வக்சின் தேசியம்.- Vaccine Nationalism

1,278 . Views .

“தேசியம் என்பது குழந்தைகளை பீடிக்கும் தட்டமை மாதிரி மக்களை வாட்டும் கொடிய  நோய்” என , தேசியம் பற்றி  அல்பேட் ஐன்ஸ்டீன்  கூறிய பிரபலமான கூற்றொன்று உண்டு. இக்கூற்றை பெரும் ஜேர்மனிய தேசியவாத எழுச்சியினால் அல்லலுற்ற  யூத இனத்தின் குரலாக  கொள்ளமுடிந்தாலும்,  கடந்த நூற்றாண்டின் முதல் பகுதியில் ஜேர்மனியில் ஏற்பட்ட பெரும்தேசிய எழுச்சியையும் , அடக்கப்படும் சிறுபான்மை இனங்கள் தங்களது அடக்குமுறைக்கெதிதராக ஒரு தேசிய இனமாக எழுச்சி கொள்வதையும் ஒரே தட்டில் வைத்து பார்கமுடியுமா?  எனினும் ல நாடுகளில் தேசிய நலன் என்ற அடிப்படையில் காப்பாற்றப்படுவது மக்கள் நலனாக இருப்பதில்லை. கொரோனா தொற்றுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வக்சின் சார் நடைமுறைகளும் இதற்கு விதி விலக்கல்ல.   எப்படியிருந்தபோதும் உலகில்  கொடும் தொற்றான  தட்டம்மை என்னும் measles  நோயின் தொற்று பெருமளவு குறைந்ததிற்கு வக்சினே முதற்காரணம் என்பதே முக்கியமானது.  

இந்தக் கொரொனா தொற்றின் அண்மைய காலங்களில் ஊடகங்கள் தொடங்கி உலகத்தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் வரை அடிக்கடி உச்சரிக்கும் ஒரு சொற்றொடர் வக்சின் தேசியம்.  மேலதிகமாக உலக சுகாதார நிறுவனத்துடைய தலைவர் வக்சின் தேசியம் பற்றி குறிப்பிடும்போது  உலகானது  கடும் அறம்சார் வீழ்ச்சியின் விளிம்பில் (The world is on the brink of “catastrophic moral failure ) வந்து நிற்பதாக காட்டமாக கூறியிருக்கிறார்

இந்த வக்சின் தேசியம் என்பது என்ன ?

 2021 பெப்ருவரி வரை கிட்டத்தட்ட ஏழு வைகயான வக்சின்கள் கோவிட் —19 ற்குகெதிராக பாவனையிலுள்ளன. அறுபது  வரையான வக்சின்கள்  மருத்துவ பரிசோதனகளின் ( clinical trials ) படிநிலைகளிலுள்ளன. தற்போது பாவனைக்கு வந்துள்ள  Pfizer வக்சினில் மூன்றிலொரு பகுதியும் Oxford/Aztra zenica  வக்சினில் 50 வீதமும் , Moderna  வக்சினினில் முழுவதும் பணக்கார நாடுகளால் கொள்வனவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நாடுகளில்  பிரித்தானியா தங்கள் சனத்தொகையை விட மூன்று மடங்கும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் இரண்டு மடங்கும் , இறப்பு வீதம் மிக குறைந்த வீதமுள்ள கனடா ஐந்து மடங்கும்,  தொற்றுக்கள் மிக மிக குறைவாகவுள்ள நியூசிலாந்து இரண்டு மடங்கும் வக்சினிற்கான முன்பதிவை செய்துள்ளன. இவ்வாறு பணக்கார நாடுகள் உலகில் தயாரிக்கபடும் வக்சினில் பெரும்பகுதியை  தங்கள்  நாட்டிற்காக மட்டுமே மருந்து நிறுவனங்களிடமிருந்து  கொள்வனவு செய்கின்றன. முதலில் என் நாட்டிற்குத்தான்  வக்சின் எனும் இந்த செயற்பாடே வக்சின் தேசியம் என கொள்ளப்படுகிறது.     இதற்கு முத்தாய்ப்பாக  ஐரோப்பிய யூனியன் தங்களுக்குரிய வக்சின் விநியோகத்தை Aztra zeneca  நிறுவனம் பூர்த்தி செய்யவில்லை எனச் சொல்லி மற்ற நாடுகளுக்கான  Oxford/Aztra zeneca  வக்சினின் ஏற்றுமதியை தடை செய்திருந்தது. மஎன்பது பிரித்தானிய -சுவீடன் பல் நாட்டு மருந்து நிறுவனம். இதன் உற்பத்தி அலகொன்று பெல்ஜியத்தில் உள்ளது. இதிலிருந்தான ஏற்றுமதியை குறிப்பாக பிரித்தானியாவிற்கானதை  ஐரோப்பிய யூனியன் தடை செய்திருந்தது.  . இதனால் பிரித்தானிவிற்கும், ஐரோப்பிய யூனியனிற்க்கும் முறுகல் நிலை ஏற்படுள்ளது. ஏற்பட்டது. பிரித்தானியா மட்டுமல்ல இந்த வக்சினை பெறவிருந்த பல நாடுகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தன.அதே வேளை  பிரித்தானியாவும் , அமெரிக்காவும் பெருமளவு நிதியினை  வக்சின் தயாரிப்பிற்கு ஒதுக்கியிருந்தபோது ஐரோப்பிய யூனியன் ஒப்பீட்டளவில் குறைவான பங்களிப்பே வழங்கி இருக்கிறது அல்லது சமயங்களில் பார்வையாராகவே இருந்திருக்கிறது. ஆய்வுமுறையிலும், மருத்துவ பரிசோதனைகளிலும் வெளிப்படைத்தனமை இல்லாத போதும் சீனா, ரசியா ஆகிய நாடுகள் வக்சின் தயாரிப்பிலும் விநியோகத்திலும் முனைப்பாக இருப்பதும் கவனிக்கத்தக்கது. ஏன் அரசுகள்   மக்கள்  வரிப்பனத்தை  பெரும் மருந்து நிறுவனங்களிடம் வாரி இறைத்து  அவர்களை பெரும் லாபம் பெற வசதி ஏற்படுத்திக் கொடுக்கின்றன?  மக்களுக்கு  அத்தியாவசியமான தேவையான மருந்து உற்பத்தியை  ஏன் பெரும்பாலன அரசுகள் தாம் தயாரிக்காமல்  தனியாரிடம் கொடுக்கின்றன? அரசு- முதலாளிகள் நலன் என்பதைத்தாண்டி இதற்கு பின்னாலிருக்கும்  காரணங்கள் ஆய்வுக்குரியவை .  (கொரோனா பற்றிய மற்றைய எதிர் கட்டுரைகளைப் பார்க்க). 

தற்போது வரை லாபாம் தவிர்த்து  குறைவான விலையில் விநியோகிக்கபடும் ஒக்ஸ்போட் பல்கலைகழகமும் Aztra Zeneca வும் இணைந்து தயாரித்த வக்சின் இதே விலையில் அந்நிறுவனம் தொடர்ந்து மக்களுக்கு விநியோகிக்குமா என்பது தொடர்பில் தெளிவில்லை. 

SARS -1 வைரஸ் தொற்று ஏற்பட்டபோது  இனிவரும் காலங்களில்  பெரும் தொற்றுக்களை உலகம்  எதிர்நோக்க வேண்டுவரும் என  விஞ்ஞானிகள் தொடங்கி  பெரும் முதலாளியாகவிருந்து தற்போது பரோபகாரியாகா (philanthropist) மாறியிருக்கிம் பில்கேற்ஸ் வரை உலக நாடுகளை எச்சரித்திருந்தனர். ஆனால்

ராணுவத்திற்கு பில்லியன் கணக்கில் நிதி ஒதுக்கும் அரசுகள் பெரும் தொற்று ஏற்படும்போது அதை எதிர்கொள்வதற்கு தயாராகவிருக்கவில்லை. இந்த தொற்றுக்காலத்திலும்  பிரதமர் மோடிக்கு 8500 சொகுசு விமானம் வாங்கிய  இந்தியாவில்தான் கூலித்தொழிலாளர்கள்  நகரங்களிலிருந்து  தங்கள் சொந்த இடங்களுக்கு பெண்கள், குழந்தைகளுடன்  ஆயிரம் கிலோமீற்ரர்கள் நடந்தே சென்ற மனித அவலமும் நடந்தது.

இது தவிர இன்னொரு வகையான வக்சின் தேசியயமும் உண்டு . பிரித்தானியாவில்  

Pfizer வக்சின் முதலில் பாவனைக்கு வந்தபோது அத்தடுப்பூசியை போட அழைக்கப்பட்ட முதிய ஆங்கிலேயர்கள் சிலர் தாங்கள் English vaccine ( Oxford/Aztra zeneca )வக்சின் வந்த பிறகு  அதை போட்டுக்கொள்வதாகாக  Pfizer வக்சினை மறுத்திருந்தார்கள். இந்தச் சிறுமையான போக்கை இந்தியாவிலும் பார்க்கலாம்.  இதுவரை காலமும் இந்தியத் தேசியம் இரண்டு சந்தர்பங்களில் எழுச்சிகொள்வதை பார்த்து இருக்கிறோம். ஒன்று  கிரிக்கெட் விளையாட்டின் போதும் , மற்றது பாகிஸ்தானுடன் மல்லுக்கட்டும்போதும் இந்திய தேசியம் பொங்கிக்பிரவிக்கும். தற்போது அந்த வரிசசையில் வக்சினும் வந்து சேர்ந்திருக்கிறது.  Oxford/Aztra zenica  வுடன் இனைந்து இந்தியாவின் பாரத் டெக் நிறுவனம் இந்த வருட முதற்பகுதியில் இந்தியாவில் முதல் வக்சினை தயாரிதிருந்தது. இதனை தங்கள் மண்ணின் கண்டுபிடிப்பென ஊடகங்களும் அரசியல்வாதிகளும் கோசமிட்டன. அந்த  வக்சின் எத்தனை மக்களை சென்றடைகிறது ,என்பதெல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. அங்கு தற்போது மீண்டும் வேகமாக பரவி வரும் புத்திய தொற்று – மேலும் அதிகரிக்கும் இறப்பு பற்றிப்  பேசப்படுவதில்லை. 

ரஷ்யாவும் தங்கள் வக்சினுக்கு ஸ்புட்னிக் -என பெயரிட்டதொன்றும் தற்செயலானதல்ல. அமெரிக்காவிற்கும், சோவியத்யூனியனுக்கும் பனிப்போர் நிலவிய காலத்தில் அது அந்த யுத்தம் விண்வெளி பயணத்திலும் தொடர்ந்தது. 1957 இல் சோவியத்யூனியன் முதன்முதலாக விண்வெளிக்கு அனுப்பிய செயற்கைகோளின் பெயரே ஸ்புட்னிக். வக்சின் மூலம் மீண்டும் தமது ‘முதன்மை’ நிலையை காட்ட நினைக்கிறது ரஷ்யா.

வக்சின் விநியோகமும் நாடுகளின் அரசியல் நகர்வுகளும்- Vaccine Diplomacy.

 வலிமை மிகுந்த நாடுகள் தங்களுக்கு கிடைக்கும் எந்த ஒரு சிறுதுரும்புச்சீட்டையும் தங்கள் நாட்டு நலன் நோக்கி மட்டுமே பயன்படுத்துவது வழமையானது. வக்சினையும் அவ்வாறே பலநாடுகள் கையாள்கின்றன. மேற்குலகம் தங்கள் நாடுகளுக்குள் வக்சினைப் பதுக்கிக்கொண்டிருக்க ரஷ்யா தனது ஸ்புட்னிக் v வக்சினை மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு வராத நிலையிலேயே கடந்த வருட இறுதியில் ஆஜெண்டினா,மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு விநியோகிக்க ஆரம்பித்துவிட்டது. அண்மையில்தான் இவ்வக்சின் பாவனைக்கு  பாதுகாப்பானதென தரவுகள்( safety data )  இருப்பதாக  Lancet மருத்துவ ஆய்வு இதழ் கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

லத்தீன் அமெரிக்க நாடுகள் தவிர முன்னாள் சோவியத்யூனியனின் வோர்சோ அணி ( Warsaw pact) நாடுகளான செக் குடியரசு, ஹங்கேரி ,மற்றும் சேர்பியா, மொன்ரனிகிரோ மாதிரியான கிழக்கு, தெற்கு ஐரோப்பிய நாடுகளுக்கான வக்சின் விநியோகத்தையும்  ரஷ்யா ஆரம்பித்திருக்கிறது.   இந்த பெரும் தொற்றுக்காலத்தில் ஐரோப்பிய யூனியனில் அங்கத்துவம் வகிக்கும் இந்த நடுத்தர அல்லது குறைந்த வருமானமுள்ள நாடுகள் பற்றி  ஐரோப்பிய யூனியன்   அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை. இந்த நாடுகளுக்கு மட்டுமல்ல பணக்கார ஐரோப்பிய யூனியன் நாடுகள்  தங்கள் நாடுகளுக்காக கொள்வனவு செய்த வக்சினை கூட உரிய முறையில் மக்களுக்கு கொண்டு சேர்க்கவில்லை. உதாரணமாக ஜேர்மனியில் பல ஆயிரம் வக்சின்கள் குடுவைகள் மக்களின் கைகளை சென்றடையாமல் குளிர்சாதன பெட்டியில் பல வாரங்கள் உறங்கிகொண்டிருந்தன. தாம் தவறு செய்து விட்டோம் என அரசே ஒத்துக்கொளுமளவிற்கு  அங்கு வக்சின் விநியோகம் மோசமான பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் மற்றும் மேற்குலகின்( பிரித்தானியாதவிர)  மந்தப்போக்கினை ரஷ்யா கச்சிதமாக பயன்படுத்தி தனது பழைய  செல்வாக்கை  ஸ்புட்னிக்-v  வக்சின்  மூலம் புதிப்பித்துள்ளது. இது தவிர மேற்குலக நாடுகளுக்கு எதிரான போக்கை கொண்ட ஈரான், துருக்கி  ஆகிய நாடுகளுக்கும்   ரஷ்யா தனது வக்சினை மில்லியன் கணக்கில் அனுப்பியுள்ளது.இன்னொரு பக்கம்  மக்கள் மீது கடும் அடக்கு முறையினை பிரோயோகித்து, கொன்று குவித்துக் கொண்டு இருக்கும் மியன்மார் இராணுவ தளபதிகளுடனும் வக்சின்  ஒப்பந்தத்தை போட்டுள்ளது ரஷ்யா. ரஷ்யா  இப்படி நண்பர்கள் குழாத்தை பெருப்பிக்க  சீனா ஒரு படி மேல் சென்று தனது நகர்வுகளை மேற்கொள்கிறது. 

சீனா தனது பட்டுப்பாதையின் (  Silk Road) ஞாபகங்களிலிருந்து  அதன் புதிய பதிப்பாக 2013 ம் ஆண்டளவில் தொடங்கியதே சீனாவின் பிரபலமான  புதிய பொருளாதார கட்டுமான வழித்தடங்கள் ( Belt & Road Initiatives) எனும் பொருளாதரா அபிவிருத்தித்திட்டம்.  இத்திட்டத்தின் நோக்கம் ஆசியாவிலிருந்து தொடங்கி உலகின் பல நாடுகள் வரை  தரை மற்றும் கடல் வழியே பொருளாதர வழித்தடங்களை உருவாக்குதல். ஏற்கனவே இலங்கை,பாகிஸ்தான் மாதிரியான தெற்காசி  நாடுகளில்   சீனா இத்திட்டத்தைசெயல்படுத்திக்கொண்டிருக்கிறது. அது தற்போது தற்போது தெற்கு ஐரோப்பா வரை நீண்டிருக்கிறது. சீனா  உலகின் பல நாடுகளுக்கு 500 மில்லியன் சீனோபார்ம் (Sinopharm)  வக்சினை வழங்குவதன் மூலம் இவ்வழித்தடத்தை அகலமாக்கியுள்ளது. மேற்குலக  நாடுகளால் கண்டுகொள்ளப்படாத நாடுகள் அல்லது மேற்கின் மீது அதிருப்தி கொண்ட நாடுகளே சீனாவின் இலக்கு. வட ஆபிரிக்க, ஐக்கிய அரபு, மற்றும் தெற்கு,கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இவற்றுள் அடங்கும். கொங்கொங்கில் ஜனநாயக மறுசீரமைப்பு கோரி ஆர்பாட்டம் நடத்திய மக்கள் மீது  தாக்குதல் நடத்தி  கடுமையாக ஒடுக்கியது,  சிங்க்ஜங் பிரதேச உஜ்ஜிர் முஸ்லிம் சிறுபான்மை இனக்குழுமத்தின மீதான சீன அரசின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை  என சீனா மீது  உலகெங்கும் பல கண்டனங்களை எழுப்பிய நிலையில் . அத்தகைய களங்கத்தை போக்கவும், தனது பொருளாதார பூகோள நலன்களை விருத்தி செய்யவும் சீனா இந்த வக்சினை ஒரு கருவியாக பாவிப்பதாக பரவலாக கருதப்படுகிறது. 

இதுபோக  சீனா  எத்தகைய நகர்வுகளை மேற்கொண்டாலும்  அதற்கு எதிராக அல்லது நிகராக  அரசியல் நகர்வுகளை இந்தியா மேற்கொள்வதே தற்போதைய வழமையாக இருக்கிறது. SAARC  அமைப்பு நாடுகளானா நேபாளம், பூட்டான், வங்காளாதேசம், இலங்கை, மாலைதீவு ஆகிய நாடுகளுக்கும் , பாகிஸ்தானை தாண்டி ஆப்கானிஸ்தானிற்கும் வக்சினை நன்கொடையாகவும், வர்த்தக அடிப்படையிலும் விநியோகத்திருக்கிறது இந்தியா. இதில்  நேபாளம், வங்காளதேசம் ஆகிய நாடுகளுக்கு வக்சின் வழங்குதலில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும்  ஒரு வித போட்டியும் இருந்தது.  டெல்லியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம், ஆளும் பாரதீய ஜனதா அரசின்  மக்களின் ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீதான  அடக்குமுறை என்பவற்றால் உலகரங்கில்  சேதமான தனது பெயரை இந்த வக்சின் பெருந்தன்மை  மூலம் மீட்கலாம் என இந்தியா நம்புகிறது. ரஷ்யாவும் , சீனாவும் வக்சின் மூலம் பல நாடுகளில் தங்கள் செல்வாக்கை அதிகப்படுதிக்கொண்டிருப்பதை  காலம்தாழ்த்தி உணர்ந்துகொண்ட மேற்குலக நாடுகள்   COVAX  எனும் திட்டத்திற்கு தங்கள் பங்களிப்பினை வழங்கியிருக்கிறார்கள். இதில் அமெரிகாவும் ( 4 பில்லியன் டொலர்), ஜேர்மனியும்(1094 மில்லியன் டொலர்), பிரித்தானியாவும் (735 மில்லியன் டொலர்) பெருமளவு நிதியினை வழங்கியுள்ளன. COVAX  ( The COVID-19 Vaccines Global Access Facility)  என்பது வக்சினை கொள்வனவு செய்ய முடியாத  வறிய நாடுகளுக்கான சமமான வக்சின் விநியோகத்தை உறுதிப்படுத்த உலக சுகாதார நிறுவனம் மற்றும் வேறு சில தன்னார்வ அமைப்புக்கள் சேர்ந்து உருவாக்கிய அமைப்பு.

COVAX திட்டத்தின் மூலம் கடந்த பெப்ருவரி மாத கடைசி பகுதியில் ஆறுலட்சம்  Oxford/Aztra zeneca  வக்சின்களை  ஆபிரிக்காவின் கானா நாட்டிற்கு அனுப்பப் பட்டுள்ளது. 

  நல்லெண்ண அடிப்படையிலோ அல்லது  பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவவோ வலிமையான பொருளாதரம் கொண்ட நாடுகள் வக்சினை நடுத்தர அல்லது குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு வழங்கியிருக்கலாம். அல்லது வழங்கிக்கொண்டிருக்கலாம். ஆனால் நடுத்தர, குறைந்த வருமானமுள்ள நாடுகளில் தொற்றுக்கள் கட்டுக்குள்ளிருப்பது பலம் பொருந்திய அல்லது அபிவிருத்தி அடைந்த நாடுளின் பொருளாதார நலனிற்கு  அவர்கள் சந்தைக்கு  எப்போதும் தேவையானதாகும். 

கோவிட்-19 ற்கெதிரான முதலாவது வக்சின் பாவனக்கு வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன.  வசதிவாய்ப்புப்பெற்ற  நாடுகள் தங்கள் சனத்தொகயின் கணிசமானோருக்கு தடுப்பூசியை வழங்கியுள்ளன.  இப்பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு ஆனால் ஒரு குடுவை வக்சின் இன்னமும் போய்ச்சேராத சில நாடுகள் இன்னமும் இப்பூமிப்பந்தில்  இருக்கின்றன என்பது ஒரு கசப்பான உண்மையாக இருக்கிறது. மேலும் இந்த வக்சின் தேசியம் பற்றிய உரையாடலில் இன்னொரு முக்கியமான, மனிதகுலத்திற்கு தேவையான சொற்றொடரொன்று இருக்கிறது -அது No one Safe Until everyone Safe.

 

உசாத்துணை : 

 

  1. https://www.thinkglobalhealth.org/article/vaccine-spheres-influence-tracker
  2. https://www.newscientist.com/article/mg24833093-800-what-will-it-take-to-get-a-covid-19-vaccine-to-the-world
  3. https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(21)00234-8/fulltext
  4. https://pmj.bmj.com/content/84/997/599
  5. https://pubmed.ncbi.nlm.nih.gov/33012020/