கடந்த 3/03/2021 திகதி மாலை 9 மணிக்கு சாரா எவரார்ட் (Sarah Everard) எனும் முப்பத்து மூன்று வயது பெண் லண்டனில் இருக்கும் கிலப்பம் (Clapham) எனும் இடத்திலுள்ள தனது நண்பரின் வீட்டிலிருந்து பிரிக்ஸ்டனில் (Brixton) இருக்கும் தனது வீட்டுக்கு செல்லும் பொழுது காணாமல் போயிருந்தார். அவர் கொலை செய்யப் பட்டிருப்பது பின்பு தெரிய வந்தது.
இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டதாக சேவையில் இருக்கும் போலீஸ் உத்தியோகத்தரான வெய்ன் கூசன்ஸ் (Wayne Couzens) மற்றும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட அதிகாரி அஸ்போர்ட (Ashford, Kent ) இடத்தில் வசிப்பதால் அவ்விடத்தில் தேடப்பட்டபொழுது சாராவின் உடல் எச்சங்கள் 10ம் திகதி கண்டு பிடிக்கப்பட்டது.
இது பிரித்தானியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு மெட்ரோ பொலிட்டன் போலீசார் தடை விதித்தனர். இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கினை மார்ச் 12ம் திகதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. போராடுவதற்கான உரிமை இருக்கின்றது, எனவே இத்தடையை எதிர்த்தும் அரசியல் ரீதியாக போராட வேண்டுமென பலர் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
சாரா எவரார்ட்டின் பயங்கரமான கடத்தல் மற்றும் கொலை ஆகியவற்றால் துக்கம், அதிர்ச்சி மற்றும் கோபத்தின் வெளிப்பாடு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதனால் பிரித்தானியாவில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் கடந்த வெள்ளிக் கிழமையிலிருந்து வெடித்துள்ளது.
கடந்த வாரத்தில் 97% இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களை அனுபவித்ததாக அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரா எவரார்ட்டைக் கொன்றதற்காக ஒரு போலீஸ் அதிகாரி மீது இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளதானது மேலும் கோபத்தை அதிகரித்துள்ளது. பெண்களைப் பாதுகாக்கும் திறன் இல்லாத ஒரு நிறுவனம் என்று காவல்துறை மீண்டும் மீண்டும் சுட்டி காட்டப்பட்டுள்ளது.
பெண்கள் வீட்டிற்கு வெளியேயும் தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக அஞ்சுவது போன்றே வீட்டிட்குள்ளும் வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
சமூகத்தில் ஆரம்பத்திலிருந்து இருக்கும் பாலின சமத்துவமின்மையால் பெண்கள் தொடர்ந்து பாதிக்கப் பட்டு வருகிறார்கள். தொற்றுநோயின் பொருளாதார மற்றும் சமூக விளைவுகளால் குறிப்பாக தொழிலாள வர்க்க பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைகள், ஊதியம், வேலை செய்யும் நேரம் மற்றும் வேலைக்கான நிபந்தனைகள் போன்ற அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த முதலாளித்துவத்தின் சிக்கனம் நமது பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. அதாவது, வீதி விளக்குகளை குறைதல், பஸ் பாதைகளை குறைத்தல், ரயில்களில் காவலர்களை பணி நீக்கம் செய்தல், அத்துடன் தேவையான அனைத்து சேவைகளையும் குறைத்தல் – ஆகியன பாதுகாபின்மையை அதிகரித்து உள்ளது. இவ்வாறான பாதுகாப்பு சேவைகளின் நிதியை குறைப்பதால் ஏற்படும் பாலியல் வன்முறை மற்றும் வீட்டு வன்முறைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக முதலாளித்துவ அரசாங்கத்தின் சிக்கனத்தால் இவ்வாறான வன்முறைகள் அதிகரிப்பது அப்பட்டமாக தெரிகின்றது.
நான்கு பெண்களில் ஒருவர் தங்கள் வாழ்க்கையில் சில சமயங்களில் துஷ்பிரயோகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது கணிப்பீடு. மேலும் வாரத்திற்கு இரண்டு பெண்கள் வன்முறையால் கொல்லப்பட்டுக் கொண்டிருகிறார்கள்.
பெண்கள் தங்கள் நடத்தையை மாற்ற வேண்டும் என்று சொல்வதல்ல தீர்வு! நாம் விரும்பும் இடத்திற்குச் செல்லவும், நாம் விரும்பும் போதும் – நாம் விரும்பும் விதத்தில் ஆடை அணிவதற்கும், வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு அஞ்சாமல் நம் வாழ்க்கையை வாழவும் முடியும். அடிப்படை சமூக கட்டமைப்பை மாற்றுவதன் மூலமே அதை சாதிக்க முடியும்.
விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாலியல் மற்றும் தவறான மனப்பான்மை நடத்தைக்கு சவால் விடவும் நாம் போராட வேண்டும். சிறந்த தெரு விளக்குகளுக்கு முழு நிதியுதவிக்காக, பாதுகாப்பான மற்றும் குறைந்த கட்டண பொது போக்குவரத்து சேவைக்காக, துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு சேவைகளுக்கு அதிக செலவு செய்வதற்காக, குற்றவியல் நீதி அமைப்பில் மாற்றத்திற்காக, காவல்துறையின் ஜனநாயக சமூக கட்டுப்பாட்டுக்காக, நாங்கள் போராட வேண்டும். கைது செய்யப்படுவோம் அல்லது பாரிய அபராதம் விதிக்கப்படும் என்ற அச்சமின்றி நாம் பாதுகாப்பாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
இந்த முதலாளித்துவ கட்டமைப்பில் விரல்விட்டு எண்ணக்கூடிய தொகையினர்தான் வளங்களை வைத்திருக்கின்றார்கள். இதில் குறைந்த ஊதியம், ஆபத்தான வேலைகளில் பெண்கள் ஈடுபடுவது சுரண்டலை அதிகரித்து பெரும் இலாபம் ஈட்ட உதவுகிறது. மேலும் பெண்கள் வீட்டில் செய்யும் ஊதியம் இல்லாத வேலையால் ஒவ்வொரு ஆண்டும் முதலாளித்துவத்துக்கு பில்லியன் கணக்கான பவுண்டுகள் சேமிக்கபடுகின்றது .
ஊடகங்கள், அழகு நிலையம், ஃபேஷன் நிலையம், உடற்பயிற்சி நிலையம் மற்றும் பிற தொழில்களில் ஆதிக்கம் செலுத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் தனியார் நிறுவனங்கள் என்பவை – பெண்கள் எவ்வாறு தோற்றமளிக்க வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் மற்றும் லாபத்தை ஈட்டுவதற்காக உடல்களை பொருட்களாக மாற்றுவது பற்றிய பாலியல் கருத்துக்களை ஊக்குவிக்கின்றன.
பாலின வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்தை அகற்ற, பாலின மற்றும் வர்க்க சமத்துவமின்மையில் இருந்து லாபம் பெறும் முதலாளித்துவத்தின் கைகளிலிருந்து பொருளாதார மற்றும் அரசியல் கட்டுப்பாட்டை எடுக்கும் அடிப்படை கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது.
அதாவது, பணியிடத்திலும், பரந்த சமுதாயத்திலும் பாகுபாடு, சமத்துவமின்மை மற்றும் சுரண்டலை எதிர்த்து ஒன்றிணைந்து போராட வேண்டும்.
தொழிற்சங்கத்தில் இணைந்து பணியிடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பிரச்சாரத்தை உருவாக்க வேண்டும்.
பாதுகாப்பாக எதிர்ப்பு போராட்டத்தை தெரிவிக்கும் உரிமையை உருவாக்க வேண்டும்.
பொலிஸ் சேவைகள் ஜனநாயக ரீதியாக உள்ளூர் மக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வரவேண்டும்.
பாலியல், இனவாதம் மற்றும் வர்க்க சமத்துவமின்மைக்கு எதிராக போராட பாராளுமன்றத்தில் தொழிலாளர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் மூலம் முதலாளித்துவ சார்பு அரசியல்வாதிகளை எதிர்த்து மாற்று அரசியலுக்கு போராட வேண்டும்.
வர்க்கச் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவத்தில் பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தொழிற்சங்கங்களும் தொழிலாள வர்க்கங்களும் முக்கிய பங்கு வகித்து வந்திருகின்றன. மிக சமீபத்தில் தொழிற்சங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட கிளாஸ்கோவில் நடந்த சம ஊதியம் (Glasgow Equal Pay) என்ற போராட்டம் கவனத்துக்கு உரியது. பெரும்பாலும் குறைந்த ஊதியம் பெறும் பெண்கள் கிளாஸ்கோ நகர சபைக்கு எதிராக நடத்திய வேலைநிறுத்த போராட்டம் வெற்றியடைந்தது.
எந்த ஒரு சலுகையும், சேவையும் தானாக இந்த முதலாளித்துவம் வழங்கியது கிடையாது. மாறாக அனைத்தும் போராடியே வெல்லப்பட்டது. போராடாமல் எதுவும் வெல்லப்பட்டதாக வரலாறு இல்லை. போராட்ட அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டும். போராட்டம் பலப்பட வேண்டும்.