வீடற்றவர்களை வீதியிலிருந்து அப்புறப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் உத்தரவு

1,097 . Views .

லாவண்யா ராமஜெயம்

மிகப்பெரிய அளவிலான நெருக்கடியாக   வீடற்றவர்களின் நிலைமை உள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாத ஆய்வின்படி இங்கிலாந்தில் 320, 000 பேர் வீடற்றவர்கள் என்று செல்டர் (shelter) மதிப்பிட்டுள்ளது. மற்றும் இது முந்தைய ஆண்டின் எண்ணிக்கையில் நான்கு வீதம் அதிகரித்துள்ளது. இதுமட்டுமல்லாது தற்காலிகமாக தங்குமிடங்களில் பல குடும்பங்கள் மற்றும் சிறுவர்கள் சிக்கி தவிக்கின்றனர்.

தற்போது கொரோனாவால் எல்லா இடங்களும் மூடப்பட்ட  பின்னர், வீடற்ற மக்கள் அனைவருக்கும் தங்குமிட வசதிகளை அமைக்க வேண்டும் என அரசாங்கம் கவுன்சில்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது நோய் பரவுவதை தடுப்பதற்காக இரவு தங்கும் இடங்கள் மற்றும் அனைத்து தெரு முகாம்களும் மூடப்பட வேண்டியது அவசியம் என லூயிஸ் கேசி தெரிவித்துள்ளார். இவர் கோவிட்- 19 (covid-19) நிலவரம் சார் அரச பேச்சாளர்.

ஆனால் எந்தவித திட்டமும் இல்லாத அரசாங்கம் திடீரென இந்த வாரத்திற்குள் வீடற்றவர்களுக்கு தங்குமிட வசதி அளிக்கப்பட வேண்டும் என்றால் கவுன்சில்களால் அதை எவ்வாறு செயற்படுத்த முடியும். கூடுதலான நிதி ஒதுக்கப்பட வேண்டும். அல்லது ஹோட்டல் அறைகளை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும். எம்மிடம் பணம் இருந்தால் நாம் ஏன் தெருவில் நிற்கப் போகிறோம் என வீடற்றவர்கள் கேட்கிறார்கள். ஒரு கோட்டலில் போய்த் தங்கும் அளவிற்கு அவர்களிடம் பணம் இல்லை. பல கவுன்சில்கள் இவர்களை தங்க வைக்க இடமில்லை என கைவிரித்து வருகின்றன. அதே சமயம் இவர்களைத் தெருவில் இருந்து அப்புறப்படுத்தும் படி பொலிசாருக்கு உத்தரவு வழங்கப் பட்டுள்ளது. வீதிகளிலும் தங்க முடியாத நிற்கதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள் ஆயிரக் கணக்கான வறிய வீடற்றோர்.

பொருளாதாரத்தினை காப்பாற்ற என்ற பெயரில் பெரும் முதலாளிகளின் லாபத்தை பாதுகாக்க 3500 மில்லியன் பவுண்ஸ்கள் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார் போரிஸ் ஜோன்சன். ஆனால் இவ்வரசாங்கம் சமூக மற்றும் பொது சேவைகளுக்கு செய்யும் ஒதுக்கீடு மிகச் சொற்பமே.

தற்போது எல்லோருக்கும் வீடு வழங்கமுடியும் என வீட்டுத்திட்டத்தினை கொரோனா நெருக்கடியால் அரசு அறிவிக்கிறது. அதற்காக உரிய பணம் ஒதுக்கப்பட வேண்டும். அரசாங்கத்திடம் வீடமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வலு இருந்தும் தனியாரிடம் அவற்றை ஒப்படைத்து கொள்ளை இலாபம் காண வழியமைக்கிறது என்ற குற்றச்சாட்டை தமிழ் சொலிடாரட்டி ஏற்கனேவே முன்வைத்துள்ளது. அத்தோடு   புதிய வீடுகளை அமைக்க வேண்டும் என்பதையும் எமது கோரிக்கைகளில் ஒன்றாக முன்வைத்து போரடி வந்துள்ளோம். வீடு வசதி/ வாடகை சார்ந்த பிரச்சினை இங்கிலாந்தில், குறிப்பாக லண்டனில் மிக அதிகம். தொழிலாளர் குறைந்த செலவில் வாழக் கூடய புதிய வீடுகள் கட்டப் படவேண்டும். புதிய கவுன்சில் வீடுகள் கட்டப்பட்ட வேண்டும். வாடகை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏற்றப் படக் கூடாது என்ற கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும். போன்ற கோரிக்கைகளை நாம் முன் வைத்து வந்துள்ளோம்.

கோபினின் மக்கள் நலன்சார் கொள்கைகள், அதாவது உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக ஊதிய அதிகரிப்பு, அரசு வீடமைப்பு திட்டங்கள், வேலை நேர குறைப்பு, இலவச கல்வி மற்றும் சுகாதார சேவைகள் போன்ற கொள்கைகளுக்கு ஆதரவு அளித்த போது, நாங்கள் பல கேள்விகளை சந்திக்க வேண்டி இருந்தது. குறிப்பாக தீவிர வலது சாரிகள் அதற்கான பணம் இல்லை எனவும் நாம் கனவில் வாழ்கின்றோம் என்றும் பிரச்சாரம் செய்தனர். இருக்கும் எமது பணத்தை எமக்காக அவர்கள் செலவு செய்ய தயாரில்லை என்பதை நாம் சுட்டிக் காட்டி இருந்தோம். “இப்போது அரசாங்கத்திடம் கொட்டிக்கிடக்கும் பணம் விளக்கை உரசிய உடன் வந்த பூதம் தந்ததா இல்லை வானத்திலிருந்து கொட்டியதா” என நாம் அவர்களை நோக்கி இன்று கேட்க வேண்டி உள்ளது. இந்த அரசாங்கம் இந்தளவு பணத்தை வைத்துக் கொண்டு பொது சேவைகளை குறைத்துக் கொண்டிருந்தது என்பதை இன்றாவது இவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். சுகாதார சேவைக்கான செலவு தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்ததன் விளைவால்தான் இன்று கொரோனவை எதிர்கொள்ள என். எச்.எஸ் (NHS) திணறுகிறது.

ஒவ்வொரு வருட மதிப்பீட்டின்படி  வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்த போதும், அவர்கள் மழையிலும் குளிரிலும் கஷ்டப்பட்டு வீதிகளில் இறந்து கிடந்த போதும் இந்த அரசாங்கம் அவர்களுக்கு எந்த ஒரு திட்டமும் ஒழுங்கமைத்து தரவில்லை. இருப்பினும் இந்த தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக திடீரென்று அவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தி இருப்பது வரவேற்க வேண்டியதாகும். ஆனால் இத்திட்டம் எது வரை நீடிக்கும் என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது. வீடற்றவர்கள் நிரந்தரமான தங்கும் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கொரோனா முடிவுக்கு வரும் பொழுது அவர்கள் வீதிக்கு மறுபடியும் செல்ல முடியாது. வீடற்றவர்களுக்கு அரசு வீடமைப்பு திட்டங்களினுடாக வீடுகளை அமைத்து நிரந்தரமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்சொலிடாரிட்டி ஆணித்தணமாக முன்வைக்கிறது.