தாலும் தாக்கப்படும் நிலையில் இந்த கட்சிகள் எந்த போராட்டத்தை அதற்கு எதிராக எடுத்துள்ளனர்? தமது சுய லாபத்துக்காக இயங்கும் முஸ்லிம் தலைமைகள் சிலருடன் நட்போடிருப்பது மட்டும் போதுமா? அந்த தலைமைகளுக்கும் எதிராகத்தான் நாம் இயங்க வேண்டும்.  ஒடுக்கப்படும் முஸ்லிம் மக்களின் பக்கம் நிற்பது – சமரசமற்ற முறையில் அந்த மக்களின் அனைத்து உரிமைகளுக்கும் பாடுபடுவது (நில உரிமை , மற்றும் வேலை, வீடு உரிமைகள், மற்றும் மத வழிபாட்டு உரிமை உட்பட) அத்தியாவசியம். இத்தகைய நிலைப்பாட்டை தமிழ் கட்சிகள் எடுக்காமல் அவர்களின் ஆதரவை மட்டும் கோருவது தவறு. தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் கிழக்கில் உருவாகி கொண்டிருக்கும் நெருக்கடியால் பயனடையப் போவது இனவாதிகளும் – அதன் அடிப்படையில் அதிகாரத்தை தக்க வைக்க துடிக்கும் சக்திகள் மட்டுமே. தமிழ் மக்களுக்காக நிற்கிறோம் என சொல்லிக் கொண்டு முஸ்லிம் வெறுப்பு செய்யும் அனைவரும் உண்மையில் தமிழ் மக்களின் நலனுக்கு எதிரானவர்களே. கிழக்கில் முஸ்லிம் மக்கள் மேல் நிகழும் ஒவ்வொரு தாக்குதலும் தமிழ் மக்கள் மேல் விழும் தாக்குதல்தான் என்பதை இவர்கள் உணர்வதில்லை. தமது சொந்த வாக்கு வங்கியை உருவாக்கி கொள்ள பல்வேறு அடையாளங்களை பாவிக்கும் அரசியல் சக்திகள் மிகவும் ஆபத்தனாவை. அவை கடுமையாக எதிர்க்கப் பட வேண்டியவை. முற்போக்கு முகம் உற்பட – அவர்கள் எந்த மாறு வேடத்தில் வந்தாலும் நாம் எதிர்ப்பை வைத்துத்தான் ஆக வேண்டும். 

இலங்கையில் தொடர்ந்து ஏமாற்றப் பட்டுக் கொண்டிருக்கும் – தொடர்ந்து உழைப்பு பிழிந்து எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மலையக மக்கள் பற்றி வடக்கு கிழக்கு தெற்கு பிராந்தியக் கட்சிகள் கண்டு கொள்வதில்லை. அது தமது பிரச்சினை இல்லை என தள்ளி நின்று வருகிறார்கள். மலையகத்தில் தமது பலத்தைக் கட்ட முடியாத எந்த கட்சியும் தம்மை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என சொல்லிக் கொள்வதை நிறுத்த வேண்டும். இலங்கை வரலாற்றை தீர்மானிக்க கூடிய மலையக மக்களின் பலம் இவர்களுக்கு புரிவதில்லை. அந்த மக்கள் வராலாறு முழுக்க படும் துன்பத்தை இவர்கள் உள்வாங்கவில்லை. மலையக மக்களின் போராட்டத்தை தமது போராட்டமாக முன்னெடுக்கும் கட்சி மட்டுமே பிராந்தியவாத சிறையில் இருந்து வெளிவர முடியும்.

இடது சாரிகள் என சொல்லிக் கொள்வோர் உட்பட இலங்கையில் உள்ள  எந்த கட்சியும் சரியான நிலைப்பாடை எடுக்கவில்லை என்பதே எமது கருத்து. யார் வெல்லுவார்கள் – யார் குறைந்த தீமை – யார் எண்ணிக்கையில் அதிகம் – என்ற அடிப்படையில் தமிழ் சொலிடாரிட்டி அரசியல் முடிவுகளை எடுப்பதில்லை. சரியான அரசியல் நிலைப்பாட்டில் தனி ஒருவர் நின்றாலும் அதை ஆதரிக்க நாம் தாயாராக இருக்கிறோம். ஒடுக்கப்படும் மக்களின் போராட்டத்தை கட்டுவதற்கான முதற்படி அது. சரியான நிலைப்பாடு விவாதங்கள் – செயற்பாடுகள் – மற்றும் வரலாறு மூலம் நிரூபிக்கப் படக் கூடியது. இது செயற்பாடு நீக்கம் செய்யப் பட்ட – வீட்டில் சொகுசாக இருந்து கருத்து வைக்கும் – நிலைப்பாடு அல்ல. இது தூய்மை வாதமும் இல்லை. பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வெவ்வேறு சக்திகளுடன் இணைந்து வேலை செய்து வந்திருக்கின்றது தமிழ் சொலிடாரிட்டி. ஆனால் எமது ஆதரவை வழங்குவது என்பது எந்த அடையாள அடிப்படையிலும் இன்றி அரசியல் ரீதியானதாக இருக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

இந்தத் தேர்தலில் தமிழ் சொலிடாரிட்டி ஐக்கிய சோஷலிசக் கட்சியைப் அதன் வரலாற்று ரீதியான நிலைப்பாட்டிலிருந்து ஆதரிக்கின்றது. உங்கள் வாக்கை இந்த கட்சி வேட்பாளர்களுக்கு வழங்குங்கள். ஆனால் பல்வேறு இடங்களில் வாழும் மக்கள் இடதுசாரிய சக்திகள் நோக்கி வாக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இந்த கட்சிகளை சரியான அரசியல் திசையில் நகர்த்த மக்களின் பங்களிப்பு அவசியம். வலது சாரிய கட்சிகள் சீரமைப்பு செய்ய முடியாதவை. அவை முற்று முழுதாக மக்கள் நலன்களுக்கு எதிராகத்தான் எல்லாக் காலங்களிலும் இயங்கி வருவார்கள். 

மக்கள் வாக்கு வழங்குவது அரசியல் தெளிவோடு நிகழும் ஒன்றாக இருக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம். அந்த முறையில்தான் ஒடுக்கப்படும் மக்களின் சரியான பிரதிநிதித்துவத்தை கட்டி எழுப்ப முடியும். இந்த புள்ளியுடன் உடன்படுவதாக பல கட்சிகள் சொல்லக் கூடும். தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் இந்த புள்ளியோடு உடன்படலாம். ஆனால் அத்தகைய தளத்தை கட்டி நிமிர்த்த அந்த கட்சி தலைமைகள் தமது சொந்த அபிலாசைகளை புறந்த்தள்ளி வைத்து விட்டு முன் வருவார்களா? தேசியம் , விடுதலை என்ற சொற்களைப் பெயரில் பாவிப்பதால் மட்டும் யாருக்கும் பிரியோசனம் இல்லை. சரியான செயற்திட்ட முன்வரைவை வைத்து ஒரு பொது தளத்தை உருவாக்கி இயங்க இவர்கள் முன் வர வேண்டும் என இக்கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவோர் அழுத்தம் கொடுக்க வேண்டும். அத்தகைய தளம் பன்முகத் தன்மை கொண்டதாகவும் –பிடரல் அடிப்படையில் பல்வேறு அமைப்புக்களை அவர்தம் முரண்களோடும் அவர்தம் தனி தனி செயற்பாடுகளோடும் இணைக்க முடியும். முன்வைக்கப்படும் அரசியல் நிலைப்பாடு அதற்கான செயற்பாடு என்பது முதன்மைப்டும் அட்டிபடை இணைப்பின் உயிர் நாடியாக இருக்க முடியும். இத்தகைய ஒற்றுமை மட்டுமே தற்போது சாத்தியம். இதற்கான உரையாடலை செய்ய எப்போதும் நாம் தயாராகவே இருக்கிறோம். 

எவரோடும் இயங்க முடியாது என குறுங்குழு வாதிகளாக இயங்கும் ‘இடதுசாரிய’ கட்சிகள் வரலாறில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. அவர்கள் வெற்று புலம்பல் கட்சிகளாக – வீட்டில் இருந்தபடி உபதேசம் செய்யும் குட்டி பூர்சுவா மனங்களில் மட்டும் வாழ்பவர்களாக குறுகித்தான் நிற்பார்கள். முன்னணி சோஷலிச கட்சி போன்ற கட்சிகள் செயற்பாடுகளை முன் வைத்த போதும் ஒரு போராட்டத் தளத்தை உருவாக்க வெளிப்படையாக முன்வரத் தயாரா? தமிழ் பேசும் மக்களின் தேசிய உரிமையை அங்கீகரிக்கும் எந்த கட்சியுடனும் அமைப்புடனும் எந்த ஒரு கூட்டுக்கும் தயார் இல்லாத இவர்கள் நிலைப்பாடு கடுமையாக கேள்விக்கு உற்படுத்த வேண்டியதாக இருக்கிறது. தமிழ் சொலிடாரிட்டி இவர்களுடன் இணைந்து பல்வேறு போரட்டங்களை நடத்தி உள்ளது. பல்வேறு முன் முயற்சிகளை எடுத்துள்ள விடயம் அனைத்து முன்னணி தோழர்களும் தெரியும். பல்வேறு உரிமை போராட்டத்தில் எந்த தயக்கமும் இன்றி நாம் கலந்து கொள்வோம் என்பது அவர்களுக்கு தெரியும். இருப்பினும் இன்றுவரை அவர்கள் தமிழ் சொலிடாரிட்டி என்ற அமைப்புடன் இயங்கியதை எங்கும் பதிவு செய்ததில்லை. இது வெறும் அமைப்பு சார் கேள்வி அல்ல. தமிழ் மக்களின் தேசிய உரிமையை அங்கீகரிக்க மறுக்கும் நிலை அவர்களை எவ்வாறு தடுத்து நிறுத்துகிறது என்பதை விளக்குவதற்காக முன் வைக்கப்படும் வேள்வி. சிங்கள ஒடுக்கப்படும் மக்களின் (அவர்கள் ராஜபக்ச ஆதரவாளர்களாக இருந்தாலும் கூட) உரிமைகளுக்கு குரல் கொடுக்க – அதற்கான போராட்டத்தில் பங்கு பற்ற நாம் ஒரு போதும் பின் நிற்கப் போவதில்லை. தமிழ் மக்கள் எம்மை சந்தேகத்தோடு பார்த்து விடுவார்களோ என்ற அடிப்படையில் குறுக்கு வழி ஆதரவு தேடும் அரசியல் செய்யாது நேர்மையுடன் எமது நிலைப்பாட்டை நாம் முன்வைக்கிறோம். இதனால் சில வசைகளையும் சந்திக்கிறோம். அது நாம் எதிர்பார்க்காதது அல்ல. அதையும் வென்றுதான் ஒடுக்கப்பட்டும் மக்களின் போராட்டத்தை நகர்த்த முடியும். இடது சாரி கட்சி என சொல்லிக் கொள்வோர் ஏன் சிங்கள இன வாத சக்திகளுக்கு வளைந்து கொடுத்து நிற்க வேண்டும்? ஜே. வி. பி யின் அழிவு இவ்வாறுதான் ஆரம்பித்தது தெரிந்த விடயமே. இதிலிருந்து விடுபடாது உருப்படியான இடதுசாரிய – மார்க்சிய கட்சியை இலங்கையில் கட்டி எழுப்ப முடியாது. 

தமிழ் மக்களின் உரிமைகளை பெற வேண்டுமாயின் நாம் இலங்கையில் அதிகாரமுள்ள எதிர் தரப்பாக பலம் பெற வேண்டும். அதற்கான மாற்று தளம் ஒன்று கட்டப்பட வேண்டும். இலங்கை முழுவதும் உள்ள முற்போக்கு சக்திகள், ஒடுக்கப்படும் மக்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள் என்பன ஒரு மக்கள் சார்பான பொது செயல்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து அந்த மாற்று தளத்தினை கட்டுவதற்கு முன் வர வேண்டும் அதற்காக தமிழ் சொலிடாரிட்டி  முயற்சி செய்து வருகிறது. இந்த கருத்துக்களோடு உடன்படுவோர் எம்மை தொடர்பு கொள்ளுங்கள். உரையாடுவதோடு மட்டும் நிறுத்தாமல் எமது செயற்பாட்டையும் பலப்படுத்துவோம்- முன்வாருங்கள்.