உலகை குலுக்கிய 8 நிமிடம் 46 செக்கன்

Tamil Solidarity BLM Protest in london
1,332 . Views .

மே 25  2020 அமெரிக்காவின்  Minneapolis என்ற இடத்தில்   ஜோர்ஜ் பிளாய்ட்  காவல்துறை  அதிகாரியால்  கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். நிறவெறி கொண்ட வெள்ளை காவல்துறை அதிகாரி ஒருவன் ஜோர்ஜ் பிளாய்ட்  கழுத்தில் முழங்காலை வைத்து 8 நிமிடம் 46 செக்கன் தொடர்ந்து அழுத்தி கோரப்படுகொலை செய்த நிகழ்வு உலகெங்கும் பேரதிர்வை உருவாக்கி உள்ளது. இந்த கொலைக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.

போராட்டத்தை அடக்குவதற்காக இராணுவ காவல்துறை மற்றும் விசேட பாதுகாப்புப் பிரிவினர் என பலமான அடக்குமுறை முன்னெடுக்கப்பட்டது. பல இடங்களில் இராணுவ காவல்துறையும், காவல் துறையும் சேர்ந்து போராட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இனவாத கருத்துக்களை பரப்பி வருகிறார். இராணுவம் வரவழைக்கப்பட்டு போராட்டம் முடக்கப்படும் என மிரட்டியது இன்று அவருக்கு எதிரான பெரும் எதிர்வினையை அதிகாரத்துவம் மத்தியிலேயே ஏற்படுத்தி உள்ளது. போராட்டக்காரர்களை கைது செய்து வரலாற்றில் இல்லாத தண்டனை கொடுங்கள் என்கிறார் ட்ரம்ப். ஆனாலும் மக்கள் எந்த அச்சமும் இன்றி வீதியில் இறங்கி போராடிக் கொண்டு இருக்கிறார்கள். #BLM / Black Lives Matter என்ற சுலோகனோடு பரவும் இந்த போராட்ட இயக்கம் உலகம் முழுவதும் பற்றி பரவி வருகிறது.

அமெரிக்க முதலாளித்துவம் சுரண்டல்கள், படுகொலைகள் மற்றும் இனவெறி முதலிய பல்வேறு அடக்குமுறைகளை உள்வாங்கி இயங்கி வந்திருக்கிறது. நிறவாத அடிப்படையிலான வன்முறை என்பது அமெரிக்காவின் உருவாக்கத்தில் இருந்தே ஊறிக் கிடக்கிறது. அமெரிக்க முதலாளித்துவத்தால்  ஆபிரிக்க மக்கள் அடிமைகளாக கொண்டுவரப்பட்டு கசக்கி பிழியப்பட்டார்கள். அமெரிக்க சிவில் யுத்தத்தின் தேவையின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட அடிமை முறை மக்களுக்கு மிகப் பெரிய விடுதலையாக இருந்தது. மார்க்ஸ் உட்பட எல்லோரும் மிகப் பெரிய மனித விடுதலையாக மனிதாபிமான அடிப்படையில் இதை பார்த்தார்கள். ஆனால் அடிமையாக நடத்தப்படுவது அழித்தொழிக்கப்பட்டதா  என்றால் இல்லை. பழைய அடிமை முறை ஒழிக்கப்பட்டு ஊதிய அடிமை முறைக்குள் இந்த மக்கள் தள்ளப் பட்டார்கள். இது இன்றுவரை தொடர்கின்றது. பெரும்பான்மை கறுப்பு மக்கள் இன்று வரை மிகவும் குறைந்த ஊதியத்திற்கே வேலை செய்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்து அமெரிக்காவில் மிகவும் பொருளாதார அடி மட்டத்திலேயே கறுப்பு மக்கள் இருந்தார்கள். அவர்கள் வாழும் பகுதிகள் மிகவும் வறிய பகுதிகளாக இன்றும் இருந்து வருகிறது. அமெரிக்க அதிகாரத்தில் பங்கு இல்லாதவர்களாகவும் அரசியற் குரல் முடக்கப்படவர்களாவும் இருந்து வருகிறார்கள். அதிகாரம் தன்னை தக்க வைத்துக் கொள்ள இந்த மக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை நியாயப்படுத்தப் பட்டு வருகிறது. அதிகார சக்திகளிடம் இருந்து உரிமைகளை பறித்தெடுக்க கறுப்பு மக்கள் போராட்ட அரசியல் நோக்கி நகர்வது தவிர்க்க முடியாமல் இருந்தது.

1940-களின் பிற்பகுதியில் – பின்பு 1960 களில் –  சிவில் உரிமைகள் இயக்கம் எழுச்சி பெற்றது. இந்த எழுச்சி ஒருவகை கறுப்பு தேசியமாகவும் உருவெடுத்தது. இருப்பினும் இந்த போராட்டங்கள் தூர நோக்கு கொண்ட தெளிவான அமைப்பு திரட்டல் அடிப்படையில் நிகழவில்லை. சிவில் உரிமை இயக்கமாக வெடித்த போராட்டங்கள் பல்வேறு வடிவங்களை எடுத்த பொழுதும் ஒரு எல்லையை தாண்டி நகர முடியாமல் நின்றதற்கு காரணம் இந்த இயக்கத்தின் மேல் அரசு செய்த வன்முறையும் அதன் தலைமைகளிடம் இருந்த அரசியற் குறைபாடும் என சொல்ல முடியும்.

ஆயினும் இது மிகவும் வீரியமான இயக்கமாக இயங்கி வந்தது. அமெரிக்க அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களை பாதுகாக்க கறுப்பு மக்கள் இருக்கும் இடங்களில் கமிட்டிகள் அமைக்கப்பட்டு அவர்கள் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு வழங்குவதும் நிகழ்ந்தது. இந்த நேரத்தில் அமெரிக்க அரசு மிகவும் மூர்க்கமாக இந்த இயக்கதை எதிர் கொண்டது. வெள்ளை கறுப்பு பிரிவினை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அதற்கு எதிரான கறுப்பு மக்கள் சுடப்பட வேண்டும் எனவும் கூட அதிகார சக்திகள் பல வாதிட்டன. இதைத்தான் கொப்பி செய்து சமீபத்தில் ‘கலவரம் தொடங்க துப்பாக்கி சூடு ஆரம்பிக்கும்’ என ட்ரம்ப் கொலை மிரட்டல் விட்டார். இது மிக கேவலமான நிறவெறி பேச்சு.

சிவில் உரிமை இயக்கத்தை சோவியத் யூனியன்  கைப்பற்றிவிடும் என்ற பயம் காட்டப்பட்டு பல தலைவர்கள் வேட்டையாடப்பட்டனர். ஆளுனர் மக்காத்தி  தலைமையில் இடதுசாரி கருத்துக் கொண்டவர்கள் வேட்டையாடப்பட்டது நிகழ்ந்ததையும் இங்கு கவனிக்க வேண்டும். இதேவேளை 1955இல் Montgomery பஸ் நிறுத்தத்துக்கு தலைமை தாங்கும் மார்ட்டின் லூதர் கிங் – ஒரு மத போதகர்- மிகப்பெரும் செல்வாக்கு மிக்க தலைவராக வளர்ச்சி பெற்றார். ஆரம்பத்தில் அவர் எடுத்த நிலைப்பாடு விரைவில் மாற்றத்துக்கு உள்ளாக வேண்டி ஏற்பட்டு விட்டது. கறுப்பு மக்களின் மீதான அடக்குமுறைகளை நிறுத்துவது என்பது இந்த முதலாளித்துவ கட்டமைப்புக்குள் சாத்தியமில்லை என்பதை மார்ட்டின் லூதர் விரைவில் உணர வேண்டி ஏற்படுகிறது. ஒரு மத போதகர் முதலாளித்துவ எதிர்ப்பாளராக மாற வேண்டி ஏற்படுகிறது. 1968ல் ஏப்ரல் 4 தொழிலாளர் போராட்டத்தை ஆதரிக்க செல்லும் பொழுது அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவ்வாறு தலைமைகளை கொன்ற அதே தருணம் இந்த போராட்டதினை மழுங்கடிக்க அரச ஆதரவு செய்யும் கறுப்பு மேட்டுக்குடி ஒன்று திட்டமிட்டு உருவாக்கப்படுவதும் ஆரம்பித்து வைக்கப் பட்டது. இவர்கள் அந்த மக்களின் பிரதிநிதிகளாக்கப்பட்டார்கள். இவர்கள் கறுப்பு பிரநிதிகள் என அழைக்கப்பட்ட போதும் உண்மையில் அந்த மக்களின் பிரதிநிதிகளாக இவர்கள் இயங்கவில்லை. மாறாக அரச அதிகாரத்தை தக்கவைப்பாதும் அரசுக்கு எதிர்ரான எதிர்ப்பை நிறுத்தி வைப்பதும் இவர்கள் செய்து வருகின்றனர்.

நீங்கள் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வரலாம் ஆனால் கறுப்பின மக்களின் விடுதலைக்காக எதையும் செய்ய முடியாது. அமெரிக்காவின் முதலாவது கறுப்பு ஜனாதிபதியாக ஒபாமா தெரிவானது நமக்கு தெரியும். இன்று பல நகரங்களின் மேயர்களாகவும் – கவர்னர்களாகவும் பல கறுப்பு பிரதிநிதிகள் இருக்கின்றார்கள். இவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில்தான் நிறவெறி தாக்குதல்களும் கொலைகளும் நடைபெற்று வருகிறது. தாக்குதலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கப் படுவதில்லை. இங்கு நாங்கள் நுட்பமாகப் பார்க்க வேண்டிய விடயம் ஒன்று இருக்கின்றது.  கறுப்பு மக்களை சார்ந்த ஒருவர் ஜனாதிபதியாக வந்துவிட்டால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடுமா? இல்லை. இந்த பீரோகிரசியும் இராணுவமும் காவல் துறையும் மக்களுக்கானது அல்ல. அவை இந்த முதலாளித்துவ அதிகாரத்தை பாதுகாப்பதற்கானது. இதை அழித்தொழிக்காமல் எந்த அடக்குமுறைக்கும் தீர்வு இல்லை.

BLM(Black lives Matters- கறுப்பு உயிர்களும் பெருமதியானதே) என்ற கோஷத்தை முன்வைப்பதால் மாத்திரம் நிறவெறியை அழித்துவிட முடியுமா? அல்லது வெள்ளையர்கள்  அனைவரும் தமக்கு எதிரானவர்கள் என்று அனைவரையும் நமக்கு எதிராக நிறுத்துவது சரியா? நீங்கள் கடந்த கால ட்ரம்ப்பின் தேர்தல் பிரசாரத்தை பாருங்கள். ‘வெள்ளை தொழிலாளர் வர்க்கமே நாங்கள் உங்களுக்காக போராடுகின்றோம்’ என  தொழிலாளர்களை பிரித்த வெற்றி மூலம் அதி தீவிர வலதுசாரிகள் செல்வாக்கை வளர்த்து வருகிறார்கள். அதையே நாமும் செய்து எமது பலத்தை இழக்க போகிறோமா என்பதை சிந்திக்க வேண்டி இருக்கின்றது. Black Lives Matter  என்று மாத்திரம்  சொல்லிவிட்டுப் போக முடியாது. இவ்வாறு  சுலோகன்ங்களை மாத்திரம் சொல்லிவிட்டு போவதற்கு பிரபலங்களும், லிபிரல் மேட்டுக்குடிகளும் வருவார்கள். முதலாளித்துவ அடக்குமுறையை ஆதரித்துக் கொண்டு மறு பக்கத்தில்  BLM என்று கூறிவிட்டு போவது  அவர்களுக்கு இனிப்பானதாக இருக்கும். ஆனால் அவர்களால் என்றும்  தீர்வுகளை நோக்கி நகர முடியாது. எல்லா கறுப்பு மக்களும் ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று மக்கள் பக்கம் நிற்பவர்கள் அல்ல. அதேபோல் எல்லா வெள்ளை மக்களும் விடுதலைக்கு எதிரானவர்கள் அல்ல. எமது போராட்ட ஒருங்கிணைப்பு என்பது நிற அடிப்படையிலோ அல்லது வேறு எந்த அடையாள அடிப்படையிலோ அன்றி கொள்கை அடிப்படையில் நிகழ வேண்டும்.

 இன்று எல்லா நாடுகளிலும் முன்வைக்கப்படும் பிரபலமான வசனம் ஒன்று உள்ளது “உங்கள் வாக்கின் பலத்தைக்  காட்டுங்கள்’ இது மிகவும் நகைப்புக்குரிய சொற்பதம். நாம் எப்படி வாக்கு பலத்தை காட்ட முடியும்?  டெமோகிரட்டிக் கட்சி அல்லது ரிப்பப்ளிக்கன் கட்சி தலைமைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க எமக்கு வழங்கப் படும் உரிமை எத்தைகைய பலத்தை எமக்கு கொண்டு வரும்? எமக்கான சரியான தேர்வு தேர்தலில் வழங்கப் படுகிறதா?   வாக்குப் பலத்தைக் காட்ட எம்முன்னால் எமக்கான தெரிவுகள் இல்லை. எமது தெரிவுகள் அனைத்தும் தீமையை தேர்வது அல்லது குறை தீமை தேர்வது என்றே சுருங்கி கிடக்கிறது. வாக்கின் பலத்தைக் காட்டுங்கள் என்பவர்கள் ஒருமாற்றைக் காட்டவேண்டும். அல்லது மாற்றை கட்டுவதற்கு உதவவாவது வேண்டும்.

 ஜோர்ஜ் பிளாய்ட்டின் மரணம் என்பது ஏற்கனவேகொதி நிலையில் இருந்த மக்களை உசுப்பி விட்டு இருக்கின்றது. இன்று மக்கள் வீதிகளில் நிற்கின்றார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். எதிர்காலத்துக்காக  போராட்ட களத்தில் நிற்கின்றார்கள். அவர்களின் எதிர்காலம் தற்போதைய முதலாளித்துவ கட்டமைப்புக்குள் சிதைந்து போவதை அனுமதிக்க முடியாது. ஒரு திட்டமிட்ட அரசியல்  பொருளாதார முறையை நோக்கி நகர வேண்டிய தேவை இருக்கின்றது.

 இந்தப் போராட்டத்தை மார்ட்டின் லூதர் கிங்கின் படுகொலையுடன் அவிழ்ந்த சிவில் உரிமை போராட்ட வரலாற்று முடிச்சியில் இருந்து புதிய வரலாற்றை எழுதுவோம். இந்த பேர் இயக்கத்தில் இருந்து அறிந்த படிப்பினைகளை உள்வாங்கி நாம் எமது புதிய அரசியல் முன்னோக்கு மற்றும் திட்டமிடல்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.