நான்கு கோரிக்கையை வலியுறுத்தி அம்பிகை அவர்கள் 17 நாட்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றினை பிரித்தானியாவில் நடத்தியிருந்தார். அவர் முன் வைத்த கோரிக்கைகளில் ஒன்றை பிரித்தானியா ஏற்றுக் கொண்துவிட்டதாகக் கூறி அவரது சாகும்வரை உணவுதவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் பற்றி பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. அந்த நீதியினை பெற்றுவிட வேண்டும் என்ற உணர்வுடன் சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அம்பிகை அவர்களின் நோக்கத்தை தமிழ் சொலிடாரிட்டி மதிக்கின்றது. அதே நேரம் இந்த போராட்டத்தின் ஒழுங்கமைப்பு அதன் அரசியல் தெளிவற்ற தன்மை என்பன பற்றி எமக்கு கடுமையான விமர்சனம் உண்டு. அம்பிகை அவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து இலங்கையிலும் பல இடங்களில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தோம். இந்த போராட்டங்கள் அனைத்தும் ஐ.நா சபை மற்றும் மேற்குலக நாடுகளை நோக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே நடத்தப்பட்டன. ஐ.நா சபை மற்றும் மேற்குலகம், மனித உரிமைகளின் மீது கரிசனம் கொண்டு இயங்குகின்றன எனக் கட்டமைக்கப்பட்ட விம்பங்களை நம்பி – அதை பலப் படுத்துவதாகவே இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
2009 இல் நடைபெற்ற அனைத்து படுகொலைகளும் இவர்களின் மேற்பார்வையிலும், பங்களிப்புடனுமே நடந்து முடிந்ததை நாம் மறந்து விடலாமா? பிரித்தானியா 1984 ம் ஆண்டில் இருந்தே இலங்கையின் இராணுவத்தை கொலைகார இராணுவமாக மாற்றுவதற்குரிய அனைத்து பயிற்சிகளையும் வழங்கி வந்திருக்கிறது. இதை ‘கீனி மினி – யுத்த குற்றத்தில் இருந்து தப்பிய கூலிப்படைகள்’ என்கின்ற புத்தகம் சமீபத்தில் அம்பலபடுத்தியதை அறிவோம். இந்த அரசுகள் இன்றுவரை பல கொலைகளையும் அடக்குமுறைகளையும் உலகம் எங்கும் நடத்தி வருகின்றார்கள். இவர்களின் முன் நாங்கள் ‘அகிம்சை வழியில்’ எமது கோரிக்கைகளை முன்வைக்கின்றோம் எனபதும் – சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதும் பலன் அற்றது. இந்த அரசுகள் எமது கோரிக்கைகளை ஏற்று நடைமுறைபடுத்துவதற்குப் பதிலாக போலி வாக்குறுதிகளை மட்டுமே தருவார்கள். அதைப் போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் சாக விடுவார்கள். சாக விட்டும் இருக்கிறார்கள். தமக்கு தேவையானால் கொலையும் செய்வார்கள்.
எத்தகைய போராட்ட முறையை நாம் முன்னெடுக்க வேண்டும் என்ற கவனம் வேண்டும் என தமிழ் சொலிடாரிட்டி வலியுறுத்துவது இதனால்தான். அடையாள கவன ஈர்ப்பு போராட்டங்கள் வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஆனால் சரியான திட்டமிடல் – நோக்கு இன்றி அவை வெறுமனே பயனற்றுப் போய்விடும். அத்தகைய போராட்டங்களில் கூட யார் கவனத்தை நாம் ஈர்க்க வேண்டும்? அதற்கு என்ன செய்கிறோம் என நாம் சிந்திக்கிறோமா? பெரும் ஊடகங்கள் மற்றும் மேற்கத்திய அரசுகளின் பண்புகள் – அவற்றின் பின் இயங்கும் அரசியல் நிலை பற்றி எந்த அறிதலும் இன்றி நாம் போராட்ட முறையை வடிவமைத்துக் கொள்ள முடியாது.
அதனால்தான் தமிழ் சொலிடாரிட்டி சாகும் வரை உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுக்காதீர்கள் எனச் சொல்லி வருகிறது. ஒவ்வொரு உயிரின் முக்கியத்துவத்தையும் நாம் அறிவோம். அர்ப்பணிப்புள்ள செயற்பாட்டாளர்களின் உயிர்களின் பெறுமதியை நாங்கள் அறிவோம். அதனாலும்தான் வெற்றுக் காற்றுடன் வாள் வீசுவதற்கு உங்கள் உயிர்களை பணயம் வைக்காதீர்கள் எனக் கோருகிறோம். உயிரைக் கொடுத்து போராடுவதாயின் – எத்தகைய கோரிக்கைகளுக்கு எந்த போராட்ட வழிமுறைக்கு நாம் உயிரைக் கொடுக்க போகிறோம் என சிந்தக்க வேண்டாமா?
நடைபெற்ற இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை எந்த அமைப்புகளும் ஒழுங்கமைக்கமால் தமிழ் மக்களில் ஒருவராக அம்பிகை அவர்கள் முன்னெடுத்து இருக்கின்றார்கள் எனச் சொல்லப்படுகிறது. அவ்வாறுதான் மக்களுக்கு கூறப்பட்டது. அமைப்புகள் இல்லாமல் தனிமனிதர்களாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு ஒரு எல்லை இருக்கின்றது.
இந்தப் போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14/03/2021) போலீஸ் அடக்குமுறையை தொடர்ந்து அடுத்த நாள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அறிவோம். இந்த அடக்கு முறைக்கு எதிராக குரல் தர எந்த அமைப்புகள் முன்வந்தன. போலீசார் செயற்பாட்டாளர்களை முடக்கிய விதத்தையும் பின்பு பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டதையும் தமிழ் சொலிடாரிட்டி கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த அபராதம் கட்டும் வசதி பலரிடம் இல்லை. மிக கடின உழைப்பு வழங்கி குறைந்த ஊதியம் பெறும் இந்த செயற்பாட்டாளர்கள் இந்த அபராதத்தை கட்ட முடியாது. இது பற்றி பேச – அதற்கு எதிர்ப்பு செய்ய அமைப்புகள் முன்வர வேண்டும். ஆனால் அம்பிகை அவர்களை கைவிட்டது போல் இவர்களும் கைவிடப்படுவது நிகழ்கிறது என்றே தோன்றுகிறது.
இதே காலத்தில்தான் போலீஸ் வன்முறைக்கு எதிரான குரல் இங்கிலாந்தில் பலப்பட்டு வருகிறது. போலீஸ் கமிஷனர் ராஜினாமா செய்ய வேண்டும் என பலப்படும் குரலுடன் எமது குரலையும் இணைக்க நாம் தயங்கவில்லை. ஒரு தனி நபரால் இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. ஆதரவு தந்த தமிழ் அமைப்புகள் அடிவாங்கும் போது எங்கு ஓடி மறைந்தன எனத் தெரியவில்லை.
இதை தொடர்ந்து ‘உண்மை மற்றும் நீதிக்கான இயக்கம்’ உண்மைக்கு புறம்பான ஒரு அறிக்கையை விட்டது. அம்பிகை அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றைப் பிரித்தானிய அரசாங்கம் ஏற்றுக் கொண்டதாகவும் அதனால் இந்த போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. போராட்டம் ஆரம்பிக்கும் போது ‘தனிநபர்’ நடவடிக்கை எனச் சொல்லப்பட்டு பின்பு முடியும் போது ஒரு புது அமைப்பு எவ்வாறு பொறுப்பெடுத்து அறிக்கை விட்டது எனத் தெரியவில்லை. அம்பிகை அவர்களின் உயிரைப் பணயம் வைத்து மக்களை ஏமாற்றும் வேலை நடந்ததா என்ற கேள்விதான் பலருக்கும் எழுந்தது.
உண்மையில் அத்தகைய எந்த அறிக்கையையும் இங்கிலாந்து அரசு வெளியிடவில்லை. இதில் எந்தக் கோரிக்கையும் நிறைவேற்ற படப் போவதில்லை. மீண்டும் இலங்கைக்கு ‘அவகாசம்’ வழங்கும் திருவிழாதான் ஐ.நா வில் அரங்கேறியுள்ளது. தற்போதைய டோரி அரசின் தெற்காசிய நிலைப்பாடு பற்றி இதே காலப்பகுதியில் தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு கொண்டிருந்தன (அமெரிக்க வெளிவிவகார துறை மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜப்பான் நாட்டிற்கு விஜயம் செய்ததை தொடர்ந்து). இவற்றை எமது ‘அரசியற் செயற்பாட்டாளர்கள்’ கண்டுகொள்வதில்லை.
மக்களை அறிவு பூர்வமாக சிந்திக்க தூண்டும் செயல் நோக்கி நகர்வதை விட்டு தற்போது அம்பிகை அவர்களை பலிகடாவாக்கி தவறுகளை – பொய்களை பூசி மெழுகுவது நடந்து வருகிறது. அம்பிகை அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த பொழுது அதற்கு நிபந்தனையற்ற ஆதரவு எல்லாத் தரப்பில் இருந்தும் எழுந்தது.
கஜேந்திரகுமாரிலிருந்து கமல்ஹாசன் வரை – உருத்திரகுமாரிலிருந்து சீமான் வரை இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு விழுந்து கட்டி ஆதரவு வழங்கி இருந்தனர். எந்த அடிப்படையில் இந்த ஆதரவு வழங்கப் பட்டது? எந்த அடிப்படையில் ‘வெற்றி பெற வாழ்த்துக்கள்’ வழங்கப் பட்டது? ஐ.நா வும் இங்கிலாந்து அரசும் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு விடும் என நினைத்தீர்களா? அல்லது அம்பிகை சாகட்டும் அதற்கு பிறகு பார்க்கலாம் என கணக்குப் போட்டீர்களா? இது ஒரு அரசியல் கேள்வி செயற்பாட்டாளர்களே! நீங்கள் இது பற்றி சிந்தித்து தான் ஆகவேண்டும்.
சரி குறைந்தபட்சம் அவரது கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக ஏதாவது செயற்பாடுகளை முன்னெடுத்தீர்களா என்றால் அதுவும் இல்லை. வெறுமனவே ஆதரவு அறிக்கைகளையும் ட்டுவிடுக்களை மாத்திரம் போட்டுவிட்டு சென்று விட்டீர்கள். உங்களின் வெற்று ஆதரவால் என்ன பயன் கிடைத்தது? அம்பிகை அவர்களின் இறப்பில் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கு காத்துக்கொண்டு இருந்த ‘வல்லூறு அரசியல்’ என்றே இதை நாம் பார்க்க கூடியதாக இருக்கிறது.
இந்தப் போராட்டம் தோல்வியில் முடிவடைந்து இருக்கின்றது என்பது தெரிந்ததும் இப்பொழுது சிலர் அம்பிகை மீது கற்களை எறிய தொடங்கியிருக்கிறார்கள். போராட்டத்தின் ஆரம்பத்தில் அம்பிகை அவர்களுக்கு ஆதரவு அளித்து விட்டு இப்பொழுது அந்தர் பல்டி அடித்திருக்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ஆரம்பத்தில் நீங்கள் ஆதரித்த போராட்டம் இப்போது எவ்வாறு தவறாகிப் போனது? இதுவும் இதற்கு முன் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றும் தமிழர்களின் போராட்டத்தை ஐ.நாவுக்குள் முடக்கிவிடும் நடவடிக்கை என கஜேந்திரகுமார் பேசுகிறார். மக்களின் போராட்டத்தை ஐ.நா கட்டிட கொரிடோருக்குள் முடக்கி விடக் கூடாது என்பதில் எமக்கு முழு உடன்பாடு உண்டு. ஆனால் கடந்த பத்து வருடங்களாக இந்த ஐ.நாவுக்குள்தான் தீர்வினை எடுக்கப்போவதாக சுற்றி வந்திருக்கிறீர்கள். உங்கள் அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை நீங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள். இல்லாவிட்டால் இதற்கும் ‘பூகோள’ அரசியல் என்ற ஒற்றைச் சொல்லாடல் விளக்கம்தானா? ‘சுயாட்சி சுயநிர்ணயம் தேசியம்’ எந்த கொரிடோரில் வைத்து வெல்லப் போகிறோம் என்ற தெளிவை கஜேந்திரகுமார் இன்னும் தரவில்லை.
2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஈழ அரசியலில் இந்த சொற்பதங்களை நீங்கள் தான் அதிகம் கையாண்டு வருகிறீர்கள். நீங்கள் அதன் அர்த்தங்களை உணர்ந்துதான் பயன்படுத்துகிறீர்கள் என நம்புகின்றோம். நீங்கள் இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களுக்கு ஒரு நிலைப்பாட்டையும் புலத்தில் இருக்கும் உங்களது ஆதரவாளர்களுக்கு வேறொரு நிலைப்பாட்டையும் வைக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் திட்டமிடலை முன்வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புலம்பெயர் தேசத்தில் இருக்கும் சில அமைப்புக்களும் செயற்பாட்டாளர்களும் போராட்டம் நடைபெறும் பொழுது பேசாமல் இருந்துவிட்டு இப்போது குற்றப்பத்திரிகை வாசிக்கத் தொடங்கி விட்டார்கள். இதை ஏன் முன்னரே தெரிவிக்கவில்லை என்றால் போராட்டத்தை குழப்புவதாக நினைத்துவிடுவார்கள் அதனால்தான் என்கின்றார்கள். உங்களின் அரசியல் நிலைப்பாட்டின் மீது தெளிவு இருந்தால் அதை மக்களுக்கு முன்னால் நேர்மையுடனும் துணிவுடனும் வைப்பது அவசியம். வரும் கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் கொடுக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் அரசியல் செய்ய வந்திருப்பது சுய நலனுக்காக அன்றி பொது நலனுக்காகத்தானே? அப்படியாயின் உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை விட்டு மக்கள் நலன் காக்கும் நடைமுறை/பேச்சை எங்கு அவசியமோ அங்கு பேசித்தான் ஆக வேண்டும். அம்பிகையை இறக்க விட்ட பிறகு ‘தியாகத் தாய்’ என கோயில் கட்டி கும்பிடுவதில் சுய லாபம் மட்டுமே முன் நிற்கும். இந்த நிலைப்பாடு ஒரு கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம். ‘என்ன நடக்குது பாப்போம்’ என காத்திருந்து நிலைப்பாடு எடுப்பது அரசியற் தெளிவுடன் இயங்குபவர்கள் செய்ய முடியாது.
இத்தகைய நடவடிக்கைகள் உணர்வு பூர்வ விடயமாக இருப்பதையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். யுத்த அழிவின் கோரத்தில் இருந்து வெளியில் வர முடியாது தான் பலர் இயங்கி வருகிறோம். இந்தச் சிக்கலை தூக்கி எறிந்து விட்டு அடாவடித்தன பேச்சு/நடவடிக்கை செய்ய முடியாதுதான். இருப்பினும் புரிந்துணர்வுடன் மக்கள் நலன் சார்ந்து பேசுவது இந்த மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லும் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கடமை. அரசியல் நிலைப்பாட்டை சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி மாற்றாமல் சரியானபடி முன்வைப்பது அவசியம். பொது ஆதரவு என்பது மாறலாம். அது பிழையாகவும் இருக்கலாம். பொது மக்களின் நிலைப்பாட்டை சரியான அரசியற் தளம் நோக்கி நகர்த்துவதற்கும்தான் அமைப்பாக திரளுகின்றோம். பேச வேண்டிய இடத்தில் பேசாது இந்த மாற்றத்தை செய்வது கடினம்.
இந்த நிகழ்வின் பின் இருப்பது அரசியற் போதாமை. அதை விட்டு அம்பிகை அவர்களின் வாழ்க்கை மீது தாக்குவது தவறு. அத்தகைய சேறடிப்புகளை தமிழ் சொலிடாரிட்டி வன்மையாக கண்டிக்கின்றது. இதற்குப் பதிலாக நீங்கள் எடுக்கும் போராட்ட வழிமுறைகள் பற்றி சிந்தியுங்கள். ஜெனீவாவுக்கு சைக்கிள் ஓடுவது – இரத்த தானம் செய்வது – ‘வெள்ளை’ மனிதர் கலந்து கொள்ள வேண்டும் என்ற சிறுமை நோக்குடன் இனத்துவேசிகளை கூட்டிவந்து கூட்டம் போடுவது – பாராளுமன்ற அரசியல்வாதிகள் ஆதரவு என்ற பெயரில் மக்கள் விரோத சக்திகள் (நேரடி ராஜபக்ச ஆதரவாளர்கள் உட்பட) மேடை ஏற்றுவது – போன்ற பல்வேறு குளறுபடிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதன் பக்க விளைவு தான் அம்பிகை அவர்களின் செயற்பாடு.
‘சாகும் வரை’ உண்ணாவிரதம் இருந்து முடிந்த கதை புதுக்கதை அல்ல. ஏற்கனவே பலமுறை நடந்த ஒன்றுதானே. அம்பிகை அவர்கள் ஒன்றும் புதிதாக செய்யவில்லை. தமிழ் டயஸ்போராவில் இருக்கும் அரசியல் வீழ்ச்சியின் விளைவே செயற்பாட்டாளர்களை இத்தகைய நடவடிக்கைகள் நோக்கி நகர்த்துகிறது. இந்தப் போராட்டத்தில் தவறு இருந்தால் அதற்கு அம்பிகை தான் பதில் சொல்ல வேண்டும் எனக் கூறுவது தவறு. இங்கு பொதுப் பொறுப்பு ஒன்று உண்டு. கடந்த செவ்வாய்க்கிழமை பிரித்தானியாவில் இருக்கும் தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம் அவர்கள் அம்பிகை ஆதரவு அணி எனக் கலந்து கொண்டார். பின்பு இந்த போராட்டத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதற்கு அம்பிகைதான் பதிலளிக்க வேண்டும், அதற்கு நான் பதிலளிக்க முடியாது எனக் கூறினார். இந்த போராட்டத்தின் திட்டமிடல்கள் அனைத்திலும் இருந்த ஒருவர் – அந்த போராட்டத்துக்கு ஆதரவு அளித்த ஒருவர் – போராட்டத்தில் இருக்கும் தவறுகளுக்கு பதிலளிக்க முடியாது என கூறுவது நேர்மையற்றது. அம்பிகை தனித்து இயங்கவில்லை. மக்களுக்கு தவறான தகவலை கொடுத்தது யார்? பிரித்தானியா கோரிக்கை ஏற்றுக் கொண்டு விட்டது என்ற பொய்களை யார் யார் பரப்பினர்? போராட்டம் மாபெரும் வெற்றி என ஊடகங்களுக்கு செய்தி கொடுத்தது யார்? இவ்வாறு எத்தனையோ கேள்விகள் காற்றில் தொங்கிக் கொண்டிருக்க அம்பிகை அக்காவை பலிகடாவாக்கி தப்பி விடுவது தவறு. இதிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்ளவில்லை என்றால் மற்றவர்களை பலரையும் பலிகடா ஆக்கும் செயலைத்தான் தொடர்வீர்கள். இன்று அம்பிகை கிடைத்ததுபோல் நாளை வேறு ஒருவர் உங்களுக்கு கழுவில் ஏற்ற கிடைக்கலாம். உணர்வுகளால் உந்தப் பட்டும் – செய்வதறியாது திணறிக் கொண்டும் இருக்கும் எமது மக்கள் மத்தியில் இதற்கு ஆட்கள் கிடைக்காமலா போய்விடுவார்கள்.
இவ்வாறு மக்களை ஏமாற்றும் நிகழ்வுகளால் வரும் மனச் சோர்வு போராட்ட அரசியலைப் பலவீனப்படுத்துகிறது. மக்கள் அணிதிரள்வது குறைந்து செல்வது இதனாலும்தான். தாம் செய்ய வேண்டிய வேலையை இவர்களே செய்கிறார்கள் என இலங்கை அரசும் அதிகாரங்களும் சந்தோசப் பட்டுக்கொள்ளும்.
உண்மையில் நாம் பேசவேண்டிய புள்ளி அம்பிகை அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியதல்ல. மாறாக எத்தகைய போராட்ட வடிவம்– நடைமுறைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதே. இந்த விவாதம் பொது வெளியில் மக்கள் முன் நிகழ வேண்டும். இதைச் செய்யத் தவறி பதுங்கி இருப்பது உங்கள் அரசியற் பலவீனத்தைத்தான் வெளிக்காட்டும். பின்னால் இருந்து ‘இயக்குவது’ உங்களை எல்லாம் தெரிந்தவர் ஆக்கி விடாது. மக்கள் முன் பேச வாருங்கள். அவ்வாறுதான் நாம் மக்களை அணிதிரட்ட முடியும். அவ்வாறுதான் நாம் எமக்கான பலத்தை கட்டி நிமிர்த்த முடியும். அந்தப் பலம்தான் எமது நலன்களை வெல்லும் பாதையில் எம்மை நகர்த்தும்.